அதானி மோசடி : தொடர்ந்து இழப்பை சந்திக்கும் எல்.ஐ.சி.

அதானி மோசடி அம்பலமானதால் அவரது நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில், கீழே விழும் போது அதானி தனியாக விழாமல் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விழுகிறார்.

ஹிட்டன்பெர்க் அறிக்கை அதானி நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பங்குச் சந்தையில் அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அறிக்கை வெளிவந்து ஒருமாதம் ஆன நிலையில் அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3400 ரூபாயிலிருந்து 1387 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதன் விளைவாக, ஜனவரி 20ம் தேதி 9,72,000 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு பிப்ரவரி 24ம் தேதி 3,73,410 கோடியாகக் குறைந்தது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டதட்ட ஆறு லட்சம் கோடியை அதானி இழந்துள்ளார். அதனால் உலகின் முதல் பணக்காரர் என்ற நிலையில் இருந்த ‘மோடியால் ஊட்டி வளர்க்கப்பட்ட’ கௌதம் அதானி தற்போது இருபத்தி ஆறாவது இடத்திற்கு சரிந்திருக்கிறார்.

 

 

அதானி நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சியும் பல சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்துள்ளனர். ஹிட்டன்பர்க் அறிக்கை வந்த உடனே அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கோரின. ஆனால் மோடியோ அதானி விவகாரம் பற்றி பேசாமல் வழக்கம் போல, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் பல்லாவரத்திற்கு பஸ்ரூட் சொல்வது போல, நேரு, காந்தி, 2ஜி என வாய்சவடால்களை நாடாளுமன்றத்தில் அடித்துவிட்டு கிளம்பிவிட்டார். பொருளாதாரப் புலியான நிம்மி மாமியோ இந்திய பங்குச் சந்தை பலமாக இருப்பதாகவும், அதானி விவாகரத்தை SEBI விசாரிக்கும் என்றும் LIC, RBI அறிக்கைகள் வெளியிட்டிருப்பதாகவும் LIC, SBI நிறுவனங்கள் செய்கின்ற முதலீடுகளில் அரசு தலையிடுவதில்லை என்றும் ஒரு பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டார்.

மோடி தன்னுடைய ஆஸ்திரேலியப் பயணத்தின் போது SBI தலைவரையே கூட கூட்டிச் சென்று அதானி நிலக்கரிச் சுரங்கம் வாங்க 6000 கோடியை கடன் கொடுக்க கையெழுத்துப் போட சொன்னவர் என்பதை நிம்மி மறந்து விட்டார் போல.    

LIC மற்றும் SBI உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், அதானி குழும நிறுவனங்களில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக LIC தனது அறிக்கையில் “”கடந்த பல ஆண்டுகளாக அதானி குழும நிறுவனங்களின் கீழ் வாங்கப்பட்ட பங்குகளின் மொத்த கொள்முதல் மதிப்பு ரூ. 30,127 கோடியாகவும், அதன் மதிப்பு ஜனவரி 27, 2023 அன்று சந்தை நேரத்தின் முடிவில் ரூ. 56,142 கோடியாகவும் இருந்தது….. LIC ன் மொத்த புத்தக மதிப்பில் (Book value) 0.975% அளவே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.” என்றது.

ஆனால் கடந்த வியாழன்(24.02.2023) சந்தை முடியும் போது அதானி குழுமத்தின் ஐந்து பெரிய நிறுவனங்களில் எல்ஐசி செய்துள்ள பங்குகளின் சந்தை மதிப்பு அதன் கொள்முதல் மதிப்பைக் காட்டிலும் குறைந்துள்ளது. அதாவது, வியாழன் அன்று, அதானி குழும நிறுவனங்களில் (அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி தவிர்த்து) எல்ஐசி வைத்திருக்கும் சந்தை மதிப்பு ரூ.26,861.9 கோடியாக இருந்தது, அதன் கொள்முதல் மதிப்பான ரூ.30,127 கோடியை விட கிட்டத்தட்ட 11 சதவீதம் குறைவு.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானியின் ஒன்பது நிறுவனங்களில் ஐந்து நிறுவனத்தில் ஒரு சதவிகித்திற்கும் அதிகமான பங்குகளை எல்ஐசி வைத்துள்ளதாக அதன் பட்டியல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹிட்டன்பெர்க் அறிக்கை வெளிவறுவதற்கு ஒருநாள் முன்பு (24 ஜனவரி) அதானி நிறுவனத்தில் எல்ஐசி வைத்துள்ள  பங்குகளின் மதிப்பு 72,194 கோடியாக இருந்தது. ஆனால் பிப்ரவரி 23 அன்று இப்பங்குகளின் மதிப்பு 26,862 கோடி சரிந்துள்ளது. கடந்த ஒருமாத்தில் 45332 கோடி அளவிலான பங்கு மதிப்பை எல்ஐசி இழந்துள்ளது.

    

அதானி நிறுவனத்தில் எல்.ஐ.சி.ன் முதலீடு
அதானி நிறுவனத்தில் எல்.ஐ.சி.ன் முதலீடு

அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு மேலும் சரியவே வாய்ப்புள்ளதாக பத்திரிக்கைகள் கணிக்கின்றன. இதனால் எல்ஐசிக்கு இன்னும் இழப்பு அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகள் பல ஆயிரம் கோடிகளை அதானிக்கு கடனாகவும் வழங்கியுள்ளன. அவற்றைப் பற்றிய விவரங்கள் பொது வெளியில் இல்லை.

எல்ஐசி மக்களின் பணத்தால் உருவான ஒரு பொதுத்துறை நிறுவனம். இதில் அரசின் முதலீடு வெறும் ஐந்து கோடி மட்டுமே. தற்போது பல ஆஅயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதன் லாபம் நேரடியாகவே மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எல்ஐசியை தனியார் மயமாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அதன் 3.5% பங்குகளை அடிமட்ட விலைக்கு(3300 ரூபாய்க்கு விற்க வேண்டிய பங்கை 930 ரூபாயாக குறைத்து விற்றது) கடந்தாண்டு விற்றது, மோடி அரசு.  கடந்த ஒன்பது காலாண்டுகளாக அதானி குழுமப் பங்குகளின் அளவை எல்ஐசி தொடர்ச்சியாகவே அதிகரித்து  தற்போது பல ஆயிரம் கோடிகளை இழந்துள்ளது.

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை குறைக்கும் மோடி-அமித்ஷா கும்பல்  மக்களின் பணத்தை ஊதாரித்தனமாக அதானிக்கு வாரி இறைக்கிறது. அதானியின் முறைகேடுகள் அம்பலப்பட்ட போதும் அதனைப் பற்றி பேசாமல் மௌனம் காக்கிறது. இந்த காவி-கார்பரேட் பாசிஸ்ட்கள் தேசபக்தி வேடமணிந்து கேள்வி கேட்பவர்களை தேசத்தின் மீது தாக்குதல் தொடுப்பவர்கள் என்று சித்தரித்து மக்களை ஏமாற்றுகின்றனர். .

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன