கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் உள்ளது. 150 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கட்டிடங்களுடனும், 112 அடி உயர ஆதியோகி சிலையுடனும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ஆசிரமம் பல்வேறு சுற்றுச்சூழல் விதி மீறல்களுடன் கட்டப்பட்டுள்ளதாக பல ஆண்டுகளாக பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
அந்த ஆசிரமம் அடர்த்தியான வனத்திற்கு நடுவில், காற்றாறுகளுக்கும், அருவிகளுக்கும் மத்தியில், ஏராளமான காட்டுயிர்களைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அமைக்கப்பட்டுள்ளதா ஈஷா இணையதளமே கூறுகிறது.
2017ம் ஆண்டு மோடி திறந்துவைத்த ஆதியோகி சிலை வளாகம் நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியை ஆக்ரமித்து, விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது மற்றுமன்றி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு 2006ன் கீழ் இது போன்ற கட்டிடங்களைக் கட்டுவதற்கு முன்பு வாங்க வேண்டிய ஒப்புதல்கள் எதையும் வாங்கவில்லை எனக் கூறி கடந்த ஜனவரி மாதத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பு 2006 ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்டது என்பதால் இந்த வழக்கில் ஒன்றிய அரசின் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜரானார்.
காட்டை அழித்து, யானை வழித்தடத்தில் ஜக்கி கட்டிடம் கட்டியதும், சிலை அமைத்ததும் தவறில்லை, ஈஷா அறக்கட்டளை கல்வி வழங்கும் நிறுவனமாக இருப்பதால் அவர்கள் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஜக்கி வாசுதேவ் தற்போது கட்டியிருக்கும் கட்டிடங்களுக்கு மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் அந்தப் பகுதியை முழுவதுமாக ஆக்ரமித்துக் கட்டிடங்கள் கட்டினாலும் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்திலும், மத்தியபிரதேசத்திலும் காவி பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் இஸ்லாமியர்களின் வீடுகளை அனுமதியின்றி கட்டப்பட்டவை எனக் கூறி இடித்துத் தள்ளும் காவிக் கும்பல், இயற்கையை அழித்து ஆசிரமம் அமைத்துள்ள ஜக்கிக்கு, காவி பாசிசத்தின் பங்காளியாக உள்ள ஒரே காரணத்துக்காக வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குகிறது.
தகவல் உதவி : லைவ் லா, தி வயர்.