இரஞ்சித் கம்யூனிச விரோதி மட்டுமல்ல அம்பேத்கருக்கும் துரோகி
பா.இரஞ்சித் கம்யூனிச விரோத சிந்தனை கொண்டவர் என்பது ஒருபுறமிருக்கட்டும். அவர் உண்மையில் அம்பேத்கருக்கும் கூட நேர்மையானவர் அல்ல. தன் அடையாள அரசியலுக்கு அம்பேத்கரை ஒரு ஊறுகாயாகத் தொட்டுக் கொள்கிறார் அவ்வளவுதான். ஒரு ‘புரட்சிப் பெண்ணாக’ ‘அம்பேத்கரைட்’ஆகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ரெனே-வின் கதாப்பாத்திரம், புத்தர் சிலைகள், படங்களை வைத்திருப்பவளாக, மாட்டுக்கறி உண்பவளாக, நிறைய புத்தகங்கள் படிப்பவளாக, இளையராஜாவை ரசிப்பவளாக, ‘பாலியல் சுதந்திரம் உடைய’ பெண்ணாகக் காட்டப்படுகிறது. ‘அனல் பறக்கும் விவாதங்களில்’ ரெனே தலித்திய அடையாள அரசியல்வாதிகளின் புளித்துப்போன வாதங்களை முன்வைத்துப் பேசுகிறார். இவ்வளவுதான் ‘அம்பேத்கரைட்’ என்பவரின் பண்புகளா? இதைச் செய்பவரெல்லாம் தன்னை அம்பேத்கரைட் என்று கூறிக் கொள்ளலாமா?
ஒரு தலைவரைப் பின் தொடர்வது (follower) என்பது – எந்தத் தலைவராயினும் சரி – அவரின் புகைப்படங்களை வழிபடுவதும், அவரின் பெயரை மேடைதோறும் முழங்குவதும் அல்ல, இந்தக் காலத்தில் அவர் இருந்திருந்தால் எதைச் செய்வாரோ அதைச் செய்வதாகும். உண்மையில் இன்று அம்பேத்கர் உயிரோடிருந்திருந்தால், தலித்துகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் எதிரியாக உள்ள பார்ப்பன பாசிசத்தைத்தான் மூர்க்கமாக எதிர்த்திருப்பார். எனவே, ஒருவரை – அம்பேத்கரிசம் என்பதை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விசயம் – அம்பேத்கரைட் என்று சொன்னால் அம்பேத்கர் விட்டுச் சென்ற ஏராளமான பணிகளில் எதையேனும் செய்பவராகவோ, அல்லது பார்ப்பன பாசிசத்தை மூர்க்கமாக எதிர்ப்பவராகவோ காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தப் பார்ப்பனியத்தை சாதியப் படிநிலையின் அடிப்படை என்று கூறித் தன் வாழ்நாளெல்லாம் அம்பேத்கர் எதிர்த்து வந்தாரோ, அந்தப் பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் விதத்தில் ஒரு வசனத்தை நைச்சியமாக சொருகியுள்ளார் இரஞ்சித். படத்தில் காதல் தொடர்பான விவாதம் ஆணவப் படுகொலைகள் தொடர்பாக நகரும்போது, ஒரு கதாப்பாத்திரம் “எல்லவாற்றுக்கும் காரணம் இந்த பிராமணிய சித்தாந்தம் தான். அதை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்.” என்று கூறுகிறது. அதற்கு பதிலளிக்கும் டயான என்ற கதாப்பாத்திரம் “பிராமின் தான் எல்லாருக்கும் பிரச்சனையா. இடையில் [இடைநிலை சாதிகள்] இருப்பவன்தான் என்னைக் கத்தியெடுத்து வெட்டுகிறான்” என்று அந்த வாதத்தை மறுக்கிறது.
‘பிராமனியம்’ என்றாலே ‘பிராமின்கள்’ என்ற நபர்களைக் குறிப்பது என்றும், பிராமனர்கள் நமக்கு எதிரிகளல்ல அவர்கள் சாதுவானவர்கள், இடைநிலை சாதிகள்தான் நமக்கு எதிரிகள் என்றும் இந்த வசனம் நைச்சியமாகக் கூறுவதைக் கவனிக்கவும். ‘புரட்சியாளரும்’, ‘அம்பேத்கரைட்டும்’, அம்பேத்கரின் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடிப்பவருமான ரெனே, இனியனை எதிர்த்து சீறியதுபோல அம்பேத்கரின் கருத்துக்கு நேரெதிரான இந்த வாதத்தை மறுத்து சீறியெழவில்லை. மேற்பார்வைக்குத் தற்செயலானது போலத் தோன்றும் இவ்வசனம் திட்டமிட்டு வைக்கப்பட்டதாகும். தலித்துகள் மீதான சாதியப் படுகொலைக்கு பார்ப்பனியம் (அ) பார்ப்பனர்கள் காரணமில்லை இடைநிலை சாதிகள்தான் காரணமென்பது பார்ப்பன பாசிசக் கும்பலின் வாதமாகும். இதைத்தைத்தான் தலித்திய அடையாள அரசியல் பேசுபவர்களும் காலங்காலமாகப் பேசிவருகிறார்கள். இதுதான் இரஞ்சித்தின் கருத்தும். ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் இருக்கும் சூழலில் நேரடியாக ரெனேவின் மூலம் இக்கருத்தை வைத்தால் தான் அம்பலப்பட்டுவிடுவேன் என்ற அச்சத்தில்தான் டயானா மூலம் நைச்சியமாக இக்கருத்தைக் கடத்தியுள்ளார் இரஞ்சித். இது அம்பேத்கருக்குச் செய்யும் துரோகமில்லையா?
தன்னை ஒரு பார்ப்பனராகக் கருதி வாழ்ந்து வருகிற, தன்னை தலித் என்று அழைத்தபோது அந்த மேடையிலேயே அதை மறுத்த இளையராஜாவை பல இடங்களில் ‘தலித்’ ஆக அடையாளப்படுத்தி செயற்கையாக இப்படம் புகழ்ந்துள்ளதோடு, “தலித் என்பதாலேயே அவரை மற்றவர்கள் விரும்புவதில்லை” என்றும் துளியும் உண்மையற்ற ஒன்றைக் காட்சிப்படுத்தியுள்ளது. இன்னும் ஒருபடி மேலே போய், “ஒன்றுமில்லாத இடத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய ஆளாக மாறிய இளையராஜாவை, எம்பவர்மெண்டாக, முன்னுதாரணமாகப் [தலித்துகள்] பார்க்க வேண்டும்” என்றும் இப்படம் போதிக்கிறது.
“இந்துராஷ்டிரம் அமைந்தால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பேரழிவாக அமையும். எந்த விலை கொடுத்தாவது அது தடுக்கப்பட வேண்டும்.” என்று எழுதினார் அம்பேத்கர்.[i] அவருடன் இந்துராஷ்டிரத்தை அமைக்கத் துடிக்கும் பாசிச மோடியை ஒப்பிட்டு “அம்பேத்கர் இன்று இருந்திருந்தால் மோடியைப் புகழ்ந்திருப்பார்” என்று ஒரு நூலுக்கு முன்னுரை எழுதினார் இளையராஜா. வார்த்தைக்கு வார்த்தை அம்பேத்கர், ஜெய்பீம் என்று முழங்கும் இரஞ்சித்தோ நீலம் பண்பாட்டு மையமோ இதைக் கண்டிக்கவில்லை. அந்த துரோகத்துக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட எம்.பி. பதவியையும் கண்டிக்கவில்லை. மாறாக, இந்நிகழ்வுகளுக்குப் பிறகு வெளிவரும் இப்படத்தில், திட்டமிட்டு இளையராஜா புகழ்ந்து தள்ளப்படுகிறார். ஆனந்த விகடனுக்குக் கொடுத்த பேட்டியில் “இளையராஜா இல்லையெனில் தான் இங்கு வந்திருக்கவே முடியாது” என்கிறார் பா.இரஞ்சித். இளையராஜா பார்ப்பனியத்தை ஆதரித்ததெல்லாம் ஒன்றும் பொருட்படுத்த வேண்டியதில்லை, அவரை ஒரு ‘முன்னுதாரனமாக’, ‘எம்பவர்மெண்டாக’ தலித்துகள் பார்கக் வேண்டும் என்ற விதமாக “இவரிடம் எதிர்பார்ப்பதை [பார்ப்பனிய எதிர்ப்பை] ஏன் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதில்லை” என்ற வசனத்தை ரெனே பேசுகிறாள். இவையெல்லாம் அம்பேத்கருக்குச் செய்யும் துரோகமில்லையா.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தமிழர் என்பதால் தமிழர்கள் தன்னுடன் அவரை அடையாளப்படுத்திக் கொண்டு பெருமிதம் கொள்ள முடியுமா? அப்துல்கலாம் இசுலாமியர் என்பதால் இசுலாமியர்கள் அவரைத் தங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்ட் பெருமிதம் கொள்ள முடியுமா? திரவுபதி முர்மு பழங்குடியை சேர்ந்தவர் என்பதால் பழங்குடிகள்தான் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா? அடையாள அரசியல் இதைத்தான் போதிக்கிறது. வர்க்க ரீதியான பரிசீலினையைக் கைவிட்டு, ஒருவர் எந்த வர்க்கத்துக்குச் சேவை செய்கிறார் என்ற பரிசீலனையைக் கைவிட்டு, சாதி, மதம், இனமாக ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதையும் பெருமைப்பட்டுக் கொள்வதையும் அடையாள அரசியல் கற்பிக்கிறது.
இதுமிகையல்ல. “கச்சநத்தம் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை விவசாய வேளாண்குடிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர்” என்று அதைப் புகழ்ந்து கிருஷ்ணசாமி தொணியில் ஒரு மேடையில் இரஞ்சித் பேசியுள்ளார்.[ii] இது தலித் மக்களிடம் ஒருவகை சாதிப் பெருமிதத்தை வளர்ப்பதுதான்.
சாதிய ஆணவப் படுகொலை, தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல், பெண்களின் பாலியல் சுதந்திரம் இவற்றையெல்லாம் பேசியுள்ள இத்திரைப்படம் முற்போக்கானது இல்லையா?
“பெத்தவன்” என்ற ஒரு சிறுகதையில் இமையம், தன் சொந்த மகளையே ஆணவப் படுகொலை செய்ய தந்தையை ஊர் நிர்ப்பந்திப்பதையும் அதன் வலியையும் மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருப்பார். இதேபோல பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற திரைப்படங்களில் சாதிய ஒடுக்குமுறையைக் காட்சிப்படுத்தியுள்ள விதம் அந்த வலியை பார்ப்பவருக்குக் கடத்தும் வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் இப்படத்தில் “என் ஜனமே” என்ற பாடலில் வரும் சில உண்மைக் காட்சிகளைத் தவிர, நாடகக் குழு போடும் நாடகமோ, ரெனே தன் கடந்த காலத்தைக் கூறும் காட்சிகளோ மிகவும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இவை மேற்படி படங்கள் கடத்திய அளவுக்குக் கூட சாதிய ஒடுக்குமுறை, ஆணவப் படுகொலைகளின் அவலத்தை, வலியை இப்படம் பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை என்பதே உண்மை.
அதேபோல தொடக்கத்தில் சாதிய சிந்தனை உள்ளவனாகவும் இந்த நாடகக் குழுவினருடன் ஏற்பட்ட பழக்கத்திற்குப் பின் திருந்தி சாதியை எதிர்ப்பவனாகவும் மாறும் அர்ஜீன், சொந்த சாதிக்குள் திருமணம் செய்து வைக்கத் துடிக்கும் தன் குடும்பத்தை எதிர்த்து உறுதியாகப் போராடாமல் இறுதியில் சமரசம் செய்துகொள்கிறான். குறைந்தபட்சம் இந்தப் போராட்டத்தில் இவ்வாறு சமரசம் செய்துகொள்ளாமல், சாதிவெறி பிடித்த தன் குடும்பத்தை உதறித் தள்ளிவிட்டு வெளியே வருமாறு கூட காட்சி அமைக்கப்படவில்லை. எனவே இத்திரைப்படம் சாதியக் கட்டமைப்பைக் கேள்வி கேட்பதாகவோ, அதற்கெதிரான விவாதத்தைத் தூண்டும் விதமாகவோ, குறைந்தபட்சம் அதற்கெதிரான ஆத்திரத்தைக் கிளப்பும் படமாகவோ இல்லை.
மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதி (crowd funding) மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து எடுக்கப்படும் “அம்பேத்கர் அன்றும் இன்றும்” என்ற ஆவணப்படத்தை இயக்கி வருபவரான ஜோதி நிஷா, தி நியூஸ் மினிட் இணைய தளத்தில் இத்திரைப்படத்துக்குப் பொழிப்புரை எழுதியுள்ளார்.[iii] “வழக்கமாக கதையின் நாயகிகளை பணிவான பெண்களாகக் காட்டும் சினிமாவின் கலாச்சாரத்தை இரஞ்சித் மாற்றியமைத்துள்ளார்” என்றும் ‘இளம் அம்பேத்கரைட்டாக, வலிமையான, தன்னம்பிக்கையுடைய, அரசியல் பார்வையுடைய பெண்ணாக ரெனேவைக் காட்சிப்படுத்தியுள்ளார்’ என்றும் அவர் கொண்டாடுகிறார். உண்மைதான். ரெனேவை இவ்வளவு வலிமையாகக் காட்ட மற்ற பாத்திரங்கள் பலவீனமக வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்த போதும், ஒரு உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தலித் பெண்ணாகக் காட்டப்படுகிறாள் ரெனே, பல்வேறு சாதியக் கொடுமைகளால் தான் ‘உடைந்து நொறுங்கிய போதெல்லாம் தன்னைத் தானே ஒட்ட வைத்துக் கொண்டு உறுதியடைந்ததாக’ தன் கடந்த காலத்தை விவரிக்கும் ஒரு காட்சியில் கூறுகிறாள். ‘என்னை வலிமையாகவும் தைரியமாகவும் காட்டிக்கொள்ளவே விரும்புகிறேன். இதுதான் என் சமூக அடையாளம்’ என்று பெருமிதத்துடன் கூறுகிறாள். “ரெனேவின் சமூக அடையாளத்தை வலியுறுத்துவதன் மூலம் இந்த ஒரே காட்சியில் தலித்துகளை, குறிப்பாக தலித் பெண்களைப் பற்றி சமூக மனநிலைகள் எரிந்து சாம்பலாகின்றன”[iv] என்கிறார் ஜோதி நிஷா. ஆஹா என்னே புரட்சி! கபாலியில் ரஜினி கோட்சூட் போடுவதையும் கால் மேல் கால் போடுவதையும் பார்த்து தலித்துகள் அகமகிழ்ந்து கொள்வதைப் போல ரெனேவைப் பார்த்தும் அகமகிழ்ந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான்! அதற்குமேல் ரெனேவின் பாத்திர வடிவமைப்பில் வேறெதுவும் இல்லை.
நிஜவாழ்வில் தன்னால் செய்ய முடியாத சாகசங்களை திரையில் கதாநாயகர்கள் செய்வதைப் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன், தன்னை அந்த நாயகனோடு பொருத்தி மகிழ்ச்சியடந்து கொள்கிறான். அதற்கும் இதற்கும் வேறுபாடென்ன. பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக கே.பாலச்சந்தர் படங்களில் வலம் வரும் சுகாசினி, ரேவதி போலத்தான் ‘அம்பேத்கர் கண்ட புதுமைப் பெண்ணாக’ இத்திரைப்படத்தில் ரெனேவும் வலம் வருகிறார். இதை பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை.
மேலும் ஜோதி நிஷா தன் கட்டுரையில் “சாதியப் பெருமிதமும் கெளரவமும் பெண்களின் உடலில் தங்கியிருக்கிறது. … பெண்கள்தான் சாதியக் கட்டமைப்பின் நுழைவுவாயிலாக இருப்பதாக அம்பேத்கர் கூறியுள்ளார். [எனவே] அவர்களின் பாலியல் [தேர்வு] மீதான அவர்களின் தன்னுரிமை (autonomy over their sexuality) சாதியையும் தீண்டாமையையும் அழித்தொழிக்கும்” என்கிறார்.[v] தன் உடல் மீதும் தனது துணையைத் தேர்ந்தெடுக்கவும் தன்னுரிமை கொண்ட ஒரு பெண்னாக, ரெனே காட்சிப்படுத்தப்பட்டுள்ளாதாக ஜோதி நிஷா கொண்டாடுகிறார். சுருக்கமாக, தன் கருப்பையில் யாருடைய கருவைச் சுமக்க வேண்டும் என்பதை பெண்களே சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும், அது சாதியையும் தீண்டாமையையும் அழித்தொழிக்கும் என்றுதான் ஜோதி நிஷா கூறகிறார்.
நாம் எதார்த்தத்தில் ஒரு கேள்வியை எழுப்புவோம். அடிப்படையிலேயே பெண்களுக்கு விரோதமான இந்தப் பார்ப்பனியம் கோலோச்சும் இந்த ஜனநாயக விரோத சமூக அமைப்பில், படித்த உயர் நடுத்தர வர்க்க தலித் (பொதுவில்) பெண்கள் வேண்டுமானால் ரெனேவைப் போல தன் உடல்மீதான பாலியல் தன்னுரிமையைப் பெறுவது ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால், சாதாரண உழைக்கும் வர்க்கப் பெண்களால் தன் உடல் மீதான தன்னுரிமையையும் தனது துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையையும் பெற முடியுமா? குறைந்தபட்சம் அவ்வாறு சிந்திக்கவாவது முடியுமா? அப்படி அந்த உரிமையை அவர்கள் பெற வேண்டும் என்றாலே ஜனநாயகப் பூர்வமான ஒரு சமுதாயம் முன் நிபந்தனையாக இருக்கிறது. அந்த ஜனநாயக சமுதாயத்தை அமைக்கவே சாதி உள்ளிட்ட எல்லாப் பிற்போக்குத் தளைகளுக்கும் எதிரான ஒரு ஜனநாயகப் புரட்சி முன் நிபந்தனையாக இருக்கிறது. தலித்துகள் தங்களை தலித்துகளாகப் பெருமிதத்துடன் உணர்வதாலோ, அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதாலோ மொத்த சமூகமும் ஜனநாயகப் பூர்வமாக மாறிவிடப் போவதில்லை. தலித்துகள் மீதான சமூக மனநிலை எரிந்து சாம்பலாகிவிடப்போவதில்லை. அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதையும் பெருமைப்பட்டுக் கொள்வதையும்தான் இத்திரைப்படமும் ரெனே பாத்திரமும் கற்பிக்கிறது. அது எதிர் முனையில் சாதிய சக்திகள் வளரவே வழிவகுக்கும். மாறாக, எல்லாவிதமான பிற்போக்குத் தளைகளையும் எதிர்த்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றினைந்து ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்தும் போக்கில்தான் சாதியும் ஒழிக்கப்படும்.
ரெனேவை சுதந்திரமான பெண்ணாகக் காட்சிப் படுத்தியன் மூலமே எல்லாப் பெண்களும் தன்னை சுதந்திரமாக உணர்ந்துவிடப்போவதில்லை. “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியாது” என்று வர்க்கப் போராட்டத்தைக் கேவலப்படுத்தும் இவர்கள், சமூக அமைப்பை மாற்றாமல் “பெண்கள் தாமாக சுதந்திரமாக உணர வேண்டும்” என்ற ‘பெண்ணியவாதிகளின்’ புளித்துப்போன வாதத்தைத்தான் புரட்சிகராமனதைப்போல முன்வைக்கிறார்கள். வர்க்கப் போராட்டமின்றி பெண்களின் உடல் மீதான பாலியல் தன்னுரிமை பெறுவது, பெண் சுதந்திரம் இவையெல்லாம் கற்பனையில் மட்டும்தான் சாத்தியம்.
ஆனால், எந்தப் போராட்டமும் கூடாது, போராட்டம் தலித்துகளை முன்னிறுத்தி காவு வாங்குகிறது, நிலவுகிற சமூகக் கட்டமைப்பிலேயே அரசு அதிகாரத்துக்குச் செல்ல வேண்டும், அதற்காகக் கல்வி பயில வேண்டும் – என்றெல்லாம் உபதேசம் செய்துவருகிற தலித்திய அடையாள அரசியல்வாதிகளுக்கும் ஜனநாயகப் புரட்சிக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை.
**********
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வரும் இச்சுழலில் உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாகத் திரண்டுவிடக் கூடாது என்பதில் ஏகாதிபத்தியங்களும் பிற்போக்குச் சக்திகளும் தெளிவாக இருக்கின்றன. மக்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மறுகாலனியக் கொள்கைகளும் நிலவும் சமூக அமைப்பும்தான் காரணமாயிருக்கிறது. ஆனால், அவர்களின் பார்வையை அதிலிருந்து திசைதிருப்பி ஒரு குறிப்பிட்ட சாதி, மதம், இனம், பாலினம் தான் தங்களுக்குப் பிரச்சனை, எதிரி என்று பார்க்க வைப்பதன் மூலமும், தன் சொந்த இனம், சாதி, மதம், பாலினத்தின் மீது பெருமிதம் கொள்ள வைப்பதன் மூலமும் வர்க்கப் பரிசீலனையைக் கைவிட வைப்பதையே அடையாள அரசியல் செய்கிறது. இதற்காக வர்க்கப் போராட்டம், கம்யூனிசம், சோசலிசம் ஆகியவற்றைக் கேவலப்படுத்தி மட்டம் தட்டி, மதிப்பிழக்கச் செய்கிறது. அதுதான் இத்திரைப்படத்திலும் இரஞ்சித்தின் சிந்தனையிலும் இழையோடி நிற்கிறது.
கம்யூனிஸ்டுகளின் மீது இவ்வளவு வெறியைக் கக்குகிற இரஞ்சித், நாள் தோறும் மக்கள் மீது தொடுக்கப்படும் காவி – காப்பரேட் பாசிசத் தாக்குதல்களை எதிர்ப்பதில்லை. ஏன் தலித்துகள் பல்வேறு இடங்களில் பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளால் தாக்கப்படும்போதும், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள் கைது செய்யப்படும்போதும் அவற்றையெல்லாம் எதிர்ப்பதில்லை. மாட்டுக்கறி உண்பதையும், நாடகக் காதலையும் இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ள இரஞ்சித், இசுலாமியர்கள் மாட்டுக்கறியின் பேரால், லவ் ஜிகாத்தின் அடித்தே கொல்லப்படுவதை எதிர்ப்பதில்லை. ஒரு சராசரி கமர்சியல் நடிகையான சாய்பல்லவியே, கும்பல் படுகொலைகளைக் கண்டிக்கும்போது, தம்மைப் புரட்சியாளராகக் காட்டிக் கொள்ளும் இரஞ்சித் வகையறாக்கள் இவற்றைக் கண்டிப்பதில்லை. எதிர்ப்பதில்லை. “நிலமே எங்கள் உரிமை” என்று சினிமாவில் முழங்கிவிட்டு, நிஜ வாழ்வில் உழைக்கும் மக்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும்போது குரல் கொடுப்பதில்லை.
மாறாக பார்ப்பன பாசிசக் கோமாளி ரஜினிகாந்துக்கு இரஞ்சித் பல்லக்குத் தூக்குகிறார். காலா திரைப்படம் வெளிவரவிருந்த வேளையில்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை நடந்தது. அதையொட்டி “எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டமென்று போனால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும். போராட்டக் களத்தில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டார்கள்” என்று ரஜினி தெரிவித்த கருத்தை தமிழகமே எதிர்த்த வேளையில், “நான் ரஜினியிடம் பேசினேன். அவர் போராட்டமே வேண்டாம், தவறு என்று கூறவில்லை. போராட்டத்தில் இத்தகைய அசாம்பாவிதங்கள் நடப்பது கூடாது, அது வலியைத் தருகிறது என்றுதான் [ரஜினி] கூறியதாக [என்னிடம்] கூறினார்”[vi] என்று ஓடோடிப் போய் இரஞ்சித் முட்டுக் கொடுத்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தலித் கட்சிகளெல்லாம் தனியொரு கூட்டணியாக அமைந்து தலித்து வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்று இரஞ்சித் பொங்கினார். அதை “தலித்துகளைத் தனிமைப்படுத்தும் வேலை” என்று திருமாவளவனே கண்டித்ததோடு மட்டுமன்றி, “இது ஆர்.எஸ்.எஸ்.இன் செயல் திட்டம்” என்றும் கூறினார்.[vii]
இரஞ்சித்தின் ரசிகர் பட்டாளங்களாலும், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவர்களாலும் நடத்தப்படுகிற “நீலக்குரல்” “ரஞ்சித் ஃபேன்ஸ் கிளப்” போன்ற முகநூல் பக்கங்கள், “தீண்டாமைத் தமிழ்நாடு, சனாதன திராவிட மாடல்” என்று தி.மு.க. ஆட்சியையும் வேறு வகைகளில் காங்கிரசு கட்சியையும் கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்கும் அதேவேளையில் காவி பாசிஸ்டுகளை பெரிதாக விமர்சித்து எழுதுவதோ, பேசுவதோ இல்லை.
உண்மையில் தன் இயல்பிலேயே கம்யூனிச விரோதத்தைக் கொண்டுள்ள அடையாள அரசியல் என்பது உழைக்கும் மக்களைப் பல்வேறு இனம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தி அவர்களைத் துண்டாடி, வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைத்து பாசிசத்திற்குச் சேவை செய்வதே அன்றி வேறல்ல. இந்தத் திசையில்தான் இரஞ்சித்தின் செயல்பாடுகளும் இருக்கின்றன.
இந்த சினிமா மட்டுமல்ல, பொதுவில் பின்நவீனத்துவம், அடையாள அரசியல் பேசுபவர்கள் முன்வைக்கும் நச்சுக் கருத்துக்கள் கம்யூனிஸ்டு கட்சிகளின் அணிகளை அரித்துத் திண்கிறன. இரண்டு சினிமாவை எடுத்துவிட்டு, நாலு புத்தகம் போட்டுவிட்டு ‘கம்யூனிஸ்டுகள் என்ன கிழித்திவிட்டார்கள்’ என்று இவர்கள் அகங்காரமாகக் கேட்கிறார்கள். பாதுகாப்பான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொண்டு ‘தேர்தல் புறக்கணிப்பால் என்ன கிழித்தீர்கள்’ என்று நம்மைப் பார்த்துக் கல்லெறிகிறார்கள். ‘எதுவும் சரியில்லை, யாரும் நல்லவரில்லை, எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியும் யோக்கியமில்லை’ என்ற அவநம்பிக்கையை கம்யூனிஸ்டு கட்சிகளின் அணிகளிடம் பரப்புகிறார்கள். சோசலிசம், கம்யூனிசத்தின் மீது தொடுக்கப்படும் இத்தாக்குதல்களை முறியடிக்காமல், இந்நெருப்பாற்றை நாம் எதிர்த்து நீந்தாமல், பாசிசத்தை முறியடிப்பது என்பதெல்லாம் பகற்கனவுதான்.
– ரவி
தகவல் உதவி ஆதாரங்கள்
[i] அம்பேத்கர், பாகிஸ்தான் அல்லது தேசப்பிரிவினை என்ற நூலில்
[ii] தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பள்ளர் சாதி மக்களைப் பற்றி பா.இரஞ்சித் ஒரு மேடையில் பேசியது, https://youtu.be/1PzOYCdlLB8
[iii] Natchathiram Nagargiradhu’s Rene is the Ambedkarite heroine we need today, By Jyoti Nisha, https://www.thenewsminute.com/article/natchathiram-nagargiradhu-s-rene-ambedkarite-heroine-w-need-today-167827
[iv] ஜோதி நிஷா, மேற்படி
[v] ஜோதி நிஷா, மேற்படி
[vi] Protests in Tamil Nadu: Rajinikanth Vs Pa Ranjith https://youtu.be/Q-_S5gN14HU
[vii] பா.ஜ.க.வின் தூண்டுதலால் எனக்கே பாடம் எடுக்கிறார்கள், திருமாவளவன், https://youtu.be/Qv27ALMFClo