மின் கட்டண உயர்வால் விசைத்தறிக் கூடங்கள் இன்று நிசப்தம் ஆகி வருகின்றது! மனிதர்களின் மானங்காக்கும் ஆடைத் தொழில் இன்று கிழிந்து தொங்குகிறது!

“விசைத்தறித் தொழில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் நலுனுக்காக ஒட்டுக்கட்சிகளால் பலி கொடுக்கப்படுகிறது. நெய்த துணிக்கான கூலியை முதலாளிகளே நிர்ணயிக்கிற அவலநிலை இங்கும் தொடர்கிறது. இதுவரையில் ஆட்சியாளர்களை நம்பி பயணித்தது போதும்.”

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக உயர்ந்துள்ள மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி செப்-16/2022 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை துணியாக நெய்து கொடுத்து அதற்கான கூலியை பெற்று வந்தனர் விசைத்தறி உரிமையாளர்கள். தற்போதைய மின் கட்டண உயர்வு விசைத்தறி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக விசைத்தறித் தொழிலை சார்ந்த சைசிங் நூற்பாலைகள், ஒ.இ மில்கள், பீஸ் செக்கிங், அயனிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர் மாவட்ட்த்தில் 2.5 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடா இல்லாத தறிகளும் உள்ளன.தினசரி 100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களில் விசைத்தறி தொழில்தான் மக்களின் வாழ்வாரமாக இருந்து வருகிறது. இந்த உற்பத்தியை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

நூலில் தரமிக்க,   நேர்த்தியான வெண்மை அல்லது சாம்பல் வண்ணத் துணியாக நெய்வது சோமனூர் பகுதியின் ரகம். அந்த நூலில் வரும் கழிவை எடுத்து, மீண்டும் நூலாக்கி நெய்வது பல்லடம் பகுதியின் ரகம். ரகத்திற்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு வருகிறது. விசைத்தறி உரிமையாளர்கள் அந்தக் கூலியில் இருந்துதான் உதிரிபாகம் வாங்குவது, தறியை பழுது பார்ப்பது, நாடிங் செலவு, மின்கட்டணம் செலுத்துவது, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை செய்கின்றனர். மிச்சமாகும் வருமானத்தைக் கொண்டுதான் வாழ்க்கையை ஒட்ட வேண்டிய அவல நிலை.

60% நாட்டின் துணித் தேவையை விசைத்தறி உற்பத்தியே பூர்த்தி செய்கின்றது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில்தான் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என்பது நாம் அறிந்ததே!

இங்குள்ள விசைத்தறி காடா துணி ரகங்களை வாங்கி வட மாநில வியாபாரிகள் சாயமேற்றி மதிப்புக் கூட்டி சர்ட், பெண்கள் உள்ளாடைகள், பாவாடை உள்ளிட்ட துணி ரகங்களை தயாரித்து விற்பனை செய்வார்கள்.

இந்த நிலையில் பஞ்சு விலை அதிகரிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் துணி விலை உயர்ந்துள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தீபாவளிக்கான ஆர்டர் இன்னும் சரியாக வரப்பெறவில்லை என் வர்த்தகம் செய்வோர் தவிக்கின்றனர். இதனால் பல்லடம் பகுதியில் மட்டும் ரூ.500/- கோடி மதிப்பிலான விசைத்தறி துணிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு வட மாநில மொத்த கொள்முதல் வர்த்தகர்கள் 100 நாட்களுக்கு முன்பே துணி ஆர்டர் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் இதுவரை துணி ஆர்டர் எதுவும் வரவில்லை. 20க்கு 20 ரகம் 50 இஞ்ச் காடா துணி ஒரு மீட்டர் அசல் விலை ரூ.46/- ஆகிறது. ஆனால், வியாபரிகள் ரூ.42/-க்குத்தான் கேட்கின்றனர். இது மிகப்பெரிய இழப்பு.

இதற்கிடையில் மின்கட்டணம் 30% லிருந்து 45% வரை உயர்ந்து விசைத்தறி உரிமையாளர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. மின் மிகை பயன்பாட்டு நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக உயர்ந்துள்ளது.   10 நாடா இல்லா விசைத்தறிக் கூடத்திற்கு 4 இலட்சத்திலிருந்து, தற்சமயம் 5 லட்சமாக மின்கட்டணம் உயர்ந்துள்ளது.

 

 

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெசவாலைகள் நிறைந்து காணப்படுவதாலேயே கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நெசவாலைகளில் 50% கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வருகிறது. நெசவாலைகள் என்பது பருத்தி, சணல், கம்பளி, பட்டு மற்றும் செயற்கை இழை ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும். நமது நாடு பருத்தி உற்பத்தியில் உலகின் 3-வது இடத்திலும் தறிகள், நூற்பு கருவிகளின் எண்ணிக்கையில் முதன்மையான நாடாகவும் உள்ளது. இப்படிப்பட்ட வளமான தொழிலைத்தான் காவி-கார்ப்பரேட் மோடி அரசு நலிவடைய செய்திருக்கிறது

இந்திய பருத்திக் கழகம் பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால், பஞ்சு விற்பனைக்கு தொடர்பில்லாத நிறுவனங்களில் லட்சக்கணக்கான பேல்கள் பஞ்சு இருப்பு வைக்கப்பட்டு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனெவே ஒரு கண்டியின் (356 கிலோ பஞ்சு) விலை ரூ.76,000/- ஆக இருந்த்து. கடந்த மே மாத நிலவரப்படியே 1,05,000/-மாக விலை உயர்ந்துவிட்ட்து. இந்த விலை உயர்வைக் கண்டித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் உள்ளிட்ட 36 சங்கங்கள் மே மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தின.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு, கொரோனா பெருந்தொற்று, பெட்ரோல் டீசல் உயர்வு, வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பலபேர் இத்தொழிலைக் கைவிட்டுவிட்டனர். பலபேர் வாங்கிய கடனை செலுத்த வழியின்றி சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை இழந்துள்ளனர்.

இத்தொழிலில் ஆட்கள் பற்றாக்குறைக்கான மூலக் காரணமே கூலி கொடுக்க முடியவில்லை என்பதுதான். வங்கிக் கடன் கட்ட முடியாத சூழ்நிலையில் தறியை விற்றாவது கடன் கட்டலாம் என்றால் தறிக்கு விலை இல்லை. பழைய இரும்புக் கடையில் தறியை விற்கும் அவல நிலை உள்ளது.

விசைத்தறித் தொழில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் நலுனுக்காக ஒட்டுக்கட்சிகளால் பலி கொடுக்கப்படுகிறது.நெய்த துணிக்கான கூலியை முதலாளிகளே நிர்ணயிக்கிற அவலநிலை இங்கும் தொடர்கிறது. இதுவரையில் ஆட்சியாளர்களை நம்பி பயணித்தது போதும். கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்டுள்ள பிற வர்க்கங்களுடன் இணைந்து போராடும் போதுதான் விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க முடியும் என்பது திண்ணம்!

 

 

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள்: 

1. மின் கட்டண உயர்வை நிபந்தனையின்றி வாபஸ் பெறவேண்டும்!

எல்டி மற்றும் சிடி மின் இணைப்புதாரர்கள் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்தால் அந்த மின் உற்பத்தியை மின்சாரக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளும் நடைமுறையை எச்டி மின் இணைப்பில் உள்ளவர்களுக்கு உள்ளது போல் எல்டி மற்றும் சிடி இணைப்புதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும். மின் மிகை பயன்பாட்டு நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து பழையபடி 6 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும், மின் மிகை பயன்பாட்டுக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்!

2. காட்டன் துணிகளுக்கு 5% இருந்து 12% ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

3. நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லா நூல் இறக்குமதிக்கு சலுகை அளிக்க வேண்டும்.!

4. இந்திய பருத்திக் கழகம் பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்ய வேண்டும்!

5. மெய் நிகர் வர்த்தகம் எனும் இணையதள வர்த்தகத்தில் இருந்து பஞ்சுவை நீக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் பஞ்சுவை வைக்க வேண்டும்!

6. தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பஞ்சை உள் நாட்டு தேவைக்கு ஏற்ப மானிய விலையில் விற்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழித்து, துணி பைகள் பயன்பாட்டை கொண்டு வந்து விசைத்தறி தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.

7. பள்ளி, கல்லூரி, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட சீருடைகளுக்கு விசைத்தறி துணி ரகங்களை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கிற சட்டப்படியான எந்த சலுகையும் விசைத்தறி தொழிலாள்ர்களுக்கு இல்லை. கொத்தடிமையாக இருக்கின்றனர். இதையும் நெறிப்படுத்த வேண்டும்.

9. மூன்று வருடத்துக்கு ஒருமுறை மீட்டருக்கான கூலி உயர்த்தப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு கூலி உயர்வு ஒப்பந்தம் கூட இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை ஆதரிப்போம்!

மத்திய, மாநில அரசுகள் அமுல்படுத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளே விசைத்தறி தொழிலை ஒழிப்பதற்கு காரணமான பேராபத்துக்கள்! இந்த அபாயத்தை வீழ்த்த ஒன்றுபடுவோம்!

 

-மலர்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன