ஒன்றிய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் தலையில் பொருளாதார சுமையை திணிக்கும் போதெல்லாம், அது முன்வைக்கும் ஒரே காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது, இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்பதுதான். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று ஏதோ வேண்டா வெறுப்பாக விலையை உயர்த்துவதாக காட்டிக் கொள்வார்கள்.
எண்ணெய் நிறுவனங்கள் நட்டமடையும் போது விலையை உயர்த்துவது சரி என்றால் அவை லாபமீட்டும் போது விலையைக் குறைக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லை. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு காலாண்டிலும் பெட்ரோலிய நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தைப் பதிவு செய்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக இந்தக் காலாண்டிலும் மிகப் பெரிய லாபத்தை அவை அடைந்துள்ளன. இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டும் 2023ம் நிதிஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 13,750 கோடி ரூபாய் லாபமீட்டியுள்ளது. இதுவே மற்ற இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் 10,644 கோடி ருபாயையும், இந்துஸ்தான் பெட்ரோலியம் 6765 கோடி ருபாயையும் இந்த காலாண்டில் லாபமாக ஈட்டியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வரும் அதே நேரம் ஒன்றரை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றித் தொடர்வதால் எண்ணெய் நிறுவனங்கள், பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. 2022ம் ஆண்டு மே மாதம் தொடங்கி இன்று வரை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்படவே இல்லை. அன்றைக்கு பேரல் ஒன்றுக்கு 120 டாலராக இருந்த கச்சா எண்ணெய்யின் விலை படிப்படியாக குறைந்து இன்றைக்கு பேரல் ஒன்றிற்கு 80 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்றார்போல பொது மக்கள் பயன்பாட்டிற்கான பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இப்படி பொதுமக்களிடம் அடித்த கொள்ளைதான் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்கு காரணம்.
2017ம் ஆண்டு, பெட்ரோல் டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கொண்டுவந்த போது இதன் மூலம் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பயனைப் பொதுமக்கள் அனுபவிக்கும் வகையில் உடனடியாக விலை குறைப்பு செய்யப்படும் என மோடி அரசு கூறியது. ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்த போது மட்டும் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய அரசு, கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியவுடன் அதற்கேற்றார் போல மக்கள் பயன் பெறும் வகையில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை.
இது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனிடம் கேட்ட போது, “கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த போது அதன் சுமை மக்கள் மீது ஏறாத வண்ணம் பாதுகாக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டுவிட்டன. தற்போதுதான் அந்த நஷ்டங்களில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டு வருகின்றன ஆகையால் விலை குறைப்பு செய்ய முடியாது” எனக் கூறினார். நிர்மலா சீதாராமன் இப்படிக் கூறி கிட்டத் தட்ட 6 மாதங்கள் ஆகின்றன, இருந்தும் அவர்கள் இதற்கு முன்பு சந்தித்த நட்டத்தை ஈடுகட்ட முடியவில்லை போலிருக்கிறது.
ஆனால் நிதியமைச்சர் கூறுவது போன்று, விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெரிய நட்டம் எதையும் சந்தித்தாக தெரியவில்லை. உதாரணத்திற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தை எடுத்துக் கொளவோம், 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை வரி கட்டிய பிறகான லாபக் கணக்கில் மட்டும் ஒவ்வொரு அண்டும் பலநூறு கோடிகளை அந்நிறுவனம் லாபமாக அடைந்துள்ளது. அதிக பட்சமாக 2022ம் ஆண்டு 24,184 கோடி ருபாயையும், குறைந்த பட்சமாக 2020ம் ஆண்டில் 1,313 கோடி ருபாயும் லாபமாக அடைந்துள்ளது. இருந்தும் பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிவருவதாக நிதியமைச்சர் கூறுகிறார்.
இந்தக் காலகட்டத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்த இழப்பு என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவிற்கு வழங்கப்பட மானியம் மட்டுமே. அதுவும் அந்த மானியத்தை ஒன்றிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும் ஆனால் அப்படி வழங்கப்படவில்லை. சமையல் எரிவாயு மானியத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த சில ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டு 37,209 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் வெறுமனே 242 கோடியாக சுருக்கப்பட்டது. அதிகபட்சமாக நிதி ஒதுக்கப்பட்ட ஆண்டுகளிலும் கூட எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியத்தொகை வழங்கப்படவில்லை. அதனை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது நட்டக் கணக்கில் சேர்த்துக் கொண்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் மூலமாக லிட்டர் ஒன்றிற்கு 10 ருபாய் லாபமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 60 கோடி லிட்டர் பெட்ரோல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனை வைத்துப் பார்த்தால் பெட்ரோல் விற்பனையின் மூலம் மட்டும், நாள் ஒன்றுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 600 கோடி ருபாயை லாபமாக ஈட்டுகின்றன. இருந்தும் நட்டமடைவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிலை என்றால், தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கதையோ வேறாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெட்ரோலிய நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் மட்டும் இந்தக் காலாண்டில் 19,888 கோடி ருபாயை லாபமாக அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 63% அதிகம். ரஷ்ய கச்சா எண்ணெய்யே இதற்கு முக்கிய காரணம். உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை வித்தித்துள்ளன. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அதனைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக ஏற்றுமதி செய்தால் அதற்கு தடையில்லை என்பதுடன், பேரல் ஒன்றிற்கு 80 டாலருக்கும் மிகாமல் ரஷ்யா அந்நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்தால் மட்டுமே இந்த அனுமதி என்றும் நிபந்தனை விதித்துள்ளன.
இதனைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு, பல மடங்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஐரோப்பிய நாடுகளுக்கு சந்தை விலையில் ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் ஈட்டியுள்ளது. அதே சமயம் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யினை உள்நாட்டு விநியோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளபடியால் இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்யின் மூலம் பொதுமக்களுக்கு ஒரு பயனும் கிடைக்கவில்லை.
இவ்வாறு எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை உத்தரவாதப் படுத்த மட்டுமே மோடி அரசு வேலை செய்கிறத தவிற, பொது மக்களின் நலன் சார்ந்து சிந்திப்பது கூட இல்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்து பொதுமக்கள் அவதியுற்றுவரும் வேளையில் பெட்ரோல் டீசல் விலையினைக் குறைப்பதன் மூலம் விலைவாசி உயர்வை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்த முடியும். பெட்ரோல் டீசல் மீது உலகிலேயே மிக அதிகபட்சமான வரியை விதித்து மக்களைச் சுரண்டி வரும் காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, கார்ப்பரேட் நலனை முன்னிட்டு, இந்தக் குறைந்தபட்ச நடவடிக்கையையும் கூட எடுக்காமல் தடுத்து வருகிறது.
- அறிவு