ஹின்டன்பெர்க் அறிக்கையை தொடர்ந்து அதானியின் முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செய்திகள் அன்றாடம் வெளி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் மோடி அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் நடைபெற்ற நிலக்கரி வயல்களின் சுரங்க ஏலத்தில், அதானி குழுமம் நடத்திய முறைகேடுகளை ஸ்க்ரோல் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
மோடி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலக்கரி சுரங்கத் துறையில் குத்தகை மூலம் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க அனுமதித்தது. கூடவே 2021-ஆம் ஆண்டில் நிலக்கரி ஏலம் மந்தமாக இருப்பதாகக் கூறி ஏலத்திற்குத் தேவையான குறைந்தபட்ச தகுதி உள்ள ஏலதாரர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைத்தது ஒன்றிய நிலக்கரி அமைச்சகம்.
சென்ற நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசால், இதுவரை இல்லாத வகையில் 141 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு பெரிய அளவிற்கு போட்டி நிலவவில்லை. 141 சுரங்கங்களுக்கு வெறும் 59 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. இந்த நிலக்கரி ஏலத்தில் அதானி குழுமம், வடமேற்கு மாதேரி (மகாராஷ்டிரா) புருங்கா (சத்தீஸ்கர்), தஹேகோன் கோவாரி (மகாராஷ்டிரா), என்ற மூன்று நிலக்கரி சுரங்கங்களை மிக மலிவான விலையில் கைப்பற்றியிருக்கிறது.
இந்த மூன்று நிலக்கரி சுரங்கத்தின் ஏலத்தின் போது அதானி நிறுவனத்திற்கு போட்டியாக இரண்டாவது ஏலப்போட்டியாளாராக பங்கேற்ற போட்டி நிறுவனங்கள் யார்? அதன் பின்புலம் என்ன? அதானி நிறுவனம் எப்படி இந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களை மலிவான விலைக்கு வாங்கியது? என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவருகின்றன.
அதானி நிறுவனம் இந்த ஏலத்தில் நேரடியாக பங்கு பெறவில்லையென்றாலும் தனது M.H. நேச்சுரல் ரிசோர்ஸ் என்ற தன் துணை நிறுவனம் மூலமே இந்த நிலக்கரி சுரங்கங்களை கைப்பற்றியுள்ளது. அதானி குழுமம், மலிவு விலையில் கைப்பற்றிய மூன்று நிலக்கரி சுரங்க ஏலங்களில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்கள் அடிகார்ப் மற்றும் கேவில் மைனிங் என்ற இரு நிறுவனங்கள்.
இதில் அடிகார்ப் எனும் நிறுவனத்தின் முதலாளி உத்கர்ஷ் ஷா. இவர் யார் என்றால் அதானி குழுமத்தில் எந்த சிக்கல் எழுந்தாலும் அதனைத் தீர்க்கவும், இன்னும் சொல்லப் போனால் அதானியால் நிறைவு செய்ய முடியாத சுடோகு புதிர்களைத் தீர்ப்பதில் கூட உத்கர்ஷ் ஷா உதவுவார். இவ்வளவு நெருக்கம் வாய்ந்த அதானியின் நெருங்கிய நண்பரான உத்கர்ஷ் ஷா என்பவரின் அடிகார்ப் என்ற நிறுவனம் தான் அதானிக்கு போட்டியாக நிலக்கரி சுரங்கத்தில் பங்கேற்றது.
ஏலத்தில் அதானி குழுமத்திற்கு போட்டியாக பங்கேற்ற இன்னொரு நிறுவனம் கேவில் மைனிங் என்ற நிறுவனம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 24, 2022 அன்று பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனம் வெறும் ஒரு லட்சம் ருபாய் மூலதனத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு நிலக்கரி சுரங்கத்தொழிலில் ஈடுபட்ட அனுபவம் கிடையாது. இப்படிப்பட்ட கேவில் மைனிங் என்ற நிறுவனம் தான் 200 மில்லியன் டன் கொள்ளளவு உள்ள வடமேற்கு மாதேரி (மகாராஷ்டிரா) நிலக்கரி சுரங்கத்தில் அதானியின் துணை நிறுவனத்திற்கு போட்டியாக பங்கெடுத்தது. இந் நிறுவனத்தின் முதலாளி யார் என்றால் அது வேறு யாரும் இல்லை , அதுவும் உத்கர்ஷ் ஷா தான். உத்கர்ஷ் ஷாவின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ஆதர்ஷ் ஷா, அடிகார்ப் மற்றும் கேவில் மைனிங் இரண்டிலும் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு நிறுவனங்களும் அகமதாபாத்தில் ஒரே முகவரியைப் பகிர்ந்து கொள்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிகார்ப் மற்றும் கேவில் மைனிங், ஒரே குடும்பத்திற்கு சொந்தமான சகோதர நிறுவனங்கள் போன்றது ஆகும்.
அதானி குழுமமும் அடிகார்ப் நிறு வனமும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான உறவைக் கொண்டுள்ளன. அதானி பவரில் உள்ள தணிக்கைக் குழுவின் தலைவர் தான் அடிகார்ப் நிறுவனத்தை தணிக்கை செய்யும் நிறுவனத்தில் நிர்வாகப் பங்குதாரராக இருந்துள்ளார். அடிகார்ப் நிறுவனம் அதானி எண்டர் பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, உள்நாட்டு சந்தையிலிருந்தும், அதானி குளோபல் பிடிஇ லிமிடெட் (சிங்கப்பூர்) மற்றும் அதானி எஃப்இசட்இ (யுஏஇ) மூலம் அடிகார்ப் குழுமம் வெளி நாட்டுச் சந்தையில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்து வருகிறது.
இந்த அடிகார்ப் நிறுவனத்திற்கு அதானி குழுமம் 2019-20 ஆம் ஆண்டில் ரூ 622 கோடி கடனாக வழங்கியுள்ளது. ஆனால் அடிகார்ப் நிறுவனத்தின் 2019-20 க்கான ஆண்டு வருவாய் ரூ 64 கோடி மற்றும் அதே ஆண்டின் நிகர லாபம் ரூ 68.6 இலட்சம் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு அடிகார்ப் வருவாய் குறைந்து கொண்டு வருகிறது 2021-22 அடிகார்ப் வருவாய் 14.3 கோடிக்கும் கீழே இறங்கியது. இப்படி நிகர வருவாய் குறைந்த வரும் நிலையில், அடிகார்ப் எண்டர்பிரைசஸ் வாங்கிய கடன்களை வட்டி இல்லாமல் அதானி குழுமத்திற்கு திருப்பிச் செலுத்த அடிகார்ப் நிறுவ்னம் சம்பாதிக்க சுமார் 900 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், இந்த கடன்கள் எதற்கு வழங்கப்பட்டன, எங்கே கைமாறியது என்ற கேள்வி களும் எழுந்துள்ளன. அதானி குழுமம் தனது சந்தை வெளிப்படைத்தன்மையை மறைக்கவே வேறு நிறுவனங்களை பயன்படுத்துகிறது என ஹூண்டர்பெர்க் அறிக்கையின் துலக்கமான எடுத்துக்காட்டு அடிகார்ப் – அதானி குழும பரிவர்த்தனை உறவு.
இப்படி தில்லுமுல்லுகள் மூலம் நாட்டின் பொதுச்சொத்தான நிலக்கரி வயல்களை மலிவு விலையில் ஏலத்தில் கைப்பற்றியிருக்கிறது அதானி குழுமம்.
******************
சென்ற காங்கிரசு ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வயல்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் பல முறைகேடுகள், ஊழல்கள் நடைப்பெற்று நாட்டிற்கு பல இழப்புகள் நடந்தேறியுள்ளன
தனியார்மயம் – தாராளமயம் அமலுக்கு வந்த பின் 1993 தொடங்கி 2003 வரையில் 41 வயல்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தபொழுது, 2004 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டுக்குள் 175 வயல்கள் தன்னிச்சையாக ஒதுக்கீடு செயப்பட்டன. இவற்றுள் 111 நிலக்கரி வயல்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன.
நிலக்கரி வயல்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது சூடுபிடித்த நேரத்தில், அதாவது 2006 முதல் 2009 முடிய அத்துறையின் பொறுப்பு பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து இருந்தது.
அப்போது அமைச்சர்கள்,அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான் (Screening committee) நிலக்கரி வயல்களுக்கு விண்ணப்பித்த பல நிறுவனங்களை தெரிவு செய்து நிலக்கரி வயல்களை ஒதுக்கும் முறை இருந்தது.
அப்போது விண்ணப்பித்த நிறுவனங்களில் டாடா, பிர்லா, மித்தல், ஜின்டால் போன்ற தரகு முதலாளிகளைத் தெரிவு செய்து, அவர்களுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை பெருமாள் கோவில் பிரசாதம் போல விநியோகித்தார் மன்மோகன் சிங்.
இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்றது கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை. இந்த இழப்பு மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பல மடங்கு தொகையை நாட்டிற்கு இழப்பீடாக கொண்டு வந்தார் ஜேப்படி திருடன் மன்மோகன் சிங்.
சென்ற காங்கிரசு ஆட்சியின் போது நடைப்பெற்ற 2ஜி அலைக்கற்றைகளை தொலை தொடர்பு துறைக்கு ஒதுக்கியதில் முறைகேடு, நிலக்கரி வயல்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இன்மையால் நாட்டிற்கு பல இலட்சம் கோடி இழப்பு போன்ற ஊழல்களை பிரச்சாரம் செய்தே பாஜக அரசு ஆட்சியை பிடித்தது
மோடியோ காங்கிரசின் நிலக்கரி ஊழல் ஒட்டுமொத்த நாட்டின் முகத்தை இருட்டடிப்பு செய்து விட்டது என காங்கிரசை குற்றம் சாட்டினார்.
அனைத்திய காங்கிரசு கமிட்டி (AICC) என்பதற்கு பதிலாக அனைத்திந்திய நிலக்கரி காங்கிரஸ் என காங்கிரசு கட்சியை நிலக்கரி காங்கிரசு என கிண்டல் செய்தார் மோடி.
ஆனால் தற்போது மோடி அரசு நடத்திய ஏல முறையின் இலட்சணம் தான் அதானி குழுமம், மலிவு விலைக்கு நிலக்கரி வயல்களை குத்தகை எடுக்க வழிகோலியிருக்கிறது..
மோடியின் கூட்டுக்களவானியான அதானிக்கு ஏற்ப மோடி அரசு, பல்வேறு சட்டத்திருத்தங்களை செய்து வருகிறது. தனியார்மயத்தை முடுக்கிவிட்டுள்ள மோடியின் தலைமையிலான அரசு இயற்கை வளங்களையும், இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தீவிரமாக விற்று வருகிறது.
அதானி போன்ற நிலக்கரி திருடனை ஒழிக்க வேண்டுமானால் பொதுச்சொத்துக்களை தனியாருக்கு விற்கும் மறுகாலனியாக்க கொள்கைகளையும், இக்கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் மோடி அரசையும் வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே முடியும்.
- தாமிரபரணி