சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க நாளில் “சமத்துவமின்மை கொல்லும்” என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்பாம் (Oxfam) என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டிருக்கிறது
இந்தியாவின் 40 விழுக்காடு சொத்துக்களை ஒரு விழுக்காடு பணக்காரர்கள் வைத்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில் அடித்தட்டில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் மூன்று விழுக்காடு செல்வத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ 54.12 லட்சம் கோடி என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
கொரோனா தொற்றுநோய் காலமான மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை இந்தியாவில் பில்லியனர்களின் என்ணிக்கை 2020 – 2022 காலகட்டத்தில் 102 – 166 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 121 விழுக்காடு உயர்ந்துள்ளது. இப்பில்லியனர்களின் தினசரி வருமானம் சராசரியாக ரூ.3608 கோடி ஆகும்.
இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2022-ம் ஆண்டில் ரூ.27.52 லட்சம் கோடியாக இருக்கிறது என இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 33 விழுக்காடு அதிகமாகும். உலகின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு இந்தச் சொத்துக்களை மட்டுமல்ல அவற்றின் பூஜ்ஜியங்களின் எண்ணிக்கையைக் கூட எண்ணுவதற்கு கடினமானதாக இருக்கும்.
ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்திய பணக்காரர்களுடன் ஒப்பிடும் போது இந்திய அடித்தட்டு மக்கள், அதிக வரி செலுத்துகிறார்கள் என்கிறது. உதாரணமாக 2021-22ல் பெறப்பட்ட ஜி.எஸ்.டி வரி வருவாயான ரூ.1.24 லட்சம் கோடியில் 64 விழுக்காடு இந்தியாவின் 50 விழுக்காடு அடித்தட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது என்றும் பத்து விழுக்காடு பணக்காரர்களிடமிருந்து வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியாக பெறப்பட்டிருக்கிறது என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை.
இந்தியாவின் ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்காக பல முன்மொழிதல்களை ஆக்ஸ்பாம் அறிக்கை பரிந்துரைக்கிறது. உதாரணமாக 166 பணக்காரர்களுக்கு 2 விழுக்காடு வரி விதித்தால் வரும் மூன்றாண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்க தேவைப்படும் நிதியான ஆண்டுக்கு ரூ.40,423 கோடியை பெற முடியும் என்கிறது ஆக்ஸ்பாம்.
ஆக்ஸ்பாம் 2022 அறிக்கை மட்டுமில்லை, இதற்கு முந்தைய வருடங்களில் வெளிவந்த இந்நிறுவனத்தின் அறிக்கைகளும் சமத்துவமின்மையை தீர்ப்பதற்காக வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் மீதான வரி உயர்வை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், பொது சுகாதாரம், கல்வி இன்னும் பலதிட்டங்களுக்கு தேவையான நிதியை அரசுக் கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்றும் பல முன்மொழிதல்களை கூறிக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு மேல் இந்த அறிக்கை பேசுவதில்லை. பேசவும் முடியாது.
ஆக்ஸ்பாம் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள், ஏற்றத்தாழ்வை உருவாக்குபவர்களான ஆளும் வர்க்கத்திடமும் அதன் பிரதிநிதியான மோடி அரசிடமும் அதனை ஒழிப்பதற்கு முறையிடுவது நகைப்புக்குரியது.
கொரோனா காலத்தில் கூட மக்கள் பட்ட பல துன்பங்களை, பிரச்சினையாக கருதி மோடி அரசு அஞ்சவில்லை.
குட்டையில் நீந்திக் களிக்கும் மாடுகளைப் போல, சாக்கடையில் படுத்துப் புரளும் பன்றிகளைப் போல மக்கள் படும் இன்னல்களையும், கொரோனா உருவாக்கிய பெருந்துயரத்தையும், விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் இன்ன பிறவற்றை பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகளையும், கடன் தள்ளுபடிகளையும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும், சொத்துக்களையும் அடிமாட்டு விலைக்கு வாரிவழங்கி செல்வங்களை குவிக்க வழிவகை செய்து கொடுத்தது மோடி அரசு.
இது மட்டுமல்ல, தொழிலாளர்கள் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றுவதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் லாபத்தை மேலும் குவிக்க உதவி செய்து வருகிறது மோடி அரசு.
தாராளமயக் கொள்கை அறிமுகப்படுத்திய பின்பு ஒவ்வொரு வருடமும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாலு கால் பாய்ச்சலில் அதிகரிப்பது என்பது புதிய விசயமல்ல. இக் கொள்கையை மோடி அரசு உறுதியுடனும் சொல்லப்போனால் வெறியுடன் அமல்படுத்தி வருகிறது.
2019-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 34.94 சதவீத வரியை 25.17 சதவீதமாகக் குறைத்து அந்நிறுவனங்களுக்கு 1,45,000 கோடி ரூபாய் பெறுமான வெகுமதியை அளித்தது. ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகள், பொதுத்துறை வங்கிகள் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.10.72 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி. மேலும் 2014-15 மற்றும் 2021-22 க்கு இடையில், மோடி அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை (பகுதி அல்லது முழுமையாக) 4.86 லட்சம் கோடி ரூபாய்க்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இவ்வாறு மோடி ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் பல சலுகைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறது.
மேலும் நாட்டில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது என்று பம்மாத்து காட்டி இந்தியாவின் இரயில் பாதைகள் மற்றும் இரயில் நிலையங்கள், தொலைத்தொடர்பு அமைப்பு, மின்சாரம் செல்லும் பாதைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் போன்ற ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பொதுச் சொத்துக்களை ‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு’ விட மோடி அரசு திட்டமிட்டுள்ளது. தன் கையில் இருக்கும் சொத்துக்களை விற்று குடும்பம் நடத்தும் ஊதாரியை போல அனைத்து பொதுச் சொத்துக்களையும் கார்ப்பரேட்களுக்கு விற்று அவர்களை கொழிக்க வைக்கிறது மோடி அரசு.
இந்தப்பாதையிலிருந்து மோடி அரசு விலகாது என்பதை தங்களது எஜமானர்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளித்து அதற்கான செயல்திட்டங்களை செயல்படுத்துகிறார்கள் என்பதற்கான சாட்சியாகத்தான் ஒவ்வொரு வருடமும் ஆக்ஸ்பாம் அறிக்கையில் இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகள் பற்றி வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்களின் சிந்தனை, செயல்பாடு பெருமுதலாளிகளின் செல்வத்தை எப்படி பெருக்குவது என்பது தான். இப்படி செய்வதற்காக மோடி போன்ற பாசிஸ்டுகள் கூச்சப்படுவதோ, வெட்கப்படுவதோ கிடையாது. தங்களுக்கு வாக்களித்த மக்கள் என்ன நினைப்பார்கள் என பாசிஸ்டுகள் ஒரு போதும் எண்ணுவது கிடையாது.
இந்தியாவில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள பணக்காரர்களின் வருவாயை கொரோனா காலத்திலும் கூட பல மடங்குப் பெருக்க உதவிய பாசிச மோடி கும்பல், எஞ்சியுள்ள 99 விழுக்காடு மக்களுக்கு (விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள்) செய்தது என்ன? இவர்களின் உழைப்புச்சக்தியை மட்டுமில்லை இம்மக்களடங்கிய பரந்து விரிந்த சந்தையிலும் கொள்ளையிடுவதற்கான சகல வசதிகளையும், நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடவும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அம்பானி, அதானி டாட்டா போன்ற தரகு முதலாளிகளுக்கும் தான் வாரி வழங்கியுள்ளது. இச்சுரண்டல் கும்பல்கள் ஆட்சியில் இருக்கும் வரையில் ஏற்றத்தாழ்வு நிரந்தரமானது, பட்டினி அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பொதுவானது.
ஒரு விழுக்காடு பணக்காரர்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு முறையை வீழ்த்தாமல் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதென்பது சாத்தியமில்லை!
- தாமிரபரணி