கலைப்புவாதிகளின் ஆளும்வர்க்க சரணடைவை நியாயப்படுத்தும் வினைசெய்

பாசிச எதிர்ப்பு செயல்திட்டத்தை ஏற்கும் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் என்று கூறி புரட்சிகர வேடம் போட்டாலும், இந்த கலைப்புவாத கும்பலானது நடைமுறையில் எவ்வித நிபந்தனையும் இன்றி ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதி அடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை,

 

எமது தோழமை அமைப்புக்களான மகஇக, மக்கள் அதிகாரம், புஜதொமு, புமஇமு உள்ளிட்ட அமைப்புகளிலும் அவற்றின் அரசியல் தலைமையிலும் கலைப்புவாதத்தை பரப்பி, சதி செய்து அமைப்பைப் பிளந்து, அமைப்பை விட்டும், புரட்சிகர அரசியலை விட்டும் ஓடிப்போன ஓடுகாலிகலான மருதையன் கும்பலானது தற்போது ஆளும்வர்க்க கட்சிகளின் பாதந்தாங்கிகளாகச் சீரழிந்துள்ளது. மருதையனது அடியொற்றி, கோவன், காளியப்பன் கும்பலின் அமைப்புகளும், அவற்றின் அரசியல் தலைமையும் ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதி அடையும் பாதையில் அணிகளை இழுத்துச் செல்கின்றன.

இந்த கலைப்புவாதக் கும்பலானது தற்போது, “2024 நாடாளுமன்ற தேர்தல் பாசிச BJPயை தோற்கடிப்போம்! INDIAவை ஆதரிப்போம்!” எனக் கூறிக்கொண்டு தேர்தலில் ஆளும்வர்க்க கட்சிகளுக்காக ஓட்டு வேட்டையில் இறங்கியிருப்பதுடன் அதனையே புரட்சிகரப் போராட்டம் என சாதித்து வருகின்றது.

இந்த கும்பலின் ஆதரவாளராகத் தம்மை காட்டிக் கொண்டு, வினை செய் என்ற பெயரில் இந்த திரிபுகளையெல்லாம் நியாயப்படுத்தி இணையத்தில் எழுதிவருகின்றனர். அந்த இணையப் பக்கத்தில், செங்கனல் இணையதளம் மீதும், எங்கள் தோழமை அமைப்புகள் மீதும் அவதூறுகளைப் பரப்பும் நோக்கத்துடன், “ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்.

இவர்களது கட்டுரைகளில் பக்கத்துக்குப் பக்கம் தாங்கள்தான் உண்மையான நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்றும், அமைப்பின் அடிப்படை நிலைப்பாடுகளில் தாங்கள் தான் ஊன்றி நின்று செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அடிப்படை நிலைப்பாடுகளில் ஊன்றி நிற்பதாக வெறும் வார்த்தைகளில் மட்டுமே கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் தேர்தல் புறக்கணிப்பு எனும் அடிப்படை நிலைப்பாட்டைக் கைவிட்டு நாடாளுமன்றப் பாதையில் பயணித்து வருகின்றனர்.

ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துச் செயல்படுவதை நியாயப்படுத்தும் வகையில், பல திரிபுகளையும், குழப்படிகளையும் இந்தக் கட்டுரைகளில் செய்து வருகின்றனர். அவற்றில் பிரதானமாக இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று ஆளும்வர்க்கப் பிரிவினருடன் ஐக்கிய முன்னணி அமைப்பது தொடர்பானது. மற்றொன்று பாசிசத்திற்கு மாற்றாக, மேலிருந்து செயல்படும் புரட்சிகர அரசாங்கம் அமைப்பது தொடர்பானது.

பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியா, ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதியா?

பாசிசத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதற்காக, ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் இணைந்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி ஒன்றை அமைக்கப் போவதாகவும் அதற்கென குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் வினைசெய் கும்பல் கூறுகிறது.

“தற்போதைய கார்ப்பரேட் காவி பாசிச அபாய சூழலில் புதிய ஜனநாயக புரட்சிக்கு இடைக்கட்டமாக தோன்றியுள்ள, உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பாசிசத்தை வீழ்த்துவதற்கான பரந்த ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவது என்ற முடிவுடன் செயல்படுகிறோம்.

