மனித குல வரலாற்றில் மரணத்திற்கு பின்பு எதிரிகளால் கேவலமாக தூற்றப்பட்டவர்களில் தோழர் ஸ்டாலினை போன்று வேறு யாரும் இருக்க முடியாது. ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி; கொடுங்கோலன் போன்ற அவதூறுகள் பொய்களாக, குப்பைகளாக இன்றளவும் உலகம் முழுவதும் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கான ஆதாரங்களை யார் கேட்கப்போகிறார்கள் என அசட்டுத் துணிச்சலுக்கு சம்மட்டி அடி கொடுத்தார் ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்” என்ற நூலின் ஆசிரியர் குரோவர் ஃபர். இவரின் மற்றொரு கட்டுரையான ஸ்டாலினும் அவரது ஜனநாயக சீர்திருத்த போராட்டமும் என்பதில் ஸ்டாலின் சோவியத் யூனியனை எவ்வாறு ஜனநாயகத் தன்மை கொண்டதாக மாற்றப் போராடினார் என்பதை நிருபித்திருக்கிறார். அக்கட்டுரையிலிருந்து சிலபகுதிகளை வாசகர்களுக்காக தோழர் ஸ்டாலினின் 71 வது நினைவுநாளில் இங்கு வெளியிடுகிறோம்.
ஸ்டாலின் மறைந்து ஒரு சில ஆண்டுகளில் நடைப்பெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது கட்சி காங்கிரசில், நிகிதா குருச்சேவ் தனது இரகசிய உரையில், ஸ்டாலின் மீது கொடூரமான குற்றங்களை சுமத்தி உலக கம்யூனிச இயக்கத்திற்கே பின்னடைவை ஏற்படுத்தினார்.
ஏகாதிபத்திய சக்திகளோ, உலகம் முழுவதிலும் தங்களது வர்க்க நலன்களை பாதுகாப்பதற்காக, தோழர் ஸ்டாலின் மீதான எதிர்ப்பை ஒரு வேலைத் திட்டமாக வரையறுத்துக் கொண்டு அவர் மீது அவதூறுகளையும், பொய்களையும் அவர் மறைந்து 71 ஆண்டுகளாகியும் பரப்பி வருகின்றனர்.
குருச்சேவ் கூறிய அதே பொய்களை அதற்கு முன்பே கூறியவர் தான் டிராட்ஸ்கி. ஸ்டாலின் என்ற ஒரு தனிமனிதனால் தான் டிராட்ஸ்கி தோல்வியை தழுவினார் என வாதிடும் டிராட்ஸ்கியவாதிகளும், அவர் மீதான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஸ்டாலின் மீதான அனைத்து அவதூறுகளிலும் பொய்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. “ஸ்டாலினின் மீதான குற்றங்கள் தனியானது இல்லை; இது கம்யூனிச சித்தாந்தத்தில்; பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தில் இருக்கும் குற்றங்கள்; கம்யூனிச சித்தாந்தம், தவிர்க்கமுடியாமல் ஒரு கொடுங்கோன்மைக்கு தான் வழிவகுக்கும்” என்பதை பிரச்சாரம் செய்யும் நோக்கம் தான் அந்த ஒற்றுமை.
குருச்சேவின் உரை, அனைத்தும் பொய்களே என ஆதாரங்களின் அடிப்படையில் ”ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்” என்ற நூலில் நிருபித்தார் குரோவர் ஃபர், இந்நூல் மூலம் ஸ்டாலின் காலத்திய கம்யூனிச இயக்கம் என்பது சோசலிசத்திற்கான சிறந்த படை என்பதையும் ஸ்டாலின் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர் என்பதையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார் குரோவர் ஃபர்.
இந்நூலைத் தவிர ஸ்டாலின் மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிரான பொய்களை அம்பலப்படுத்தி குரோவர் ஃபர் வேறு சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமான கட்டுரை ”ஸ்டாலினும் அவரது ஜனநாயக சீர்திருத்த போராட்டமும்” (Stalin and the Struggle for Democratic Reform-Part 1 &2) பற்றியதாகும்.
ஸ்டாலின் ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரி; அவர் லெனின் மரபுக்கு துரோகம் செய்தவர் போன்ற அவதூறுகளை மறுத்து ஆதாரங்கள் அடிப்படையில் இக்கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார் குரோவர் ஃபர். ஸ்டாலின் மீதான வழிபாட்டுணர்வு அடிப்படையில், தான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை என்பதை கட்டுரையின் ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறார் குரோவர் ஃபர். மாபெரும் சோவியத் கம்யூனிச இயக்கம், மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் பற்றிய உண்மையை உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு இவரின் படைப்பு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். இக்கட்டுரையில் 1930களில் இருந்து அவர் இறக்கும் வரையில் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தை மிகவும் ஜனநாயகத்தன்மை கொண்டதாக உருவாக்க ஸ்டாலின் எவ்வாறு போராடினார் என்பதையும், அதே நேரத்தில் கட்சியின் அதிகாரம் மிகுந்த தலைவர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டதையும் ஆதாரங்களோடு நிருபிக்கிறார் குரோவர் ஃபர்.
சோவியத் காப்பகத்தில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம் இக்கட்டுரையை எழுதி ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் குரோவர் ஃபர். மேலும் ஸ்டாலின் கூட்டுத்தலைமையில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்; அதை நடைமுறைப்படுத்தியவர் என்பதை இக்கட்டுரையில் நிருபிக்கிறார்
*********************
டிசம்பர் 1936ல் சோவியத்துக்களின் 8வது காங்கிரசு, புதிய சோவியத் அரசியலமைப்பின் வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. இவ்வரைவின் மூலம் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தலில் போட்டியிட வேண்டும். போல்ஷ்விக் கட்சியில் இருந்து மட்டும் வேட்பாளர்களை நிறுத்தமால் மற்ற குடிமக்கள் குழுக்களிலிருந்து வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த விதி கடைசி வரை நடைமுறைக்கு வரவில்லை.
ஸ்டாலின் சோவியத் அரசியலமைப்பில் ஜனநாயக அம்சங்கள் சேர்க்கப்பட இந்த விதிகளின் அவசியத்தை வலியுறுக்த்தி போல்ஷ்விக் கட்சியின் பொலிட்பீரோவில் தொடர்ந்து போராடி வந்தார். ஆனால் ஜப்பானிய மற்றும் ஜெர்மன் பாசிசங்கள் மூலம் சோவியத் அரசை கவிழ்க்கும் சதித்திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை ஒட்டி ஸ்டாலினின் இந்த முன்மொழிவு மத்திய கமிட்டியால் மறுக்கப்பட்டன.
ஜனவரி 1935ல் மத்திய கமிட்டி, சோவியத்தின் யூனியனின் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை உருவாக்கும் வேலையை எனுகிட்ஸே எனும் மத்திய கமிட்டி உறுப்பினருக்கு வழங்கியது. ஆனால் எனுகிட்ஸே, ஒரு சில மாதங்களிலேயே வெளிப்படையான, போட்டியின்றி தேர்தல் முறையை முன்மொழிந்தார். உடனடியாக ஜனவரி 25, 1935ல் ஸ்டாலின், எனுகிட்ஸேவின் இந்த முன்மொழிவுடன் தான் முரண்படுவதாக தெரிவித்தார். இரகசிய தேர்தல் முறையை வரைவு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
அமெரிக்க செய்தியாளரான ராய் ஹேவர்டுடான மார்ச் 1, 1936ல் நடைப்பெற்ற நேர்காணலின் போது இந்த ஆண்டு இறுதியில் சோவியத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். இதை உருவாக்க ஒரு நியமிக்கப் பட்ட ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. அனைத்து வாக்கெடுப்பும் இரகசிய வாக்கெடுப்பு என சோவியத் அரசியலமைப்பு உத்திரவாதமளிக்கும்; என ஸ்டாலின் இந்நேர்காணலில் கூறினார். புதிய அரசியலமைப்பின்படி, வாக்குரிமை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமமாகவும், நேரடியாகவும், இரகசியமாகவும் இருக்கும். மிக முக்கியமாக, அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
சோவியத் யூனியனில் ஒரு கட்சி எப்படி தேர்தலில் போட்டியிடும் என்பது உங்களை போன்ற அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு குழப்பமாக இருக்கலாம். ஆனால் வேட்பாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மட்டுமில்லாமல் அனைத்து வகையான கட்சி சார்பற்ற அமைப்புகளாலும் நிறுத்தப்படுவார்கள். பல்வேறு குடிமக்கள் அமைப்புகளிலிருந்து வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக நிறுத்த முடியும். மக்கள் தாங்கள் வாக்களிக்க விரும்பும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம் என ஸ்டாலின் ஹோவர்டிடம் கூறினார்.
நீங்கள் இத்தேர்தலில் போட்டிகள் இருக்காது என நினைக்கலாம். ஆனால் நான் மிகவும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தை எதிர்பார்க்கின்றேன்.
நீங்கள் சிறந்த பள்ளிக்கூடங்களை கட்டியிருக்கிறீர்களா இல்லையா? நீங்கள் வீட்டு நிலைமைகளை மேம்படுத்தியுள்ளீர்களா? நீங்கள் ஒரு அதிகாரத்துவவாதியா? எங்கள் உழைப்பை மிகவும் பயனுள்ளதாகவும், எங்கள் வாழ்க்கையை பண்பட்டதாகவும் மாற்ற நீங்கள் உதவியிருக்கிறீர்களா? இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வேட்பாளர்களின் தகுதியை அளவிடுவதற்கும், பொருத்தமற்றவர்களை நிராகரிப்பதற்கும், வேட்பாளர்களின் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்குவதற்கும் மற்றும் சிறந்தவர்களை விளம்பரப்படுத்துவதற்கும் பரிந்துரைப்பதற்கும் இது போன்ற தேர்தல் அளவுகோல்கள் இருக்கும்.
இந்த அளவுகோல்கள் மூலம், எங்கள் புதிய தேர்தல் முறை அனைத்து அமைப்புகளையும், நிறுவனங்களையும் எடை போட்டு, அவர்களின் பணிகளை சிறப்புடன் செய்வதற்கு கட்டாயப்படுத்தும். சோவியத் யூனியனின் நேரடி, இரகசிய வாக்குரிமை, மோசமாக செயல்படும் அரசின் உறுப்புகளுக்கு எதிராக மக்களின் சவுக்கடியாக இருக்கும். எனது கருத்துப்படி நமது புதிய சோவியத் அரசியலமைப்பு, மிகவும் ஜனநாயக அரசியலமைப்பாக இருக்கும் (Stalin-Howard Interview ).
மார்ச் 1ல் நடைப்பெற்ற ஸ்டாலின் நேர்காணலின் போது வெளிவந்த இரகசிய வாக்குமுறை மூலம் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது பற்றி சோவியத் பத்திரிக்கைகளில் எந்தவித பாராட்டுகளோ அல்லது ஆதரவோ இல்லை. மார்ச் 10ல் வெளிவந்த பிராவ்தாவோ ஸ்டாலினின் ஒரு கட்டுரையை மட்டும் பிரசுரித்தது. புதிய தேர்தல் முறை பற்றி ஸ்டாலின் நேர்காணலில் கூறியதை வெளியிடவில்லை. ஸ்டாலின் தேர்தல் முறை கட்சியின் முதன்மை செயலர்களிலிருந்து பல அடுக்கு வரை தான் கட்சிப் பதவியிலிருந்து அகற்றப்படுவோமோ எனவும், கட்சி சாராத வேட்பாளர்களால் மூலம் ஒருவர் தோற்கடிக்கப்பட்டால் மக்களுடன் அவர்கள் கொண்டிருந்த பலவீனமான உறவுகள் அம்பலப்படுமோ எனவும் அச்சமடைந்தனர்.
சோசலிசத்தின் ஒரு புதிய கட்டத்தில் கட்சியின் தலைமை குறித்து ஸ்டாலின் 1934 ஜனவரியில் 17வது கட்சிக் காங்கிரசில் அவர் அளித்த அறிக்கையில் புதிய தேர்தல் முறையை அதிகாரத்திற்கு எதிரான ஆயுதம் என அழைத்தார். அரசின் அமைச்சர்கள், உற்பத்தியில் திறம்பட செயல்பட வேண்டுமானால், தாங்கள் பொறுப்பேற்றுள்ள துறையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதன் பொருள் அவர்களின் துறை சார்ந்த கல்வி, தொழில்நுட்ப கல்வியை கற்றிருக்க வேண்டும். வெறும் கட்சி சார்ந்த பதவிகள் நாட்டை முன்னேற்ற பயன்படாது என்பதை கட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின். (Zhukov, Inoy 305; Zhukov, “Repressii”)
அனைத்து சோவியத் ரசிய 8வது காங்கிரசின் போது (நவம்பர் -டிசம்பர் 1936) ஸ்டாலின் தேர்தல் முறையை மீண்டும் வலியுறுத்தினார். ‘முன்னாள் குலாக்குக்கள், பாதிரிகள் அரசு அலுவலகங்களில் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதால் இது ஆபத்தானது என்கிறீர்கள். ஆனால் உண்மையில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஓநாய்களுக்கு பயந்தால் காட்டில் நடமாடாதீர்கள். முதலாவதாக அனைத்து முன்னாள் குலாக்குகளும், பாதிரிகளூம் சோவியத் அரசிற்கு விரோதமானவர்கள் இல்லையே. மற்றொன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்கள் விரோத சக்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நமது போராட்டப் பணி மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த அவமானத்திற்கு நாம் முழுமையான தகுதியானவர்கள் என்றும் அர்த்தம் என ஸ்டாலின் மிகவும் அழுத்தமாக தேர்தல் முறையின் மீது கட்சியில் நிலவிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். (“Fragmenty” 4-5; Zhukov, Inoy 310-11).
ஆனால் டிசம்பர் 4, 1936ல் கூடிய மத்திய கமிட்டி பிளீனம், அதன் முதல் நிகழ்ச்சி நிரலான அரசியலமைப்பு வரைவு பற்றி எந்த விவாதமும் நடத்தாமல் டிராட்ஸ்கிய மற்றும் வலது சோவியத் எதிர்ப்பு அமைப்புகள் பற்றிய யசோவ் எனும் கமிட்டி உறுப்பினரின் அறிக்கையை மையமாக எடுத்து கொண்டது. (Zhukov, Inoy 294; 298; 309)
டிசம்பர் 5ல் 1936 அன்று அரசியலமைப்பு புதிய வரைவுக்கு காங்கிரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் உண்மையான விவாதம் குறைவாகவே நடைப்பெற்றது. மாறாக அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளின் அச்சுறுத்தல்களை வலியுறுத்தினர். தேர்தல் பற்றி எதுவும் நிர்ணயிக்கப்படாமல் வரைவு அறிக்கைப் பற்றிய கூடுதல் ஆய்வுக்காக ஒரு கமிசன் அமைக்கப்பட்டது. (Zhukov, Inoy 294; 298; 309)
– தொடரும்
மொழியாக்கம்
தாமிரபரணி