சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே சில மிருகங்கள் வெறிகொண்டு விடுமென்று நமக்குத் தெரியும். அந்த மிருகங்களைப் போலவே சனாதனிகளும் சிவப்பைக் கண்டாலே எப்படியெல்லாம் உளறத் தொடங்கி விடுவார்களென்பதையும்; அந்த உளறல் தங்ககளது வேதங்களையும் உபநிடதங்களையும் விட அபத்தமாக இருக்குமென்பதையும் தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார்:
“சீனா முழுதும் சிவப்பாகி விட்டதாமே! உண்மைதானா சார்? திபேத் எல்லைக் கோட்டைச் சேர்ந்த மலைப்பிரதேசத்திலிருந்து – 10,000 தேசிய சீனப் படைகளை விரட்டி விட்டு கம்யூனிஸ்ட் சீனப் படை அந்த இடத்தையும் பிடித்துக் கொண்டுவிட்டதாமே? இத்துடன் சீனாவில் ஒரு கை அகலங் கூடப் பாக்கியில்லையாமே?”
“ஆமா, சார். நான் கூடப் படித்தேன். தென் மேற்கு சீனா பூராவும் அந்தப் படுபாவிகள் வசமாகி விட்டதாமே? அது மட்டுமா? ஹெய்னான் தீவையும் பிடித்து விட்டார்களாம்!தலை நகர் போய்விட்டதாம்! தேசீய சீனர்கள் குதிகால் பிடரியில் படும்படியாக ஓடி விட்டார்களாமே!”
அடேயப்பா! இதென்ன இவ்வளவு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தோ சீனாவிலும் அவர்கள் தொல்லையாம்! தாய்லாந்திலும் தொல்லையாம். பர்மாவிலும் தொல்லையாம்! மலேசியாவிலும் தொல்லையாம்! இந்தியாவை (பாரத பூமியை)ச் சுற்றி இப்படி ஒரே களேபாரமாயிருக்கே!இந்தியாவுக்கும் ஒரு வேளை பரவி விடுமோ?”
“சே! சே! இந்தியாவுக்கா? அதெல்லாம் முடியாது சார்! ‘ஹிந்து மதம் உள்ளவரையில் இங்கே கம்யூனிசம் பரவாது என்று மேல் நாட்டுப் பத்திரிகை எழுதிற்றே அது ரொம்ப சரி, சார்!”
“அதுதான் மதச் சார்பற்ற சர்க்கார் என்று நம் சர்க்கார் சொல்லி விட்டார்களே! இவர்களா ஹிந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்?”
“மதச் சார்பற்ற சர்க்காரா? யார் சொன்னது? அதெல்லாம் விளையாட்டுக்கு சார்! பாகிஸ்தானை ஏமாற்றுவதற்கு சார்!! நம் போஸ்டல் ஸ்டாம்புகளைப் பாருங்கள்! எது மதச் சார்பற்ற சர்க்கார்? அசல் ஹிந்து மத சர்க்காரேதான்! சந்தேகம் வேண்டாம்!”
“சீன கம்யூனிஸ்ட் சர்க்காரை ஒப்புக் கொண்டு இந்தியத் தூதுவரைக் கூட அங்கு அனுப்பி விட்டார்களே! அது என்னமோ எனக்குப் பிடிக்கவேயில்லை! எதற்காக அந்த சர்க்காரை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்? கம்யூனிசத்தை ஒப்புக் கொண்டதாகத் தானே அர்த்தம்?!’
“அப்படியல்ல! கம்யூனிஸ்ட் சர்க்காரை ஒப்புக் கொண்டதால், ‘தயவு செய்து எங்கள் நாட்டிற்குத் தொல்லை கொடுக்காமலிருங்கள்’, என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக அர்த்தம்.அவ்வளவுதான்!”
அப்படியா,சங்கதி? இப்போதுதான் விஷயம் விளங்கிற்று! எங்கே கம்யூனிசம் நம் நாட்டுக்கும் வந்து விடுமோ என்று எனக்கு எப்போதும் ஒரே நடுக்கமாகவே இருக்கிறது!”
“இங்கேயாவது, கம்யூனிஸமாவது, வருவதாவது? கண்ட கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளினால் எப்படித் தலை நீட்ட முடியும்? வெலிங்டன் காங்கிரஸ்காரரைச் செய்ததைவிடக் கொடுமையாக நடத்துராளே, நம்ப சர்க்காரிலே! கம்யூனிசம் இங்கே தலைதூக்குமா?”
அய்யய்யோ! அப்படிச் சொல்லாதிங்கோ சார்? வெலிங்டனுக்குப் பிறகு காங்கிரஸ் வளர்ந்தது மாதிரியே இங்கேயும் கம்யூனிசம் வளர்ந்துடப் போகுது!”
“நீங்க என்ன ஸார், இப்படிப் பயந்து சாகுறிங்க? சதா கடவுள்,மதம், வேதம், சாஸ்திரம், புராணம், தலை விதி, அதிர்ஷ்டம், ஜோசியம், நல்ல நாள், பண்டிகை இந்த மாதிரியெல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும், நடத்திக் கொண்டுமிருந்தால், கம்யூனிசமாவது கத்தரிக்காயாவது?”
“என்னமோ சார், சீனாப் படத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை! அவ்வளவு பெரிய தேசமே இரண்டு வருஷத்துக்குள் இப்படி ஒரே சிவப்பு வர்ணமாகி விட்டதென்றால் நம் நாடு எம்மாத்திரம், சார்?”
“ஏன் சார், இப்படி நடுங்குறீங்க? அப்படியே மீறி கம்யூனிசம் வந்தால் தான் என்ன குடி முழுகிப் போகும்? நீர் லட்சாதிபதியா, என்ன? என்னைப் போல நீங்களும் ஓர் அன்றாடம் காய்ச்சி தானே! கம்யூனிசம் வந்தால் உங்களுக்கும் நல்லது தானே, சார்?”
“அய்யய்யோ! இதோ கம்யூனிஸ்ட்? இதோ கம்யூனிஸ்ட்! போலீஸ்! போலீஸ்! அண்ணாமலைப்பிள்ளை! அண்ணாமலைப் பிள்ளை!! காமராஜ் நாடார்! காமராஜ் நாடார்!! இதோ ஒரு கம்யூனிஸ்ட்! பிடியுங்கள்! அடியுங்கள்! சுடுங்கள்! கொல்லுங்கள்!!
தோழர் குத்தூசி குருசாமி
– விடுதலை 27 ஏப்ரல் 1950