பத்திரிக்கை செய்தி
14-12-2022
அன்பார்ந்த பத்திரிகையாளர்களே, ஜனநாயக சக்திகளே!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திருமதி பேராசியர் பாத்திமா பாபு கடந்த 10-12-2022 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் 09-12-2022 அன்று காலை 10.52 மணிக்கு 93600 57937 என்ற எண்ணிலிருந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த விஜயகுமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் பேசியதாகவும், மக்கள் அதிகாரம் வெறுமனே பெயருக்குத்தான் வைத்துள்ளோம். அது மாவோயிஸ்ட் அமைப்பு என்றும் வெளியவாடி பாத்துகிறேன் என்று கூறி தன்னை மிரட்டியது குறித்தும், மேலும் போடி, வாடி என்று பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், அதே நேரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளிடத்தில் தான் விசாரித்த வகையில் அந்த நபர் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்துகொண்டதாகவும், ஆனால், யாரோ, யாருடைய தூண்டுதல் பெயரிலோ இது போல் மிரட்டி உயிர் பயம் ஏற்படுத்தியுள்ளனர் என்றும் எனவே இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க அந்த நபர் யார் என்று கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் பேசிய ஆடியோவும் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நான் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து செயல்பட்டு வருகிறேன். எனது பெயர் முத்துக்குமார் (எ) விஜயகுமார் ஆகும். மேற்படி பேராசிரியர் பாத்திமா பாபு கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கும் பெயரும் எனது பெயர்தான். அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் கைபேசி எண்ணும் எனது செல் ஃபோன் நம்பர்தான். ஆனால் பேராசிரியர் பாத்திமா பாபுவிடம் பேசிய அந்த நபர் நான் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க கோரும் போராட்டத்தை திசைதிருப்பவும், மக்கள் அதிகாரம் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் தொழில்நுட்ப ரீதியில் எனது எண்ணை இந்த சதி வேலைக்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேராசிரியர் பாத்திமா பாபு அவர்கள், யாரோ, யாருடைய தூண்டுதல் பெயரிலோ இது போன்ற வேலையில் ஈடுபட்டுள்ளார் என்று பொதுவாக குறிப்பிட்டுள்ளார். நான், இது ஸ்டெர்லைட் கம்பெனியை திறக்கவும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலிசு உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தை தண்டனையிலிருந்து தப்ப வைப்பதற்கான சதி என்று குறிப்பாக குறிப்பிடுகிறேன்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும், இந்த போராட்டத்தில் துள்ளத்துடிக்க பொதுமக்களை போலிசு சுட்டுக்கொன்றதையும் அனைவரும் அறிவோம். இதை உறுதிபடுத்தும் வகையில் அருணாஜெகதீசன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. போலீசு, மாவட்ட ஆட்சியர், தாசில்தார் முதலியோர் எப்படி சட்ட விரோதமாக செயல்பட்டனர் என அந்த அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட்டை மறைமுகமாக பாதுகாக்கும் வகையில், இந்த துப்பாக்கி சூட்டிற்கும் ஸ்டெர்லைட் கம்பெனிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஃபிரண்ட்லைன் ஆங்கில பத்திரிகையில் செய்தி கசிந்த போது பெரும் விவாதம் எழுந்தது. அப்போதே எமது அமைப்பு சார்பாக எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோகும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை என்று பத்திரிகை செய்தி கொடுத்தோம். இந்த அறிக்கை தொடர்பாக, ஸ்டெர்லைட் போன்ற பன்னாட்டு கம்பெனிக்கு எதிராக இது போல் இனி போராட்டத்தை யாரும் நடத்தக்கூடாது என்ற மிரட்டுவதற்கே ஸ்டெர்லைட்டும் அரசும் இணைந்து திட்டமிட்டு நடத்திய பச்சை படுகொலையே இந்த துப்பாக்கி சூடு என்று என்று குறிப்பிட்டு அம்பலபடுத்தி நான் ரூட்ஸ் தமிழ் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியும் அளித்துள்ளேன்.
அந்த அடிப்படையில் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்கவும், மக்கள் அதிகாரம் மீது கலங்கம் கற்பித்து அவதூறு பரப்பவுமே இது போன்ற செயல் நடந்துவருகிறது. மக்கள் அதிகாரம் மீது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அவதூறு மற்றும் பொய் பிரச்சாரத்தை ஸ்டெர்லைட்டும், அரசும் திட்டமிட்டு தொடர்ந்து செய்து வருகிறது. அதன் மூலம் பல்வேறு பொய்வழக்குகளை போட்டு அடக்குமுறையை ஏவிவருகிறது. அதன் தொடர்ச்சிதான் எனக்கு தெரியாமலேயே எனது பெயரில் உள்ள தொலைபேசி எண்ணை தொழில்நுட்ப ரீதியில் பயன்படுத்தி எனது பெயரை குறிப்பிட்டு பேராசிரியர் பாத்திமா பாபுவை மிரட்டியுள்ளனர்.
குறிப்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையின் படி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட எந்த ஒரு அமைப்போ அல்லது மக்களோ எவ்வித ஆத்திரமூட்டலும் செய்யாத நிலையிலேயே போலிசு காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், மீண்டும் மீண்டும் மக்கள் அதிகாரத்தை பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்க இது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனுமதியின்றி இயங்குவது, ஆபத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் நச்சு கழிவுகளை தூத்துகுடி மண்ணில் புதைப்பது, பசுமை வளையம் அமைக்காதது, என்று பலவித விதிமுறைகளை மீறி செயல்பட்டு பல உயிர்களை கொன்ற ஸ்டெர்லைட் நிர்வாகம், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகும் தனது ஆலையை மீண்டும் திறந்து இயக்க சதிவேலைகளில் ஈடுபட்டுவருகிறது. அவ்வப்போது மக்களுக்கு சில அற்ப சலுகைகளை அறிவித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தி நல்லவன் போல் வேடம் போட்டுவருகிறது.
எனினும், எல்லா சதி வேலைகளையும் முறியடித்து உறுதியாக தூத்துக்குடி மக்கள் போராடிவருகின்றனர். அந்த வகையில் அருணா ஜெகதீசன் அறிக்கைப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான குற்றவாளிகள் மீது துறை சார் நடவடிக்கை மட்டும் போதாது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரியும் அம்மக்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் போராடிவருகின்றனர். இப்போராட்டத்தை திசை திருப்பி குற்றவாளிகளை தப்பவைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவுமே இது போன்ற சதி வேலைகளில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எனவே, இந்த சதி வேலை, அவதூறுகளை முறியடித்து தூத்துக்குடி மக்களின் முக்கியமான கோரிக்கையான துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலிசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், தாசில்தார்கள் உள்ளிட்டோரை குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்கும் வரையிலும் மற்றும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும்வரையிலும் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மக்களுக்கு துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஆகவே, இது போன்ற பொய் பிரச்சாரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இதை முறியடித்து முன்னேற அணைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தோழர் முத்துக்குமார்(எ) விஜயகுமார்.
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு,
93600 57937