எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களைத் தாண்டி, அதேபோல் மாநிலங்களின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூலை 8-ம் தேதி பாசிச மோடி அரசால் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா 2022 தாக்கல் செய்யப்பட்டது.
இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில், தேசிய மின் தொகுப்பு விநியோக மையம் உருவாக்கப்படும். இந்த மையமானது அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும். எனவே ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதன் ஒப்புதல் இல்லாமல் மற்ற மாநிலங்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படும்.
ஏற்கனவே, பாசிச மோடி அரசானது பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற தத்துவத்தையே கேலிக் கூத்தாக்கிவிட்டது என்பது நாடறிந்த உண்மை.
இந்த மசோதாவின்படி, மின் உற்பத்தி, விநியோகம், கட்டண நிர்ணயம் ஆகியவை தனியார்மயமாக்கப்படும். குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மின்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும், காவிகளின் எஜமானர்களான அம்பானி, அதானி, டாடா போன்ற நிறுவனங்கள் மற்ற மாநிலங்களின் மின்துறையிலும் ஆதிக்கம் செலுத்த மோடி அரசு வழிவகுத்துக் கொடுக்கும். இதன் மூலம் பொதுத்துறைகளின் பங்களிப்பும் சேவையும் பி.எஸ்.என்.எல். போல படிப்படியாக ஒழிக்கப்படும்.
மேலும், அனைத்து மாநில மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மின்துறையின் அனைத்துக் கட்டுமானங்களையும் பெண்வீட்டு சீதனம் போல எந்தவித ஈட்டுத் தொகையும் பெறாமல் இலவசமாக இக்கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படும்.
இதுவரை மாநில அரசுகளால் வீடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம், விவசாயம், கைத்தறி, விசைத்தறிகளுக்கான மானிய விலை மின்சாரம் அனைத்தும் ரத்து செய்து கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
இதன் காரணமாக தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். விரைவில் முடங்கும். மேலும் தனியார் மின் நிறுவனங்களின் இலாப விகிதம் அதிகரிப்பதற்கு ஏற்ப மின் கட்டணங்கள் உயர்த்தப்படும். அதிகம் இலாபம் தரக்கூடிய பகுதிகளுக்கும், நிறுவனங்களுக்கு மட்டுமே தடையில்லா மின்சாரத்தை வழங்கும்.
அதேபோல், இலாபம் குறைவாகவும், நட்டம் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கும், நிறுவனங்களுக்கும் மின்சார கொடுப்பதை நிறுத்தும். எனவே பெருநகரங்களுக்கு மட்டும் மின்சாரம் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்கள் இலாபம் அடைவதும். சிறுகிராமங்களுக்கு விநியோகம் செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் நட்டமடைவதும் அதிகரிக்கும். இதனால் மின்துறை நிறுவனம் விரைவில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் போல் படிப்படியாக ஒழிக்கப்படும்.
இதன் விளைவாக, ஏழை – நடுத்தர மக்கள் வாழும் இருப்பிடங்களில் இருட்டில் அரிக்கேன் விளக்குடன் அலையவிடும் அதேவேலையில் அதிக விலை கொடுத்து வாங்கக் முடிந்தவர்கள் மின்னொளியில் ஜொழிக்கவிடும். எனவே காசு உள்ளவனுக்கே கல்வி என்பதைப் போல இனி காசு உள்ளவனுக்கே மின்சாரம் என்பது நடைமுறைக்கு வரும்.
கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுகாதாரம் போன்ற சேவைகளை சந்தைக்கான, இலாபத்துக்கான சரக்காக மாற்றிவிட்டதைப் போல, அதே வரிசையில் மின்சாரத்தையும் இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ன் மூலம் இணைத்துவிடும் என்பதில் ஐயம் இல்லை.
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஆகியவற்றின் மூலம் மக்கள் சொல்லொன்னா துயரத்தில் இருக்கும் போது இம்மசோதா மூலம் எரியும் நெருப்பில் எண்ணெய்யை உற்றியுள்ளது.
மின்சார உற்பத்தி – விநியோகம் தனியார்மயமானால் ‘சீரான – குறைந்த விலையிலான சேவையில் மின்சாரம் கிடைக்கும். மேலும் இலஞ்ச ஊழல் முறைகேடுகள், மின்திருட்டு போன்றவை தடுக்கப்படும்’ என்ற ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கின் வாக்குமூலம் ‘கேப்பையில் நெய் வடிவதாக’ நம்பச்சொல்கிறார்.
மேற்கண்ட அனைத்து அயோக்கியத்தனத்திற்கும் முதலாளிகள்தான் ஊற்றுக்கண் என்பதை தெரிந்தே மறைப்பதன் மூலம் நம்மை மூடர்களாக்குகிறார் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்.
மாநிலங்களின் மின்சாரத்துறைகளுக்கு வழங்கிய 90 கோடி ரூபாய் கடனை தனியார் கடனை அடைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று ஒன்றிய நிதியமைச்சர் கட்டளையிடுவதன் மூலம் யாரைக் காப்பாற்றத் துடிக்கிறார் என்பது வெளிச்சம்.
இதுவரை, தனியார்மயமாக்கப்பட்ட வங்கிகளும், இன்சுரன்சுகளும், போக்குவரத்துகளும், கல்வியும், மருத்துவமும் ஏழை-நடுத்தர மக்களுக்காக செய்த சேவையை விட, அவர்களின் சேமிப்பை உறிஞ்சுகின்றது என்பது தெளிவு.
சூரிய ஒளி, நிலக்கரி, இதர வளங்களைப் பயன்படுத்தி மிகையான மின் உற்பத்தியுடன் மலிவான விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்தியாவை, விநியோகத்தில் ஏற்படும் ஐந்தில் ஒருபங்கு இழப்பைக் காரணம் காட்டும் உலக வங்கியின் குற்றச்சாட்டை முறியடிக்க, இழப்பை ஈடுசெய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல், மின்சாரத்துறையை தனியாருக்குத் தாரைவார்ப்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.
மின்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் மின் ஒழுங்குமுறை ஆணையமும், யாருக்காக செயல்படும் என்பது ஏற்கனவே பல்வேறு துறைகளில் செயல்படும் ஆணையங்களின் செயல்பாடுகளே சாட்சி.
மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-யை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புவது மட்டும் வேலைக்குதவாது. 27 இலட்சம் மின்சாரத் துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும். உழைக்கும் மக்களில் தலையில் இடியாய் இறங்கும் இம்மசோதாவை, நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் திரள் போராட்டங்கள் மூலமே முறியடிக்க முடியும். இதற்கேற்ப ஆலைகளிலும், மக்கள் வாழ்விடங்களிலும், இதர பணியிடங்களிலும் போராட்டத்தை வீச்சாக எடுத்துச் செல்வோம். இம்மசோதாவை சட்டமாக்கத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலை முறியடிப்போம்.
- மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-யை முடக்குவோம்!
- மசோதாக்கள் மூலம் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதைத் தடுப்போம்!
- ஏழை-நடுத்தர மக்களை இருட்டில் தள்ளும் காசு உள்ளவனுக்கே மின்சாரம் என்னும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை சவக்குழிக்கு அனுப்புவோம்!
- மின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை முறியடிப்போம்!