இந்தித் திணிப்பு: எல்லா தேசிய இனங்களையும், மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதே ஒரே தீர்வு!

இந்தியை எதிர்க்கும் திராவிடக் கட்சிகளோ, பிற இயக்கங்களோ இத்தகைய தீர்வுகளை முன்வைப்பதில்லை. பொதுவாக எல்லா மொழிகளையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்களே ஒழிய ஒரு தீர்வாக அதை வைப்பதில்லை. அவர்கள் முன்வைப்பதெல்லாம் ஆங்கிலத்தை இணைப்பு, அலுவல் மொழியாக்க வேண்டும் என்பதையே, இது தான் இருமொழிக் கொள்கை இது அடிப்படையிலேயே தவறானது ஆகும்.

அனைவரும் தங்களது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு உரிமை வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் அனைத்து இடங்களிலும் பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிறார் மாமேதை லெனின்.

 

 

ஆனால் நம் நாட்டில் மற்ற எல்லா தேசிய இனங்களின் மொழி உரிமைகளையும் பறித்து இந்தியை நம் மீது திணிப்பதற்கான முயற்சி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை இந்தித் திணிப்பு அப்பட்டமாக வெளிப்படும்போதும் அதற்கெதிரான குரல் தமிழகத்திலிருந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் ஆளும்வர்க்கம் பின்வாங்கத் தயாராக இல்லை.

1920-களில் இருந்தே இந்தியாவின் தேசிய மொழியாக எது இருக்க வேண்டும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கிவிட்டன. காந்தி இந்தியையும் உருதுவையும் கலந்த இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வாதிட்டார். 1925-க்கு பிறகு காங்கிரசின் அனைத்து நடவடிக்கைகளும் இந்துஸ்தானியிலேயே மேற்கொள்ளப்பட்டன. இந்து மகாசபை மற்றும் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த பார்ப்பன பாசிஸ்டுகள் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வாதிட்டனர். இத்தகையோர் காங்கிரசிலும் கணிசமாக இருந்தனர். இந்தியிலிருந்து பாரசீக, அரபுச் சொற்கள், சொற்றொடர்களைக் களைய வேண்டும் என்றும் சமஸ்கிருதத்தில் இருந்து சொற்களைச் சேர்த்து இந்தியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.

அன்றைய காங்கிரசிலும், இந்து மகாசபையிலும், ஆர்எஸ்எஸ்-சிலும் தலைமையில் இருந்தவர்கள் அனைவருமே பார்ப்பன – பனியா சாதியைச் சேர்ந்தவர்கள் தான். தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களையே இக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தின. இந்தியாவை ஒரு இந்து நாடாகக் கனவு கண்ட சனாதனவாதிகளுக்கும், இந்தியாவை ஒரே சந்தையாகக் கனவு கண்ட தரகு முதலாளிகளுக்கும் இந்தியை இந்தியா முழுவதும திணிப்பது அவசியமாகவும் தேவையாகவும் ஏற்பாகவும் இருந்தது. காலனியாதிக்கத்தை எதிர்த்து போராடுவதற்காக மக்களை ஒன்றுபடுத்த பொதுவான ஒரு மொழி அவசியம் என்று ‘நியாயம்’ கூறப்பட்டாலும் இதுவே இவர்களது உண்மையான கண்ணோட்டமாகும்.

இதைத் தமிழகப் பார்ப்பனர்களும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான் 1938-ல் இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தபோது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடந்ததையொட்டி அப்போது அம்முயற்சி பின்வாங்கப்பட்டது.

அதன்பிறகு, 1949-ல் நடந்த அரசியல் நிர்ணய சபையில் இந்தியை தேசிய மற்றும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்றும் அதை மறுத்து இந்தியுடன் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்றும் கடும் விவாதங்கள் நடந்தன. இறுதியில் தேசிய மொழியாக எந்த மொழியும் வரையறுக்கப்படவில்லை. அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும் 15 ஆண்டுகள் ஆங்கிலம் இந்தியுடன் அலுவல் மொழியாகத் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறுதான் பல்வேறு மொழிகள் பேசும் இந்தியாவில் இந்தி மேலிருந்து அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவே அலுவல் மொழியாகத் திணிக்கப்பட்டது. அப்போது இந்தி மற்றும் இந்தி சார்ந்த மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை வெறும் 27% மட்டுமே

1950களில் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்க நடந்த முயற்சி தமிழகத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்த காரணத்தால் கைவிடப்பட்ட பிறகு, 1963-ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்டது, இச்சட்டத்தின்படி, இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்காதவரை இந்தி கட்டாயமாக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டாலும், இந்தி பேசாத மக்கள் இந்தியை ‘ஏற்றுக்கொள்வதற்கான’ அதாவது திணிப்பதற்கான முயற்சிகளை இரண்டு பெரும் தேசியக் கட்சிகளும் (காங்கிரசு, பாஜக) தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இதற்கென ஒரு நாடாளுமன்றக் குழு (அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழ) 1976-ல் உருவாக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் மக்களவையில் இருந்து இருபது பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெறுவார்கள். அலுவல் ரீதியில் இந்தியைப் பயன்படுத்துவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குழு ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கும்.

அந்தவகையில், அமித்ஷா தலைமையிலான தற்போதைய நாடாளுமன்றக் குழு இந்தியை எல்லா தேசிய இனங்கள் மத்தியிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் திணித்து பழக்கப்படுத்தி அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் சதித்திட்டம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்பித்துள்ளது. 

இப்பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி இருக்கும். பிறகு இந்தி பயிற்று மொழியாக மாற்றப்பட்டு, அனைவரும் இந்தி படித்தால்தான் ஒன்றிய அரசின் வேலைகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படும். 2018 நிலவரப்படி ஒன்றிய அரசின் வேலைகளில் 60% பேர் இந்தி பேசுபவர்களாக இருந்துள்ளனர். இப்படி நிர்பந்திப்பதன் மூலம் எல்லா மாநிலங்களிலும் இந்தியைத் திணித்துவிடலாம் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் திட்டம் போடுகிறது.

இதுமட்டுமல்ல, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, கரீப் கல்யாண் அண்ண யோஜனா என்று இந்தியில் பெயர் வைப்பதையும், ஒன்றிய அரசின் நீர்வளத்துறையை ஜல்சக்தி துறை என்று மாற்றுவதையும், நெடுஞ்சாலைகள் இரயில் நிலையங்களில் இந்தியில் மைல்கற்கள், பதாகைகள் வைப்பதையும் செய்துள்ளனர்.

இந்தியைக் கற்பிக்க 8 வடகிழக்கு மாநிலங்களில் 22,000 ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இங்கு 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். 9 பழங்குடி இனங்களின் கிளை மொழிகளின் எழுத்து முறையாக தேவநாகிரியை பயன்படுத்தும்படி செய்துள்ளனர். ஒன்றிய கேபினட் அமைச்சரவையின் 70% அரசாங்கக் கோப்புகள் இந்தியில் தயாரிக்கப்படுகின்றன. மாநிலங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அவர்களுக்கு இந்தியில் பதிலளிப்பதையும், இன்னபிற நடவடிக்கைகளையும் செய்துவருகிறது.

சுருங்கக்கூறின், இந்தியாவின் இணைப்பு மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இந்தியைத் திணிப்பதையும் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை முற்றாக நீக்கிவிட்டு இந்தியை கொண்டுவருவதையும் இப்பரிந்துரைகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலத்தை காலனியாதிக்கவாதிகளின் மொழியென்றும் அந்நிய மொழியென்றும், அந்நிய மொழியைத் தூக்கிப்பிடிக்கும் எதிர்கட்சிகள் இந்திய மொழிகளைக் கேவலமாக நினைப்பதாகவும் போலி தேசபக்த வேடம் போட்டு மக்களை ஏய்க்கிறது இந்த காவி கும்பல். ஆனால் இந்திய மொழியென்று பார்ப்பன பாசிஸ்டுகள் கூறுவதெல்லாம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும்தான், இந்தியக் கலாச்சாரம் என்று கூறுவதெல்லாம் பார்ப்பன மனுதர்மக் கலாச்சாரத்தைத்தான்.

மோடியும் சில அமைச்சர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழில் பேசுவது, தமிழை உயர்வான மொழி என்று கூறுவது, திருக்குறளை நாடாளுமன்றத்திலும், லடாக் இராணுவ வீரர்களிடையேயும் பேசியது, பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென இருக்கை அமைத்தது, காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தியது போன்றவற்றின் மூலம் மோடியரசும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலும் தமிழுக்காக தொண்றாற்றுவது போல மக்களை ஏமாற்றுகின்றனர்.

பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலோ காங்கிரசோ மட்டுமல்ல இந்திய அரசமைப்புச் சட்டமே “இந்தி-இந்து-இந்தியா” என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தியை தேசிய மொழியாக்கவும், அலுவல் மொழியாக்கவுமான முயற்சிகள் இன்றோ நேற்றோ தொடங்கியவை அல்ல. இது 1947-க்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது. இந்து ராஷ்டிரத்தை அமைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள் இதில் மிகவும் மூர்க்கமாக செயல்படுகிறார்கள் என்பது மட்டுமே வேறுபாடு.

 

 

 

சமத்துவத்தைப் பற்றிப் பேசும் இந்தியாவின் இந்திய அரசியலமைப்பு பிரிவு 15 மதம், பாலினம், சாதி, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றுதான் குறிப்பிடுகிறதே ஒழிய, மொழி அடிப்படையில் எல்லா மொழிகளுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறவில்லை. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டமே அதன் அடிப்படையே தேசிய இனங்களின், மொழிகளின் உரிமைகளுக்கு எதிரான, பாகுபாடான இந்தி-இந்தியா என்ற கண்ணோட்டதிலானதாகும். இந்த அடிப்படையில் இந்தியை இந்திய அரசு ஊக்குவித்து வளர்த்தெடுத்து, பரப்ப வேண்டும் என்பதை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 351 குறிப்பிடுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உட்பட 22 மொழிகளை உள்ளடக்கியது. இதில் வெகுசிலரால் மட்டுமே பேசப்படுகின்ற, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத தமிழ், தெழுங்கு போல எந்த ஒரு நிலப்பரப்பும் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதம் உள்ளது. ஆனால் இந்துஸ்தானி இல்லை. 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இந்தியை அலுவல் மொழியாக்கியதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தி திவாஸ் (இந்தி தினம்) கொண்டாடப் படுகிறது. ஆனால் அட்டவணையில் உள்ள பிற மொழிகளுக்கு தினங்கள் கொண்டாடப்படுவதில்லை.

1949-க்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்ததன் விளைவாக ‘இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்கும்வரை இந்தியை கட்டாயமாக்கமாட்டோம்” என்ற வாக்குறுதியை நேரு கொடுத்தார். இவ்வாக்குறுதி 1963-ல் சட்ட வடிவம் பெற்றது. மேலும் 1965-ல் இந்தியை மீண்டும் திணிக்க முற்பட்டபோது தமிழகம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. தமிழக இளைஞர்களும், மாணவர்களும் 1965-ல் மாபெரும் மொழிப்போரை முன்னெடுத்து, பலர் உயிர்தியாகம் செய்து இந்தியைத் தடுத்து நிறுத்தினர். 1963-ல் இயற்றப்பட்ட அலுவல் மொழிச்சட்டத்தின்படி, இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்கச் செய்யவும் இந்தியை அலுவல் மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரு தலைமையிலான அரசு ஒரு குழுவை அமைத்தது. அதுதான் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு ஆகும். அக்குழுதான் இப்போது அமித்ஷா தலைமையில் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 1965 முதல் இதுவரை 10 பரிந்துரைகளை இக்குழு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. மாநிலங்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததால் முந்தைய பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் இந்து இராஷ்டிரத்தை அமைக்கும் கனவுடன் பாஜக ஒன்றியத்தில் ஆட்சியதிகாரத்தைப் பிடித்ததும் சமஸ்கிருதம், இந்தியைத் திணிக்க தொடர்ந்து மூர்க்கத்தனமாக முயன்று வருகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களின் மொழிகளும் சமமானவை என்ற அந்தஸ்தைப் பெறுவதே சரியானது. எல்லா மொழிகளையும் தேசிய மொழியாகவும், அலுவல் மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் வைப்பதே உண்மையான, சரியான தீர்வாகும். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒருவரோடு ஒருவர் உரையாடவே மொழி மிகப்பெரிய தடையாக இல்லை எனும்போது ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடனோ, ஒன்றிய அரசு பிற மாநிலங்களுடனோ உரையாட தொடர்புகொள்ள ஒரு பொது மொழி அவசியம் என்பது நகைப்புக்குரிய வாதமாகும்.

மேலும், எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில (தேசிய இன) மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான அறிவியல் பூர்வமான முறையாகும். ஆங்கிலவழிக் கல்வியும் சரி, இந்திவழிக் கல்வியும் சரி இரண்டுமே தவறானவை, அறிவியலுக்கு முரணானவை. ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே தன் தாய்மொழியைக் கேட்கத் தொடங்கி விடுகிறது. எனவே தாய்மொழிக் கல்வியே சிறந்த மாணவர்களையும், அறிஞர்களையும் உருவாக்கும்.

இந்தியை எதிர்க்கும் திராவிடக் கட்சிகளோ, பிற இயக்கங்களோ இத்தகைய தீர்வுகளை முன்வைப்பதில்லை. பொதுவாக எல்லா மொழிகளையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்களே ஒழிய ஒரு தீர்வாக அதை வைப்பதில்லை. அவர்கள் முன்வைப்பதெல்லாம் ஆங்கிலத்தை இணைப்பு, அலுவல் மொழியாக்க வேண்டும் என்பதையே, இது தான் இருமொழிக் கொள்கை இது அடிப்படையிலேயே தவறானது ஆகும்.

மேலும். இவர்கள் 1963 அலுவல் மொழிச் சட்டமும், இந்திய அரசியலமைப்புமே அநீதியானது என்று பேசுவதில்லை. அந்த அலுவல் மொழி சட்டத்தின்படிதான் பாஜக அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது, பரிந்துரைகளையும் கொடுத்துள்ளது. குறைந்தபட்சம் அலுவல் மொழிச் சட்டத்தை இரத்து செய்து எல்லா மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கூட கோரிக்கை வைப்பதில்லை. மாறாக, இந்திய அரசியலமைப்பு ஏதோ கூட்டாச்சி தத்துவத்தையும் பிற தேசிய இனங்களின் மொழிகளின் உரிமைகளையும் அங்கீகரிப்பதைப் போலவும், மோடி அரசுதான் அதை மதிக்காமல் செயல்படுவதைப் போலவும் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். மோடி அரசும் பரர்ப்பன பாசிஸ்டுகளும் மட்டுமல்ல இந்திய அரசியலமைப்பே, அதன் அடிப்படையே தேசிய இனங்களை சிறைக்கூடமாக வைத்திருக்கும் கண்ணோட்டத்திலானது என்பதே உண்மை. பிற மொழிகளின் தேசிய இனங்களின் ஜனநாயகப் பூர்வமான வளர்ச்சிக்கு இந்த அரசமைப்பே மிகப்பெரிய தடையாகும். மொழியின் அடிப்படையில் பாகுபாடு கூடாது என்பதை பேச்சளவில் கூட ஏற்காத ஒரு அரசமைப்பாகும்.

எனவே, இந்த அரசமைப்பை தூக்கியெறிந்துவிட்டு, எல்லா தேசிய இனங்களையும், மெரழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே, மொழியின் மீதான ஒடுக்குமுறையிலிருந்து மட்டுமல்ல, அனைத்து வித ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடுவதற்கு ஒரே வழியாகும்.

 

– பிரபு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன