மகளிர் உரிமைத்தொகை 5000
தேர்தலில் வெற்றி பெறுவதே நமது இலக்கு!
பாசிச எதிர்ப்பெல்லாம் நமக்கெதற்கு!

பிகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைப் போலவே, வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே ஐந்தாயிரத்தை திமுக கொடுத்துள்ளது. ஆனால், பாஜக கொடுத்த பத்தாயிரத்தை ஓட்டுத்திருட்டு என்று விமர்சித்த திமுக ஆதரவாளர்கள், ஐந்தாயிரம் கொடுப்பதை சமூக நீதி என்று முட்டுக் கொடுக்கின்றனர்,

“இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும்.

வேலைக்கு செல்ல கடினமான கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும்.

உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிக்க முடியும்…?

குடும்பத்தினருக்கு மாத்திரை மருந்து வாங்கித் தர முடியுமா?

குழந்தைகளுக்கான கல்விச் செலவை சமாளிக்க முடியுமா?”

இது மகளிர் உரிமைத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாயை விடுவித்த உடனே வெளிவந்த காணொளியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தது. முதல்வருக்குத்தான் ‘மக்களின் மீது என்னவொரு அக்கறை!’.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கு மூவாயிரம் மற்றும் கோடை கால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் என மொத்தம் ஐந்தாயிரம் ரூபாயை 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் சில நாட்களுக்கு முன்பு வரவு வைத்துள்ளனர். இதற்காக ஏறத்தாழ ஆறாயிரத்து ஐந்நூறு கோடியை செலவழித்துள்ளனர். மாதமாதம் கொடுக்க வேண்டியத் தொகையை சேர்த்து முன்கூட்டியே கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தலைக் காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த சதிவேலைகள் நடப்பதால், முன்கூட்டியே கொடுத்திருப்பதாக காரணம் கூறுகிறார் முதல்வர்.

ஆனால் வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்துப்பார்க்கும் போது, ஜனவரியில் பொங்கல் தொகுப்பு மூவாயிரம் மற்றும் அம்மாத மகளிர் உரிமைத்தொகை ஆயிரம், தற்போது ஐந்தாயிரம் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாயை தேர்தலுக்கு முன்பு பட்டுவாட செய்திருக்கிறது திமுக அரசு. இது கிட்டத்தட்ட கடந்தாண்டு நடந்த பிகார் தேர்தலின் போது அம்மாநில முதல்வர் மகளிர் உதவித் தொகை என்று தலா பத்தாயிரம் ரூபாயை பாஜக கொடுத்ததை ஒத்ததுதான். இந்தப் பணபட்டுவாடாக்கள், திமுக-வின் தேர்தல் வியூக நிறுவனமான PEN (Populus Empowerment Network) ஆலோசனையின் அடிப்படையில் தனி அதிகாரிகள் குழுவைக் கொண்டு அமல்படுத்தப்பட்டிருப்பதாக பத்திரிக்கைகள் கூறுகின்றனர்.

மருத்துவம் மற்றும் கல்விக்கு மட்டுமே சராசரியாக மாதம் ஐந்தாயிரத்திற்கு மேல் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் குடும்பங்களுக்கு இந்த ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை அவர்களின் குடும்பச் செலவிற்கு பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தராமலும், கல்வி, மருத்துவம், மின்சாரம் தொடங்கி குப்பை அள்ளுவது வரை தனியார்களிடம் தாரைவார்த்து மக்களை ஒட்டச்சுரண்டியும், அரசு அலுவலகங்கள் தொடங்கி தனியார் தொழிற்சாலைகள் வரை பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்விற்கானப் போராட்டத்தை ஒடுக்கியும் வரும் திமுகவிற்கு, ஒரே இரவில் ஞானம் வந்து, மே மாதம் வரப்போகும் கடும் வெப்பதினால் அவதிப்படும் மக்களை எண்ணி வேதனையடைந்து, பிப்ரவரியிலேயே உதவி செய்வதாக முதல்வர் கதையளப்பதை குடிபோதையில் இருப்பவன் கூட நம்பமாட்டான்.  

ஆனால். திமுக கூட்டணிக் கட்சிகள் தொடங்கி திராவிட இயக்க ஆதரவாளர்கள், வலது இடது போலி கம்யூனிஸ்ட்டுகள், முன்னாள் புரட்சியாளர்கள் வரை பலரும் பணம் கொடுத்தை ஆதரித்து திராவிட மாடலின் சாதனை, சங்கிகளின் சதி முறியடிப்பு, பெண்களுக்கான சமூகநீதி என்று பல்வேறு அடைமொழிகளைச் சொல்லி திமுகவிற்காக பிரச்சாரம் செய்கின்றனர்.

மக்களின் நலனிலிருந்துதான் திமுக இதை செய்ததென்று சொன்னால், சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டாமா? குறைந்தபட்ச ஊதிய உயர்விற்காக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தியிருக்க வேண்டாமா? இதற்கான செலவுகள் கூட மிகக்குறைவுதான். தொழிலாளர் உரிமை, தனியார்மய எதிர்ப்பு, உண்மையான பாசிச எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பேசும் போது தடியை ஓங்கும் திமுக அரசாங்கத்தை கண்டித்து அதிர்ந்து கூட இவர்கள் பேசுவதில்லை.    

திமுக-வின் இந்த பண பட்டுவாடா திட்டத்திற்கு பின்னால் இரண்டு பொதுவான நோக்கங்கள் உள்ளன. ஒன்று, அரசு கல்வி, மருத்துவம், போக்குவரத்து மற்றும் இதர மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவையான போதிய நிதியை ஒதுக்காமல் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு ஒரு சிறு தொகையை மக்களுக்கு சலுகையாக வழங்குவதன் மூலம், மக்கள் தங்களுடைய அனைத்து தேவைகளுக்கும் தனியாரையே நம்பி இருக்க வேண்டிய நிலையை நோக்கி தள்ளுவது. இதை சிலிண்டருக்கான மானியத்தை மோடி ஒழித்ததோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

இரண்டாவது, இலவச பஸ் பயணம் தொடங்கி உரிமைத் தொகை வரை பெண்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களுக்குப் பின்னால், பெண்கள் ஓட்டுக்களை கவர்வதும் கூடவே அந்திய மூலதனத்தின் நலனுக்காக, பெண்களை உழைப்புச் சந்தைக்காக தயார்ப்படுத்துவதும் அடக்கியிருக்கிறது. பாக்ஸ்கான் உள்ளிட்ட பல கார்ப்பரேட் தொழிற்சாலைகளில், மிகக்குறைவான ஊதியத்திற்கு பெண்களின் உழைப்புச் சக்தியை முதலாளிகள் சுரண்டுவதற்கும், தடையில்லாத உற்பத்தியை உத்திரவாதப் படுத்துவதற்கும் பெண் தொழிலாளர்கள் அவசியம் என நிதி மூலதனம் எண்ணுகிறது. இதன் விளைவாகத்தான் வேலை நேரத்தை பன்னிரண்டு மணிநேரமாக உயர்த்தியும் இரவு நேரங்களில் பெண்களை பணியர்த்திக்கொள்ளலாம் என்றும் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளனர். அதேவேளையில், மகப்பேறுகால சலுகைகள், ஊதிய உத்திரவாதம், இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை தொழிலாளர் சட்டத் தொகுப்பில் உத்திரவாதப்படுத்த மறுகின்றனர். இதனை திராவிட மாடலும் மறைமுகமாக ஆதரிக்கவேச் செய்கிறது.

எனவே, மக்கள் நலத்திட்டங்களுக்கான அரசின் செலவினங்களை குறைப்பது, முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு சக்தியை உருவாக்கித் தருவது மற்றும் பெண் வாக்காளர்களின் ஓட்டை வாங்குவது  என்ற நோக்கங்களிலிருந்தே இந்தப் பணப்பட்டுவாடா திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, திமுகவின் ஆதரவாளர்களோ, பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கு திராவிட மாடல் அரசாங்கம் செய்யும் சமூக நீதி அடிப்படையிலான மக்கள் நலத்திட்டங்கள் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.

கடந்த அக்டோபரில், பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, எழுபத்தைந்து இலட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என நிதீஷ்குமார் அறித்தார். தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போதே வங்கிக் கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் வரவும் வைக்கப்பட்டது. SIR மூலமாக ஓட்டைத் திருடுவதோடு மட்டுமல்லாமல் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பெண்கள் ஓட்டையும் திருடுகிறார்கள் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் பாஜகவை விமர்சித்தன.   

பிகாரில் நிதீஷ்குமார்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு பத்தாயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை முக்கிய காரணியாக அமைந்ததைப் போல, வரப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பேறவேண்டும் எனபதைக் கொண்டே மக்கள் கைகளில் பணத்தை இரைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், பாஜக கொடுத்தப் பத்தாயிரத்தை ஓட்டுத்திருட்டு என்று விமர்சித்த திமுக ஆதரவாளர்கள், திமுக அரசாங்கம் பணம் கொடுப்பதை சமூக நீதி என்று வியாக்கியானம் செய்கின்றனர். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், பாசிச பாஜகவை திமுகவால் மட்டுமே வீழ்த்த முடியும் ஆகையால். பாசிச பாஜகவை வீழ்த்த திமுகவை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என நம்புகின்றனர். எனவே வரும் தேர்தலில் திமுக ஜெயிக்க வேண்டும் என்கிறனர். திமுகவும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை தமிழகத்திற்கும் பாஜகவிற்குமான போர் என்று பிரச்சாரம் செய்கிறது.

கொள்கையளவில் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக, பாஜகவின் காலடியைத்தான் பின்பற்றி வந்திருக்கிறது. பாஜக முன்வைக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளே தமிழகத்திலும் பின்பற்றப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் தீவிர தனியார்மயமே கோலோச்சுகிறது. அந்நிய முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பளமும் தொழிலாளர்களுக்கு பட்டை நாமமும் பரிசளிக்கப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, திமுக இந்துக்களின் நண்பன் என்பதை நிருபிக்க, இந்து மத நடவடிக்கைகளுக்காக பல ஆயிரம் கோடிகளை திராவிட மாடல் அரசாங்கம் செலவு செய்கிறது.

மொத்த அரசு கட்டமைப்பும் காவிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருக்கின்ற நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காவி பாசிசத்தை தடுத்து நிறுத்த முடியுமென்பது கற்பனையே. இருப்பினும் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பைத் தாண்டி, பாஜகவின் காவி-கார்ப்பரேட் கொள்கைகளை திமுக எதிர்த்ததில்லை. நீட் தேர்வைப் போலவே, மேற்சொன்னவைக்குக் கூட மக்களைத் திரட்டி போராடாமல் நீதிமன்றங்களை கேடயமாகக் கொண்டு காற்றில் கத்தி வருகிறது திமுக. நடைமுறையில், தேர்தலில் வெற்றி பெறுவதே நமது இலக்கு! பாசிசமெல்லாம் நமக்கெதற்கு! என்கிறது திமுக. ஆனால் அதன் ஆதரவாளர்களோ திமுக ஜெயித்தால் தான் காவி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நம்மை நம்பச் சொல்கின்றனர்.  

  • மாணிக்கம்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன