உலக முதலாளித்துவத்தை அழித்தொழிக்க ஸ்டாலின் பிறந்த தினத்தில் உறுதியேற்போம்!

டிசம்பர் 21 – தோழர் ஸ்டாலினின் 143-வது பிறந்தநாள்! தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!

 

 

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் –  ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவ கிருமிகளும் ஊடுருவ முடியாத கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை, முதலாளித்துவ அறிவுஜீவிகளுக்கு அரக்கன், உலக பாட்டாளி வர்க்கத்துக்கு காவல் தெய்வம்.

எதிரிகளிடம் வெறுப்பையும், மக்களிடம் பெருமிதத்தையும் ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால் அந்தப் பெயர் – ஸ்டாலின். பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான். அவரை வெல்ல முயற்சி செய்தார்கள், முடியாமல் கொல்ல முயற்சி செய்தார்கள். பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள். பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிரான ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள். பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள். அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும், எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.

வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும் வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும் அறிவுஜீவிகளின் மூளைகள் ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன. நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரை சித்தரிக்கின்றன.

மார்க்சியம் – லெனினியம் – மாசேதுங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள், தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள், கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள், ஜனநாயகம் என்ற பெயரில் சாதாரணத் தொழிலாளர்களின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்பட வேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் இவர்கள் யாருக்கும் ஸ்டாலினை பிடிப்பதில்லை.

கம்யூனிஸ்டு முன்முயற்சி, கம்யூனிஸ்டு வேலைத்திறன், கம்யூனிஸ்டு கட்டுப்பாடு, கம்யூனிஸ்டு ஒழுக்கம், கம்யூனிஸ்டு தியாகம் என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம் அவருடைய தலைமையின் கீழ்தான்  இலட்சக்கணக்கான இரஷ்ய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.

அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த இரஷ்யா நிமிர்ந்தபோது ஹிட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது. ஐரோப்பாவும், அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள் நடந்து எட்டிய முன்னேற்றத்தை, இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது. 200 இலட்சம் இரஷ்ய மக்களை ஹிட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.

மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகளை அனைத்துலகும் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும் இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால், அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.

வரலாற்றில் மனிதகுலம் கண்டிராத உழைப்பு, ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம், கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம் இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச இரஷ்யா. அந்த சோசலிச இரஷ்யாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின். அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.

கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களிவெறி கொண்டு பிதற்றிய முதலாளித்தும், இதோ மரணப்படுக்கையில் கிடக்கிறது. அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் துர்நாற்றத்தால் மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது. இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம்  நம்மைக் கொல்கிறது. பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், கொலைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள். நரவேட்டைகள் அனைத்துக்கும் ஒரே காரணம் முதலாளித்துவம். மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம். தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே மனிதகுலத்தை நசிவுக்கும், அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்.

முதலாளித்துவம் வென்றுவிட்டதாகவும், கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும் செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று நாம் நடைமுறையில் நிருபிக்கும்வரை, அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி உப்பை அள்ளிப்போடும் வரை, கம்யூனிசம் செத்துவிட்டதாக அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக்கொண்டுதான் இருக்கும். கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும். முதலாளித்துவ லாபவெறியின் கோரதாண்டவத்தை, பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை, கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின். பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிட்வில்லை. மாறாக கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது. அந்த கம்யூனிச வெற்றியின் சின்னம தோழர் ஸ்டாலின்.

முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில் தோழர் ஸ்டாலின் புகழை ஓரு மலர்செடியாய் நாம் நடுவோம். அதற்குமுன் அவர் நினைவு தரும் உத்வேகத்தால் முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்.

தோழர் லெனின், ஸ்டாலின் வழிநடப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன