ஐந்தாம் இடத்தில் இந்தியப் பொருளாதாரம்!
ஆனால் ஆம்புலன்ஸ் வர சாலை இல்லை!

 

 

மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில்  25 வயதான மாமோனி ராய் என்ற இளம்பெண், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) நாடுகிறார். குடும்பத்தினர் எவ்வளவு போராடியும் அவரது கிராமத்தின் மோசமான சாலை கட்டமைப்பை காரணம் காட்டி எந்த ஒரு அவசர ஊதியும் வர மறுத்துவிட்டது. வேறுவழியின்றி உறவினர்கள் அவரை  மரக் கட்டிலிலேயே மருத்துவமனைக்குத் தூக்கி சென்றுள்ளனர்.

உள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 10 கி.மீ. இதில் ஐந்து கி.மீ., மண் சாலை. ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். பெண்ணின் கணவர் கார்த்திக் ராயோ, தனது 2 வயது குழந்தையைக் கையில் சுமந்தபடி, “கிராமத்தில் சரியான சாலை இருந்திருந்தால் என் மனைவி உயிருடன் இருந்திருக்கலாம்”என்று கதறி அழுகிறார்.  இந்தியா வளர்ந்துவிட்டது, வல்லரசாகிவிட்டது என்று ஓயாமல் பிரச்சாரம் செய்துவரும் ஆளும்வர்க்க அடிவருடிகளான அறிவுஜீவிகளின் முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது இப்பெண்ணின் மரணம்.

இதையடுத்து கேள்விகள் எழுந்தபின், மேற்கு வங்க திரிணாமுல் அரசின் கல்வி அமைச்சர் சித்திக் குல்லா சவுத்ரி “மோசமான சாலைகளால் அவர் இறக்கவில்லை. அவள் இறந்ததற்குத் தலைவிதிதான் காரணம்” எனத் திமிராக பதிலளிக்கிறார்.  மால்டா மாவட்ட திரிணாமுல் காங்., தலைவர் ஐஸ் “கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தியதால், கிராமங்களில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர்”என்கிறார்.

பன்னாட்டுக் கம்பெனிகளின் முதலீடுகளை ஈர்க்க – அதாவது நாட்டை அவர்களூக்கு அடகு வைக்க – தங்க நாற்கர சாலைகள், நாட்டை குறுக்கு நெடுக்காக இணைக்கும் சாகர்மாலா திட்டம் என்று ஒன்றிய, மாநில அரசுகள் பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி இறைக்கின்றன. இந்தியாவின் எல்லா வளங்களையும் வெட்டி உடனடியாகத் துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் பார்க்க ஏதுவாக இச்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவையெல்லாம் நாட்டின் “வளர்ச்சி” என்று நம் தலையில் கட்டப்படுகின்றன.

ஆனால் கிராமப்புறங்களிலோ அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வருமளவுக்குக் கூட சாலை வசதிகள் இல்லை. இதுதான் இந்தியாவில் பெரும்பான்மையான கிராமங்களின் நிலைமை. கேட்டால் “நிதியில்லை” என்றும் “உன் தலைவிதி அவ்வளவுதான்” என்றும் திமிர்த்தனமாக பதிலளிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். எனவே, இது மரணமல்ல. ஒன்றிய, மாநில அரசுகள் நடத்திய பச்சைப் படுகொலை.

5G இணைய சேவை, 5ஆம் இடத்தில் இந்திய பொருளாதாரம், தங்க நாற்கர சாலைகள், நாடு வளர்ந்துவிட்டது என “வளர்ச்சி” பற்றிய சகிக்கவொண்ணாத ஆபாசக் கூச்சல்களுக்கு நடுவே, இந்த ‘பாரத தேசத்தின்’ முகத்திரையைக் கிழித்து உண்மையான இந்தியாவை நமக்குக் காட்டுகிறது இப்பெண்ணின் மரணம்.

  • ஜெமினி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன