கடந்த 19.02.2023 அன்று சென்னை மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அக்கல்லூரி முதல்வருக்கெதிராகப் போராட்டத்தில் இறங்கியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக நாங்கள் அறிந்தோம். ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் ஆகிய எமது அமைப்புகளின் கொள்கையைத் துறந்தோடி, அவற்றின் பெயரைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசியலற்ற லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் சிலர், எமது அமைப்புகளின் பெயரில் அக்கல்லூரியில் நடந்த இப்போராட்டத்தை ஆதரித்து கலந்து கொண்டதையும் இப்போராட்டத்தைப் புகழ்ந்து செய்திக் கட்டுரை ஒன்றை அவர்களது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ளதையும் அறிந்தோம்.[1]
“மாணவர்கள், ஆசிரியர்களை முதல்வர் இழிவுபடுத்திப் பேசிவிட்டார்”, “கல்லூரி நிகழ்ச்சிகள் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்புகிறார்”, “கல்லூரி விடுதியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை” என்பது போன்ற கோரிக்கைகளுக்காக மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் என்றுதான் இவர்களது இணையதளத்தைப் பார்க்கும்போது தெரிந்தது. ஆனால் ஊடகங்களில் இப்போராட்டம் பற்றிய முழுமையான செய்திகள், வீடியோக்கள் வந்தபிறகு இப்போராட்டத்தின் மையக் கருப்பொருளே வேறாக இருப்பதை உணர முடிந்தது. பொதுவாக மக்களிடத்திலும் குறிப்பாக கல்வி வளாகங்கள், மாணவர்கள் இடத்திலும் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு ஊட்டி வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படும் “அரசியலற்ற தன்மை” “கட்சி சார்பற்ற தன்மை” ஆகிய நச்சுக் கருத்தை இறுகச் செய்து வலிமைப்படுத்தும் தன்மையிலானதாகவே இப்போராட்டம் அமைந்துள்ளது. ஒரு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்ற முறையில் நாம் இதை ஆதரிக்க முடியாது என்று கருதுகிறோம்.
போராடிய மாணவர்கள் விடுதியில் உள்ள அடிப்படைத் தேவைகள், மாணவர்களை முதல்வர் இழிவுபடுத்தியது ஆகியவற்றை ஓரிரு இடங்களில் பேசினாலும், போராட்டத்தின் முழக்கமும் பதாகைகளும் “அரசியலற்ற தன்மை” “கட்சி சார்பற்ற தன்மையை” இவற்றையே மையம் கொண்டுள்ளது. “நாங்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து படிக்கிறோம்; எனவே கல்லூரி வளாகத்துக்குள் அரசியல் நடவடிக்கைகள் இருப்பது எங்களுக்கு அச்சமூட்டுகிறது” என்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் ஒரு மாணவரின் வார்த்தைகள் இதைத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
மாணவர்கள் ஏந்தியிருக்கும் பதாகைகளும் இப்போராட்டத்தின் கருப்பொருளை தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. “கல்லூரி நிகழ்ச்சிகள் தாண்டி எங்களை வேறு அரசியல் நிகழ்ச்சிகளுக்குக் கட்டாயப்படுத்தாதே” “அரசியலமைப்பின் பிரிவு 21 என்னவாயிற்று” (இது ஒரு நபரின் தனிமனித உரிமையைப் பாதுகாக்கும் பிரிவாகும் – Protection of life and personal liberty) “பாசிச முதல்வரைக் கண்டிக்கிறோம்” (அதாவது அவர்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு அனுப்புவது பாசிசம் என்ற பொருளில்) என்பதாகத்தான் பதாகைகள் உள்ளன.[2]
இப்போராட்டம் மாணவர்களிடையே உருவாக்கும் கருத்தியலின் அபாயத்தைப் புரிந்துகொள்ள “அரசியலற்ற” “கட்சி சார்பற்ற” தன்மையைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு அவசியமாகும். காலனியாதிக்கக் காலம் தொட்டே நிலவும் சமூக அமைப்புக்கெதிராக மாணவர்கள், இளைஞர்கள் கிளர்ந்தெழாமல் இருக்க எல்லாக் கல்லூரி வளாகங்களிலும் அரசியலற்ற தன்மை, கட்சி சார்பற்ற தன்மை திட்டமிட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது இயல்பான ஒன்றல்ல. மாறாக ஆளும் வர்க்கங்கள் பல நாடுகளில் நடைபெற்ற மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களின் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு, அவர்கள் அரசியல்மயமாக்கப்படும் (politicize) இடம் கல்வி வளாகங்கள்தாம் என்பதைக் கற்றுக்கொண்டு, கல்வி வளாகங்களை அரசியலற்ற, கட்சிசார்பற்ற தன்மையிலேயே வைத்திருக்க திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்பும், புதிய தாராளவாதக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பின்பும் கல்லூரி வளாகங்களை அரசியலற்ற, கட்சி சார்பற்ற தன்மையில் வைத்திருக்க ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளைச் சொல்லி மளாது!
மாணவர் சங்கங்கள், அமைப்புகளைத் திட்டமிட்டுக் கலைப்பது; கல்லூரி வளாகங்களில் அவைகள் இயங்கவிடாமல் தடுப்பது; முடக்குவது; கல்லூரியிலும் விடுதியிலும் மாணவர் சேர்க்கை நடத்தும்போதே “அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன்” என்று மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி, சட்டவிரோதமாக அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் பெறுவது; பின்னர் அதைக் கொண்டே மாணவர்களையும் பெற்றோரையும் மிரட்டுவது; கல்லூரிகளில் செயல்பட்டுவரும் மாணவர் அமைப்புகளுக்கும், அதன் முன்னணியாளர்களுக்கும் நெருக்கடி கொடுப்பது; அவற்றை சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் கலைப்பது; இதன் உச்சமாக பல கல்லூரிகளில் நடத்தப்பட்ட மாணவர் பேரவை தேர்தல் என்ற ஒன்றையே துப்புரவாகத் துடைத்தெறிந்து ஒன்றுமில்லாமல் செய்தது என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தக் கண்ணோட்டத்தில்தான், இதன் உச்சமாகத்தான் “கல்லூரி வளாகத்துக்குள் காவல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்” என்று மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.
மாணவர்களிடையே இயல்பாக உருவாகும் சண்டை சச்சரவுகள், முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பதிலாக அவற்றை ஊதிப் பெருக்கி அதையே காட்டி கல்வி வளாகங்களில் அமைதி குலைவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதாகவும் போலிசு எழுதிக் கொடுக்க, ஊடகங்கள் அதையே வாந்தியெடுத்து மக்களிடம் பரப்புகின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் மீது திட்டமிட்டு ஒரு வெறுப்பு சமூகத்தில் விதைக்கப்பட்டு மக்கள் திரளிடமிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஓயாத இப்பிரச்சாரங்களின் விளைவாக மாணவர்கள், இளைஞர்களைப் பார்த்தாலே “பொறுக்கிகள், அராஜகவாதிகள், உதவாக்கரைகள்” என்ற எதிர்மறையான கருத்து மக்களுக்கு உண்டாகும்படிச் செய்துவிட்டன ஊடகங்களும் பத்திரிக்கைகளும். கல்லூரி வளாகங்களில் ஜனநாயக வெளியை முற்றிலும் அடைத்து, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிச் சுருக்க மேற்படி பிரச்சாரத்தின் மூலம் அரசு எந்திரம் மக்களிடையே நியாயவுரிமையையும் (justification) பெற்றுக் கொண்டது.
நம் நாட்டில் புதிய தாராளவாதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் அதற்கு இணையாக கல்லூரி வளாகங்களில் அரசு எந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி நடவடிக்கைகளின் விளைவாக அரசியலற்ற, கட்சி சார்பற்ற தன்மை எங்கனம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஊறிப்போய், அவர்களின் இரத்தத்தோடு கலந்துள்ளது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை!
வர்க்கமாகப் பிளவுண்டுள்ள ஒரு சமூகத்தில் நடுநிலை என்பது இல்லை. இல்லவே இல்லை. வர்க்கப் போராட்டத்தின் துலக்கமான வெளிப்பாடு அரசியல் கட்சிகளுக்கிடையிலான போராட்டமாகும். சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் இவையிரண்டும் தத்தமது நலன்களுக்கான அரசியல் கட்சியின் மூலமே அரசியல் அரங்கில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்கின்றன. கொள்ள முடியும். எனவே, அரசியலற்ற, கட்சி சார்பற்ற தன்மை என்பது நடுநிலையான ஒரு கருத்தல்ல. அது தெளிவாக ஆளும் வர்க்கத்தின் கருத்தாகும். அதாவது ஒருவர் அரசியலற்றவர், கட்சி சார்பற்றவர் என்றால் அவர் நடுவில் நிற்பதாகப் பொருளல்ல. ஆளும் வர்க்கத்தின் பக்கத்தில் நிற்பதாகவும், அதற்கு மறைமுகமான ஆதரவை அளிப்பதாகவுமே பொருளாகும்.
“வர்க்கப் பிளவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில், எதிரெதிர் வர்க்கங்களின் போராட்டமானது ஒரு குறிப்பிட்ட கட்ட வளர்ச்சியில் அரசியல் போராட்டமாக மாற்றம் பெறுகிறது. இந்த அரசியல் போராட்டத்தின் மிகத் தெளிவான, மிக முழுமையான, மிகத் தனிச்சிறப்பான வெளிப்பாடு என்பது அரசியல் கட்சிகளுக்கிடையிலான போராட்டமாகும். கட்சிகளுக்கிடையிலான இப்போராட்டத்தின்பால் “அலட்சிய மனப்பாங்குடன் இருப்பது” (indifference) என்பதே கட்சிசார்பற்றவாதம் என்பதன் பொருளாகும். ஆனால் இந்த “அலட்சிய மனப்பாங்கு” என்பதற்கு நடுநிலை என்றோ போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் விலகிவிடுவது என்றோ பொருளல்ல; வர்க்கப் போராட்டத்தில் நடுநிலை என்பது இருக்கவே முடியாது; முதலாளித்துவ சமுதாய அமைப்பில் சரக்குப் பரிவர்த்தனையில் ஈடுபடாமலோ அல்லது உழைப்புச் சக்தியைச் செலுத்தாமலோ “விலகி இருப்பது” சாத்தியமே இல்லை. இந்த சரக்குப் பரிவர்த்தனையானது முதலில் பொருளாதாரப் போராட்டத்தையும் பின்னர் அரசியல் போராட்டத்தையும் தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கவே செய்கிறது. எனவே, இந்தப் போராட்டத்தில் அலட்சிய மனப்பாங்குடன் இருப்பது என்பதன் பொருள் நடைமுறையில் இப்போராட்டத்தைவிட்டு தூரமாக ஒதுங்கி நிற்பதோ, கலந்துகொள்லாமல் இருப்பதோ, நடுநிலை வகிப்பதோ அல்லவே அல்ல. ரசியாவில் அக்டோபர் புரட்சிக்கு முன்னர் எதேச்சதிகார ஆட்சியின்பால் அலட்சிய மனப்பாங்கு கொண்டிருந்தவர்கள் உண்மையில் அதற்கு மறைமுக ஆதரவையே கொடுத்தனர். தற்போதைய ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சியின்பால் அலட்சிய மனப்பாங்கு கொண்டிருப்பவர்கள் உண்மையில் அதை மறைமுகமாக ஆதரிக்கின்றனர். … அரசியலின் மீது அக்கறையின்மை என்பது அரசியல் தெவிட்டிப்போன நிலை (satiety) ஆகும். நன்றாக உண்டுகொழுத்த மனிதன் ஒரு ரொட்டித் துண்டின் மீது “அக்கறையில்லாமலும்” “அலட்சிய மனப்பாங்குடனும்” இருப்பான். ஆனால் பசித்த மனிதனோ ரொட்டித்துண்டு யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றிய பிரச்சனையில் எப்போதும் [நடுநிலை வகிக்காமல்] “தன் கட்சி சாரரோடே” நிற்பான். ரொட்டித் துண்டின் மீது “அக்கறையில்லாமலும் அலட்சியப் போக்குடனும்” இருக்கும் ஒரு நபருக்கு ரொட்டித் துண்டு தேவையில்லை என்று பொருளல்ல. மாறாக, அவர் எப்போதும் தனக்கான ரொட்டி கிடைப்பதை உத்திரவாதம் செய்துள்ளவர் என்றே பொருளாகும். நன்றாக உண்டுகொழுத்தவர்களின் “கட்சியில்” அவர் தன்னை உறுதியாக இணைத்துக் கொண்டுள்ளவராவார். முதலாளித்துவ சமுதாயத்தில் கட்சி சார்பற்ற கொள்கை என்பது நன்றாக உண்டு கொழுத்தவர்கள், ஆளும் வர்க்கத்தினர், சுரண்டலாளர்களாகிய கட்சியைச் சேர்ந்தவர்களுக்காக கடைபிடிக்கப்படும் கொள்கையின் கபடவேடம்தரித்த, மாறுவேடம் பூண்ட, சாந்தமன பாணியிலான வெளிப்பாடே ஆகும்.
“கட்சி சார்பற்ற கருத்து என்பது முதலாளித்துவக் கருத்தாகும். கட்சிக் கருத்தே சோசலிசக் கருத்தாகும். இந்தக் கோட்பாடானது பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் எல்லா முதலாளித்துவ சமுதாயங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும். … இந்த உண்மையை மறந்துவிடுவது என்பது நடைமுறையில் முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான சோசலிச விமர்சனத்தை முற்றாகக் கைவிடுவது என்றே பொருளாகும். (லெனின் – லெனின் தொகுப்பு நூல்கள் 10, ஆங்கிலப் பதிப்பு, பக்கம் 78-79, அழுத்தம் எமது)
மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களாலும், மறுகாலனியாக்கத் தாக்குதல்களாலும் கல்லூரி வளாகங்களில் அரசியல் விவாதங்கள் ஓரளவு மீண்டும் அரும்பத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு மாணவர்கள் அரசியல் விசயங்களில் கவனம் செலுத்துவது நடக்கிறது. இன்னொருபுறம் ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் இவ்வாறு கல்லூரி வளாகங்களை அரசியலற்ற, கட்சி சார்பற்ற தன்மையில் பராமரிக்க முயன்றாலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசு போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் அதன் மாணவர், இளைஞர் பிரிவுக்கும் இதில் சில விலக்குகள் கொடுக்கப்படுகிறது; அவர்கள் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யவும் கூட்டங்களுக்கு அணிதிரட்டிச் செல்லவும் ஓரளவு அனுமதியளிக்கப்படுகிறது; அதாவது அரசு எந்திரமும் ஆளும் வர்க்கங்களும் உருவாக்கியிருக்கும் சுவரில் ஆளும் வர்க்கக் கட்சிகளின் நலனுக்காக ஒரு சிறிய ஓட்டையை மட்டும் போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
மாநிலக் கல்லூரி முதல்வாராக இருக்கும் நபர் தி.மு.க. ஆதரவாளராக இருப்பதும்; தி.மு.க. நடத்தும் கூட்டங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல உதவி செய்வதும் இத்தகையதுதான். இந்தச் சூழலில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி இதே உரிமையை எல்லா மாணவர் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் வழங்குவதை நோக்கிப் போராட வேண்டும். எல்லாவிதமான அரசியல் பிரச்சாரங்களுக்கும் சட்டப் பூர்வ அரசியல் நடவடிக்கைகளுக்கும் கல்லூரி வளாகங்களில் அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தி அதற்காகப் போராட வேண்டும். சுருங்கக் கூறினால் ஆளும் வர்க்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டையில் வெடிவைத்து அதைப் பெரிதாக்க வேண்டும். ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு மட்டும் வழங்கப்படும் பிரத்யேக உரிமையை எல்லா கட்சிகளுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப் போராட வேண்டும். அதுதான் பாட்டாளி வர்க்கக் கட்சி, புரட்சியின் நலனில் இருந்து பார்க்கையில் மாணவர்களை அரசியல்படுத்தவும், அமைப்பாக்கவும் உதவுவதாகும். மாணவர்களிடத்தில் ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்துள்ள, புரட்சியின் முட்டுக்கட்டைகளுள் மிக முக்கியமான ஒன்றான “அரசியலற்ற” “கட்சி சார்பற்ற” தன்மையை மாணவர்களிடத்தில் களைய உதவுவதாகும்.
ஆனால் மாநிலக் கல்லூரி மாணவர்களின் போராட்டமோ “வேறு வேறு மாவட்டங்களில் இருந்து படிக்கவந்தோம்; கல்லூரி வளாகத்துக்குள் அரசியல் நடவடிக்கைகள் இருப்பது எங்களுக்கு ஆபத்தாக உணர்கிறோம்” என்ற கருப்பொருளை மையம் கொண்டுள்ளது. அதாவது ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் அனுமதித்துள்ள சிறிய ஓட்டையையும் சிமெண்டு வைத்து மூடிவிடு என்பதாக உள்ளது. நாங்கள் அரசியலற்ற கட்சி சார்பற்ற தன்மையில் தொடர்ந்து நீடிக்க எங்களுக்கு (அரசியல் சாசன பிரிவு 21 அடிப்படையில்) உரிமை கொடு என்பதாக உள்ளது. மாணவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களது கோரிக்கையின் பொருளும் சாரம்சமும் இதுதான்.
மாணவர்களிடையே இத்தகைய தப்பெண்ணங்கள் உருவானாலும், உருவாக்கப்பட்டாலும் பாட்டாளி வர்க்கக் கட்சி என்ற முறையில் நாம்தான் அவற்றைச் சுட்டிக் காட்டி சரிசெய்யப் போராட வேண்டும். போராட்டத்தின் கோரிக்கையையும் திசைவழியையும் மாற்றுவதற்கு அவர்களிடத்தில் போராடிப் புரியவைக்க வேண்டும். இதுதான் ஒரு முன்னணிப் படையின் கடமையாகும். ஒருவேளை இத்தகைய பார்வை அணிகளுக்கு இல்லை என்றாலும் தலைமை இதை ஆராய்ந்து சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும். ஆனால் ஒரு அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலிடம் நாம் இதனை எதிர்பார்க்க முடியுமா! இந்த அரசியலற்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து கலந்துகொண்டது மட்டுமின்றி, அதையே மெச்சிப் புகழ்ந்து தமது இணையவெளியில் பதிவிட்டுள்ளது இக்கும்பல். இருக்கிற ஜனநாயக வெளியையும் அடைத்துவிடு என்ற கோரிக்கையை மையமாகக் கொண்ட இப்போராட்டத்தை “கல்லூரி வளாகத்தில் ஜனநாயக வெளி சுருங்கி வருவதைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் இன்று (19.02.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்”[3] என்று எழுதியுள்ளது. இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்ல!
சரி. தமது விருப்பத்தை மீறி ஒரு நிகழ்வுக்கு கட்டாயப்படுத்துவது தவறுதானே என்று யாரேனும் கேட்கலாம். ஆம் உண்மைதான். அப்படியே ஆயினும் “விருப்பத்திற்கு மாறாக மாணவர்களை அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லாதே; எல்லாருக்கும் தனது அரசியல் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதிகொடு, விருப்பப் பூர்வமாக அரசியலில் ஈடுபட அனுமதி கொடு” என்று கோரிக்கை வைப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் மேற்படி போராட்டமோ “நாங்கள் படிக்க வந்தோம்; எங்களுக்கு அரசியலும் வேண்டாம் கட்சியும் வேண்டாம்” என்ற தன்மையிலானதாக உள்ளது.
மேலும் வர்க்க சமூகத்தில் எதுவும் நமது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு நடப்பதல்ல. பகவத் கீதையையும் கடவுள் வாழ்த்தையும் பாடத்திட்டத்தில் வைத்திருப்பது மாணவர் பிரதிநிதிகளின் விருப்பத்தைக் கேட்டல்ல. ஏன் நம்மை ஆளும் இந்த அரசமைப்புச் சட்டமே நமது விருப்பத்தைக் கேட்டு இயற்றப்பட்டதல்ல. சுதந்திரம், தனிமனித உரிமை பற்றி மாணவர்களிடமுள்ள இத்தப்பெண்ணத்தைக் களையப் போராடாமல் இதையே மாணவர்களின் சுதந்திரத்திற்கான (liberty) போராட்டமாக சித்தரிக்க முயன்றால் நாம் சுதந்திரம், தனிமனித உரிமை என்பதன் பொருளே புரியதவர்களாகிவிடுவோம்.
“தமது சுதந்திரத்திற்காக (liberty) கட்சி சார்பற்ற போராட்டங்களை நடத்துபவர்கள், உண்மையில் சுதந்திரத்தின் முதலாளித்துவ இயல்பைப் பற்றிய புரிதலற்றவர்களாவர்; அவர்கள் முதலாளித்துவ அமைப்பை புனிதப்படுத்துபவர்களே ஆவர். அல்லது அந்தச் சுதந்திரத்திற்கே எதிரான போராட்டத்தை நடத்துபவர்களாவர்” (லெனின் – மேற்படி, பக்கம் 78-79)
எளிமையாகச் சொன்னால் வேறு வேறு மாவட்டங்களில் இருந்து நாம் சென்னை வந்து படிப்பதற்கு காரணமே அரசு கல்வி கொடுப்பதில் இருந்து கைகழுவிவிட வேண்டும் என்ற தனியார்மய அரசியல்தான்; எனவே நாம் அரசியலற்றவர்களாக இருக்கக் கூடாது; வளாகத்துக்குள் அரசியல் வருவதால், கட்சிகள் வருவதால் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை; நாம் தனியார்மய எதிர்ப்பு அரசியலின்பால், கட்சியின்பால் நிற்க வேண்டும் என்பதை அந்த மாணவனுக்கு விளக்கி, அவனது அரசியலற்ற, கட்சி சார்பற்ற தன்மையை உடைக்க வேண்டும். ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் அனுமதித்துள்ள ஓட்டையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிதாக்க வேண்டும். கல்லூரி வளாகத்துக்குள் எல்லா கட்சிகள், சங்கங்களுக்கும் அரசியல் உரிமைகளை விரிவுபடுத்தப் போராட வேண்டும். ஆனால் லும்பன் கும்பலோ மேற்படி அரசியலற்ற, கட்சி சார்பற்ற போராட்டங்களின் பின்னே வால்பிடித்துச் செல்வதுடன் அதை வானளாவப் புகழ்ந்து தள்ளுவதன் மூலம் தான் ஒரு “அரசியலற்ற, சித்தாந்தமற்ற, லும்பன் கும்பல்” என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
- செங்கனல் ஆசிரியர் குழு.
[1] சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், வினவு தள செய்திக் கட்டுரை :
https://www.vinavu.com/2024/02/19/madras-presidency-college-students-protest/
[2] நாங்க படிக்க வந்தோம்.. அரசியல் நிகழ்ச்சிக்கு வரவில்லை.. போராட்டத்தில் குதித்த பிரசிடென்சி மாணவர்கள்
https://www.youtube.com/watch?v=hXHUtxLHK7A
[3] வினவு தளம் மேற்படி செய்திக் கட்டுரை.
இது புதிய கேடுகெட்ட போக்கு, நாம் மாணவர்களை போராட வைக்க வேண்டும். அரசியல் படுத்த வேண்டும்.