2024 – மே தினத்தில் உறுதியேற்போம்!
பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
பிரச்சாரம், பேரணி, ஆர்ப்பட்டம்
அன்பார்ந்த பாட்டாளி வர்க்கமே!
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், தங்களுக்கு விருப்பமுள்ள, உறுப்பினராகவுள்ள, இலவசங்களை வாரியிறைத்து மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கு வாக்களித்திருப்பீர்கள். நீங்கள் வாக்களித்திருக்கும் கட்சிகள், ஆளும் வர்க்கக் கட்சிகளாகவோ, பிழைப்புவாத – சுயநலவாத சாதி – மதவாதக் கட்சிகளாகவோ இருக்கலாம். இந்தக் கட்சிகள் அனைத்தும், பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்ற அனைத்து ஜனநாயக உரிமைகளையும் படிப்படியாகப் பறித்த கட்சிகள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். பாசிச – மோடி அரசோ, தொழிலாளர்கள் நலன்களுக்கான 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் 4 சட்டத் தொகுப்பாகச் சுருக்கி கார்ப்பரேட் நலன்களுக்கான குடுவையில் அடைத்து விட்டது. மேலும், தொழிலாளர்களுடைய பிஎஃப் பணத்தையும், ஓய்வூதியத்தையும் பங்கு மார்க்கெட் சூதாடிகளுக்கு காவு கொடுத்துள்ளது.
தொழிலாளி வர்க்கம் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற, 8-மணி நேர வேலை, 8-மணி நேர உறக்கம், 8-மணி நேரம் ஓய்வு அனைத்தும் இன்று பறிக்கப்பட்டு விட்டது. பிஜேபி ஆளும் மாநிலங்களில், 12-மணி நேர வேலை சட்டப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்படாமலேயே அரங்கேற்றப்பட்டு வருகிறது. திராவிட மாடல் அரசும் அறிவித்து, பின்பு நடந்தேறிய தொழிலாளி வர்க்க எதிர்ப்பால் பின்வாங்கிக்கொண்டது.
சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை, பணி நிரந்தர உரிமை, நலவாரிய உரிமை, பேரும் பேசும் உரிமை, ESI, PF, விதிமுறைகள், LTC, குடியிருப்பு வசதி, குறைந்த விலையில் உணவு, பணி நேரத்தில் பாதுகாப்பு, செய்வூதியம், போனஸ், ஊக்கத்தொகை, வீடுகட்ட, வாகனம் வாங்க முன்பணம், தவணை முறையில் நிலுவைப் பணம் போன்ற சலுகைகள் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றவையாகும். 240 வேலை நாட்கள் நிறைவடைந்தவுடன் நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் காண்ட்ராக்ட் முறை ஒழிப்பு, போன்ற எண்ணற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர்களின் உக்கிரமான போராட்டங்களால் நிறைவேற்றப்பட்டவை. இவை அனைத்தும் இன்று படிப்படியாக சந்தடியில்லாமல் நாம் தேர்ந்தெடுத்த ஆளும் வர்க்கக் கட்சிகளால் பறிக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலச் சட்டங்கள், ஜனநாயக உரிமைகள் எவையும் நாம் வாக்களித்த எம்எல்ஏ-க்களோ எம்பி-க்களோ தாமாக முன்வந்து நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதிப்படியோ நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி, உயிரைப் பணயம் வைத்து, போராடிப் பெற்றவையாகும்.
அதேவேளையில், விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகள் கோரிக்கை வைக்காமலே, வாக்களிக்கிறார்களோ இல்லையோ, அவர்களின் சுரண்டலுக்கு, மூலதனத்திற்கு எவ்வித பாதிப்புமில்லாமல் தொழிலாளர் விரோதச் சட்டங்களையே அதிகளவில் நிறைவேற்றியுள்ளனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையும், மூலதனத்தையும் பாதுகாக்கவே உருவாக்கப்பட்டவை. இதன் அடியாளாகத்தான் இந்திய அரசும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றை, ‘மேய்க்கும்’ பொறுப்பை ஏற்கும் எம்எல்ஏ எம்பி-க்களால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எந்த சட்டங்களையும் போடவும் முடியாது. போடவும் மாட்டார்கள்.
கார்ப்பரேட்டுகளிடம் தேர்தல் நன்கொடைப் பத்திரம் மூலமும், இன்னும் பிற வகையிலும் கையூட்டுப்பெற்ற, ஊழல் செய்த, வருமானத்தை மீறி சொத்துச் சேர்த்த அரசியல்வாதிகளை ஓடி ஓடிப் பிடிக்கும் அரசின் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, புலனாய்வுத்துறைகள் அனைத்தும், கையூட்டுக் கொடுத்தக் கார்ப்பரேட்டுகளைக் களையெடுக்கவும் இல்லை; கண்டுகொள்ளவும் இல்லை. போதாக்குறைக்கு அடக்கியே வாசிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளில் தொடங்கிய, விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளின் மூலதனம் (சொத்தின் மதிப்பு) இன்று ரூபாய் 24.14 லட்சக்கணக்கான கோடிகளில் குவிந்து இருப்பதுக் குறித்து, எவ்வித விசாரணையும், சோதனையும், புலனாய்வும் இல்லை. இருக்காது.
ஏனெனில், எல்லோருக்கும் பொதுவானது என கூறப்படும் அரசும், இவற்றை மேய்ப்பதற்காக 5-வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கமும் பொதுவானது இல்லை. கார்ப்பரேட்களுக்கானதே. இவற்றை மேலும், மேலும் கார்ப்பரேட்டுகளுக்கே சேவைச் செய்யவும், எதிர்த்துப் போராடும், உழைக்கும் வர்க்கங்களை ஈவு இரக்கமற்ற வகையில் ஒடுக்கவும், மேலும் செவ்வனே வளர்க்கும் பணியை பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி தலைமையிலான மோடி அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இவற்றை தடுத்து வீழ்த்த வேண்டுமெனில், முதலில் உழைக்கும் பாட்டாளி வர்க்கமாகிய நாம் அனைவரும் ஆளும் வர்க்கக் கார்ப்பரேட் கட்சிகளில், கார்ப்பரேட் நலன்களைப் பேணக்கூடிய, பிழைப்புவாத, சமரச – சாதி – மதவெறி கட்சிகளில் – அதன் சங்கங்களில் – நிறுவனங்களில் இருந்து வெளியேற வேண்டும்.
நமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும்போது நம்மைப் பிளவுபடுத்தி, நமது போராட்டத்தை நாசப்படுத்தும் எல்லா ஆளும் வர்க்கக் கட்சிகளையும், ஓட்டுக் கட்சிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும். உழைக்கும் வர்க்கங்களின் அடிப்படைக் கோரிக்கைகள், உரிமைகளுக்காக ஒற்றை முழக்கத்தின் கீழ் அணிதிரள வேண்டும். நம்மிடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், குறைந்தபட்சம் செயல் ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றுபட்டு நமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். முதலாளித்துவம் நம்மீது ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடுக்கிறது; நாமோ அதைத் தனித்தனியாக எதிர்கொள்கிறோம். முதலாளித்துவக் கட்சிகளும் நம்மைச் சிதறடிக்கின்றன. உதாரணமாக, ஒரு கட்சியின் தலைமையில் போராட்டம் நடக்கும்பொழுது அதற்கு எதிரான கட்சியில் இருப்பவர்களது தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ள மறுக்கின்றன.
இவ்வாறன்றி முதலாளித்துவத் தாக்குதலுக்கெதிராக பாட்டாளி வர்க்கமாகிய நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டுமென்கிறோம். இதுதான் செயலொற்றுமையாகும். இச்செயலொற்றுமை இல்லையென்றால், நாம் போராடிப் பெற்ற அனைத்தையும் இழக்க நேரிடும் என்பதை நாம் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். இவ்வாறு, அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் இணைத்து, வழிநடத்திச் செல்லும் ஒரு பாட்டாளி வர்க்க முன்னணியாக வளர்த்தெடுக்க வேண்டும்.
இதன் மூலம், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதோடு, பெரும்பான்மையான உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் உபரி உழைப்பைத் திருடிக் கொழுத்த, கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தைக் கைப்பற்றி, பெரும்பான்மை மக்களின் நலனுக்கே பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். வேலைவாய்ப்பைப் பெருவாரியாக உருவாக்கவும் முடியும். வாங்கும் சக்தியை உயர்த்தவும், வறுமையையும், பட்டினியையும் போக்க முடியும்.
ஆனால் இதற்குத் தேவை ஒரு மக்கள் எழுச்சி. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சி. இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க தொழிலாளர் தினமான மே 1-இல் உறுதியேற்போம்!
- பாட்டாளி வர்க்க முன்னணியைக் கட்டியமைப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
- மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
- கார்ப்பரேட் மூலதனத்தைப் பறித்தெடுப்போம்!
வேலைவாய்ப்பைப் பெருக்குவோம்!
- வறுமையை, பட்டினியைப் போக்குவோம்!
வளமான வாழ்க்கைக்கு வழிவகை செய்வோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.