அத்தகைய ஐக்கிய முன்னணிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை முன்வைத்து தேர்தல் அரசியலில் பங்கெடுத்துள்ள கட்சிகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவற்றுடன் விவாதித்து வருகின்றோம். அதற்குப் பொருத்தமாக தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துகின்றோம். – (‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்! – வினை செய் கட்டுரை)

மேலும், கலைப்புவாதக் கும்பலின் அரசியல் தலைமை வெளியிட்டுள்ள செயல்தந்திர ஆவணத்திலும் இதே கருத்தைத்தான் கூறியுள்ளனர்.

“…பாசிசத்தை வீழ்த்த … தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்துவோம், அதன்படி தற்போது நாம் முன்வைக்கும் ஐக்கிய முன்னணியின் செயல்திட்டத்தை ஏற்க முன்வரும் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வோம்” (கலைப்புவாதக் கும்பலின் செயல்தந்திர ஆவணம் பக்கம் 96)

தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்துகின்றோம் எனக் கூறும் போது, இவர்களது செயல்தந்திர ஆவணத்திலும் சரி, வினை செய் கட்டுரையிலும் சரி தாங்கள் முன்வைக்கும் ஐக்கிய முன்னணியின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்வோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் நடப்பது என்ன,   திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டு வருகின்றனர். இக்கட்சியினரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கோவனும் அவரது கலைக்குழுவும் சென்று வேட்பாளர்களின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு ஓட்டுப்போடும்படி பாடிக் கொண்டிருக்கின்றனர். அக்கட்சியினரின் ஏற்பாட்டில் தொகுதி முழுவதும் வாகனங்களில் பயணித்து வாக்குக் கேட்கின்றனர். ஊழல்வாதிகளாக ஏற்கெனவே அம்பலப்பட்டுப்போன வேட்பாளர்களுக்கும் கூட ஆதரவாக பிரச்சாரம் செய்து, மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர்.

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைக்கோவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்கும் கோவன்.

இதையெல்லாம் எந்த அடிப்படையில் செய்கின்றனர்? இவர்களது ஐக்கிய முன்னணியின் செயல்திட்டத்தை இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்ன? தொகுதிப் பங்கீட்டைத் தாண்டி வேறு எந்த பேச்சுவார்த்தையும் இன்றி அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச வேலைத்திட்டம் (common minimum program) கூட இல்லையே. “இந்தியா கூட்டணிக்கு குறைந்தபட்ச வேலைத்திட்டம் தேவையில்லை” என முகத்திலடித்தது போல கூறி, காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் குறைந்தபட்ச வேலைத்திட்டம் தேவை என்று பேசிய சி.பி.ஐ. சி.பி.எம். கட்சியினரின் வாயை அடைத்தாரே. அப்படியிருந்தும் இந்தக் கூட்டணிதான் பாசிசத்தை வேரருக்கும் கூட்டணி என கூறி கலைப்புவாதக் கும்பல் மக்களை ஏமாற்றிப் பிரச்சாரம் செய்து ஓட்டுக் கேட்கின்றது.

பாசிச எதிர்ப்பு செயல்திட்டத்தை ஏற்கும் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் என்று கூறி புரட்சிகர வேடம் போட்டாலும், நடைமுறையில் எவ்வித நிபந்தனையும் இன்றி ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதி அடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை,

“தேர்தல் அரசியலின் மூலமாக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி முற்றான பாசிச சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு எத்தனிக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து வாக்களியுங்கள்” (‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்! பாகம் 7 – வினை செய் கட்டுரை) என்று வினை செய் கும்பல் மக்களுக்கு அறைகூவல் விடுவதை விமர்சிக்கக் கூடாது என்கின்றனர். அதாவது பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சிசெய்வதன் மூலமாகத்தான் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்ட எத்தனிக்கிறது ஆகவே அக்கட்சியைத் தேர்தலில் தோற்கடித்துவிட்டால் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியை முறியடித்துவிடலாம் என்பது இவர்களது வாதம்.

பாசிச அபாயத்தை எவ்வளவு குறைவாக மதிப்பிடுகின்றனர் என்பதைத்தான் இந்த வாதம் காட்டுகிறது. பாஜக 2014ம் ஆண்டு தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு பாசிச நடவடிக்கைகளை அமுல்படுத்தினாலும், தேர்தல் வெற்றி, நாடாளுமன்ற அதிகாரம் என்ற ஒரு ஆயுதத்தை மட்டுமே பாசிசம் நம்பி இருக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல பத்தாண்டுகளாக பல்வேறு அமைப்புகளைத் தொடங்கி அவற்றின் மூலம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பாசிச கருத்துக்களைப் பரப்பி வைத்திருக்கிறது. போலீசு, இராணுவத்திற்குள் ஊடுருவி வேலை செய்யும் அதே சமயம் அவற்றிற்கு வெளியே தனக்கென ஒரு பாசிசப் படையை கட்டியமைத்து, சிறுபான்மையினர் மீதும் முற்போக்கு சக்திகளின் மீதும் தாக்குதல் தொடுத்து வருகின்றது. இவைதான் பாசிசத்தின் பிரதான ஆயுதங்களாகும்.

எனவே பாஜக தேர்தலில் வெற்றிபெற்றுத்தான் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில்லை. பாஜக தேர்தலில் தோல்வியுற்றாலும் கூட இவற்றைக் கொண்டு தங்களது சர்வாதிகார ஆட்சியை பாசிசத்தால் நிலைநாட்ட முடியும்.

இது கலைப்புவாதக் கும்பல் அறியாதது அல்ல. ஆனால் இது தெரிந்தேதான், பாஜகவைத் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் பாசிச சர்வாதிகாரம் நிலை நாட்டப்படுவதை முறியடிக்க முடியும் என்று மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்கிறார்கள். “பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறார்” எனப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாத கூட்டணியை எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்கு அவர்கள் கொடுக்கும் தத்துவ விளக்கங்களையெல்லாம் தாண்டி, கலைப்புவாதக் கும்பல் பயணிக்கும் திசையினை வினை செய் கட்டுரையில் ஒரு இடத்தில் முத்தாய்ப்பாக கூறியிருக்கிறார்கள்.

“பாசிசத்தை அரசியல் அரங்கிலிருந்தும் சமூக அடித்தளத்திலிருந்தும் முற்றும் முழுதாக அழிக்க வேண்டும் என்றால். தேர்தலை ஒரு போராட்ட வழிமுறையாக பயன்படுத்தி அரசியல் அரங்கில் இருந்து பாசிசத்தை அகற்ற வேண்டும். பாசிசத்தின் நிதி ஆதாரங்கள், அதன் கட்டுமானங்கள் என அனைத்தையும் ஒழித்தாக வேண்டும். அதற்கு, ஐக்கிய முன்னணியின் மூலம் அமைக்கப்படும் ஜனநாயகக் கூட்டரசின் வழியாக அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தி புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

அம்பானி, அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு அதிகாரவர்க்கங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவர்களுடன் அரசு போட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். ஆதீனங்களின் சொத்துக்களை நிலமற்றவர்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டும். சாதி, மத, இனவெறி கட்சிகளை தடை செய்யப்பட வேண்டும் என இன்னும் ஏராளமான முழக்கங்களை நிபந்தனையாக முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து நிர்பந்திக்கிறோம். இந்த அடிப்படையிலேயே INDIA கூட்டணியை நாங்கள் ஆதரிக்கிறோம்.” – (‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்! பாகம் 10 – வினை செய் கட்டுரை)

கலைப்புவாத கும்பல் இந்தியா கூட்டணிக் கட்சிகளை ஆதரிப்பதற்கு வினை செய் மேற்கண்ட காரணங்களைக் கூறுகிறது. நாம் முன்னரே கூறியதைப் போல, வினைசெய் கட்டுரையிலும் சரி, கலைப்புவாத கும்பலின் செயல்தந்திர அறிக்கையிலும் சரி முதலில் பாசிசத்திற்கு எதிரான செயல்திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்கு கேட்போம் என்று கூறினார்கள். ஆனால் இங்கோ தங்களது செயல்திட்டத்தை முழக்கமாக வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து நிர்பந்திப்போம் என்று கூறுகின்றனர். அதாவது தங்களது செயல்திட்டத்தை ஆளும்வர்க்க கட்சிகள் ஏற்கவேண்டும் என்பதைக் கைவிட்டு, அதற்கு அவர்களுக்கு நாம்தான் நிர்பந்தம் தர வேண்டும். அதே சமயம் தேர்தலில் அவர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரவு தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

இது அப்பட்டமாக மருதையனின் நிலைப்பாடு இல்லயா. புதிய கல்வி கொள்கை, ஆதீனங்கள் போன்றவற்றில், திமுக பாசிசத்தோடு சமரசம் செய்து கொள்வது குறித்து கேள்வியெழுப்பப்படும் போதெல்லாம், மருதையன், களத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகள் திமுகவிற்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் மக்களிடம் சென்று பணியாற்றவில்லை என்பதைத்தான் ஒவ்வொருமுறையும் காரணமாக கூறி வருகிறார்.

அதாவது பாசிசமானது வருமான வரித்துறை, சி.பி.ஐ. அமலாக்கத்துறை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி தங்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கினாலும், தேர்தல் நேரத்தில் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி செயல்படவிடாமல் தடுத்தாலும், கட்சியின் முக்கிய தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தாலும், எதிர்காலத்தில் தங்களைச் செயல்படவிடாமல் தடை செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தாலும், ஆளும் வர்க்க கட்சிகள் பாசிசத்திற்கு எதிராக சுட்டுவிரலையும் அசைக்க மாட்டார்கள். அவர்கள் அப்படி இருப்பதற்கு மக்கள் மத்தியிலிருந்து நிர்பந்தம் கொடுக்கும் வகையில் முற்போக்கு சக்திகள் பிரச்சாரம் செய்யாதே காரணம், இது தான் மருதையன் முன்வைக்கும் வாதம்.

அதே சமயம் களத்தில் இருக்கும் பாட்டாளி வர்க்க கட்சி எவ்வித நிபந்தனையும் இன்றி இந்த முதலாளித்துவக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும். பாசிச எதிர்ப்பின் தலைமை சக்தியாக பின்தொடர வேண்டும் என்பதுதான் மருதையன் முன்வைக்கும் செயல்திட்டம்.

மேலே குறிப்பிட்டுள்ள வினைசெய் கட்டுரையின் மேற்கோள் மருதையனின் வாதத்தை வழிமொழிந்து, அவரது செயல்திட்டத்தை அமுல்படுத்துவதாக இருக்கிறது. மருதையனின் அடியொற்றி கலைப்புவாதக் கும்பல் தனது அணிகளை இழுத்துச் செல்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது, வினை செய் கட்டுரை அதனை நியாயப்படுத்தி முட்டுக் கொடுக்கிறது.

பாசிசத்தை முறியடிக்க தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்துவோம், எங்களுடைய பாசிச எதிர்ப்பு செயல்திட்டத்தை ஏற்கும் ஆளும்வர்க்க கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கட்டுவோம், அவர்களுக்காக தேர்தலில் வாக்கு கேட்போம் என்று கூறிவிட்டு எந்த நிபந்தனையும் இன்றி ஆளுவர்க்க கட்சிகளிடம் சரணாகதி அடைந்து அவர்களுக்காக வாக்குக் கேட்பது, செயல்திட்டத்தினை ஏற்றுக் கொள்ளும் முன்பாகவே ஆளும்வர்க்க கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்கிறீர்களே என்று கேட்டால் செயல்திட்டத்தை ஏற்கும் வகையில் நாம்தான் அவர்களை நிர்பந்திக்க வேண்டும் என்று கூறுவது. கலைப்புவாத கும்பல் பயணிக்கும் தேர்தல் பாதையின் பரிணாம வளர்ச்சி இதுதான். இந்தப் பயணத்தின் அடுத்த நிறுத்தம் என்பது ஆளும்வர்க்க கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதுதான். அப்படி போலி ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுவதை நியாயப்படுத்துவதற்கும் கூட தத்துவ விளக்கங்களை வினைசெய் கும்பல் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கிறது.

– தொடரும்.

செங்கனல் ஆசிரியர் குழு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன