மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி! (22-11-2022).
ஹோமியோபதி மருத்துவம் என்பது பக்கவிளைவுகள் ஏதும் இன்றி மிக மிக குறைந்த செலவில் எல்லோரும் பயன்பெறும் மருத்துவம் ஆகும். அது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி மக்களை இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்வராமல் முன்னரே தடுக்கும் சிறந்த மருத்துவ முறை ஆகும். ஆனால் இதற்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்தும் அளிக்காமல் அலட்சியப்படுத்துகின்றன.
ஹோமியோபதி மருத்துவ கல்லூரி தமிழகத்தில் ஒரு இடத்தில்தான் உள்ளது. திமுக ஆட்சிகாலத்தில் 1982 -ல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இடம் ஒதுக்கப்பட்டு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி கட்டப்பட்டு இயங்கிவருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மருத்துவர்களை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது. இந்த கல்லூரியோடு மாணவர்- மாணவியர் விடுதியும் உள்ளது. இப்போது அக்கல்லூரி கட்டிடம் மற்றும் மாணவ-மாணவியர் விடுதிகள் ஆகியவை சில ஆண்டுகளாக சிதிலமடைந்து ஆபத்து ஏற்படும் நிலையில் இருந்து வருகிறது. இதை சரி செய்ய பல முறை மாணவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.
மேலும் இந்த கல்லூரி மற்றும் விடுதி கட்டிடங்கள் நீர்நிலையில் கட்டப்பட்டு இருப்பதால் மழை காலங்களில் கட்டிடங்கள் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. மழை காலங்களில் சிதிலம் அடைந்து மேற்கூறைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் விருதுநகரில் அரசுமருத்துவ மனைக்கு மாணவர்கள் மாற்றப்பட்டு அங்கு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றது. அங்கும் எந்த வசதியும் இல்லை. வகுப்பறைகள் எதுவும் இல்லை.
மாணவர்- மாணவியர் விடுதிகளை விட்டு வெளியேறி சொந்தமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சொந்தமாக அறை எடுத்து தங்க ரூ 1500 வாடகை பணம், உணவு செலவுகளுக்கு ரூ 4000 போக்குவரத்து செலவுகளுக்கு ரூ 2000, இதர செலவுகள் என்று பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இங்கு படிக்க கூடிய மாணவ மாணவியர் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை அரசு கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே நீண்ட காலமாக மாணவ மாணவிகள் கோரிவரும்படி மதுரையில் அல்லது சென்னையில் நிரந்தரமாக ஓர் கல்லூரி மற்றும் மாணவர் மாணவியர் விடுதிகளை உடனடியாக கட்டித்தர வேண்டும்.
கல்லூரிக்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெளி நோயாளி பிரிவு கட்டிடம் மட்டுமே இடிபாடுகள் இன்றி செயல்படும் நிலையில் உள்ளது. இங்கும் நோயாளிகளுக்கு குடிநீர், கழிப்பிடம், அமர்வதற்கான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாத அவல நிலை!
இக்கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிப்பு முடிந்து 5 வது ஆண்டு பயிற்சி மருத்துவர்களாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களுக்கு அனுப்பபட்டு இவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் யாருக்கும் கடந்த மூன்று மாதமாக அரசு வழங்கி வந்த ஊக்கத்தொகை ரூ 25,000 வழங்கவில்லை. இந்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு மருத்துவமனை அருகே இவர்கள் தங்கி இருக்க வேண்டும். அதற்கு அறை வாடகை ரூ 1500, உணவு தேவைரூ 4500, போக்குவரத்து ரூ 2000 இதர செலவுகள் உள்ளது. இவற்றை ஏழை மாணவர்கள் சமாளிப்பது சிரமமாக உள்ளது. ஊக்கத்தொகையை உடனே வழங்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. ஆகவே, நிலுவை தொகையையும் சேர்த்து உடனடியாக அரசு வழங்க வேண்டும்.
கல்லூரிக்கு மாணவர்களை கொண்டு செல்வதற்கான பேருந்துகள் உள்ளன. ஆனால் அவை இயக்கப்படாமல் இருப்பதால் ஏழை மாணவர்களான இவர்களுக்கு போக்கு வரத்து செலவுகள் சமாளிக்க முடியாத அளவிற்கு உள்ளது.
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது சித்தா மாணவர்கள் 130 பேர் அரசு வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள் என்றால் , ஹோமியோபதி பிரிவில் 13 பேர் மட்டுமே எடுக்கப்படுகின்றனர். இந்த விகிதாச்சாரம் மாற்றி அமைக்கப்பட்டு ஹோமியோபதி மாணவர்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும். இன்று படித்து முடித்த ஹோமியோபதி மாணவர்கள் பலர் வேறு வேறு வேலைகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அலோபதி மருத்துவர்களாக ஆகுவதற்கு நீட் போன்ற அடக்குமுறைகள் ஏழை எளிய மக்களுக்கு பெரும் தடையாக உள்ளது என்றால் இது போன்ற ஹோமியோபதி மருத்துவராக மாறுவதற்கே பெரும் குதிரை கொம்பாகும் நிலையை மாநில அரசு ஏற்படுத்தி வருகின்றது. மாணவர்களின் நீண்ட கால கோரிக்கைகளான மேற்கண்ட குறைகளை அரசு உடனே போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
முத்துக்குமார்
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்,
97901 38614