விவசாயிகளின் போராட்டமும், நிறைவேறாத கோரிக்கைகளும்!

இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்கும் கார்ப்பரேட்களின் மறுகாலனியாக்க நடவடிக்கையின் ஒருபகுதியாக திணிக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை, ரத்து செய்யவும் மாட்டார்கள். ஏனெனில், இவை தனியார்மய - தாராளமய - உலகமய அரசியல் பொருளாதார அடிப்படையைக் கொண்ட மறுகாலனியாக்கக் கொள்கை என்ற சுருக்குக் கயிரோடு இறுக்கப்பட்டுள்ளது.

பாசிச மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-ல் தொடங்கிய ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு இன்று வரை முடிவு காணப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் படுகாயமும் அடைந்தனர்.

இருப்பினும் இதன் வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வராமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பாசிச மோடி அரசு அதனை முழுமையாக திரும்பப் பெறாமல் வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இதற்கும் கூட பல சுற்று பேச்சு வார்த்தைகள் பயன்படவில்லை. மோடி அரசின் எஜமானார்களான கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட போர்க்குணமிக்கப் போராட்டங்களே தேவைப்பட்டது. இருப்பினும் விவசாயிகளின் இதர கோரிக்கைகளான வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளித்தல்; பயிர் கடன் தள்ளுபடி; இலக்கீம்பூர் கெரி, 2020 முற்றுகை ஆகிய போராட்டங்களில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி, இழப்பீடு; உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேறுதல் போன்றவைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் பஞ்சாப் ஹரியான விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் துவங்கினர்.

 

 

இதையொட்டி ஒன்றிய அரசு சார்பில் வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் ஆகிய மூவர் கொண்ட குழுவை அமைத்து போராடும் விவசாயச் சங்கங்களுடன் நடத்திய மூன்று சுற்று பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

டெல்லி சலோ போராட்டத்தை நடத்தி வரும் விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக ஹரியானா விவசாய சங்கத்தினர் 100க்கணக்கான டிராக்டர்களுடன் 1000க்கணக்கான விவசாயிகள் பேரணியாகச் சென்று பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பாஜக மூத்தத்தலைவர் கேபல் சிங், மாநிலத் தலைவர் சுனில் ஜாக்கர் போன்றவர்களின் வீடுகளை முற்றுகையிட்டனர். டெல்லி சலோ போராட்டத்தை இரும்பு முள் கம்பி வேலிகளால் கான்கீரீட் தடுப்புகளால் தடுக்க முயன்றதை விவசாயிகள் தங்கள் கனரக வாகனங்கள் மூலம் இடித்து தள்ளி முன்னேறினர். இவற்றையும் தடுக்க ட்ரோன்கள் மூலம் வீசிய கண்ணீர் புகைக் குண்டுகளைத் துணிவுடன் சாக்குகளில் பிடித்து (போலீஸ் மீது வீசாமல்) வேறு திசையில் வீசினர். தண்ணீர் பாய்ச்சி அடித்ததையும் வீரத்துடன் எதிர் கொண்டனர். இவற்றிலும் பெரும்பான்மையான விவசாயிகள் காயமடைந்தனர். ஆனால், போலீசோ தங்கள் மீது விவசாயிகள் கல் வீசியதால் காயமடைந்ததாக கூசாமல் வழக்கம் போல பொய்யை அவிழ்த்து விட்டது.

 

 

விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்றால் அரசின் கஜானா காலியாகிவிடும். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க, அவசரகதியில் சட்டம் இயற்ற முடியாது; இது குறித்து மாநில அரசுகளுடன் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கூசாமல் (3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றியதை செயற்கையாக மறந்து) புளுகிய ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டாவிற்கு ஆப்பு வைக்கும் வகையில் பிஜேபி தலைவர் வீடுகளில் முற்றுகையும், டெல்லி சலோ போராட்டமும் உக்கிரம் அடைந்தது. இதைக் கண்டு பீதியடைந்த அமைச்சர் குழு 4-வது சுற்று பேச்சு வார்த்தையில், “ஒன்றிய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகையில், சோளம், பருத்தி ஆகிய விளைபொருட்களைக் குறைந்த ஆதரவு விலையில் 5 வருடத்திற்கு கொள்முதல் செய்வதாக தற்காலிகத் தீர்வுகளுடன் இறங்கி வந்தது”.

இவற்றில் குறைந்த ஆதரவு விலை தொடர்பான சட்டங்கள், எம்.எஸ். சுவாமிநாதன் குழுப் பரிந்துரை; கடன் தள்ளுபடி, உலக வர்த்தகக் கழகத்தை விட்டு வெளியேறுவது, இன்னும் இதர கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனால் அதிருப்தியுற்ற விவசாய சங்கங்கள் டெல்லி சலோ போராட்டத்தைத் தொடர்வோமென அறிவித்துள்ளனர்.

பஞ்சாப் – ஹரியானா – உத்தரபிரதேச விவசாய சங்கங்கள், விவசாய வர்க்கம் என்கிற அடிப்படையில் தொடர்ச்சியாக – இடைவிடாதப் போராட்டங்களின் மூலம் அரசின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் நடத்தப்படும் போராட்டங்களின் படிப்பினைகளை, அதன் தியாகங்களை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட இதர அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் வரித்துக் கொண்டு, அவரவர் வர்க்கக் கோரிக்கை உட்பட இதர ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களையும் வீச்சாக, பரவலாக கொண்டு செல்வது மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்.

அதே வேளையில், இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்கும் கார்ப்பரேட்களின் மறுகாலனியாக்க நடவடிக்கையின் ஒருபகுதியாக திணிக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை, ரத்து செய்யவும் மாட்டார்கள். ஏனெனில், இவை தனியார்மய – தாராளமய – உலகமய அரசியல் பொருளாதார அடிப்படையைக் கொண்ட மறுகாலனியாக்கக் கொள்கை என்ற சுருக்குக் கயிரோடு இறுக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தான் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் கொள்கை சார்ந்தவையென்றும் பூசி மழுப்பியுள்ளார்.

இந்த சுருக்குக் கயிறு நம்மை மட்டுமல்ல, உலகில் உள்ள பிரான்ஸ் – ஜெர்மனி – இத்தாலி போலந்து – ஸ்பெயின் – லிதுவேனியா – கிரீஸ் போன்ற நாடுகளுடைய விவசாயிகளின் கழுத்தையும் நெரித்து வருகிறது என்பதை அவர்களின் உக்கிரமான போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.

காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பல் அரங்கேற்றி வரும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போரை கட்டியெழுப்பாமல், விவசாயிகள் மட்டுமல்ல, வேறு எந்த வர்க்கப் பிரிவு மக்களின் வாழ்வுரிமையையும் மீட்டெடுக்க முடியாது.

 

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன