5ஜி அலைக்கற்றைகளை அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஏலம் முடிவடைந்துவிட்டது. 7 நாட்கள் 40 சுற்றுக்கள் நடந்த ஏலத்தில் மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அளவிற்கான அலைக்கற்றை, ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைத் தொகையாக 4.3 லட்சம் கோடி ருபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த அடிப்படைத் தொகையை விட மிகக் குறைவான விலைக்கு, 1.5 லட்சம் கோடி ருபாய்க்கு அலைக்கற்றைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வொடாபோன் ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுடன் தொலைதொடர்புத் துறைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத அதானி நிறுவனமும் பங்கெடுத்துக் கொண்டது. ஏலத்தின் முடிவில் மொத்தமாக ஏலம்விடப்பட்ட அலைக்கற்றை அளவுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அலைக்கற்றைகளை 88,000 கோடி ருபாய் கொடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதிலும் உயர்மதிப்பு கொண்ட 700 மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றைகளை ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே கைப்பற்றியுள்ளது.
இந்த ஏலத்தில் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்கெடுப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறது. 4ஜி சேவைகளை வழங்குவதற்குக் கூட தடையேற்படுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடக்கி வைத்திருக்கும் கார்ப்பரேட் ஆதரவு பாஜக அரசு, அந்நிறுவனத்தை 5ஜி ஏலத்தில் பங்கெடுக்க அனுமத்தித்துவிடுமா என்ன? கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏதுவாக அனைத்து வேலைகளையும் செய்துவிட்டுத்தான் பாஜக அரசு இந்த ஏலத்தையே ஆரம்பித்தது.
அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு முன்பே ஒரு சிறு தொகுதி அலைக்கற்றையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துவிட்டது மோடி அரசு. பின்னர் அதையே காரணமாகக் காட்டி ஏலத்தில் பங்கெடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டது.
5ஜி சேவை வழங்க வேண்டுமானால் தங்களுக்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், உயர்மதிப்பு அலைக்கற்றை (700 மெகா ஹர்ட்ஸ்) பிரிவில் தங்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்ற பி.எஸ்.என்.எல். இன் கோரிக்கை குப்பைக் கூடையில் வீசப்பட்டது.
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கொள்ளை இலாபமடிக்க, அலைக்கற்றைகளை, அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் கொடுத்திருப்பதை மறைத்துவிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக விலைக்கு ஏலம் போயிருப்பதால் நாட்டிற்கு இந்த ஏலத்தின் மூலம் பெரிய வரவு கிடைத்திருப்பதாக பாஜக ஆதரவு கும்பல் பிரச்சாரம் செய்து வருகிறது.
அதே சமயம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தங்கள் மேல் சுமத்தப்பட்ட பழியைத் துடைப்பதற்கான தருணமாக இதனைப் பயன்படுத்திக் கொண்டு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை பாஜகவின் மெகா ஊழல் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஆனால் இங்கே இன்னொரு விடயத்தைப் பெரும்பாலானவர்கள் பேச மறுக்கிறார்கள். அதாவது இந்த ஏலத்தின் மூலம் இந்திய தொலைதொடர்புத் துறையை, நாங்கள்தான் கட்டுப்படுத்துகிறோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று தரகு அதிகாரவர்க்க முதலாளிகள், தங்களுக்குள் கார்டல் அமைத்துக் கொண்டு, பகீரங்கமாக அறிவித்துள்ளனர். தற்போது இது குறித்து வெகுசிலரே பேசுகிறார்கள்.
2018ம் ஆண்டில் 5ஜி அலைக்கற்றைகளுக்கு ஒரு மெகா ஹர்ட்சிற்கு 492 கோடி ருபாய் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விலை நிர்ணயம் செய்து அறிவித்தது. அப்போதிருந்தே இந்த விலை தங்களுக்குக் கட்டுபடியாகது என ஜியோ, ஏர்டெல், வொடபோன் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் கூறிவந்ததுடன், விலையைக் குறைக்க வேண்டும் என்று டிராய்யையும், தொலைதொடர்பு ஆணையத்தையும் வலியுறுத்தி வந்தன.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டிராய் அமைப்பு, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஏற்கெனவே நிர்ணயித்த விலையிலிருந்து 36% குறைத்து, அலைக்கற்றை விலையை ஒரு மெகா ஹர்ட்சிற்கு 317 கோடி ருபாய் என அறிவித்தது. அதனடிப்படையில் தொலைதொடர்பு அமைச்சகம் 4.3 லட்சம் கோடி ருபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்தது. இந்த தொகையைக் கூட ஒரே தவணையில் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக 20 ஆண்டுகளில் 20 தவணையாகச் செலுத்தினால் போதும் என்ற சலுகையையும் சேர்த்தே தரகு அதிகாரவர்க்க முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது.
முதலில் அறிவிக்கப்பட்ட விலையில் 36% குறைக்கப்பட்டு, தவணையில் சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரும் கூட தங்களுக்கு இன்னமும் விலையைக் குறைக்க வேண்டும் என்று இந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தியது. ஏலத்திற்கான அறிவிப்பு வெளியிட்டுவிட்ட ஒன்றிய அரசு இதன் பிறகு விலையைக் குறைக்க முடியாது என்று கூறிவிட்டது.
ஏலத்தில் பங்கேற்றவர்களோ 4 பேர் மட்டுமே. அதிலும் அலைக்கற்றைகளை வாடகைக்கு விடும் நோக்கில் கலந்து கொண்ட அதானி மிகக் குறைவான அளவே கோரியதால், மீதமுள்ள மூன்று பேர் ஜியோ, ஏர்டெல், வொடாபோன் ஐடியா மட்டுமே மொத்த ஏலத்தையும் கோரினர்.
இவர்கள் மூவரும் ஏற்கெனவே கார்டல் அமைத்துக் கொண்டு கடந்த ஆண்டு இறுதியில் செல்போன் சேவைகளுக்கான கட்டணங்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தினார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்த்தால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
115 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்திய தொலைதொடர்புச் சந்தையில் 2023ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு சந்தாதாரரிடமிருந்தும் மாதந்தோரும் தலைக்கு 170 ருபாய் வருமானமாக வர வேண்டும் என இலக்குவைத்து வேலை செய்யும் இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஓராண்டிற்குள்ளாகவே 5ஜி அலைக்கற்றை வாங்குவதற்காக கொடுத்த பணத்தை எடுத்துவிட முடியும். 20 ஆண்டுகள் பயன்படுத்த ஏலம் எடுத்துள்ள நிலையில் மீதமுள்ள 19 ஆண்டுகளில் இவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழியமைக்கப் பட்டுள்ளது.
தொலைதொடர்புக் கொள்ளையர்களின் இந்த கார்டலை உடைத்து மக்களின் சொத்தான அலைக்கற்றையை நியாயமான முறையில் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்பெரும் வகையில் கொடுப்பது ஒரு அரசின் கடமையாகும். ஆனால் இந்த கார்ப்பரேட் ஆதரவு அரசோ இதையெல்லாம் மறைத்துவிட்டு 1.5 லட்சம் கோடி ருபாயை மிகப் பெரிய வரவு என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.
நிலம், நீர், காடுகள், கணிமம், உள்ளிட்ட இயற்கை வளங்களை தரகு – ஏகாதிபத்திய நிறுவனங்கள் சூறையாடிக் கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும், அதுதான் நாட்டின் வளர்ச்சி என்று நவீன தாராளவாதம் கூறுகிறது. பெரும் முதலாளிகளின் நலன் காக்கும் இந்த நவீன தாராளவாத கொள்கைகளை முந்தைய ஆட்சியாளர்களைக் காட்டிலும் முழு மூச்சுடன், அதிக விசுவாசத்துடன் அமுல்படுத்திவரும் காவி-கார்ப்பரேட் பாசிச கும்பல், அலைக்கற்றை எனும் இயற்கை வளத்தையும் இன்று கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுத்துள்ளது தற்செயலான நிகழ்வல்ல.
- அறிவு