பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள் என்றாலே மோசடி நிறுவனங்கள்தான் இதில் என்ன புதிது என்று நினைக்கலாம், ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்துதரும் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களைப் போல் இல்லாமல் தற்போது புதியவகை மோசடி நிறுவனங்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளன. வழக்கமாக வங்கிகள் மூலமாகவோ, முதலீட்டு நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மூலமாகவோ பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருவாயை விடப் பல மடங்கு அதிகமாக அதுவும் குறைந்த காலத்தில் கொடுப்பதாக மக்களை ஏமாற்றி பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் நிறுவனங்களே இந்த பங்குச் சந்தை முதலீட்டு மோசடி நிதி நிறுவனங்கள்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை மூதலீடு செய்தவர்கள் ஏமாந்த செய்திகளை பல முறை நாம் கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் அந்த செய்திகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அனுபவ் நிறுவனத்தின் தேக்குமரம் வளர்ப்பு மோசடி தொடங்கி காந்தப் படுக்கை, சந்தன மரம் வளர்த்தல், கண்வலி கிழங்கு விவசாயம், முயல் வளர்ப்பு, மருந்துநறுமணச் செடிகள், ஈமு கோழி, நாட்டு கோழி வளர்ப்பு என பல நூதன முறைகளில் மக்களை மோசடி பேர்வழிகள் ஏய்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பங்குச் சந்தை முதலீட்டு மோசடி நிதி நிறுவனங்கள் புதிதாக சேர்ந்திருக்கின்றன.
சமீபத்தில் தமிழகத்தில் மூன்று மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்த பொதுமக்கள் அது குறித்து போலீசில் புகார் அளித்ததின் பேரில் அவை முடக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங், எல்.என்.எஸ் இண்டர்நேசனல், ஹிஜாவ் அசோசியட்ஸ் ஆகிய இந்த மூன்று நிறுவனங்கள், தமிழகம் முழுவதும் தங்களது கிளைகளைத் திறந்து மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்த நிதி நிறுவனங்கள் மூன்றும் சுமார் 9,000 கோடி ருபாய்களை மக்களிடமிருந்து மோசடியாக திருடியிருக்கிறார்கள், இவர்களை நம்பிப் பணத்தைக் கொடுத்து சுமார் 2 லட்சம்பேர் ஏமாந்திருக்கிறார்கள்.
நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 10 முதல் 25 சதவீதம் வட்டி கிடைக்கும். அதுமட்டுமன்றி ஐந்து பேரை சேர்த்துவிடுங்கள் அவர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பேரைச் சேர்க்க, இது அடுத்த சுற்றில் 100, 1000 என ஆட்கள் உங்கள் நெட்வொர்க்கில் இணைய இணைய நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தால் கூட உங்களுக்கு பணம் கொட்டும் என்று கூறும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற வழமையான மோசடித் திட்டத்தைத்தான் தற்போதும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றாலும் இதில் பங்குச் சந்தையை இணைத்ததுதான் நூதனமானது.
இந்த மோசடி நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்ளும் நபர் முதலில் இந்தியப் பங்குச் சந்தை மிக வேகமாக வளர்வது குறித்தும், அதில் முதலீடு செய்வதற்கு உள்ள பல்வேறு உட்பிரிவுகள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசுகிறார். பின்னர் இதில் தங்களது நிறுவனம் எவ்வாறு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் லாபமடைகிறது என விளக்குகிறார். பின்னர் இதில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி வட்டி கிடைக்கும் என விளக்குகிறார்.
இப்படி முதல் கட்டத்தில் முகவர் பேசுவதைக் கேட்டு ஏமாந்த நபர்களை கூட்டி வைத்து நகரத்தின் பிரபலமான ஏதாவதொரு ஓட்டலில் அடுத்தகட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதில் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைந்தவர்களை அறிமுகப்படுத்தும் படலம் தொடர்கிறது. சாதாரணமான தொழிலாளி கார் வாங்கியது, நகை வாங்கியது, மகளுக்கு திருமணம் செய்துவைத்தது, மகனைப் படிக்க வைத்தது என உணர்வுப்பூர்வமான கதைகள் கூறப்படுகின்றன.
இது போன்ற மோசடி நிறுவனங்களில் ஆரம்பத்தில் சேர்பவர்களுக்கு பின்னால் சேர்பவர்களது பணத்திலிருந்து எடுத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களை வெற்றியாளர்களாக முன்னிலைப்படுத்துவதால் பல நேரங்களில் இது போன்ற கூட்டங்களில் உண்மையாக பலனடைந்தவர்களே பேசுகிறார்கள். இது இந்த மோசடித் திட்டத்தின் மீது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, இதில் ஏமாறுபவர்கள் நிறுவனங்கள் கேட்கும் பணத்தை உடனடியாகக் கட்டிவிடுவதுடன், தங்கள் பங்கிற்கு அடுத்துச் சேர்க்க வேண்டிய நபரைத் தேட ஆரம்பித்துவிடுகின்றனர்.
இந்த நிதி நிறுவனங்களை நடத்தும் மோசடி நபர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் அல்லது வெளிமாநிலங்களில் இருந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் அதனை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர். பணத்தை இழந்தவர்கள் போலீசில் முறையிடும் போது வழக்கம் போல அவர்களது புகார்களைப் பதிவு செய்துகொள்ளும் போலீசு இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் என அறிவுரை கூறி முடித்துக்கொள்வார்கள்.
இது எப்போதும் நடக்கிற கதைதான் என்றாலும் இதில் மோசடி செய்யப்பட்டிருக்கும் தொகை 9000 கோடி அளவிற்கு மிகப்பெரிய தொகை என்பதும் முதலீடு செய்து ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
போர்ச்சூழல், ரிசசன் என உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது இந்தியப் பொருளாதாரம் மட்டும் ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருவதாகவும், இந்தியப் பங்குச்சந்தை உலகின் மற்ற எந்த பங்குச் சந்தையைவிடவும் அதிவேகமாக வளர்வதாகவும் ஆளும்வர்க்கம் செய்யும் பிரச்சாரமே இந்த மோசடியின் மூலாதாரமாக உள்ளது.
நிறுவனங்களின் உண்மையான மதிப்பை மறைத்து, சீட்டுக் கத்திரித்து விளையாடும் பங்குச் சந்தை சூதாட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள், யார் போண்டியாகித் தெருவில் நிற்கிறார்கள் என்பது தெரியாது என்பதால் பங்குச் சந்தை குறீயீட்டு எண் உயர்வதை மட்டும் வைத்துக் கொண்டு நாடு முன்னேறுகிறது என்றும் முதலீட்டாளர்கள் லாபத்தில் கொழிக்கிறார்கள் என்றும் ஆளும்வர்க்கம் மக்களை ஏமாற்றிப் பிரச்சாரம் செய்கிறது. இதனையே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மோசடிப் பேர்வழிகள் தங்கள் பங்கிற்கு மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கின்றன.
பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்துத் தொழிலாளர்கள்தான், இது போன்ற மோசடி நபர்களிடம் தங்களது பணத்தை இழந்து நிற்கின்றனர். புதிய தாராளவாதக் கொள்கைகள் இந்தியத் தொழிலாளர்கள் மத்தியிலும், சிறு முதலாளிகள் மத்தியிலும் நிரந்தரமற்ற வேலை குறித்தும், நிச்சயமற்ற எதிர்காலம் குறித்தும் தோற்றுவித்திருக்கும் பயமும், கவலையும்தான் இது போன்ற மோசடி நிறுவனங்களை அவர்கள் நம்பும்படிச் செய்கிறது.
ஆனால் தனது பொய்ப்பிரச்சாரத்தின் காரணமாக வாழ்க்கைச் சேமிப்பை இழந்து நிற்பவர்களைப் பார்த்து ஆசையே துன்பத்திற்குக் காரணம், பேராசை பெரு நஷ்டம் என ஆளும்வர்க்கம் நீதி போதனை செய்கிறது.
பங்குச் சந்தை சூதாட்டம் குறித்தும், அதில் போலியாக உயர்த்தப்படும் மதிப்பு வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது என்றும், இந்தச் சூதாட்டத்தில் பலரது நட்டமே ஒருசிலரது லாபமாகிறது என்பது குறித்தும் மக்கள் புரிந்து கொள்ளாத வரை இது போன்ற மோசடிகள் தொடரத்தான் செய்யும் மக்கள் புரிந்துகொண்டுவிட்டால் இந்த நிதி நிறுவன மோசடி கும்பல் மட்டுமல்ல பங்குச் சந்தையை வைத்து மக்களை ஏய்க்கும் ஆளும் வர்க்கம் என்ற மோசடி கும்பலுக்கும் சேர்த்தே மக்கள் முடிவுகட்டிவிடுவார்கள்.
- தாமிரபரணி