ராஜ ராஜ சோழன் – சனாதனத்திற்கு சேவை செய்த பார்ப்பனிய அடிமை!

அவனது ஆட்சியில்தான் பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜ ராஜ சோழன் குறித்த விவாதம் தமிழக காட்சி மற்றும் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த தின விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ராஜ ராஜ சோழனை இந்துவாக சித்தரிக்கிறார்கள் எனக் கூறிவிட உடனே அவருக்கெதிராக சங்கி கும்பல் களமிறங்கியது.

தமிழிசை, எச்.ராஜா முதல் கஞ்சா கருப்பு வரை ராஜ ராஜ சோழன் இந்து மன்னன்தான் என்பதை நிலைநாட்ட பல்வேறு வாதங்களை அடுக்கினார்கள். இறுதியில் இது அந்நிய சதி, வெற்றிமாறன் என்பது அவரது பெயரல்ல உண்மையில் அவர் பெயர் ‘ஜோசப்’ வெற்றிமாறன் என்று கூறும் அளவிற்கு இறங்கினார்கள்.

மற்றொருபுறம் நடிகர் கமலஹாசன் தொடங்கி, சீமான், திராவிடர் கழக தலைவர் வீரமணி வரை வெற்றிமாறனுக்கு ஆதரவாக ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் அல்ல எனக் கூறி அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த விவாதங்களில் காவிக்கும்பலுக்கு பதிலளிக்கும் பலரும் ராஜ ராஜ சோழனை இந்துத்துவ கருத்தியலுக்கு எதிரானவனாக முன்நிறுத்துகின்றனர். இது அடிப்படையில் தவறான கண்ணோட்டமாகும். ராஜ ராஜ சோழன் உண்மையில் ஒரு பார்ப்பன அடிமை.

ராஜ ராஜன் சோழன்தான் தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.

அவனது ஆட்சியில்தான் பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.  250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது  தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

“கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியை ராஜ ராஜன் பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான்.

பார்ப்பனர்களை இவ்வளவு உயர்வாக நடத்திய இதே ராஜ ராஜ சோழன் இதர சாதியினரை பார்ப்பனியத்தின் அடியாளாக நின்று அடக்கி ஒடுக்கினான். 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றியதுடன், இவர்களைக் கொண்டு தஞ்சையில் தளிச்சேரியை உருவாக்கினான். ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் உருவாக்கியது மட்டுமன்றி ஒவ்வொரு சாதிக்கும் தனிச் சுடுகாடு என உருவாக்கியதும் ராஜ ராஜன் ஆட்சியில்தான் நடந்தது. பார்ப்பனர்களுக்கு கிராமங்களை மானியமாக வழங்கியது மட்டுமில்லாமல் பார்ப்பனர்கள் நிலம் வைத்திருந்த கிராமங்களில் மற்ற சாதியினர் நிலவுடமையாளர்களாக இருக்க கூடாது என சட்டம் போட்டு அவர்களை பார்ப்பனர்களின் கூலி அடிமைகளாக மாற்றினான்,

இத்தகைய ராஜ ராஜ சோழனை பார்ப்பனிய எதிர்ப்பாளனாக காட்ட முயற்சிப்பது அவனை வைத்து மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பார்ப்பனியத்துக்கு உதவி செய்வதில் தான் போய் முடியுமே அன்றி வேறு எதற்கும் உதவாது.

  • அறிவு.

 

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. ஐயா

    ஆதாரங்கள் கொடுங்கள்

    மன்னர்மன்னன் போன்றவர்கள் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் இவைகளை கொண்டு ராசராசன் ஒரு பார்ப்பன எதிரி என நிறுவ முயல்கிறார்கள்

    அவர்களின் வாதம் :
    1. பல்லவர் காலத்தில் இருந்து பார்ப்பனர்கள் அரசில் அதிகாரம் செலுத்தினர். சோழர் ஆரம்பிக்கவில்லை

    2. எல்லா சாதியினருக்கும் நிலங்கள் வழங்கினர்

    3. தேவரடியார்கள் சூடுபோட்டோ கட்டாயமாகவோ கோயில் பணியில் ஈடுபடவோ அவர்கள் பாலியில் தொழிலில் ஈடுபடவோ ஆதாரமில்லை என்கின்றனர்

    உங்கள் மேலுள்ள கட்டுரை செய்திகளுக்கு ஆதாரங்கள், புத்தகங்கள், செப்பேடுகள் முதலான விவரங்கள் தாருங்கள்