இஸ்லாமிய அமைப்புகள் மீது நாடு முழுவதும் தொடுக்கப்படும் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்

 

 

ஒன்றிய பாஜக அரசின் என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை), இஸ்லாமிய அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளின் அலுவலகங்கள் மீது ரெய்டு நடத்திக்கொண்டும் மற்றும் அதன் தலைவர்களை கைது செய்துகொண்டும் உள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம்.

(22-09-2022) அன்று நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ, பி பி ஐ அலுவலகங்களில் என்ஐஏவால் ரெய்டு நடத்தப்பட்டு அதன் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாடு முழுவதும் இந்து மதவெறியை உண்டாக்கி குண்டு வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டு கலவரங்களை செய்து தண்டிக்கப்படாமல் இன்று அரசின் தலைமை பொறுப்புகளில் வீற்றிருக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் கும்பல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற பின்னர் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று செயல்பட்டுவருகின்றனர். ஓடுறான் புடி என்று திருடனே நாடகம் ஆடுவதை போல் இவர்கள் நடிக்கிறார்கள்.

இந்து மதவெறிக்கு எதிர் நடவடிக்கையாக இஸ்லாமிய பயங்கரவாதமும், தவறான முறையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பொது மனநிலையை காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கியிருப்பதும் இந்த இஸ்லாமிய அமைப்புகள் மீது என்ஐஏ தாக்குதல் தொடுப்பதை அவர்கள் நியாயப்படுத்த தோதாக உள்ளது.

ஆர்எஸ்எஸ் கும்பல் மசூதிகளை இடிப்பதற்கும் என்ஐஏ இஸ்லாமிய அமைப்பு நிறுவனங்களில் தாக்குதல் தொடுப்பதும் நோக்கம் ஒன்றுதான். அரசியல் எதிரிகளை பழிவாங்கி காவி பாசிசத்தை நிலைநிறுத்துவதுதான்.

இன்று இஸ்லாமிய அமைப்பு நிறுவனங்கள், நாளை புரட்சிகர மற்றும் முற்போக்கு, பகுத்தறிவு பரப்புரை செய்யும் அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது என்ஐஏ வின் ரெய்டுகள், கைதுகள் தொடரும்.

என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை சட்டபூர்வமாக பயன்படுத்தியே இந்த பாசிசம் அரங்கேறுகிறது. மக்கள் மீது அடக்குமுறை செய்யும், ஊழல் புறையோடிபோயிருக்கும் இந்த அரசு நிறுவனங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் கைப்பற்ற தோதான கருவிகளாகவே உள்ளது. ஆகவே, இந்த அரசு நிறுவனங்கள் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பது பகற்கனவு. இதையும் தாண்டி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை பரந்துபட்ட மக்கள் பிரிவினரிடையே கட்டியமைத்து இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். உடனடியாக களத்தில் இறங்கி போராடவேண்டும்.

தோழமையுடன்
முத்துக்குமார்,
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
97901 38614


Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன