தேதி: 20.10.2022
எமது அமைப்பின் 11வது பிளீனத்துடைய பத்திரிக்கை செய்தி
அன்பார்ந்த தோழர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு எனும் எமது அமைப்பானது மக்கள்திரள் வழியில் பெருவாரியான மக்களை திரட்டி தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சுமார் 40 ஆண்டு காலமாக, நக்சல்பாரி பாரம்பரித்தையும் மார்க்சிய – லெனினியத்தையும் உயர்த்தி பிடித்து தமிழகத்தில் செயல்பட்டு வருகிறோம். செயல்தந்திர மைய முழக்கங்களையும் துணை முழக்கங்களையும் வரையறுத்து, அதனடிப்படையில் எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கருவறை நுழைவுப் போராட்டம், சாதி தீண்டாமை எதிர்ப்பு இயக்கம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், தேக்குப்பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் அரசியல் பணக்கார ரௌடிகளுக்கு எதிரான இயக்கம், மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாடு, தமிழ் மக்கள் இசைவிழா, தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு இயக்கம், தில்லை கோவில் மீட்பு – தமிழ் உரிமைக்கான போராட்டங்கள், ரிலையன்ஸ் ஃபிரஷ் எதிர்ப்பு போராட்டம், பச்சை வேட்டைக்கு எதிரான இயக்கம், டௌ கெமிக்கல்ஸுக்கு எதிரான போராட்டம், சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், தாதுமணல் மற்றும் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் என பல அரசியல் இயக்கங்களை நடத்தியுள்ளோம். மைய அளவிலான இயக்கங்கள் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான அரசியல் இயக்கங்களும்-போராட்டங்களும், பொருளாதாரப் போராட்டங்களும் எண்ணிலடங்காதவை.
கடந்த 2020 ஆம் ஆண்டு காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக சுமார் 40,000 மக்களை திரட்டி எழுச்சியானதொரு மாநாட்டை நடத்தினோம். அம்மாநாட்டின் அடுத்த நாளே எமது அமைப்பின் தலைமைக் கமிட்டியில் இருந்த இருவர், எமது கட்சியை அவதூறு செய்து இணையத்தில் கடிதம் வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு சீர்குலைவு, சதி வேலைகளை செய்து எமது கட்சியை கலைப்புவாதக் கும்பல் பிளவுப்படுத்தியதை விரிவாக விளக்கி, எமது அமைப்பின் 10-வது பிளீனத்தை ஒட்டி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவித்திருந்தோம்.
10-வது பிளீனத்தில் தலைமைக்கு வந்த இருவர் கும்பல் ஒன்று, அதே கலைப்புவாத கருத்துக்களை தந்திரமாக மறைத்துவைத்துக் கொண்டு எமது கட்சியின் தலைமைக்கு வந்தது. அந்த இருவர் கும்பலைப் பொருத்தவரை, செயல்தந்திர அரசியலின் அடிப்படையில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் எடுத்து மக்களிடையே புரட்சிகர அரசியலை கொண்டு சென்றதுதான், வலது திசைவிலகல் என்று வாதிட்டு வந்தது. ஆனால், செயல்தந்திரத்தின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை அணிதிரட்ட முயற்சிப்பதுதான் மார்க்சிய-லெனினிய வழிமுறையாகும். இதனை கட்சிக்குள் விவாதித்து முடிவுக்கு வரலாம் என்று கருதி, உட்கட்சி விவாதம் நடத்த அமைப்பு முடிவு செய்தது.
ஆனால் புதிய கலைப்புவாத இருவர் கும்பலோ, கருத்துருவாக்கம் செய்து, அவதூறு கூட்டங்களை (இலட்சக் கணக்கில் செலவு செய்து) நடத்தி உட்கட்சி விவாதத்தை சீர்குலைத்தது. எல்லா கேடுகெட்ட வழிமுறைகளையும் பின்பற்றி, முன்னாள் செயலரையும் உட்கட்சி விவாதத்துக்கு அறிக்கை வைத்த குழுவையும் அவதூறு, கருத்துருவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டது.
இதன்போக்கில்தான், இந்த இருவர் கும்பல் என்பது பழைய கலைப்புவாதக் கும்பலின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ள சதிகாரக் கும்பல் என்று தெரிய வந்தது. மேலும், இந்த இருவர் கும்பல் தலைமைக்கு வந்ததில் இருந்து மொத்த கட்சியையும் கைப்பற்ற கட்சிக்குள் கட்சி கட்டும், கோஷ்டி கட்டும் வேலையை ஆரம்பம் முதலே செய்து வந்திருப்பது தெரிய வந்தது; எல்லா அமைப்புமுறைகளையும் மீறி, நீண்ட காலம் கட்சியில் செயல்பட்ட அனுபவமுள்ள மூத்த தோழர்களை பற்றி அவதூறு செய்வது என்று செயல்பட்டு வந்தது.
செயல்தந்திரத்தின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை திரட்டுவதற்காக நிலைமைக்கு பொருத்தமான போராட்ட வடிவங்களை பயன்படுத்தி வீச்சாக புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்வது எனும் மார்க்சிய-லெனினிய வழிமுறைக்கு மாறாக, செயல்தந்திரத்தை கட்சியைக் கட்டுவதற்கான கருவியாக பயன்படுத்துவது எனும் மார்க்சிய விரோத முறையை முன்வைத்தது. 40 ஆண்டுகளாக “நாம் செய்த பிரச்சாரமெல்லாம் புரட்சிகர அல்லேலூயா பாணியிலானது. வெறும் காற்றில் கரைந்த வார்த்தைகள், ஒன்றுக்கும் உதவாத வெங்காயம்” என்று எமது கட்சியின் புரட்சிகர செயல்பாட்டை இழிவுபடுத்தும் இந்த இருவர் கும்பல்தான், சிறிதும் கூச்சமின்றி எமது அமைப்புப் பாரம்பரியத்தையும் இப்பிரச்சாரத்தினால் உருவாக்கப்பட்ட செல்வாக்கையும் பொதுவெளியில் பயன்படுத்திக் கொண்டு வருகிறது.
மேலும், “குவிந்து வேலை செய்வது” “அதற்காக மக்கள் பிரச்சனைகளில் தலையிடுவது” “செயல்தந்திரம் என்பதெல்லாம் புரட்சியின்போது, மேலே அதிகாரத்தைக் கைப்பற்றும்போது வைக்கப்படுபவை, முதலில் கீழே மக்கள் அதிகார மையங்களை உருவாக்க வேண்டும்” “உள்ளூர் அளவில் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் இவைதான் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவம் என்றும் பிதற்றி திரிகிறது.
இந்த இருவர் கும்பல் என்பது அரசியலற்ற, சித்தாந்தமற்ற, அமைப்புமுறையற்ற, பண்பாடற்ற லும்பன் கும்பலாக இருப்பதால், இந்தக் கும்பல் தலைமையிலான கமிட்டியைக் கலைத்துவிட்டு, தற்காலிக அமைப்புக் கமிட்டியின் தலைமையில் எமது அமைப்பின் 11-வது பிளீனம் நடைபெற்றது.
எமது கட்சியில் தோன்றியக் கலைப்புவாதக் கும்பல்களின் சீர்குலைவு, சதி வேலைகளுக்கு எதிராக விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும் போராடி, நக்சல்பாரி பாரம்பரியத்தையும் மார்க்சிய – லெனினியத்தின் அடிப்படைகளையும் பாதுகாக்கும் புரட்சிகரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே தனது இன்னுயிரை ஈந்த முன்னாள் செயலர் தோழர் அன்பழகன் அரங்கத்தில், மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா.லெ), தமிழ்நாடு என்கிற எமது அமைப்பின் 11-வது பிளீனம் 2022 அக்டோபர் 15-16 தேதிகளில் வெற்றிகரமாக நடந்தேறியது. 11-வது பிளீனத்தின் முடிவுகளை கீழே சுருக்கமாக தருகிறோம்.
- போர்த்தந்திர, செயல்தந்திரத்தை மையப்படுத்திய புரட்சிகரமான அரசியல்–அமைப்பு வழியை, நமது கட்சியின் 10-வது பிளீனத்தில் வலது திசைவிலகல் வழி என்று முடிவெடுத்தது தவறு என்று 11-வது பிளீனம் ஒரு மனதாக முடிவெடுக்கிறது. கட்சி பிளவுபட்டுள்ள சூழலில் வைக்கப்பட்ட இருவர் கும்பல் தலைமையிலான அறிக்கையின் மீது சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், 11-வது பிளீனம் புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டத்தில் 10-வது பிளீனம் புரிந்துக்கொள்ளவில்லை. எனினும், கட்சி ஐக்கியத்துக்காகச் சிந்தித்து அவ்வறிக்கையை 10-வது பிளீனம் ஏற்றுக் கொண்டது. அது தவறு என்று 11-வது பிளீனம் சுயவிமர்சனம் ஏற்கிறது. வலது திசைவிலகல் எனும் 10-வது பிளீனத்தின் முடிவையும் அதற்கு அடிப்படையாக இருந்த இருவர் கும்பல் தலைமையிலான அறிக்கையையும் இந்தப் பிளீனம் நிராகரிக்கிறது.
- 10-வது பிளீனத்தில் இருந்தே இருவர் கும்பலானது தனது கண்ணோட்டங்களை மறைத்து வைத்துக் கொண்டு, தலைமைக்கு வந்த பிறகு தனக்கான அரசியலற்ற, சித்தாந்தமற்ற கோஷ்டியை உருவாக்கி மொத்தக் கட்சியையும் கைப்பற்றிக் கொண்டு, தன்னை எதிர்ப்பவர்களை வெளியேற்றிவிடலாம் என்று திட்டம் தீட்டியதை 11-வது பிளீனம் உறுதிபடுத்தி கூறுகிறது. இதனடிப்படையில், இருவர் கும்பல் தலைமையிலான மா.அ.க கலைக்கப்பட்டு, தற்காலிக அமைப்புக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது சரியானதே என்று இப்பிளீனம் அறிவிக்கிறது. மேலும், இருவர் கும்பலை சதிகார எதிர்ப்புரட்சிக் கும்பல் என்றும், அவர்களைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதாகவும் இப்பிளீனம் அறிவிக்கிறது.
- முன்னாள் செயலர் தோழர் அன்பழகன் பற்றி கலைப்புவாதக் கும்பல்கள் செய்து வரும் அவதூறுகளை இப்பிளீனம் மறுப்பதோடு, வன்மையாக கண்டிக்கிறது. முன்னாள் செயலர் அமைப்பு நிதியை ஒப்படைக்கவில்லை என்பது போல இருவர் கும்பல் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில், 10-வது பிளீனம் முடிந்த பிறகு மா.அ.க-வின் கையிருப்பில் உள்ள மொத்த நிதியையும் முன்னாள் செயலர் ஒப்படைத்துவிட்டார். எவ்வளவு நிதியை ஒப்படைத்தார் என்பதனை உரிய விவரங்களோடு கட்சியின் அணிகளுக்கு இப்பிளீனம் அறிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
- புரட்சியை முன்னேற்றுவதற்காகவும், காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக பரந்துபட்ட மக்களை அணி திரட்ட வேண்டிய கடமைக்காவும், நமது புரட்சிகரக் கட்சியின் மார்க்சிய–லெனினிய அடிப்படையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து உயர்த்திப் பிடித்து முன்னேற்றுவதற்காகவும் கலைப்புவாதக் கும்பல்களைப் புறக்கணித்துவிட்டு, சரி-தவறுகளை அகநிலைப் பார்வையில் அல்லாமல் மனந்திறந்து விவாதிக்குமாறும், மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வருமாறும், கலைப்புவாதக் கும்பல்கள் பக்கம் சென்றுள்ள அணிகளை இப்பிளீனம் அறைக்கூவி அழைக்கிறது.
புரட்சிகர வாழ்த்துகள்!