இன்று மார்ச் 23, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாகத் திகழும் தோழர் பக்த்சிங் நினைவுதினம். 92 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகிய மூவரும் ஆங்கில காலானியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டனர். “தனிநபர்களை கொல்வது எளிது. ஆனால் கருத்துக்களை கொல்ல முடியாது. கருத்துக்கள் நீடித்திருக்கும் போது மிகப்பெரிய பேரரசுகள் கூட சிதைந்து போயிருக்கின்றன” என்று கூறிய பகத்சிங்கைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு எப்படி அறிமுகம் செய்துவைக்கிறார்கள்.
சுதந்திரத்திற்காக உயிர் துறந்த தியாகி என்ற ஓற்றைப் பரிமாணத்தில் பகத்சிங்கை அடைத்துவிடவே அனைவரும் விரும்புகின்றனர். பகத்சிங்கைப் பூசையறைப் படமாக மாற்றும் வேலை அவர் இறந்த சிறிது காலத்திற்குள்ளாகவே தொடங்கிவிட்டது, அது இன்றும் தொடர்கிறது. காங்கிரஸ் தொடங்கி ஆம் ஆத்மி வரை, தங்களது சுய லாபத்திற்காக பகத்சிங்கைப் பயன்படுத்திக் கொள்ள ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் அவரது சித்தாந்தத்தை தங்களது வசதிக்கேற்றபடி திரித்துள்ளனர். பகத்சிங்கின் அரசியலையும் அவரது சித்தாந்தத்தையும் இருட்டடிப்பு செய்ததன் விளைவுதான் இன்றும் கூட ஆர்.எஸ்.எஸ். பகத்சிங்கைத் தங்களுக்கு நெருக்கமானவராக காட்டிக்கொள்ளும் வசதியைத் தருகிறது.
பகத்சிங்கின் அரசியலும், சித்தாந்தமும் அவர்காலத்து இந்தியத் தலைவர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டுகிறது. 23 வயதில் தூக்குமேடை ஏறிய பகத்சிங் முன்வைத்துப் போராடிய அரசியல் அவரை விட பலமடங்கு வயதான, பழுத்த அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டது. அவர் காலத்து அரசியல் தலைவர்களால் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அவர்கள் முன் நிறுத்திய தீர்வுகளைத் தாண்டி சிந்திக்க இயலவில்லை. ஹோம்ரூல் (1916), பொறுப்பு அரசாங்கம் (1919), சுயஆட்சி (1923), டொமினியன் அந்தஸ்து (1929) என ஏகாதிபத்தியவாதிகளின் தீர்வுகளையே தங்களது லட்சியமாக அந்த தலைவர்கள் வழிமொழிந்து வந்தனர். அவற்றை முன்வைத்துத்தான் மக்கள் இயக்கங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
ஆனால் ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், “முழுமையான சுதந்திரம்” (Complete Independence) தான் நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு என முன்வைத்துப் போராடினார் பகத்சிங். இந்த முழக்கத்தை முன்வைத்தபோது பகத்சிங்கிற்கு வயது 21. அவர் சார்ந்த இந்துஸ்தான் சோசிலிசக் குடியரசு அமைப்பு மிகச் சிறிய அமைப்பாக வடஇந்தியாவின் ஒருசில நகரங்களில் மட்டும் இயங்கும் அமைப்பாக இருந்தது. அவருடன் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மட்டுமே தோழர்கள் இருந்தனர். இவையெல்லாம் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. அமைப்பு பலம் இல்லை என்று அவர்கள் புலம்பவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் விடுதலையைக் கனவு கண்டனர், அதனை அடைவதைத் தங்களது லட்சியமாகக் கருதினர்.
தங்களது லட்சியத்தைத் தாங்கள் மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் போதாது அதனை நாட்டுமக்கள் அனைவரது மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். அதற்கான வழிமுறைகளைப் பற்றி தொடர்ந்து விவாதித்து வந்தனர்.
அவர்களுக்கான சந்தர்ப்பம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தொழிலாளர் விரோத சட்டத்தின் மூலமாக வந்தது. இன்று மோடி தலைமையிலான பாசிச கும்பல் கொண்டுவந்திருக்கும் தொழிலாளர் விரோத ஒடுக்குமுறைச் சட்டங்களைப் போல அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் தமது முதலாளிகளுக்குச் சாதகமான வகையில் தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி அந்தச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற கண்துடைப்புக் கூட்டத்தை பிரிட்டிஷ் வைஸ்ராய் கூட்டினார்.
அந்த பாராளுமன்றக் கூட்டத்தின் போது, அவைக்குள்ளேயே, யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் வெடிகுண்டு வீசுவது, முழக்கங்கள் எழுப்பி, பிரசுரங்களைக் கொடுப்பது, தப்பிச் செல்லாமல் கைதாகி வழக்கை எதிர்கொள்வது, வழக்கு விசாரணையினைப் பயன்படுத்தி தங்களது நோக்கத்தைப் பிரச்சாரம் செய்வது எனத் திட்டமிட்டனர். இதன் மூலம் தங்களது உயிருக்கே கூட ஆபத்து வரலாம் என்ற போதிலும், கோடிக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் ஆங்கிலேயரை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வையும், முழுமையான சுதந்திரம் தேவை என்ற தீர்வையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் இதைவிட வீச்சான பிரச்சார வடிவம் வேறு இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
திட்டமிட்டபடி 1929ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பகத்சிங்கும் அவரது தோழர் பதுகேஷ்வர் தத்தும் அன்றைய பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசி, கைதானார்கள். இங்கிலாந்து மன்னருக்கு இந்தியாவின் மீது இருக்கும் இறயாண்மையைக் கேள்வி எழுப்பியதாக அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்தது. அதனைத் தொடர்ந்து பகத்சிங் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் தனது அரசியலைப் பிரச்சாரம் செய்வதற்குப் பயன்படுத்தினார்.
1929ம் ஆண்டு மே 6 அன்று அவர் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை, பகத்சிங்கின் பங்களிப்பிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சோசலிசத்தைப் படைப்பதே தங்களது முழுமுதல் லட்சியம் என்பதை அதில் அவர் பதிவு செய்துள்ளார். இங்குதான் அவர் “பாராளுமன்ற தாக்குதல், தனிபட்ட நபர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அன்று; அது ஏகாதிபத்திய நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும் “‘புரட்சி என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகஅமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.” என்று புரட்சி குறித்த கண்ணோட்டத்தையும், இந்திய விடுதலைக்கான பாதையையும் உரத்துக் கூறிய பகத்சிங்கின் வார்த்தைகள் மிக முக்கியமானவை.
தனது அறிக்கையின் இறுதியாக “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என முடித்திருந்தார் பகத்சிங். இந்த முழக்கம் அன்று முதல் ஒவ்வொரு முறையும் பகத்சிங்கும் அவரது தோழர்களும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போதெல்லாம் முழங்கியது. நீதிமன்றத்திற்கு வெளியே இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி ஒங்கி ஒலித்தது.
பகத்சிங்கின் இந்த அறிக்கை இந்தியாவிற்கு வெளியிலும் கொண்டு செல்லப்பட்டு பிரான்சின் “லா ஹியுமானைட்” பத்திரிக்கையிலும், சோவியத் ஒன்றியத்தின் “பிராவ்தா” பத்திரிக்கையிலும் வெளியானது.
பாரளுமன்றத்தில் குண்டுவீசிய வழக்கைத் தொடர்ந்து லாகூர் சதிவழக்கிலும் பகத்சிங் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர். லாகூர் சதிவழக்கில் ஏற்கெனவே கைதாகிச் சிறையில் இருந்த தோழர்களுடன் இணைந்து கொண்ட பகத்சிங், லாகூர் சிறையில் அரசியல் கைதிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஈடாக நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளையின குற்றவாளிகளுக்கும், இந்தியர்களுக்கும் பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்தும் தனது தோழர்களுடன் இணைந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
காந்தியின் உண்ணாவிரதங்களைப் போல் அன்றி பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் நடத்திய போராட்டம் மிகத் தீவிரமானதாகவும், அதன் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிப்பதாகவும் இருந்தது. அவர்களது போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசு செய்த தந்திரங்கள் அனைத்தையும் முறியடித்து பகத்சிங்கும் தோழர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். 63 நாட்கள் தொடர்ந்த உண்ணாவிரதத்தின் காரணமாக ஜதீன் தாஸ் தியாகியானார். இது நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியது. காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் விவாதம் நடந்தது, கட்சியே இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசும் பகத்சிங்கின் கோரிக்கைகளைப் பகுதியளவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட தோழர்கள் அடுத்தாக வழக்கு விசாரணையை தங்களது பிரச்சாரத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட்டனர்.
இதற்கென பகத்சிங், சுக்தேவ் மற்றும் விஜய் குமார் சின்கா ஆகியோரைக் கொண்ட சிறைக்கமிட்டி ஒன்றை உருவாக்கினார்கள். அதில் விவாதித்து தங்களது பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொண்டனர்.
முதலில் நீதிமன்றத்திற்குப் பெருந்திரளாக மக்கள் வந்து கலந்து கொள்வதற்கு இருந்த தடையை நீக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர். அதற்காக வாதாடி அதில் வெற்றியும் பெற்றனர். இதனால் லாகூர் சதிவழக்கு விசாரணை நடந்தாலே நீதி மன்றம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது.
“புரட்சி ஓங்குக”, “ஏகாதிபத்தியம் ஒழிக”, “உழைக்கும் வர்க்கம் வாழ்க” போன்ற முழக்கங்கள் விண்ணதிர முழங்கிய பிறகே வழக்கு விசாரணையே ஆரம்பமாகும்.
எதிர் சாட்சிகளாக மாறிப்போன சக தோழர்களைக் குறுக்கு விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவை எப்படிச் சுரண்டுகிறது என்பதையும், அதிலிருந்து விடுதலை என்பது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் என்பதையும், அதற்குக் குறைவாக முன்வைக்கும் எந்தவொரு தீர்வும் ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமானதுதான் என்பதையும் அம்பலப்படுத்தினார்கள்.
புரட்சியாளர்கள் குறித்து காங்கிரஸும் மற்ற கட்சியினரும் பரப்பி வைத்திருந்த வதந்திகளையும், வன்முறையாளர்கள் என்று அவர்கள் மீது குத்தப்பட்டிருந்த முத்திரையையும் திரைகிழிக்கவும் இந்த வழக்கு விசாரணையைப் பயன்படுத்தினார்கள்.
கக்கோரி தினம், லெனின் தினம், மே தினம் மற்றும் லஜ்பத் தினம் என முக்கிய தினங்களை நீதிமன்றத்திலேயே கடைபிடிப்பது அதனை முன்னிட்டு உரையாற்றுவது என நீதிமன்றத்தைப் பிரச்சார மேடையாக மாற்றினார்கள். இது மக்கள் மத்தியில் அவர்களுக்குப் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்ததுடன் சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்குப் புது ரத்தத்தைப் பாய்ச்சி அதனை முன்னிலும் அதிகமாக வீறுகொண்டு செயல்பட வைத்தது. பல்லாயிரம் இளைஞர்களையும், இளம் பெண்களையும் போராட்ட களத்திற்கு இழுத்து வந்தது.
இதன் தீவிரத்தை உணர்ந்த பிரிட்டீஷ் அரசு, வழக்கு விசாரணையைப் பாதியில் நிறுத்தி உடனடியாகத் தீர்ப்பை வழங்கியது. பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கியதுடன் மற்றவர்களுக்கு மூன்றாண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு ரகசியமாக வைக்கப்பட்டாலும் வெளியில் கசிந்தது. எங்கெல்லாம் தீர்ப்பு குறித்த விவரங்கள் எட்டியது அங்கெல்லாம் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. லாகூர் நகரில் போராட்டம் காட்டுத் தீ போலப் பரவியது. தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தன்று லாகூர் நகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவைத் தாண்டி பல்லாயிரம்பேர் கலந்துகொண்ட மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
தீர்ப்பைத் தொடர்ந்து பகத்சிங் மற்றும் தோழர்களின் மரண தண்டனையைக் குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எதிரொலித்தது. 1931 மார்ச் 5ம் தேதி கையெழுத்தான காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் படி கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் தவிர பிற அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்பதால் பகத்சிங்கும் தோழர்களும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காந்தி இதனை நிபந்தனையாக அன்றி கோரிக்கையாக முன்வைப்பதாக கூறியதால் அது தகர்ந்தது. அத்துடன் தனக்கு சங்கடம் வந்துவிடக் கூடாது என்பதால், பகத்சிங்கைத் தூக்கிலிடுவதை கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின் தள்ளிவைக்கும்படி காந்தி கோரியதையும் இர்வின் நிராகரித்தார்.
1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இரவு 7:33 மணிக்கு பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூன்று தோழர்களும் லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தால் அதுவும் கூட பெரும் போராட்டத்திற்கு வித்திடும் என்பதால் புரட்சியாளர்களின் உடலைப் போலீசாரே எரியூட்டி சட்லஜ் நதியில் கரைத்தனர்.
1929ம் ஆண்டு பாராளுமன்றத்தில் குண்டுவீசியது முதல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும், தனது மரணம் உடபட, நாட்டின் விடுதலைக்கான பாதையை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பயன்படுத்தினார் பகத்சிங். நாடு முழுவதும் விடுதலையை நோக்கமாக கொண்ட பல மாணவர் இளைஞர் இயக்கங்கள் தோன்றின, அவரால் அரசியல் உணர்வு பெற்ற பல ஆயிரம் பேர் விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பகத்சிங் கூறியது போலவே ஆங்கில ஏகாதிபத்தியத்தால் அவரைத்தான் கொல்ல முடிந்தது, அவர் முன்வைத்த அரசியலையும் கருத்துக்களையும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனைத் தங்களுடையதாக வரித்துக் கொள்ள நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தோன்றினார்கள். காங்கிரசும் பிற்போக்குக் கட்சிகளும் தங்களது வசதிக்காக பகத்சிங்கைப் பயன்படுத்தி வந்ததை முறியடித்து, அவரின் உண்மையான அரசியல் வாரிசுகளாக இந்தியப் புரட்சியை முன்னெடுப்பவர்களாக களத்தில் நிற்கிறார்கள். முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்களைப் புரட்சியின் பக்கம் ஈர்க்கும் மாபெரும் ஈர்ப்புவிசயாக இன்றைக்கும் பகத்சிங் இருக்கிறார். உண்மையான நாட்டுப்பற்றுடன் இந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடும் ஒவ்வொருவருக்கும் பகத்சிங் என்றைக்கும் உற்ற தோழனாகத் திகழ்கிறார்.
- அறிவு
தகவல் உதவி : To Make the Deaf Hear: Ideology and Programme of Bhagat Singh and His Comrades – S. Irfan Habib