ஊரை அடித்து உளையில் போடும் அம்பானி – அதானிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி

ஒரு நாளின் அனைத்து தேவைகளையும் மிகச் சிறந்த தரத்துடன் மக்களுக்கு அளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 80 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அதாவது இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.643 கோடி ஆகும்.

 

 

சமீபத்தில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட பில்லினியர்கள் பட்டியலில், கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் கூறுகிறது. அதாவது உலகளவில் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பிசோஸ் ஆகியவர்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலர் ஆகும்.

இதே இந்தியாவில்தான் கொரோனா தொற்று காலத்தில் வேலையிழந்து, வருமானமின்றி, தங்களது தாலியையும் அடமானம் வைத்து காலத்தை தள்ளும் சூழலுக்கு பெரும்பான்மை மக்கள் தள்ளப்பட்டனர் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர்.

கடந்த ஜூன் 2019 முதல் 2020 வரையிலான கடன் விவரங்களை (Deployment of Gross Bank Credit by Major Sectors) ஆர்.பி.ஐ பட்டியலிட்டுள்ளது. அதன்படி, வாகன கடன் என்பது 7.1 சதவிகிதத்தில் இருந்து 11.0 ஆக உயர்ந்துள்ளது. தங்க நகைக்கடன் என்பது 34.9 சதவிகிதத்தில் இருந்து 81.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனி நபர் கடனும் 10.8 சதவிகிதத்தில் இருந்து 16.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில், தங்க நகைக்கு மட்டுமே 62,221 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

 

 

அதேபோல், வருங்கால வைப்பு நிதியில் இருந்து சுமார் 76 லட்சம் பேர் 18,600 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை எடுத்துள்ளனர். சுமார் 17.7 லட்சம் இந்தியர்கள் வீடற்றவர்களாக உள்ளனர். ஆனால் 2020 மார்ச் 9 முதல், மே 3-ம் தேதி வரை வழங்கப்பட்ட ஏழைகளுக்கான ஊரடங்கு நிவாரணம் தொடர்பான மாநில அரசுகளின் அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில், இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது என்று இன்றைய அரசு தினமும் கூவிக் கொண்டிருப்பது உண்மைதான் போலும். ஏனெனில், இவர்கள் கூறுவது தனது எஜமானர்கள் அம்பானி – அதானிகளின் பொருளாதார வளர்ச்சியை அல்லவா!.

  • சந்திரன்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன