தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு வலியுறுத்தி நடந்த மக்கள் போராட்டத்தை, ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளின் உயிரைப் பறித்தது இதற்கு முந்தைய அதிமுக அரசு. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இருந்த மனநிலையின் காரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாடெடுத்தது.
ஆனால் அதே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியபோது, ஆக்சிஜன் தயாரிப்பு என்ற முகாந்திரத்தின் பெயரில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறந்து தற்காலிகமாக இயங்க தடையில்லை என நீதிமன்றத்தில் கூறியது.
அதே போன்று கொலைகார பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகவும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்விரோத போக்கைக் கண்டித்தும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தபோதும் திமுக அரசு முழுமையாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் பக்கம் நின்று பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கியது. இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை திமுக அரசு வெளிப்படையாகவே காட்டிவந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் சிப் தொழில் தொடங்க வருமாறு ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான வேதாந்தா நிறுவனத்திடமும், சீனாவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மரணத்திற்குக் காரணமான கொலைகார பாக்ஸ்கான் நிறுவனத்திடமும் கெஞ்சிக் காத்திருக்கிறது திமுக அரசு.
சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போட்டியின் விளைவாக உலகளவில் ஏற்பட்டுள்ள சிப் பற்றாக்குறையின் காரணமாகவும், இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி வரும் ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு அதிகரிக்கும் என்ற காரணத்தினாலும் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி மையங்களை அமைக்க ஏகாதிபத்திய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி ஒன்றிய அரசும் கட்ந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் செமிகண்டக்டர் மிசன் என்ற திட்டத்தைத் தொடங்கி, அதற்கென 2,30,000 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 72,000 கோடி ருபாய் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி செய்வதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கென செமிகண்டக்டர் பேப்ஸ் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ், ஐசிஎம்சி, வேதாந்தா- பாக்ஸ்கான் ஆகிய மூன்று நிறுவனங்களும் 13.6 பில்லியன் டாலர் மூதலீட்டில் எலக்ட்ரானிக் சிப் ஆலைகளை இந்தியாவில் அமைக்க முன்வந்தன. இத்திட்டத்தில் தேர்வாகும் நிறுவனங்கள், மேற்கூறிய செமிகண்டக்டர் மிசனின் 72000 கோடியை இந்திய அரசிடம் இருந்து நிதிச்சலுகையாகப் பெற முடியும்.
இதில் வேதாந்தா(60%) – பாக்ஸ்கான்(40%) கூட்டணியில் தொடங்கப்படவிருக்கும் சிப் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பெரும் பிரயத்தனம் செய்து வருகிறது.
வேதாந்தா – பாக்ஸ்கான் கூட்டணியில் உருவாக்க இருக்கும் இந்நிறுவனம் தமிழகத்தில் 58,500 கோடி ருபாய் முதலீடு செய்யவிருக்கிறது. இதில் சரி பாதி அதாவது 29,000 கோடி ருபாயை செமிகண்டக்டர் மிசன் திட்டம் மூலம் நிதிச்சலுகையாகப் பெறமுடியும்.
தற்போது ஆலை அமைப்பதற்கான இடத்தை தேடி வரும் இந்நிறுவனம் முதலில் ஆந்திர மாநிலத்திலும், பின்னர் மராட்டிய மாநிலத்திலும் ஆலை அமைக்க அலோசித்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 12 ம் தேதியில் தி இந்து ஆங்கில நாளேடு பாக்ஸ்கான் நிறுவனத்தை பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் அந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு, அதன் எலக்டிரிக் வாகனத்திற்கான சிலிகான் பேப் 8 தொழிற்சாலையை தமிழ் நாட்டில் ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கு தமிழக அரசிடமிருந்து போட்டி ஊக்குவிப்பு முன்மொழிவை (competitive incentive proposal) எதிரிப்பார்ப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
போட்டி ஊக்குவிப்பு முன்மொழிவு என்பது இந்தியாவில் தொழில்தொடங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்குவதாகும், அதில் தங்களது நிபந்தனைகள், எதிர்பார்ப்புகளையெல்லாம் எந்த மாநிலம் பூர்த்தி செய்து தருகிறதோ அம்மாநில அரசுகளுடன் அந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளும்.
தமிழகத்தில் கடந்தகால அனுபவங்களில் இருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ள வேதாந்தா நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் நிச்சயம் பல்வேறு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நிபந்தனைகளை தொழில்தொடங்க முன்நிபந்தனையாக விதித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதைப்பற்றி தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, தமிழகத்தின் 2030 ஆம் ஆண்டு ஜி.டி.பி இலக்கு, ஒரு டிரில்லியன் டாலர் எனவும் அதற்காக தமிழகத்தில் தொழிற் தொடங்க வரும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த விதமான உதவிகள் செய்யவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும், பாக்ஸ்கான் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு அதிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் பதில் கூறியிருக்கிறார்.
கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழ்நாட்டு அரசின் முதலீடு ஈர்க்கும் மற்றும் ஒற்றைச் சாலரம் பிரிவின் Guidance Tamilnadu அமைப்பின் தலைவர் பூஜா குல்கர்னி (ஐ.ஏ.எஸ் அதிகாரி) பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு-வை புதுதில்லியில் சந்திந்தார். அச்சந்திப்பின் போது தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் புதிய திட்டமான மின்சார வாகனத்தின் சிப்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தமிழக அரசு உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக பூஜா குல்கர்னி கூறியுள்ளார்.
நாசகர வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் விவகாரத்தில், சுற்றுச்சூழல் விதிகளையும், அது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளையும் கிஞ்சிற்றும் மதிக்காமல் நடந்துகொண்டது குறித்து தமிழக அரசே நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. ஆனால் தற்போது அதே நிறுவனத்திற்கு தமிழகத்தில் தொழில்தொடங்க வருமாறு சிகப்புக் கம்பளம் விரித்து அழைப்பதுடன், எல்லா சலுகைகளையும் வழங்க தயாராக இருப்பதாகக் கூறுகிறது.
தமிழக மக்கள் முன்பு, காவி பாசிசத்திற்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் திமுக, இது காவி – கார்ப்பரேட் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஹைபிரிட் பாசிசம் என்பதை மறைக்கிறது. மத்தியில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பல், நவீன தாராளமய கொள்கைகள் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தும் அதே மறுகாலனியக் கொள்கைகளைத்தான் திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் திமுகவும் தமிழகத்தில் அமுல்படுத்துகிறது.
தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக மாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு மறுகாலனியக் கொள்கைகளை அமுல்படுத்துவது என்பது தமிழக மக்களை நேரடியாகப் பாதிப்பதுடன், காவி கார்ப்பரேட் பாசிச் கும்பலுக்கு சேவை செய்யவே பயன்படும்.
- சம்பத்
செய்தி ஆதாரம்