மாநில அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள நிதிச் சுமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின்வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் , “ கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தற்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு.” என்ற காரணத்தை கூறி அதிரடியாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
இந்த புதிய மின் கட்டண உயர்வின் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.59,435 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்பதாகவும் இதன் மூலம் 2023-24ல் மின் வாரியத்துக்கான இழப்பு ரூ.748 கோடியாக குறையும் என்றும் தமிழக அரசு கூறீயுள்ளது. கடந்த 10 ஆம் தேதியிலிருந்து இம் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையும், 3ஏ2- க்கான விசைத்தறிக்கு 30 சதவீதம் வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு ஒருமுறை 6 சதவீதம் வரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ,ஜனநாயக சக்திகளும் போராடி வருகின்றனர்., விசைத்தறி தொழிலாளர்களும் கால வரையறையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியில் குவி மையமாக விளங்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன . இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணிகளை உற்பத்தி செய்யப்படுகிறது இந்த காடா துணி உற்பத்தி 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பஞ்சு நூல் விலை உயர்வு, கூலி உயர்வு என அடுத்தடுத்து தாக்குதலால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மின் கட்டண உயர்வால் ஒவ்வொரு விசைத்தறி கூடமும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் வரைக்கும் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மின் கட்டண உயர்வு விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக இருக்கிறது.
இந்த நிலையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த துடிக்கிறது பாசிச மோடி கும்பல். இச்சட்டம் அமலுக்கு வந்தால் தேசிய மின்தொகுப்பு மையம் உருவாக்கப்படும். இந்த மையமானது அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும். மின் உற்பத்தி, வினியோகம், கட்டணம் நிர்ணயம் என அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், சிறுத்தொழிலுக்கான மானியம் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் ‘’பிரிபெய்டு ரீச்சார்ச்’’ முறையில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு முன்னதாகவே பணம் கட்ட நேரிடும். காசு இருந்தால்தான் மின்சாரம் கிடைக்கும் காசு இல்லை என்றால் இருளில் தான் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விளைவித்த பொருளை ஆற்றிலும் சாலையிலும் கொட்டி தங்களின் துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் கடன் அதிகரித்து தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்கதையாக இருக்கும் இந்த நிலையில் இம்மசோதா சட்டமானால் இலவச மின்சாரம் ,சிறுதொழிலுக்கான மானியம் அனைத்தும் பறிக்கப்படும். இது விவசாயிகளின் வாழ்க்கையில் ‘’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும்’’. கூடவே விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டியடித்துவிட்டு விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க வழிவகை செய்யும் வேளாண் மசோதா அமல்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறது பாசிச மோடிகும்பல்.
இன்னொரு புறம் இலவச மின்சாரம் கொடுப்பதால்தான் மின்வாரியம் நட்டம் ஏற்படுவதாக தினமணி உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் விவசாயிகளுக்கு எதிராக கருத்து கூறிவருகின்றன.
மின்சார வாரியம் நட்டத்திற்கு யார் காரணம்? 1990 க்கு பிறகு தனியார்மயம் அமல்படுத்தப்பட்ட பிறகு உற்பத்தி, வினியோகம், பராமரிப்பு என்று மின்சாரத்துறையை படிப்படியாக தனியாரிடம் தாரைவார்த்து விட்டு ‘’தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை’’ கொடுத்து வாங்குவதே மின்சார வாரியம் நட்டத்திற்கு காரணம். தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனையே செய்து வருகின்றனர்.
இதனால், அரசாங்கம் மின் உற்பத்திக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இன்றைக்கு கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலையே நீடித்து வருகிறது. தொலைத்தொடர்பு துறையில் BSNL- ஐ எப்படி ஒழித்துக்கட்டினார்களோ அதேதான் இன்றைக்கு மின்சாரத்துறையிலும் நடக்கிறது, மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி ஒட்டுமொத்தமாக உற்பத்தி ,வினியோகம், நிலக்கரி, என அதானி உள்ளிட்ட தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு தாரைவார்த்து வருகிறது பாசிச மோடி கும்பல். மேலும் பல மாநிலங்களில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை அதானி நிறுவனமே அமல்படுத்தி வருகிறது. இதனால்தான் அதானியால் உலகின் பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை அடைய முடிகிறது. ஆகவே, மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அனைவரும் தனியார்மயத்தின் தாசர்களாகவே உள்ளனர். இந்த ஆட்சியாளர்களை நம்பி பயன் ஏதும் இல்லை. .
கொரானா பெருந்தொற்று போன்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டு வரும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களை மின் கட்டண உயர்வு ,GST வரி உயர்வு, விலைவாசி உயர்வு என சுமைகளை ஏற்றி மீழமுடியாத நெருக்கடியை நோக்கி தள்ளி வருகிறது காவி-கார்பரேட் பாசிசம். காவி- கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, விவசாயிகள், நெசவாளிகள், மாணவர்கள் என அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராடுவதே இச்சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான உடனத் தீர்வாகும்.
கவி