கஞ்சிக்கு வக்கற்ற நாட்டில் ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு வெற்று ஜம்பம்!

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை  செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில் நமது நாடு பாதுகாப்புத்துறையில் தற்சார்புடைய நாடாக மாறிவருவதற்கான சான்று இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் என்று சிலாகித்-திருக்கிறார்.

இதன் நீளம் சுமார் 262 மீட்டரும், உயரம் சுமார் 60 மீட்டரும் உள்ள இக்கப்பலை கட்டி முடிக்க 13 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாகவும், இதனைக் கட்டி முடிக்க சுமார் 20,000 கோடி வரை செலவு செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இது தன்னகத்தே சுமார் 30 போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்டிருக்கும் வசதியை பெற்றுள்ளது.

இத்தகைய வசதிகளைக்கொண்ட போர்க்கப்பலை கட்டிமுடிக்க சீனா சுமார் 3 முதல் 4 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.  அதிகப்பட்சமாக சுமார் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய இந்த கட்டுமானத்தை  பல சோதனைகள் நிகழ்த்தி  இந்திய அறிவியியலாளர்கள், சொந்தமாக ஒரு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே கட்டுவதை இது ஒரு அறிவியல் முன்னேற்றம் என்ற வகையில் பாராட்டலாம். ஆனால் இந்த போர்க்கப்பலினால் நாட்டுக்கு என்ன பயன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது?

 

 

இந்திய நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு கஞ்சி கூட ஊற்ற வக்கில்லாத தற்போது ஆட்சியிலிருக்கும்  பா.ஜ.க-வும், இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரசும் மக்களை மரண குழியில் தள்ளிவிட்டது ஊரறிந்த இரகசியம். இப்போது இருவரும் இப்போர்க்கப்பலை கட்டிமுடிக்க காரணம் தாங்கள் தான் என ஒருவருக்கொருவர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் மோடி மற்றும் பா.ஜ.க-வின் பிரச்சார பீரங்கீகளும்  ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடற்படையில் இணைத்த நிகழ்வை எண்ணி தேசபக்தியில் மிதக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் தங்களது தேசபக்தியை நிருபிக்க விண்ணைப் பிளக்கும் அளவுக்கு முழங்குகின்றன.

இந்த 13 ஆண்டுகளில் விவசயத்திற்கான இடுபொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்ய வழியின்றி, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஊட்டச்சத்து குறைவு மதிப்பீட்டில் பின் தங்கிய நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை விட  இந்தியா கீழே உள்ளது. இவற்றைக் காக்க வக்கற்ற இந்திய அரசு, தேசப்பெருமிதத்துடன் ஐ.என்.எஸ். விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய தொகையை வாரி இறைத்திருக்கிறது.

இவ்வளவு பெருமிதம் கொண்ட விக்ராந்தின் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? கடலில் போர்க்கப்பலை நிறுத்துவதால். ஏகாதிபத்திய  நாடுகளின் போட்டோ போட்டிக்கு மட்டுமே இது பயன்படும். மாறாக இந்திய மக்களின் வறுமையை இதுபோன்ற பெருமிதங்கள் ஒருபோதும் ஒழிக்கப்போவதில்லை. மேலும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினால் தினந்தோறும் சுட்டுக்கொள்ளப்படுவதை ஐ.என்.எஸ். விக்ராந்தை கொண்டு தடுத்து நிறுத்தக்கூட பயன்படப்போவதில்லை.

கழிப்பிட வசதி, கல்வியறிவு, வாழ வழியின்றி கூலிக்காக விவசாயிகள் நகரத்தை நோக்கி படையெடுக்கும் அவலநிலை, இந்தியக் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, தினம் நிகழும் உழைக்கும் மக்களின் தற்கொலைகள் போன்ற எண்ணற்ற துன்ப துயரங்களை ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒருபோதும் மாற்றிவிடப்போவதில்லை. எனவே இது இந்திய நாட்டின் வளர்ச்சியல்ல, இது ஒரு வெற்று ஜம்பம்!

 

– மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன