மனித உருவில் உலாவும் மிருகங்கள்!
சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின் போது மதவெறி தலைக்கேறிய ஆர்.எஸ்.எஸ். கொலைகாரக் கும்பல், பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்வது, கர்ப்பிணி பெண்களைக் கூட கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொல்வது என மனிதாபிமானமே இல்லாத கொடூர மிருகங்களாக நடந்துகொண்டிருப்பதை பில்கிஸ்பானு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் பார்த்துள்ளோம்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களின் போது மட்டுமல்ல இந்த ஆர்.எஸ்.எஸ். பாஜக காவி கும்பலானது தங்களது அன்றாட வாழ்க்கையில் கூட பெண்களை அடக்கி ஒடுக்கும் பிற்போக்கு ஆணாதிக்கவாதிகளாகவும், சனாதன தர்மம் போதிக்கும் சாதிவெறி பிடித்தவர்களாகவும் நடந்துகொள்வது பலமுறை அம்பலமாகியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் சீமா பத்ரா. இவரது வீட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டுப் பணியாளராக இருந்த பழங்குடியினப் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஞ்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள சுனிதா என்ற வீட்டுப்பணியாளர் சீமா பத்ரா தன்னை எவ்வாறு சித்ரவதை செய்தார் என விவரிக்கும் காணொளி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியப் பார்க்கும் போதே, அந்தப் பெண் பல ஆண்டுகளாகச் சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டு தினம் தினம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உடைக்கப்பட்ட பற்களுடன், உடல் முழுவதும் காயங்களுடன், உட்காரக் கூட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அந்தப் பெண் விவரிக்கிறார்.
ஜார்கண்டின் கும்லாவைச் சேர்ந்த சுனிதா, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பத்ராவின் குடும்பத்திற்காக பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் பத்ராவின் மகள் வத்சலாவுடன் தில்லி வீட்டில் வேலை செய்த சுனிதா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராஞ்சியில் உள்ள பத்ராவின் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அது முதல் சீமா பத்ரா தன்னை சித்திரவதை செய்ததாகவும், “தண்டனை” கொடுத்ததாகவும் சுனிதா கூறுகிறார். ஆனால் எதற்காக அவர் தன்னை தண்டித்தார், தான் செய்த தவறு என்ன என்று கூட தனக்குத் தெரியவில்லை என சுனிதா குறிப்பிடுகிறார். தினமும் பத்ரா தன்னை சூடான தோசைக்கல்லைக் கொண்டும், இரும்புத் தடி கொண்டும் தாக்கியதாகவும், தரையில் இருந்து சிறுநீரை நக்கச் செய்ததாகவும் அவர் திகிலுடன் விவரிக்கிறார்.
பத்ரா வீட்டில் சுனிதா படும் துன்பம் குறித்து சுனிதாவின் அக்காவிற்கும், அக்காவின் கனவருக்கும் தெரியவந்தபோதும் அவர்கள் சுனிதாவை அங்கிருந்து அழைத்துச் செல்லவில்லை. இதனால் பத்ராவின் வீட்டிலிருந்து தப்பிக்க வழியே இல்லாமல் போனதால் கொடுமைகள் அனைத்தையும் சுனிதா தாங்கிக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சுனிதா மீதான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத பத்ராவின் மகன் அயுஷ்மானே தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் சுனிதாவை மீட்டு மருத்துவமனையின் அனுமதித்ததுடன் தனது தாய்க்கு எதிராக போலீசில் புகாரளிக்கவும் உதவியுள்ளார்.
தனது வீட்டில் பணிபுரிந்த பழங்க்குடியினப் பெண்ணை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி பல ஆண்டுகள் சித்ரவதை செய்து வந்த சீமா பத்ரா, மோடி அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்களான பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ பிரச்சாரத்தின் ஜார்க்கண்ட் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தற்போது பத்ரா குறித்து அம்பலமானவுடன், வழக்கம் போல பாஜக அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்து தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என காட்டிக்கொள்கிறது.
காவி பாசிசக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பில் இருக்கும் பலரும் இப்படித்தான் மனிதத்தன்மை அற்ற மிருகங்களாக இருக்கின்றனர். இவர்கள்தான் மற்ற மதத்தினரால் இந்துக்கள் பாதிக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். சகோதரத்துவத்துடன் வாழும் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் வெறுப்பை விதைக்கின்றனர்.
முத்துக்குமார்
(தகவல்: தி வயர்)