டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராமானுஜம் கல்லூரி, மத்திய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தால் கற்றல் மற்றும் கற்பித்தல் மையமாக செயல்பட்டு வருகிறது. அதாவது மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் மையமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் “Shrimad Bhagavad Gita: Enlightenment and Relevance” என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான ஒரு புத்தாக்க பட்டயப் படிப்பிற்கான (refresher certificate course) ஒன்று டிசம்பர் 22 லிருந்து ஜனவரி 10 வரை தினமும் மாலை இரண்டு மணி நேரம் நடந்து வருகிறது. கீதையின் ஒவ்வொரு தலைப்பையும் ஒரு பாடமாக மொத்தம் பதினெட்டு வகுப்புகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வகுப்புகளில் கல்லூரியின் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனக் கல்லுரி முதல்வர் தெரிவித்துள்ளார். கூடவே தனது மின்னஞ்சலில் “இந்திய அறிவு அமைப்புடன் அதாவது பாரதிய ஞான பரம்பரையின் அடிப்படையிலான கல்வியை கொடுப்பதென்ற நமது குறிக்கோளுக்கான சூழலை நோக்கிச் சொல்ல இந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு” என்றும், “வரும்காலங்களில் பகவத் கீதை மட்டுமல்ல வேதங்கள் பற்றி தொடர் வகுப்புகளும் நடத்தப்படும்” என்றும் கூறியுள்ளார். கீதையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை பேராசிரியர்கள் சமகாலத்திற்கு பொருத்தி செயல்பட இந்த வகுப்புகள் பயன்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
“டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் அறிவியல் அல்லது ஆங்கில இலக்கியம் போன்ற எந்த பாடத்திட்டத்திலும் பகவத் கீதை பாடமாக இல்லை. இந்த புத்தாக்க படிப்பை ஆசிரியர்களுக்கு கட்டாயப்படுத்துவதினால் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறன் அதிகரிக்குமா? அல்லது அவர்களின் ஆராய்ச்சி திறன் தான் மேம்படுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை” என்கிறார் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு உறுப்பினர் பேரா. மாயாஜான்.
ராமனுஜம் கல்லூரியில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தின் நடத்துகிற இந்த வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கல்லூரி முதல்வரோ, “இது தேசிய கல்விக் கொள்கையோடு சம்பந்தப்பட்டதென்பதால் அனைவரையும் கட்டாயம் பங்கேற்க சொல்கிறோம்” என்கிறார்.
ஆசிரியர்களுக்கான புத்தாக்க படிப்பிற்கான பாடத்திட்டத்தை அவர்களின் கற்பிக்கும் திறனை வளர்ப்பதற்காக வடிவமைக்காமல், இந்துத்துவா சித்தாந்தத்தை ஆசிரியர்/மாணவர்களிடையே பரப்புவதற்காக வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி யுடன் தொடர்புடையவர்கள் தான் ‘நிபுணர்களாக’ அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடதக்கது. நித்தியானந்தா, ஐன்ஸ்டீனின் ஆற்றல்-நிறை விதியை(E=mc2) விளக்கினால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இந்த வகுப்புகளும் இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் பகவத்கீதை பல மாநிலங்களின்(குஜராத், மகாராஷ்ட்ரா, ஹரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான்….) பள்ளி, கல்லூரிகளில் பாடமாக ஆக்கப்பட்டுவிட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட கீதை மற்றும் வேதத்தின் சில பகுதிகள் பாடதிட்டத்தில் (Audit course) சேர்க்கப்பட்டுள்ளது.
வர்ண-சாதி கட்டமைப்பை தக்கவைக்க கொலை செய்வது கூட தர்மம் என்பதுதான் கிருஷ்ணனின் உபதேசம். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் மீது அணுகுண்டை வீசி 2.15 லட்சம் மக்களைக் அமெரிக்கா கொன்றபோது, அணுகுண்டை உருவாக்கிய ஓப்பன்ஹீமர் இடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஓப்பன்ஹீமர் “நானே இறப்பு நானே உலகத்தை அழிப்பவன் (Now I am become death, destroyer of the world)” என்று கீதையை மேற்கோள் காட்டினார்.
இந்தியா என்ற நாடு, இந்து தேசியமாக கட்டியமைக்கப்பட வேண்டும் என்றால் கீதையின் பங்கு என்ன என்பதை பிரேம்நாத் பசாஸ், இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற தனது நூலில் விரிவாக காட்டியிருப்பார்.
பகவத்கீதையின் உள்ளடக்கத்திற்கும் மற்றும் தத்துவத்திற்கும் நவீன அறிவியலுக்கும் இமியளவும் எந்த தொடர்பும் இல்லை. பல்கலைக்கழகங்கள் அறிவியல் கண்டுபிடுப்புகளையும் அறிவியல் மனப்பாங்கையும் சமூகத்தில் உருவாக்க வேண்டியவை. அறிவியலுக்கு அடிப்படையான இயக்கவியலையும் பொருமுதல்வாத தத்துவதையும் மாணவர்களுக்கு போதிக்க கடமைப்பட்டவை. ஆனால் இந்தியாவிலோ கீதை என்ற குப்பையை கருத்துமுதல்வாத தத்துவைத்தை ‘வர்ண தர்மத்திற்காக’ கொலை செய்வதும் சரி என்று போதிக்கின்ற ஒன்றை சிறிதும் அறிவு நேர்மையின்றி பேராசிரியர்களுக்கு போதிக்கின்றனர். பேராசிரியர்கள் உட்பட மொத்த கல்வி கட்டமைப்பையுமே இந்துத்துவா கருத்தியலுக்கு ஆட்படுத்துவது என்ற திட்டதுடனேயே இதுபோன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
- அழகு