தேதி: 23.11.2022
பத்திரிக்கை செய்தி
காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தின் மைய முழக்கம் பற்றி
அன்பார்ந்த தோழர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு எனும் எமது அமைப்பானது மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
1990களில் இருந்து “இந்து மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்! நாடு மறுகாலனியாவதை முறியடிப்போம்!!” எனும் இரு மைய முழக்கங்களை கொண்ட செயல்தந்திரத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு அரசியல் இயக்கங்களை எடுத்து சென்றோம்.
ஏகாதிபத்திய-முதலாளித்துவத்தின் உலக கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கி, திவாலாகித் தோற்றுப் போய், நிலைகுலைந்து, எதிர்மறை சக்திகளாக மாறிய சூழ்நிலை தோன்றியது; இது நமது நாட்டிலும் கட்டமைப்பு நெருக்கடியாக வெளிப்பட்டது; இதற்கு மாற்று “மக்கள் அதிகாரமே” என்று வரையறுத்து 2015 முதல் செயல்தந்திர அரசியலைக் கொண்டு சென்றோம்.
ஏகாதிபத்திய-முதலாளித்துவத்தின் உலக கட்டமைப்பானது நெருக்கடிக்குள்ளாகி, மீள முடியாத சூழலில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்க கும்பல்கள் பாசிசத்தை நிறுவ இறங்கியுள்ளன. இந்தப் பொது போக்கின் அடிப்படையில், நமது நாட்டிலும் பாசிச அபாயம் தோன்றியுள்ளது. இப்போது, நமது நாட்டில் உருவாகியுள்ள பாசிச அபாயம் என்பது வெறும் பார்ப்பன பாசிசக் கும்பலால் மட்டும் ஏற்பட்டதல்ல; ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல் மற்றும் பெரும் கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலின் நலனுக்காகவும் அக்கும்பல்களின் நெருக்கடிக்கு தீர்வாகவுமே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பலானது நமது நாட்டில் பாசிசக் கட்டமைப்பை நிறுவ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதனால், கார்ப்பரேட் பாசிசமும் காவி பாசிசமும் இணைந்த வீரிய-ஒட்டுரக பாசிச அபாயம் என்று எமது அமைப்பு இதனை முதன்முதலாக வரையறுத்தது. இந்த வரையறுப்பானது பல்வேறு பாசிச எதிர்ப்பு சக்திகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் காவி – கார்ப்பரேட் பாசிச அபாயத்தை தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்னும் வகையில் 40,000 பேரை அணிதிரட்டி முன்மாதிரியான மாநாட்டையும் நடத்தினோம்.
எமது அமைப்பின் முன்னாள் செயலர் தோழர் அன்பழகன் அவர்களின் பெரும் முயற்சியில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடிப்படைகளையும், அதன் போக்குகளையும், அதனை முறியடிப்பதற்கான திட்டத்தையும் வரையறுத்து விரிவாக எழுதி முன்வைக்கப்பட்டது. அவ்வறிக்கை, 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு பத்திரிக்கை செய்தியாகவும் அறிவித்திருந்தோம்.
காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திர அறிக்கையில் சேர்க்கைகள், திருத்தங்கள், செம்மைப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்து, இறுதியாக்கிக் கொடுக்கும் போது தோழர் அன்பழகன், “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!” என்பதை மைய முழக்கமாக வகுத்துக் கொடுத்தார்.
ஆனால், காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திர அறிக்கையை கட்சி ஆவணமாக வெளியிடும்போது செயல்தந்திர அறிக்கையின் உள்ளடக்கத்திற்கு எதிராக மைய முழக்கத்தை அப்போதைய தலைமைக்குழு சதித்தனமாக மாற்றிவிட்டது. அதாவது, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! என்பதை புகுத்தி, “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!” என்று மைய முழக்கத்தை மாற்றிவிட்டது. எமது அமைப்பின் 10-வது பிளீனத்தில் தலைமைக்கு வந்த இருவர் கும்பலானது அரசியலற்ற, சித்தாந்தமற்ற, அமைப்புமுறையற்ற, பண்பாடற்ற லும்பன் கும்பலாக சீரழிந்துவிட்டதையும் அக்கும்பல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதையும் எமது அமைப்பின் 11-வது பிளீன முடிவாக 20.10.2022 தேதியிட்ட பத்திரிக்கை செய்தியில் அறிவித்திருந்தோம். அந்த லும்பன் கும்பல்தான் தவறான மைய முழக்கத்துடன் செயல்தந்திர அறிக்கையை புத்தகமாக அச்சிட்டுள்ளது.
செயல்தந்திர அறிக்கையானது புத்தகமாக 2022 ஜனவரி இரண்டாம் வாரத்தில் அச்சிடப்பட்ட பிறகுதான் மைய முழக்கம் மாற்றப்பட்டிருக்கும் விஷயமே முன்னாள் செயலரான தோழர் அன்பழகனுக்குத் தெரிய வந்தது. இப்படி மைய முழக்கத்தை மாற்றியது செயல்தந்திர அறிக்கையின் உள்ளடக்கத்திற்கு மாறானது, கோட்பாட்டுரீதியாக தவறானது என்று பலமுறை சுட்டிக்காட்டியும் அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலானது தவறான மைய முழக்கத்தை மாற்றவேயில்லை.
இருவர் கும்பலின் முழக்கம் ஏன் தவறானது?
செயல்தந்திர அறிக்கையைப் பொறுத்தவரை காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி இன்னும் நமது நாட்டில் நிறுவப்படவில்லை; அப்படிப்பட்ட பாசிச ஆட்சியை நிறுவப்படுவதற்கான தயாரிப்புகளை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க பார்ப்பன பாசிசக் கும்பல் திட்டமிட்டு செய்து வருகிறது என்பதாகும். இதனை அறிக்கையில் தெளிவாக விளக்கியுமுள்ளோம்.
“பாசிச ஆட்சிமுறை பற்றி கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக் குழுவின் பதிமூன்றாவது விரிவடைந்த கூட்டம் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், தோழர் டிமிட்ரோவ் அளித்த வரையறுப்புகளின்படி பார்த்தால், மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., பார்ப்பன – காவி பாசிச கும்பலின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சிமுறை அல்ல; தனக்குகந்த ஒரு பாசிச ஆட்சிமுறையை, இந்துத்துவ பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதை இலட்சியமாகக் கொண்டு, அதை அடைய ஊசலாட்டம் ஏதுமின்றி உறுதியுடனும் தனக்கேயுரிய பார்ப்பனத் தந்திரங்களை மேற்கொண்டு படிப்படியாக முன்னேறி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக – முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிமுறையாகும். ஆசிய உற்பத்திமுறை – சாதி – வர்ண – மனுதர்ம – காலனிய அடிமைத்தன – தரகுத் தன்மை ஆகிய பாரம்பரிய – வரலாற்றுக் கறைபடிந்த, வெட்டிக் குறைக்கப்பட்ட, பல உரிமைகள் பறிக்கப்பட்ட, நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக – முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி முறையாகும்.” [காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திர அறிக்கை, பக். 37]
ஆக, பாசிசக் கும்பல் அதிகாரத்தில் இருந்தாலும், பாசிச அரசு வடிவம் நிறுவப்படவில்லை என்பதுதான் நம் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை. இன்னமும், புரட்சியின் கட்டம் என்பது புதிய ஜனநாயகப் புரட்சி கட்டம்தான்.
இன்றைய நிலைமையில், பாசிச ஆட்சி நிறுவப்படுவதற்கான தயாரிப்பு வேலைகளை பாசிசக் கும்பல்கள் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் நாம் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பாசிச ஆட்சி கூடிய விரைவில் நிறுவப்பட வாய்ப்பு இருப்பதையும் கணக்கில் கொண்டு செயல்தந்திர அறிக்கை எழுதப்பட்டிருந்தாலும், தற்போது பாசிச ஆட்சியமைப்பு நிறுவப்படவில்லை என்பதால், “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!” என்ற செயல்தந்திர நோக்கத்தையும், “மக்கள் ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!” என்ற போர்த்தந்திர நோக்கத்தையும் இணைத்து மைய முழக்கத்தை வகுப்பதுதான் சரியானது.
லும்பன் கும்பல் செய்திருப்பது போல, “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!” என்று மைய முழக்கத்தை வகுத்தால் அதன் அர்த்தம் என்ன? பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! என்று கூறப்படுவதால் பாசிச ஆட்சி நிறுவப்பட்டுவிட்டது என்பதுபோலவும், புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கிய பாதையில் ஒரு புதிய இடைக்கட்டம் உருவாகிவிட்டது என்பதுபோலவும், அதை தீர்க்கும் கடமைக்காக பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைக்க வேண்டியிருக்கிறது என்பதுபோலவும் அர்த்தமாகிறது. இப்படி பொருள் கொள்வதற்கு நேரெதிராக காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திர அறிக்கையின் உள்ளடக்கம் இருப்பதை சுட்டிகாட்டுகிறோம்.
000
மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில், இருவர் கும்பலால் அச்சிடப்பட்ட “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!” என்னும் மைய முழக்கம் தவறானது என்பதனை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரத்தின் மைய முழக்கமாக “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!” என்பதை அறிவிக்கிறோம். இந்த மைய முழக்கத்தின் அடிப்படையில்தான் எமது அமைப்புகளின் அரசியல் இயக்கங்கள் கொண்டு செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சிகர வாழ்த்துகள்!