கடந்த 2017 ஆம் ஆண்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்ற பெண்மணி சுகப்பிரசவத்தின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். இருந்த போதிலும் குழந்தை பிறந்த சில மணி நேரத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதை மருத்துவர்களிடம் உடனே தெரிவித்தனர். மருத்துவர்கள் உடனே சென்று சிகிச்சை அளிக்காமல், மருத்துவமனையில் மருத்துவர் ஒருவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தாலும், மருத்துவமனையில் மருத்துவம் பார்க்காமல் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்ததாலும், 20 வயதே நிரம்பிய கிருஷ்ணம்மாள் அநியாயமாக மரணமடைந்தார்.
இந்த மரணத்திற்கு நீதி கேட்டு, மக்கள் பெருந்திரளாக சென்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அது மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் குறுக்கே மறியல் செய்தனர். அப்போது பேசிய மாவட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என்று உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் பின்வாங்கப்பட்டது.
ஆனால் தர்மபுரி மாவட்ட காவல்துறையோ குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல், நீதி கேட்டவர்கள் மீது வழக்கை பதிவு செய்தது. மக்கள் அதிகாரம், விசிக, பாமக, திமுக, என பல்வேறு தரப்பினர் கட்சி பேதம் பார்க்காமல் இந்த அநீதிக்கு எதிராக ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடினார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசார், கிருஷ்னம்மாளுக்கு நீதி பெற்றுத் தருவதை விட பொய் வழக்கு தொடுப்பதிலேயே அக்கறை காட்டியது. இந்த பொய் வழக்கில் மக்கள் அதிகாரம் அமைப்புச் சேர்ந்த நான்கு தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தர்மபுரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 21.12.2022 இன்று இந்த வழக்கு இறுதியில் பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு அனைவரையும் விடுதலை செய்தது நீதிமன்றம். ஆனால்,மாவட்ட அதிகாரிகள், ஆட்சியாளர் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை. கிருஷ்ணம்மாள் இறப்புக்கோ, அவரது பச்சை கைகுழந்தைகளுக்கோ இழப்பீடும், நீதியும் கிடைக்கவில்லை.
ஏழை மக்கள் பாதிக்கபடுகிற பொழுது நீதிமன்றமும், போலீசும், அரசு துறை அதிகாரிகளும் ஏழை மக்களின் பக்கம் நிற்பதில்லை. மாறாக இந்த போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்ற கண்ணோட்டத்திலேயே இருக்கின்றனர். நமது மருத்துவ உரிமையை பெறுவதற்கும், ஏழை மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் வீதி போராட்டங்கள் தான் தீர்வு. நமது பிறப்புரிமையான மருத்துவ உரிமையை போராடி பெற்றால்தான் கிருஷ்ணம்மாள் போன்ற இளம் பெண்களின் மரணம் நிகழாமல் தடுக்க முடியும்.
இந்த வழக்கை சிறப்பாக நடத்தி விடுதலை பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்கள் தோழர். பாலசுப்பிரமணியன், தோழர்.பிரசாத், திரு.சிவன் தோழர்.தினகரன், தோழர். ஆசியஜோதி திரு.முத்துசாமி ஆகிய அனைவருக்கும் மக்கள் அதிகாரம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்
தோழர். கோபிநாத்
மாநில இணைச் செயலாலர்.
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு
9790138614