ஐ.டி.பி.ஐ. வங்கி : முதலாளிகளுக்கு மோடி அரசின்
பண்டிகைக் கால விற்பனை!
ஊரான் வீட்டு நெய்யில் தன்வீட்டுக்கு பலகாரம் செய்யாதே என்று பேச்சு வழக்கில் நாம் அடிக்கடி சொல்வதுண்டு. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மோடி கும்பலுக்கு நன்றாகவே பொருந்தும். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சொத்தை முதலளிகளுக்கும் நிதிமூலதன கும்பலுக்கும் தூக்கிக் கொடுப்பதில் இந்த ‘அக்மார்க் தேசப்பக்தி கும்பலுக்கு’ நிகர் யாரும் இல்லை என்றே சொல்லாம். அந்த வகையில் இவர்கள் தற்போது ஐ.டி.பி.ஐ. வங்கியைத் வெளிநாட்டு நிதிநிறுவனத்திற்கு தாரைவார்த்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் [IDBI] இந்திய அரசும் எல்.ஐ.சி.யும் வைத்துள்ள பெரும்பான்மைப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வங்கியில் இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து 94 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளன. இதில் எல்.ஐ.சி.யின் 30.24 சதவிகிதப் பங்குகள் மற்றும் அரசாங்கத்தின் 30.48 சதவிகிதப் பங்குகள் சேர்த்து 60.72 சதவிகிதப் பங்குகளை 52,878 கோடிக்கு கனடாவின் பேர்பேக்ஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், சிறு-குறு தொழில்கள் மற்றும் அதிக வாடிக்கையாளர்களின் சேமிப்புகளைக் கொண்டுள்ள ஐ.டி.பி.ஐ. வங்கியின் முடிவெடுக்கும் அதிகாரத்தை வெளிநாட்டினரின் கையில் ஒப்படைத்துள்ளார் மோடி.
இம்முடிவை. ‘இந்திய நிதித்துறையில் ஒரு மைல்கல்’ என்று முதலாளித்துவ அறிவுஜீவிகளும், நடுபக்க நாராயணன்களும், பாஜக ஆதரவாளர்களும் புகழ்ந்து தள்ளுகின்றனர். நிதி அமைச்சகமோ, இந்த வருடப் பட்ஜெட்டின் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு நிறுவனங்களை விற்பதன் மூலம் ஈட்டத் திட்டமிட்டிருந்தத் தொகையில் எழுபத்தைந்து சதவிகித நிதியைத் திரட்டி விட்ட மகிழ்ச்சியில் உள்ளது. மறுப்பக்கத்திலோ வங்கி ஊழியர்கள் சங்கமும், இடதுசாரி அமைப்பினரும் மோடி அமைச்சரவையின் “இந்திய வங்கிகளை வெளிநாட்டு மயமாக்குதல்” என்று கடுமையாகச் சாடியுள்ளன. அரசின் முடிவைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டமும் அறிவித்துள்ளன.
அடிமாட்டு விலைக்கு விற்பனை
ஐ.டி.பி.ஐ. வங்கியை அடிமாட்டு விலைக்குத்தான் கோடி கும்பல் விற்க ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 4.7 இலட்சம் கோடி. மக்களின் டெபாசிட் தொகை மட்டுமே 3.5 இலட்சம் கோடியை இவ்வங்கி வைத்துள்ளது. கடைசி மூன்று ஆண்டுகளில் இவ்வங்கி ஈட்டிய நிகர இலாபம் [net profit] மட்டும் முறையே 5600 கோடி, 7500 கோடி, 9,000 கோடியாகும். இவ்வங்கிக்குச் சொந்தமான அசையாச் சொத்திக்களின் மதிப்பும் மிக அதிகம்.
உதாரணமாக ஹைதராபாத்தின் நன்கு வளர்ச்சியடைந்த பகுதியில் ஐடிபிஐ-க்கு 50 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது. தெலுங்கானா மாநில அரசு சமீபத்தில் நடத்திய ஏலத்தின் அடிப்படையில், ஒரு ஏக்கரின் சந்தை மதிப்பு 269 கோடி ரூபாய். இதனடிப்படையில் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டிபி.ஐ.-இன் நிலத்தின் மதிப்பு மட்டுமே ₹13,450 கோடியாக இருக்கும். ஐடிபிஐ-ன் பிற நகர்ப்புறச் சொத்துகளுக்கும் இதே போன்ற மதிப்பீட்டைப் பயன்படுத்தினால், அந்த வங்கியின் நிலங்களின் ஒட்டுமொத்த மதிப்பு தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஏல மதிப்பீடான ₹52,878 கோடியை விட பல மடங்கு அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வங்கியின் செயல்பாட்டு இலாபம் மட்டும் 48,151 கோடியாகும். பல ஆயிரங்களில் இலாபத்தையும் பல இலட்சம் கோடி சொத்தையும் கொண்டுள்ள இவ்வங்கியைத்தான் சொற்ப விலைக்கு விற்கப்போகின்றனர்.
மக்கள் வரிப்பணத்தில் உருவான ஐ.டி.பி.ஐ வங்கி
1964-ஆம் ஆண்டில், நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி’ (Industrial Development Bank of India – IDBI) 1976-இல் நேரடியாக இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தொழிற்சாலைகள், உரத் தயாரிப்பு ஆலைகள், வேதிப்பொருள் தயாரிப்பு, எஃகு ஆலைகள் மற்றும் மின் திட்டங்கள் போன்ற பெரும் முதலீடு தேவைப்படும் பெரிய அளவிலான திட்டங்களுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் வழங்குவதே இதன் பணியாக இருந்தது. 1970 – 1980களில் இந்தியாவில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நீண்டகாலத் தொழில்துறைத் திட்டக் கடன்களில், சுமார் 50% முதல் 55% வரையிலான பங்களிப்பு IDBI-இன் ஆதரவின் மூலமே கிடைத்தது.
1990-களில் இந்தியா தனது பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கியபோது ஐ.டி.பி.ஐ போன்ற மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைத்து வந்த குறைந்த செலவிலான நிதி ஆதாரங்களை இழந்தன. 2003 இல் ஐ.டி.பி.ஐ சட்டம் ரத்து செய்யப்பட்டு 2004-இல் வணிக வங்கியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே நீடித்தது.
2000-களின் பிற்பகுதியில், ஐ.டி.பி.ஐ. பெரிய நிறுவனங்களுக்குத் தாராளமாகக் கடன் வழங்கியது. ஆனால் அதன் பெரிய கடன் வாடிக்கையாளர்களில் பலர் அக்கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. உதாரணமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2009-இல் 950 கோடியை ஐடிபிஐ கடனாக வழங்கியது. இதில் 900 கோடி வாராக்கடன் என அறிவிக்கப்பட்டது. ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்திற்கு மட்டும் சுமார் 3,639 கோடி கடன் கொடுத்திருந்தது, அதுவும் திருப்பிக் கிடைக்கவில்லை. வீடியோகான் மற்றும் வின்சம் டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் பெரும் இழப்பை ஏற்படுத்தின.
2018-இல் ஐ.டி.பி.ஐ.-இன் மொத்த வாராக்கடன்கள் (கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கடன் தொகை) ஒட்டுமொத்தக் கடன்களில் 31.78 சதவீதமாகவும், நிகர வாராக்கடன்கள் (தேவையான ஒதுக்கீடுகளைச் செய்த பிறகு எஞ்சியிருக்கும் வாராக்கடன்) 17.30 சதவீதமாகவும் உயர்ந்தன. இதனால் ஐ.டி.பி.ஐ. இந்திய ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
நிலைமைகளை சரி செய்ய மோடி அரசாங்கம் 25,000 கோடியை [2020 வரை] ஐ.டி.பி.ஐ.-யில் முதலீடு செய்தது. 2019-இல், 21,624 கோடியை எல்.ஐ.சி. முதலீடு செய்து வங்கியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதுடன் தனியார் துறை வங்கியாக மறுவகைப்படுத்தியது. இதனால் வங்கியின் நிதிநிலைமைகள் படிப்படியாக மேம்படத் தொடங்கின. மார்ச் 2026-இல் வங்கியின் மொத்த வாராக்கடன்கள் 0.32 சதவீதம் குறைந்திருந்தன. மேலும் 9,513 கோடி இலாபத்தைப் பதிவு செய்தது. இதற்கு பிறகே இவ்வங்கியை தனியாரிடம் தாரைவார்பதற்கான வேலை மோடி அரசாங்கம் துரிதப்படுத்தியது.
ஐ.டி.பி.ஐ. வங்கி முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று. அது மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் முதலாளிகளால் சூறையாடப்பட்டு பிறகு மக்களின் வரிப்பணத்தையும் சேமிப்புகளையும் கொண்டு மீட்டெடுக்கப்பட்டது. மோடியின் ஆட்சியிலோ விக்சித் பாரத் என்று சொல்லி வெளிநாட்டு முதலாளியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
- மாணிக்கம்
தகவல் உதவி
https://countercurrents.org/2026/10/the-story-of-idbi-how-india-let-go-of-its-own-bank/
https://www.facebook.com/photo/?fbid=1553197753513819&set=a.553337323499872
https://countercurrents.org/subtopics/idbi-bank/
