மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது?

உலகப் பணக்காரர்களும் இந்தியக் கூத்தாடிகளும் முதலாளிகளும் எவ்வித சிரமும் இல்லாமல்  அம்பானி வீட்டு திருமண முன் கூடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவ்வளவு ஏற்பாடுகளை மெனக்கட்டு செய்துள்ளது மோடி அரசு. ஒன்றிய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து, அரசுத் துறைகள் அனைத்தும் துரிதமாக வேலை செய்ய முடுக்கி விடப்பட்டு இந்த வேலைகள் அனைத்தும் மிகக் குறைந்த காலத்தில் முடிக்கப்பட்டுள்ளன.

“மக்களுக்கு சேவை செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன், அதற்காக நான் நேர்மையற்றவர்களுக்கு பயப்பட மாட்டேன்.”,  “சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது”,  “ஒரு ஏழைத் தாயின் மகன், ஏழைகளை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான்.”,  “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துஸ்தானில் ஒருவர் கூட ஏழையாக இருக்கமாட்டார்கள்”, “சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயகத்தின் பலன்கள் இப்போது உண்மையான அர்த்தத்தில் சரியான மக்களைச் சென்றடைந்துள்ளன. முன்பு ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு சிலரின் நலன்கள் காக்கப்பட்டது.”

 

 

இவையெல்லாம் கடந்த பல ஆண்டுகளாக மோடி பேசிய பஞ்ச் டயலாக்குகள். “நான் மக்களின் நலன்களுக்காக கடுமையாக உழைக்கிறேன்; எங்கள் ஆட்சியில் தான் இந்தியாவிற்கு உலக அரங்கில் நற்பெயர் கிடைத்துள்ளது; அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக்கிக் காட்டுவேன்” என பெரும்பான்மை இந்திய மக்களின் நலனுக்காகவே புதிய அவதாரம் எடுத்து வந்திருப்பது போன்ற தொனியில் சமீபகாலமாக மோடி பேசிவருவதையும் கேட்டிருப்போம். மோடியின் அமைச்சரவை அடிபொடிகளும் தங்களது தகுதிக்கேற்ப இதையே திருப்பி கூறிவருகின்றனர். செய்தி ஊடகங்களும் இது உண்மை என மக்களை நம்பவைக்க பல கோமாளித்தனங்களை செய்கின்றன.  

ஆனால் மோடியின் இந்த உருட்டுக்கள் உண்மைதானா? மோடி குறித்த இந்த பிம்பத் திரையை சற்று விலக்கிப் பார்த்தால் உண்மை வேறுவிதமாக இருப்பது எளிதில் புரிந்துவிடும். மோடியின் வாய் மட்டுமே மக்களைப் பற்றி பேசுவதையும் மற்ற உறுப்புகளனைத்தும் முதலாளிகளுக்காக துடிப்பதையும் நாம் பார்க்க முடியும்.

ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமண முன் கூடல் நிகழ்வு (Prewedding) மார்ச் 1, 2, 3 தேதிகளில் நடைபெற்றது. இதற்காக குஜராத்தின் ஜாம் நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3000 ஏக்கரில் புதிய வனத்தையும் உருவாக்கி இருந்தார் அம்பானி. இந்நிகழ்வில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கும்பர்க்கிலிருந்து நம்ம ஊர் ரஜினிகாந்த் வரை கலந்து கொண்டனர்.  

 

 

இத்திருமண முன்கூடல் நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள், வேறு விமான நிலையங்களில் இறங்கி அங்கிருந்து நிகழ்விடத்திற்கு வாகனங்களில் வரும் சிரமத்தை தவிற்பதற்காக, அவர்களது விமானம் நிகழ்வு நடக்க இருந்த இடத்திற்கு அருகாமையில் தரையிறங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார் மோடி. இதற்காக, குஜராத்தின் ஜாம்நகர் நகரில் உள்ள ‘பாதுகாப்பு முக்கியத்துவம்’ என வரையறுக்கட்டிருந்த விமான நிலையத்திற்கு திருமண முன் கூடல் நிகழ்வு நடக்க இருந்த  பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை (10 நாட்களுக்கு மட்டும்) சர்வதேச விமான நிலையம் என்ற அங்கீகாரத்தை வழங்கியிருந்தது மோடி அரசாங்கம்.

ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த விமான நிலையத்திற்கு முழுமையான உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. சில வணிக விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், மோடியின் மனம் கவர்ந்த, ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான அம்பானிக்காக ‘நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலையும்’ தாண்டி உள்நாட்டு விமானங்களுக்கே அனுமதியில்லாத ஒரு விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்தை வழங்கியிருக்கிறார் மோடி.

இதற்காக பிரத்யேகமான ஒரு பயணிகள் முனைய கட்டிடத்தை அமைத்ததுக் கொடுத்திருக்கிறது இந்திய விமான ஆணையம் (AAI). பயணிகள் கட்டிடத்தை  475 சதுர கிமீ முதல் 900 சதுர மீட்டர் வரை விரிவுபடுத்தியுள்ளனர்.  ஜாம் நகர் விமான நிலையத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) ஆகியவற்றுக்கான வசதிகளை அமைப்பதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளன. விமான நிலைய பராமரிப்புகளுக்காக குஜராத் பாஜக அரசாங்கம் கூடுதலாக ஆட்களை(100%) பணியமர்த்தியுள்ளது. பாதுகாப்பு பணிக்காக இந்திய விமானப்படை தனது வீரர்களை பயன்படுத்தியிருக்கிறது.

உலகப் பணக்காரர்களும் இந்தியக் கூத்தாடிகளும் முதலாளிகளும் எவ்வித சிரமும் இல்லாமல்  அம்பானி வீட்டு திருமண முன் கூடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவ்வளவு ஏற்பாடுகளை மெனக்கட்டு செய்துள்ளது மோடி அரசு. ஒன்றிய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து, அரசுத் துறைகள் அனைத்தும் துரிதமாக வேலை செய்ய முடுக்கி விடப்பட்டு இந்த வேலைகள் அனைத்தும் மிகக் குறைந்த காலத்தில் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக ‘புது மாப்பிள்ளை’ ஆனந்த் அம்பானி மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதே மோடி அரசு விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனற கோரிக்கைக்காக போராடும் போது அவர்களைத் திட்டமிட்டு முடக்கியது. விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வருவதை தடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் தடை அரண்களை அமைத்தும் முள்வேலிகளை அமைத்தும் ரோடுகளை வெட்டியும் காங்கிரீட் சுவர்கள் எழுப்பியும் தலைநகர் தில்லியை எதிரி நாட்டிடம் இருந்து பாதுகாப்பது போல கட்டுக்காவல் போட்டது. ட்ரோன்களை கொண்டு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.

 

 

2018ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது பலலடசம் விவசாயிகள் தங்கியிருந்த போராட்ட களத்திற்கு குடிநீர் உட்பட எந்த சுகாதார வசதிகளும், அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தடை செய்தது. அம்பானி வீட்டுத் திருமணத்திற்காக இணைந்து வேலைசெய்த அரசுத் துறைகள் அனைத்தும் விவசாயிகளை ஒடுக்குவதற்காக இணைந்து பணியாற்றின. அம்பானியின் வீட்டுத் திருமணத்தின் முக்கிய விருந்தாளிகளுக்காக தனது படைபரிவாரங்களை இறக்கிப் பணியாற்றச் செய்த மோடி ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் போராடியும் அவர்களைச் சென்று சந்திக்கவில்லை.

இதிலிருந்து மோடியின் இதயம் யாருக்காக துடிக்கிறது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆம், அவருடைய இதயம் முதலாளிகளுடைய நலன்களுக்காகவே துடிக்கிறது. அதுவும் அதானி, அம்பானி போன்ற ஒரு சில பார்ப்பன பனியா முதலாளிகளுக்காக துடிக்கிறது.

“நான் ஏழைத்தாயின் மகன்” என்றும் “மக்களுடைய மேம்பாட்டிற்காக நான் அயராது உழைக்கிறேன்” என்றும் “தேச பாதுகாப்பு எங்களுடைய உயிர் மூச்சு” என்றும் அவர் கூறுவதெல்லாம் மக்களை நம்ப வைப்பதற்கான வாய் சவடால்கள் மட்டுமே. 

  • அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன