தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 2:
மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் (Transmission)
தனியார் நுழைய அனுமதி

மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கும் தவெக அரசின் PPP திட்டம், பொதுப் பணத்தில் உருவாக்கப்பட வேண்டிய மின்சார உள்கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் நீண்டகால வருவாயைத் தனியாருக்கு உத்தரவாதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசிடம் பணம் இல்லை என்ற காரணத்தை முன்வைக்கும் அரசு, தனியார் நிறுவனங்கள் கடன் பெற்று முதலீடு செய்து உருவாக்கும் கட்டமைப்புக்கான கடனையும், வட்டியையும், இலாபத்தையும் இறுதியில் மக்கள் மின் கட்டணமாகச் செலுத்தும் நிலையை உருவாக்குகிறது. மின்சார உற்பத்தியில் தனியார்மயத்தால் ஏற்பட்ட சுமையைத் தொடர்ந்து, தற்போது மின் பரிமாற்றக் கட்டமைப்பிலும் தனியார்மயத்தின் அடுத்த கட்டம் தொடங்குகிறது.

அரசு-தனியார் கூட்டு (PPP) மாடல் என்பது இருதரப்பும் சமமாகப் பங்களிக்கும் முறை அல்ல என்றும், மக்கள் பணத்தைச் சலுகையாக முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதன் மூலம் தனியார் நிறுவனங்களின் இலாபத்தை உத்தரவாதப்படுத்தி, பொதுச் சேவைகளை தனியார் முதலாளிகளின் கைகளில் அள்ளிக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மாணவர் விடுதிகளில் தனியார்மயம் குறித்த பகுதியில் பார்த்தோம்.

அதனை உறுதி செய்யும் வகையில் இந்தப் பட்ஜெட்டிலேயே ஒரு அறிவிப்பு உள்ளது. மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் தனியார் முதலாளிகள் நுழைய அனுமதித்திருப்பது குறித்த அறிவிப்பு தான் அது.

கோவை-அரியலூர் இடையே 240 கிலோமீட்டர் தூரத்திற்கு, மின்சாரத்தைக் கொண்டு செல்ல 765 kV மின் கடத்தல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம் அரசு-தனியார் கூட்டு முறையில் உருவாக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு துணை மின்நிலையம் அமைக்கப்படும் என்றும், 765 kV மின் கடத்தல் கட்டமைப்பில் இருந்து கிராமப்புறப் பகிர்மானத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் 400 kV மின் கடத்தல் கட்டமைப்புகளும் உருவாக்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது.

மின்சாரத் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கும் TBCB–BOOT முறையினைப் பின்பற்றி இந்தத் தனியார்மயமாக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருக்கிறது. TBCB என்பது கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையாகும். BOOT என்பது கட்டுதல் (Build), சொந்தமாக்குதல் (Own), இயக்குதல் (Operate), மாற்றுதல் (Transfer) என்ற நான்கு படிநிலைகளைக் கொண்ட முறையாகும். இந்தத் திட்டத்தின்படி, தனியார் முதலாளிகள் மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்புகளைச் சொந்தமாகக் கட்டி, இயக்குவார்கள். அவர்களுக்கு இந்தக் கட்டமைப்பின் வழியாகக் கடத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு ஆண்டிற்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயித்து, மின்சாரத் துறையின் மூலம் அந்தத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு 35 ஆண்டுகள் கட்டணம் வசூலிப்பதன் மூலம் தனியார் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடித்த பிறகு, அந்தக் கட்டமைப்பு அரசின் கைகளுக்கு மாற்றிக் கொடுக்கப்படும்.

அதாவது, 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின் கடத்தல் கட்டமைப்பை அரசே உருவாக்கி, பொதுச் சொத்தாக வைத்திருப்பதற்குப் பதிலாக, அதை TBCB–BOOT முறையில் தனியார் முதலீட்டாளரிடம் ஒப்படைக்கிறது. அந்தத் தனியார் நிறுவனம் முதலீடு செய்து கட்டமைப்பை உருவாக்கி, ஒப்பந்தக் காலத்தில் மின் கடத்தல் சேவை மூலம் வருவாய் ஈட்டி, பின்னர் அதை அரசிடம் ஒப்படைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு ஏன் இந்தத் திட்டத்தில் தானே முதலீடு செய்யாமல் தனியார் முதலாளிகள் கைகளில் ஒப்படைக்க வேண்டும்? என்று கேட்டால், அரசின் கைகளில் பணம் இல்லை என்று வழக்கமான பல்லவியைப் பாடுகிறார்கள். தனியார் முதலாளிகள் மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை மடியில் கட்டி வைத்துக் கொண்டு இது போன்ற திட்டங்களைத் தொடங்குகிறார்களா? இந்தத் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பில், போட்டியில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் 35 கோடி ரூபாயை முன்வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 35 கோடி ரூபாய் பணம் கட்ட வசதி படைத்த எந்த நிறுவனமும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மீதமிருக்கும் தொகையை முதலாளிகள் வங்கிகளில் இருந்தும், வெளியில் இருந்தும் கடனாக வாங்கித்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்கள். அரசு கொடுக்கப்போகும் கட்டணத்திலிருந்து இந்தக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதுடன், தங்களது இலாபத்தையும் முதலாளிகள் எடுத்துச் செல்லப் போகிறார்கள்.

அரசிடம் பணம் இல்லை என்பது உண்மையான காரணமல்ல. முதலாளிகள் வாங்கும் கடனை அரசே வாங்கி, இது போன்ற கட்டமைப்புகளை உருவாக்கினால் அரசுக்கும், மின்சாரத் துறைக்கும், மக்களுக்கும் இலாபம் தானே. அரசு ஏன் அதனைச் செய்ய மறுக்கிறது? கோவை–அரியலூர் இடையே மின்சாரத்தைக் கடத்துவதற்கு தனியார் முதலாளிகளுக்குக் கொடுக்கப்படும் தொகை இறுதியாக மக்களிடமிருந்து மின்சாரக் கட்டணமாகத்தானே வசூலிக்கப்படும். இது ஏற்கெனவே மின் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தலையில் பெரும் சுமையாக இருக்கும் என்பது அரசுக்குத் தெரியும். தெரிந்துதான் இந்தத் திட்டத்தை அரசு உருவாக்குகிறது. அரசு ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, மின்சார உற்பத்தியில் தனியார்மயம் ஏன், எவ்வாறு புகுத்தப்பட்டது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே மாதிரியைக் கொண்டுதான் தற்போது மின்சாரப் பரிமாற்றத்தில் தனியார்மயம் கொண்டுவரப்படுகிறது.

மின்சார உற்பத்தியில் தனியார்மயம்

1990களுக்கு முன்னர் மின்சார உற்பத்தியில் பெரும்பாலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தன. 90களின் மத்தியில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்ட பிறகு, மின்சார உற்பத்தியில் தனியார் முதலாளிகள் நுழைய அனுமதிக்கப்பட்டது. 1992–1997 எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மின்னுற்பத்திக்கு ஒதுக்கி வந்த மூலதன ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. மாநில மின்வாரியங்கள், தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் (NTPC) போன்றவை புதிய மின்னுற்பத்தித் திட்டங்களைத் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. பழைய அனல் மின் உற்பத்தித் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், புதிதாக உருவான புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் (Renewable Energy), அதாவது, சூரிய ஒளி, காற்றாலை போன்றவை மூலம் மின்சாரம் தயாரிப்பதை முழுக்கத் தனியாருக்குத் தாரைவார்த்தது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 65% தனியார் முதலாளிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பொதுத்துறை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரக் கொள்முதல் என்பது சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் என்ற அளவில் செய்யப்படுகிறது. தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும் போது யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 7 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை கொடுத்து வாங்கப்படுகிறது. இது சாதாரண நேரத்தில் வாங்கும் விலை. அதுவே பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்சபட்ச மின் தேவைகளின் போது யூனிட் ஒன்றுக்கு 14 முதல் 17 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இருக்கிறது.

மின் பொறியாளர் சங்கத்தின் கூற்றுப்படி, தமிழ்நாடு மின்சார உற்பத்திக் கழகம்/மின்துறை ஆண்டுக்கு சுமார் ₹70,000 கோடியைத் தனியார் மின் கொள்முதலுக்குச் செலவிடுகிறது. அதாவது, அதன் மொத்த வருமானமான 1 இலட்சம் கோடி ரூபாயில் 70% தனியார் மின் கொள்முதலுக்கே போகிறது. இதுதான் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குவதற்கும், மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவதற்கும் காரணமாக இருக்கிறது.

மின்சார உற்பத்தியில் தோல்வியடைந்த அதே தனியார்மய மாடலை இன்று மின்சாரப் பரிமாற்றத்திற்கும் தமிழக அரசு கொண்டு வருகிறது.

மின்சாரம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், விவசாயத்திற்கும், தொழில்களுக்கும் இன்றியமையாத அடிப்படைப் பொதுச் சேவை. அதன் உற்பத்தி, கடத்தல், விநியோகம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மின்சார உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரித்து, அதன் விளைவாக மின் கொள்முதல் செலவைப் பொதுத்துறை ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கிய பிறகு, தற்போது மின் கடத்தல் கட்டமைப்பையும் தனியார் முதலீட்டிற்குத் திறந்துவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஒருபுறம், அரசிடம் நிதி இல்லை என்று கூறி பொதுத்துறையின் முதலீடுகள் குறைக்கப்படுகின்றன. மறுபுறம், தனியார் முதலாளிகள் முதலீடு செய்து உருவாக்கும் கட்டமைப்பிலிருந்து பல ஆண்டுகளுக்கு அவர்களுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. அரசிடம் பணம் இல்லாதது பிரச்சினை என்றால், அந்தப் பணத்தைத் தனியார் முதலாளிகள் எவ்வாறு திரட்டுகிறார்கள் என்பதும், அவர்களது கடனையும் இலாபத்தையும் இறுதியில் யார் செலுத்துகிறார்கள் என்பதும்தான் இங்கே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி.

பொதுத்துறை நிறுவனங்கள் கடன் வாங்கி உருவாக்கும் மின் கடத்தல் கட்டமைப்பு மக்களின் சொத்தாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மீண்டும் மின்சாரத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். ஆனால், அதே கட்டமைப்பைத் தனியார் நிறுவனம் உருவாக்கினால், அந்த முதலீட்டை மீட்டெடுப்பதற்கும் இலாபம் ஈட்டுவதற்குமான செலவு மின்சாரத் துறையின் மீது சுமத்தப்படுகிறது. இறுதியில் அந்தச் செலவு மின் கட்டணம், அரசின் நிதி உதவி அல்லது மின்சார வாரியத்தின் கடன் என ஏதாவது ஒரு வடிவில் மக்களையே சென்றடையும்.

எனவே இது தமிழக அரசு முன்வைப்பது போல வெறுமனே “அரசிடம் பணம் இல்லை; அதனால் தனியார் முதலீட்டை அனுமதிக்கிறோம்” என்ற எளிய பொருளாதாரத் தீர்வு அல்ல. மக்களின் பணத்தில் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உள்கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் நீண்டகால வருவாயை யார் பெற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவிலிருந்து இது உருவாகிறது. மின்சார உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கிய அதே தனியார்மயக் கொள்கை, தற்போது மின் கடத்தல் கட்டமைப்பிலும் நுழைகிறது.

மின்சாரத்தை சேமிப்பதிலும் தனியார் முதலாளிகளுக்கு வழிவிடும் அரசு

மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் தனியார்மயத்தைத் திணிப்பதோடு அரசு நின்றுவிடவில்லை. மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் கட்டமைப்பிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தேவையான நேரத்தில் பயன்படுத்துவதற்கு Battery Energy Storage System (BESS) எனப்படும் மின்கல சேமிப்பு அமைப்புகள் முக்கியமானதாக உள்ளன.

தமிழ்நாடு அரசு 2025-26 பட்ஜெட்டில் 4,000 MWh திறன் கொண்ட Battery Energy Storage System-ஐ உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. பகல் நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் சூரிய மின்சாரத்தைச் சேமித்து, மாலை நேர உச்சபட்ச மின் தேவையின்போது பயன்படுத்துவதன் மூலம் மின் விநியோகச் செலவைக் குறைக்க முடியும் என்று அரசு கூறியது.

ஆனால், இந்த மின்சாரச் சேமிப்புக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் முறை முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNGECL), 1,000 MWh திறன் கொண்ட Standalone Battery Energy Storage Systems-ஐ அமைப்பதற்காக Battery Energy Storage System Developers-ஐத் தேர்வு செய்யும் டெண்டரை வெளியிட்டுள்ளது. 500 MW × 2 மணி நேரம் என்ற அளவில் அமைக்கப்படும் இந்தத் திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் போட்டி ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.

தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எண்ணூர் அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்கு மின்கல சேமிப்பு அமைப்புகளை உருவாக்கும் திட்டம் தனியார் முதலாளிகள் கைகளில் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, பொதுத்துறை நிறுவனங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பதிலாகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவது, அந்த மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கட்டமைப்பை PPP முறையில் தனியாரிடம் ஒப்படைப்பது என்பதோடு, தேவையற்ற நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, தேவைப்படும் நேரத்தில் வழங்கும் கட்டமைப்பிலும் தனியார் நிறுவனங்களின் முதலீட்டைச் சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்படுகிறது. 

இதன் பொருள் என்ன? ஒரு தனியார் நிறுவனம் தனது முதலீட்டைக் கொண்டு மின்கல சேமிப்பு நிலையத்தை உருவாக்குகிறது. அந்த முதலீட்டுக்கான செலவு, கடன் மற்றும் வட்டி ஆகியவற்றைத் திருப்பிச் செலுத்துவதுடன், இலாபத்தையும் ஈட்டும் வகையில் அந்தச் சேவைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. மின்சாரத்தைச் சேமித்து வைத்து வழங்குவதற்காக செலுத்தப்படும் இந்தக் கட்டணம் இறுதியில் மின்சாரத் துறையின் செலவாகவே மாறுகிறது. அந்தச் செலவு மின் கட்டணம், அரசு வழங்கும் மானியம் அல்லது மின்சார வாரியத்தின் நிதிச் சுமை என ஏதாவது ஒரு வழியில் மக்களையே சென்றடையும்.

ஸ்மார்ட் மீட்டர்: மின்சாரத்தைப் பயன்படுத்தும் நேரத்திற்கும் கட்டணம்

மின்சார உற்பத்தி, சேமிப்பு, பரிமாற்றம் ஆகியவற்றில் தனியார்மயத்தை விரிவுபடுத்தும் அதே நேரத்தில், மின்சார நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதற்கான முக்கியமான கருவியாக ஸ்மார்ட் மீட்டர் மற்றும் Time-of-Day (ToD) எனப்படும் நேர அடிப்படையிலான மின் கட்டண முறை முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை ஒரு குடும்பம் ஒரு மாதத்தில் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தியது என்பதன் அடிப்படையில் அதன் மின் கட்டணம் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ToD கட்டண முறையில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதோடு, அது எந்த நேரத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதும் முக்கியமாகிறது. அதாவது, மின்சாரத் தேவையும் பயன்பாடும் அதிகமாக இருக்கும் பீக் ஹவர்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அதிக கட்டணமும், மின் தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு குறைந்த கட்டணமும் விதிக்கும் முறை இது.

ஸ்மார்ட் மீட்டர் மூலம் நாளின் வெவ்வேறு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைத் தனித்தனியாகக் கணக்கிட முடியும். இதன் மூலம் நுகர்வோரின் மின்சாரப் பயன்பாட்டை நேர அடிப்படையில் கணக்கிட்டு, அதற்கேற்ப கட்டணம் விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே சில நுகர்வோர் பிரிவுகளுக்கு Time-of-Day கட்டண முறை நடைமுறையில் உள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிய பல ஆண்டு மின் கட்டண ஒழுங்குமுறைகளிலும் ToD tariff-ஐ நடைமுறைப்படுத்துவது மற்றும் ஸ்மார்ட் மீட்டர் செலவுகளை மின் கட்டணத்தில் சேர்ப்பது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதன் பின்னணியில் அரசின் வாதம் என்னவென்றால், மக்கள் தங்களது மின் பயன்பாட்டை உச்ச நேரத்திலிருந்து குறைந்த கட்டண நேரத்திற்கு மாற்றிக் கொண்டால், அவர்களது மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதாகும். அதே நேரத்தில், மின் தேவையை உச்ச நேரங்களில் குறைப்பதன் மூலம் மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் செலவையும் குறைக்க முடியும் என்று அரசு வாதிடுகிறது.

ஆனால், மின்சாரப் பயன்பாட்டை நேரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதி எல்லா மக்களுக்கும் சமமாக இருக்கிறதா என்பதுதான் இங்கே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி. ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தி நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஒரு வணிக நிறுவனம் குறைந்த கட்டண நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு சாதாரண குடும்பத்தால் குழந்தைகள் படிக்கும் நேரத்தையும், உணவு சமைக்கும் நேரத்தையும், மின்விசிறி அல்லது விளக்குகளைப் பயன்படுத்தும் நேரத்தையும் மின் கட்டணத்திற்காக மாற்றிக் கொள்ள முடியுமா?

இதனால் ஸ்மார்ட் மீட்டர் என்பது வெறும் பழைய மின் மீட்டருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் புதிய தொழில்நுட்பக் கருவி மட்டுமல்ல. மின்சாரத்தை எந்த நேரத்தில் பயன்படுத்துகிறோம் என்பதையே மின் கட்டணத்தின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய கட்டண முறைக்கான அடித்தளமாக அது அமைகிறது.

மின்சாரத் தேவையின் உச்ச நேரத்தில் அதிக கட்டணம் விதிக்கப்படும் நிலையில், தங்களது மின் பயன்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாத குடும்பங்களே அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டி வரும். அதேவேளையில், மின்சாரச் சேமிப்பு, தொழில்துறை உற்பத்தி நேர மாற்றம் போன்ற வசதிகளைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் குறைந்த கட்டண நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். குடும்பங்கள் சமையல் செய்யும் நேரத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும், பொழுதுபோக்கிற்கான நேரத்தையும் இவ்வாறு மாற்றிக் கொள்ள முடியுமா? மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றால் மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறது மின்சார வாரியம்.

ஸ்மார்ட் மீட்டர் குறித்து பேசும்போது, “மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்” என்ற தொழில்நுட்ப அறிவுரையோடு அரசு நிறுத்திக் கொள்கிறது. ஆனால் மின்சாரத்தை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரமும் வசதியும் யாரிடம் இருக்கிறது என்பதையும் நாம் கேட்க வேண்டும். மின்சாரத்தின் விலையை சந்தை மற்றும் நேர அடிப்படையில் மாற்றும் இந்த முறை, மின்சாரத்தை ஒரு அடிப்படைப் பொதுச் சேவையாக அணுகுவதிலிருந்து சந்தை அடிப்படையிலான நுகர்வுப் பொருளாக மாற்றும் நடவடிக்கையின் தொடர்ச்சியே. 

மின்சாரம் விற்பனைக்கான பொருள் மட்டுமல்ல; அது மக்களின் உரிமை. மின் உற்பத்தியும், மின் கடத்தலும், மின் விநியோகமும் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் குறைந்த செலவில், அனைவருக்கும் சமமாகவும், தடையின்றியும் மின்சாரம் கிடைப்பதற்கான அடிப்படை உத்தரவாதம். அந்தப் பொதுக் கட்டுப்பாட்டை ஒவ்வொரு கட்டமாகத் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பது மின்சாரத் துறையின் வளர்ச்சி அல்ல; அதன் தனியார்மயமாக்கலின் அடுத்த கட்டமே.

– தொடரும்

  • அழகு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன