தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த 13ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் 14 பேர், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் 8 பேர் என மொத்தம் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போயிருக்கிறார்கள். இது தவிற 60க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேருக்கு கண்பார்வை இழப்பும், 4 பேருக்கு சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது.
கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்து போனவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
இச்சம்பவம் நடந்த அடுத்த இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும் கள்ளச்சாரயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு 2000 வழக்குகள் பதியப்பட்டு 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாரயத்திற்கு எதிரான அரசு எனக் காட்டிக்கொள்ள இரண்டு நாட்களில் இத்தனை துரிதமான நடவடிக்கைகளை எடுத்தாலும், இவை மக்களை ஏய்க்கும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. திமுக ஆட்சியில் மட்டுமல்ல அதிமுக ஆட்சியிலும் கூட கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது, ஓடிக்கொண்டும் இருக்கிறது.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது ஒரு பெரிய தொழிலாகத் தொடர்ந்து நடக்கிறது. பலகோடி ருபாய் புழங்கும் இந்தத் தொழிலில் போலீசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் பங்கு இருக்கிறது. போலீசில் கார் டிரைவர் தொடங்கி ஏட்டு, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், மதுவிலக்கு ஏடிஎஸ்பி வரை வார வாரம் மாமுல் வாங்கிக் கொள்கின்றனர். அதிகாரிகளில் கலால் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளில் வார்டு கவுன்சிலர் தொடங்கி மந்திரி வரைக்கும் கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொள்கிறார்கள்.
மது ஒழிப்புப் பிரிவு போலீசார் வேலை செய்ததாக கணக்குக் காட்டுவதற்கு, மாத மாதம் கள்ளச்சாராய வியாபரிகளே வழக்கும் கொடுத்து, கைது செய்ய ஆட்களையும் கொடுத்துவிடுவதால் வழக்குகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமே கிடையாது. கள்ளச்சாராயத்திற்கு எதிராக தமிழகத்தில் மட்டும் இதுவரை ஒன்றரை லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 1.4 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கள்ளச்சாராயம் விற்கின்றனர்.
கள்ளச்சாராயம் விற்று சிறைக்குச் சென்றவர், ஜாமினில் வெளியே வந்து போலீசு நிலையத்தில் இருந்த சாராயப் பேரலை எடுத்துவந்து மீண்டும் விற்பனை செய்த கதையெல்லாம் தற்போது கள்ளச்சாராய மரணம் நடந்துள்ள மரக்காணம் போலீஸ் ஸ்டேசனிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு போலீசும் கள்ளச்சாராய வியாபாரிகளும் நெருக்கம்.
மற்றொருபுறம் கள்ளச்சாராய வியாபாரிகள் ஒரு கட்டத்தில் தாங்களே அரசியல்வாதிகளாகவும் பரிணமித்துள்ளனர். அதிமுக, திமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் சேர்ந்து கொண்டு நெருக்கத்தை வளர்த்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் ஒரே சமயத்தில் இறந்ததால் இன்றைக்கு இது பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு முன்னர் பலர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போதும் கூட இது போலவே முதல்வர் சாட்டையைச் சுழற்றுவதும், தேடுதல் வேட்டை நடத்திப் பலர் கைது செய்யப்படுவதும் நடந்துள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் சாராய ஆறு ஓடத் தொடங்கிவிடும்.
இங்கே இன்னொரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது, கள்ளச்சாராயம் குடித்து இறப்பது போன்றே டாஸ்மாக் சாராயம் குடித்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போகிறார்களே கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் அரசு டாஸ்மாக்கை மூட மறுக்கிறதே ஏன்?
2016 தேர்தலின் போது தாங்கள் வெற்றிபெற்றால் டாஸ்மாக் முழுவதுமாக மூடப்படும் என வாக்குறுதி கொடுத்த திமுக, 2022ல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது. இலக்கு வைத்து மது விற்பனையை அதிகரிப்பது. இலக்கை அடையாத அரசு அதிகாரிகளுக்கு மெமோ கொடுப்பது. கல்யாண வீட்டிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது விற்பனைக்கு அனுமதி கொடுப்பது, மது குடிப்பவர்களை ஈர்க்கும் வகையில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்களை வைப்பது என சாராய விற்பனையை எப்படி அதிகரிப்பது, மக்களை எப்படி குடிகாரர்களாக்குவது என்று சதா சர்வகாலமும் சிந்திக்கும் அரசாக இந்த அரசு இயங்கிவருகிறது.
அரசைப் பொருத்தவரை டாஸ்மாக் என்பது வருமானம் வரும் தொழில், மக்கள் பாதிக்கப்படுவது குறித்து அதற்குக் கவலை இல்லை. லாபத்தை அதிகரிக்க தொழில் நடத்தும் முதலாளி என்ன செய்வானோ அதைத்தான் திமுக அரசும் செய்து வருகிறது.
இப்படித் தான் செய்யும் தொழிலில் இலாபம் ஈட்டும் முதலாளி போல் சிந்திக்கும் ஒரு அரசு, டாஸ்மாக் சாராயத்தின் விலை அதிகமாக இருப்பதால், மக்கள் மலிவு விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயம் குடிப்பதை எப்படிப் பார்க்கும்? டாஸ்மாக்கை விரிவுபடுத்தி மலிவு விலையில் ‘நல்ல’ சாராயத்தை விற்பதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இதனைப் பார்க்குமேயொழிய தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிக்காக சாராயத்தை ஒருபோதும் முற்றிலும் ஒழித்து விடாது. இதற்கு திராவிட மாடல் அரசும் விதிவிலக்கல்ல.
- அழகு