பாசிச எதிர்ப்பைக் கைவிட்டு ஓட்டுச் சீட்டு ‘லாவணி’ நடத்தும் இந்தியா கூட்டணி கட்சிகள்

 

பாசிச சக்தியான பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப் போவதாக கூறிக்கொண்டு காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி என்பது ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும், பாசிச எதிர்ப்பிற்கும் இந்தக் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நாம் தொடக்கம் முதலாக கூறிவருகிறோம். ஆனால் திமுகவின் தீவிர விசுவாசிகளோ இவ்வாறு கூறுவதென்பது பாசிசத்திற்குச் சாதகமாக முடியும் என்று விமர்சிக்கிறார்கள்.

ஜனநாயக சக்திகள் திமுக அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் போதெல்லாம், திமுகவை விமர்சனம் செய்யக்கூடாது, அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் பாஜகவின் கைக்கூலிகள் என்கிற ரீதியில் கடுமையாக விமர்சனம் செய்து, இந்தக் கூட்டணியை பாதுகாக்க துடித்தனர்.

ஆனால் இந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டணி எனும் கண்ணாடி மாளிகைக்குள் ஓட்டுச் சீட்டுப் பேரம் நடத்தும் இந்தக் கட்சிகள் தற்போது ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து வருகின்றனர்.

கேரளாவின் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிடும் ராகுல்காந்தி, தனது தேர்தல் பரப்புரையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம். கட்சியின் முக்கிய தலைவரான பினராயி விஜயனை நேரடியாகவே தாக்கிப் பேசினார்.  பாஜகவை எதிர்த்த இரண்டு முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது பினராயி விஜயன் மட்டும் கைது செய்யப்படாமல் இருப்பதன் ரகசியம் என்ன என்று கேட்டு பினராயி விஜயன் பாஜகவை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த பினராயி விஜயனோ உங்கள் பாட்டி காலத்தில் அவர் நாட்டையே அடக்கி ஒடுக்கியபோது அதை எதிர்த்த எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையிலடைத்தார் எனக் கூறி ‘கூட்டணி தர்மத்தை’ காப்பாற்றுவதில் ராகுல் காந்திக்குத் தான் சளைத்தவரில்லை என நிரூபித்தார்.

நாட்டின் பிற மாநிலங்களில் ஒரே கூட்டணியில் போட்டியிட்டாலும் கேரளத்தில் மட்டும் பாஜக எதிர்ப்பு என்பதைக் கைவிட்டு இவ்விரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் பரம எதிரிகளாகப் பார்த்து தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர்.

திமுகவை நாம் விமர்சிக்கும் போதெல்லாம் நம்மைக் கடுமையாக கண்டித்த மருதையன் வகையறாக்களோ தங்களது எஜமானர்கள் இப்படி மோதிக்கொள்ளும் போது வாயை மூடிக்கொண்டு வாழாவிருக்கிறார்கள்.

கேரளத்திலாவது பரவாயில்லை, ஒரு மாநிலம் முழுவதும் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் ஒருவரை ஒருவர் முந்தி ஜெயித்துவிட போட்டியிடுகிறார்கள் என விட்டுவிடலாம். ஆனால் பாண்டிச்சேரியில் இருப்பது ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதி அது பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு ஒன்றியங்களை உள்ளடக்கியது. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. பாண்டிச்சேரியிலும், தமிழ்நாட்டில் உள்ள காரைக்காலிலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏனாமிலும் சி.பி.எம். கட்சி காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறது. கேரளாவில் உள்ள மாஹே பகுதியில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யாமல் விட்டாலாவது பரவாயில்லை, அங்கே சிபிஎம் கட்சி காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறது. இப்படி ஒரே பாராளுமன்றத் தொகுதில் ஒரு இடத்தில் காங்கிரசை ஆதரித்தும் இன்னொரு இடத்தில்  காங்கிரசை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் புதியதொரு கூட்டணி தர்மத்தை சிபிஎம் கட்சி நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறது.

காங்கிரஸ் சிபிஎம் கட்சிகள்தான் இப்படியென்றால், சனாதனத்தை வேறருப்பதைக் கோட்பாடாகக் கொண்டு, இந்தியா கூட்டணியில் பாசிச எதிர்ப்பில் ‘சமரசமே’ செய்யாத கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட, ஓட்டுச் சீட்டுப் பானையை உருட்ட ஆரம்பித்துவிட்டால் கொள்கையாவது வெங்காயமாவது என்று கொள்கையைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டு கர்நாடகத்தில் இந்தியா கூட்டணிக்கு எதிராக மூன்று வேட்பாளர்களைக் களமிறக்கியது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு தெற்கு, ரூரல் மற்றும் கோலார் ஆகிய தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அந்தப் பகுதியில் காங்கிரசுக் கட்சி போட்டியிடுவதால் அதனை எதிர்த்து விசிக களமிறங்கினால் அது பாஜகவிற்குத்தான் சாதகமாக முடியும். இது தெரிந்துதான் விசிக அந்த மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த விசயம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த காரணத்தினால் வாக்குப் பதிவிற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரசை ஆதரிப்பதாக திருமாவளவன் அறிவித்தார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பாசிச எதிர்ப்பு கொள்கையின் லட்சணம் இதுதான். ஒருவர் காலை மற்றவர் வாரி விட்டு ஆதாயமடைய துடிக்கும் இவர்கள்தான் பாசிசத்தை வீழ்த்தும் தலைமை சக்தியாம்.

  • எழில்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன