தில்லை கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவே குழந்தை திருமணம்.

தங்களது குடும்பப் பெண்கள் வேறு சாதியில், ஏன் பார்ப்பனர்களிலேயே கூட மற்றவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது தில்லைக் கோவிலில் தங்களது ஆதிக்கத்திற்கு போட்டியாக வெளியிலிருந்து வேறொரு நபர் அல்லது சாதியினர் வருவதற்கு வாய்ப்பளிக்கும் என்பதால்தான் குழந்தைத் திருமணத்தை, அது சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிந்தும் கூட, தீட்சிதர்கள் நடத்துகிறார்கள்.

சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திருமணம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

தனது 13 வயது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேச தீட்சிதர் ஆகிய இருவரையும் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட சமூக நலத்துறைக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அந்தத் துறையின் அதிகாரிகள் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது நடந்துள்ளது.

குழந்தை திருமணத்தை நடத்தி வைத்த குற்றத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள் கும்பல், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததோடு மட்டுமில்லாமல், தீட்சிதர்களின் கைதை எதிர்த்து கோவில் கோபுர வாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் தடுப்புக்காவலில் எடுத்து பின்னர் விடுவித்தனர். இவர்கள் இதுவரை 4 குழந்தை திருமணங்களை நடத்தி வைத்ததாக, தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

 

தீட்சிதர்களை பொறுத்தவரை மொத்தமே நான்கு கோத்திரங்கள் எனப்படும் உட்பிரிவினர்தான். சிறிவத்ஸ கோத்திரம், கவுண்டின்ய கோத்திரம், ரிசிக்யான்யர் கோத்திரம், விஸ்வாமித்திர கோத்திரம் ஆகிய உட்பிரிவுகள் தான் தீட்சிதர்களுக்கு உண்டு. மற்றவர்களை போல அத்தை மாமன் முறை எல்லாம் திருமணத்தில் கடைப்பிடிப்பதும் இல்லை. அண்ணன் – தங்கை முறையிலும் திருமணம் செய்வார்கள்.. எப்படிப்பட்ட நாகரீக கட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள் கைலாய தீட்சிதர்கள்!

இதை ஏதோ நான்கு குழந்தை திருமணங்கள், குழந்தை திருமண குற்றத்திற்காக கைது, அதற்கெதிராக தீட்சிதர்களின் சாலை மறியல் போராட்டம் என்பதாக இத்தீட்சிதர்களின் விசயத்தில் நாம் சுருக்கி பார்க்க முடியாது.

தில்லை கோவிலைத் தீட்சிதர்கள் பல நூற்றாண்டுகளாகத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். தமிழ் மன்னர்களின் ஆட்சி, மற்ற மாநில மன்னர்களின் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, அதற்கு பிறகு பிரிட்டீசாரிடமிருந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தில்லை கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை யாரும் கேள்விகேட்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.

இந்த ஆதிக்கத்தை அவர்கள் அகமண முறையின் மூலமே நிலைநாட்டி வந்திருக்கிறார்கள். “தில்லைப் பெண் எல்லை தாண்டாது” என்று இதனை தீட்சிதர்கள் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். தங்களது குடும்பப் பெண்கள் வேறு சாதியில், ஏன் பார்ப்பனர்களிலேயே கூட மற்றவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது தில்லைக் கோவிலில் தங்களது ஆதிக்கத்திற்கு போட்டியாக வெளியிலிருந்து வேறொரு நபர் அல்லது சாதியினர் வருவதற்கு வாய்ப்பளிக்கும் என்பதால்தான் குழந்தைத் திருமணத்தை, அது சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிந்தும் கூட, தீட்சிதர்கள் நடத்துகிறார்கள்.

தில்லைக் கோவிலில் வரும் கோடிக்கணக்கன ருபாய் வருமானம் தங்களது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பத்றகாக, உலகம் எவ்வளவு மாறினாலும், ரத்த சம்பந்தம் கொண்ட சகோதர, சகோதரி உறவுக்குள்ளேயே திருமணம் செய்கிறார்கள்.

தங்களது வீட்டுப் பெண்களை குழந்தை திருமணம் செய்து வைக்கிறோம் என்ற குற்ற உணர்வை சிறிதளவேனும் நாம் தீட்சிதர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது என்பதை குற்றச்செயலில் ஈடுபட்ட தீட்சிதர்களின் கைதை தொடர்ந்து மற்ற தீட்சிதர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தில்லைக் கோவிலின் மீதான தங்களது ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் குழந்தைத் திருமணச் சட்டம் இருப்பதால் அவர்கள் சிறிதும் குற்ற உணர்வு கொள்வதில்லை.

உழைக்கும் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் போது தனது குண்டாந்தடியால் பதில் சொல்லும் போலீசோ சாலைமறியல் செய்த தீட்சிதப் பார்ப்பனர்களிடம் பல மணி நேரம் கைகட்டி வாய் பொத்தி நின்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அதிமுக ஆட்சியாளர்கள் இதுவரை தீட்சிதர்களுக்கு அடிமை சேவகம் செய்து  வந்திருக்கிறார்கள். இந்துக்களின் உலக மகா பாதுகாவலர்களான பா.ஜ.கவோ தீட்சிதர்களின் விசயத்தில் வாயை திறப்பதில்லை. குழந்தை திருமண கைதை ஒட்டி, உள்ளூர் பா.ஜ.க நிர்வாகிகள் தீட்சிதர்களோடு சேர்ந்து சாலை மறியல் செய்துள்ளனர்.

சட்டம், நீதிமன்ற தீர்ப்பு எல்லாம் தீட்சிதர்களின் குடுமிக்கு சமம். தீட்சிதர்களின் அராஜகம்! அடாவடித்தனம்! திமிர்த்தனம் தீட்சிதர்களின் பூனூலைப் போல ஒட்டிப்பிறந்தவை. யாரும் கேள்வி கேட்க முடிவதில்லை.

சமீபத்தில் வந்த குழந்தை திருமண குற்றச்சாட்டும் மட்டுமில்லை. எத்தனையோ குற்றங்களை தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த சிவபக்தன் நந்தனின் தில்லை கோவில் நுழைவை தடுத்து அவரை தீக்கிரையாக்கினர். வள்ளலாரை வாட்டி வதைத்து வடலூருக்கு இடம் பெயர வைத்தனர். பணம் இருந்தால் தரிசனம், உழைக்கும் மக்கள் தரிசனத்திற்கு தவம் இருக்க வேண்டும். சிதம்பரம் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட முடியவில்லை. சைவப் பெரியவர் ஆறுமுகச்சாமியை அடித்து கையை உடைத்தது தொடங்கி தமிழில் பாட நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகும் கூட அவரை கோர்ட்டுக்கு இழுத்து அவமதித்து அபராதம் கட்ட வைத்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிவபக்தையான பெண் ஒருவர் தேவாரம் பாட வந்த போது தாக்குதல் நடத்தினர்.

 

 

இது மட்டுமன்றி கோவிலில் முறையான கணக்கு வழக்கு இல்லாமை, பக்தர்களிடம் பணம் பிடுங்குதல், தங்கத்தின் இருப்பு குறைதல் என்ற பல குற்றங்கள் தீட்சிதர்கள் மேல் இருக்கிறது.

இக்கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க 1947 அதிகார மாற்றத்திற்கு முன்பும் பின்பும் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்குமா! இல்லை இது மற்றுமொரு நாடகமா! என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னும் எத்தனை காலம் தான் சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் கொட்டங்களை நாம் சகிக்க போகிறோம்? வெறும் 400 தீட்சிதர்கள் குடும்பங்கள் அவர்களின் ஆதிக்கத்தை தமிழகத்தில் இருக்கும் 7 கோடிக்கும் அதிகமான மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இத்தனை ஆண்டுகால அரசுகள் ஒன்றும் செய்யாத போது  உழைக்கும் மக்கள்  சிதம்பர கோவிலை கைப்பற்றும் போது தான் சிதம்பர கோவிலின் காட்டுமிராண்டி செயல்களையும், தீட்சிதர்களின் கொட்டத்தையும்  அடக்க முடியும்!  அவர்களின் சிதம்பர கோவிலின் மீதான ஆதிக்கத்தை முறியடிக்க முடியும்!

மக்களால் மட்டுமே ,தீட்சிதர்களின் பூர்வீக இடம் என்று அவர்களே கூறிக்கொள்ளும் கையாலத்தை நோக்கி விரட்ட முடியும்!

  • தாமிரபரணி.

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன