செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழில் வெளியான கட்டுரை
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய ‘அரசு சாரா அமைப்பு’ எனக் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அளவை பற்றி மட்டுமே மோடி கூறியிருக்கிறார். அதன் தன்மை பற்றிய உண்மையை ஒருபோதும் கூறுவதில்லை. இதிலிருந்தே அது ஒரு கேடான அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாம் நினைப்பது போல சாதாரண அமைப்பல்ல. இன்று உலகிலுள்ள பாசிச அமைப்புகளிலேயே மிகப் பெரியதும், மிக வலிமையானதும், நூறாண்டு கால அமைப்பு பலமும், இரண்டாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய சித்தாந்தப் பின்புலமும் கொண்ட கொடிய பாசிச பயங்கரவாத அமைப்பாகும். இத்தகையதொரு பாசிச அமைப்பு உலகில் வேறெங்கும் இருந்ததில்லை. இப்போதுவரையும் வேறெங்குமில்லை.
தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் சூரப்புலிகள் அனைவரும் தேர்தல் மனக்கணக்கு, தொகுதிப் பங்கீடு, காவிகளின் பிரச்சாரத்திற்கான எதிர்வினை போன்றவற்றிலேயே தங்களது அதிகப்படியான கவனத்தை குவிக்கின்றனர்.
வெறுமனே ஆர்.எஸ்.எஸ்-இன் பா.ஜ.க மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற வெளிப்படையான அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி காரசாரமான விவாதத்தை நடத்துகின்றனர். இதன் மூலம் பாசிசத்தை தேர்தலில் வீழ்த்த முடியும் என்று மக்களை நம்பவைப்பதற்கு போதுமான அளவிற்கு மட்டுமே வினையாற்றுகின்றனர். உண்மையில், ஆர்.எஸ்.எஸ்-இன் பலம், ஆயுதங்கள் அவற்றின் பரிமாணத்தை விளக்கி பாசிச சக்திகளை களத்தில் வீழ்த்துவதன் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு உணர்த்தி அணிதிரள விடாமல் தடுப்பதில் இந்த சூரப்புலிகள் முன்வரிசையில் நிற்கின்றனர்.
இவர்கள் கூறுவது போல பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடித்துவிட்டால் பாசிசத்தை இந்தியாவில் இருந்து விரட்டி விடலாம் என்பதும் உண்மையல்ல. மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் தனது பல்வேறு கிளைகள் மூலம் பரப்பியுள்ள இந்துத்துவ மனநிலையை எதிர்த்து செயல்பட முடியாமலும், தாங்கள் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் என்று இந்துக்களிடையே பிரச்சாரம் செய்தால் தான் தேர்தலில் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்ற நிலையிலேயே இன்று எதிர்க்கட்சிகளின் நிலைமை இருக்கிறது.
உதாரணமாக கூற வேண்டுமானால், மேற்கு வங்கத்தில் ஒன்றிய அரசின் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் மம்தா பேரணி நடத்திய இரண்டே வாரங்களில் காவிக்கும்பலின் அடாவடித்தனம் அங்கு அரங்கேறி வருகிறது. பங்களாதேஷில் ஒரு இந்துவை கொன்று விட்டார்கள் என மேற்கு வங்கம் முழுவதும் காவி அமைப்புகள் வெறியாட்டம் போட்டு வருகின்றனர். இக்கலவரங்கள் அனைத்தும் சனாதனி ஐக்கிய மஞ்ச் எனும் காவி அமைப்பு மூலமே நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கமே முடங்கும் அளவுக்கு சில நாட்களாக இவை உக்கிரமடைந்தன.
இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் பங்களாதேஷ் உடனான வர்த்தகத்தை நிறுத்துவோம் எனக் கூறி பெட்ராபோல் துறைமுகத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர், காவிகள். மேற்கு வங்க அரசால் இக்கலவரத்தையும், அது எழுப்பிய இந்துத்துவ தாக்கத்தையும் எதுவும் செய்ய முடியாமல் இணங்கி போக வேண்டிய நிலையில் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடைப்பெற்ற முருகன் மாநாட்டை,ப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்-க்கு இந்த மாநாடு வெற்றியா அல்லது தோல்வியா? என்பது முக்கியம் இல்லை. மாறாக, தமிழ்நாட்டில் தங்களது பாசிச கருத்தியலுக்கு வலுவானதொரு மக்கள் ஆதரவை – அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முருகனைச் சுற்றி இயக்கத்தை முன்னெடுப்பதில் காவி பாசிச சக்திகள் குறியாக இருந்திருக்கின்றன. தங்களது முயற்சி பலனளிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால், ஒரு நாள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தங்களது பாசிச சித்தாந்தத்திற்கு ஆதரவு கிடைக்கும் என அவர்கள் வேலைசெய்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் கார்த்திகை தீபம் என தமது அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
“எந்த ஷா வந்தாலும் திராவிட மாடல் ஆட்சியை ஒன்றும் செய்து விட முடியாது” என மார்தட்டும் மு.க.ஸ்டாலினின் தி.மு.க அரசோ காவிகளின் இந்துத்துவ நச்சுப் பிரச்சாரத்தையும் அவர்களின் செயல் திட்டங்களையும் தடுக்க முடியாமல் அனைத்துலக முருகன் மாநாட்டையும், பள்ளிகளில் கந்த சஷ்டி கவசம் எனும் யுக்தியையும் கையில் எடுத்து, தானும் “இந்துக்களுக்கு ஆதரவான கட்சி” என்று காட்டும் அவலநிலைக்கு ஆளானது.
கேரளாவில் சி.பி.எம் அரசோ, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், ஐயப்ப மாநாட்டை துவக்கி தனது இந்துப் பாசத்தை வெளிக்காட்டிக் கொண்டது. அயோத்திக்கு இராமன் என்றால், தமிழகத்தில் முருகன், கேரளாவில் ஐயப்பன் என ஆர்.எஸ்.எஸ்-சின் பாசிச வடிவங்களை எதிர்க்கட்சிகள் தேர்தல் அரசியலுக்காக மனமுறுக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் தனது வலைப்பின்னலை வேகமாக பரப்பி வருகிறது. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமாலை எனும் பகுதியில் பொங்கல் விழா என்ற பெயரில் காலூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தற்போது அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஷாகா பயிற்சி என்ற பெயரில், துப்பாக்கி சுடும் ஒத்திகையை போலீஸ் பாதுகாப்புடன் நடத்தியதை நக்கிரன் இதழ் சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது.
பாசிசத்தை வீழ்த்தப் போவதாக பிரகடனப்படுத்தும் இந்தியா கூட்டணிக் கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து கூட மக்கள் மத்தியில் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் கட்டியமைப்பது இல்லை என்பதற்கு மேற்கூறிய நிகழ்வுகளே உதாரணங்களாக உள்ளன.
ஆர்.எஸ்.எஸ்-ஐ பொறுத்த வரையில் தேர்தலில் வெற்றி, நாடாளுமன்ற அதிகாரம் என்ற ஆயுதத்தை மட்டும் நம்பி அவர்கள் இல்லை. அவர்களின் இலக்கு இச்சமுகத்தை இந்து இராஷ்டிரமாக மாற்றுவதே ஆகும்.
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர், ஆர்.எஸ்.எஸ் என்பது சமூகத்தில் ஒரு அமைப்பாக இருக்க கூடாது என்றும் அது சமூகத்தினுடைய அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் “ஆர்.எஸ்.எஸ் சமூகத்திற்குள் ஒரு தனித்துவமான மற்றும் பிரத்யேகமான ஒரு அமைப்பை உருவாக்கும் எண்ணத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை; அதன் தொடக்கத்திலிருந்தே, சமூகத்தின் ஒரு பகுதியை மட்டுமல்லாமல், முழு சமூகத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக உருவாக்குவதையே அது தனது இலக்காக கொண்டுள்ளது: என்றார், கோல்வால்கர். ஆர்.எஸ்.எஸ்-சின் தற்போதைய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கரோ, “ஆர்.எஸ்.எஸ் என்பது வலைப்பின்னல்களின் ஒரு வலைப்பின்னல்” என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கூறிக்கொண்டாலும், இன்று அது நூறாண்டுகள் கடந்து நாடு முழுவதும், உலகின் பல இடங்களில் எல்லா மட்டங்களிலும், அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் கிளை பரப்பி நிற்கிறது. அதற்கு உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் பதிலி அமைப்புகளாக (proxies) செயல்படுகின்றன.
வெளித்தோற்றத்தில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறிக்கொள்ளும் இந்தப் பதிலி அமைப்புகள் பற்றி மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியரான பெலிக்ஸ் பால் மற்றும் அவரது குழுவும் சுமார் ஆறு ஆண்டுகள் ஆய்வு நடத்தி ஆர்.எஸ்.எஸ்-சின் வலைப்பின்னல் என்பது 2600-க்கும் மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியிருக்கிறது என்பதை தரவுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இத்தரவுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் தனது வலைப்பின்னலை ஒருங்கிணைக்கும் விதம், இவைகளை இயக்கும் முறை, இந்துத்துவக் கொள்கைகளை பரப்பும் யுக்தி, இடத்திற்கு தகுந்தாற் போல அமைப்புகளை உருவாக்கும் முறை, இவைகளுக்கு வழங்கப்படும் நிதிகள் போன்றவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இதை டிசம்பர் மாத கேரவன் இதழ் வெளியிட்டிருக்கிறது.

‘இந்தப் பதிலி அமைப்புகளை எல்லாம் தனித்தனியாக பார்க்கும் போது இவைகள் நமக்கு குறிப்பிடத்தக்கவையாகத் தெரியாது; ஆனால், அவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, ஒரு தெளிவான சித்திரத்தை நமக்கு காட்டுகின்றன; அவற்றுக்கு இடையேயான இடைவெளி, ஆர்.எஸ்.எஸ் மறைக்க முயலும் விசயம் போன்றவை இந்தப் பதிலி அமைப்புகள் அனைத்தும் ஒரு தொளதொளப்பான தீவுக்கூட்டம் அல்ல, மாறாக ஆர்.எஸ்.எஸ்-சின் மைய அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஒரு ஒற்றை வலையமைப்பு என்பதை தெளிவுபடுத்துகிறது’ என்கிறார் பெலிக்ஸ்.
ஆர்.எஸ்.எஸ் தனது வலைப்பின்னல் மூலம் உருவாக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமைப்புகளும், இவைகள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பப்படும் பாசிச கருத்துக்களுமே ஆர்.எஸ்.எஸ்-சின் பிரதான ஆயுதங்கள். தேர்தலில் மோடியை தோற்கடித்து விட்டால் பாசிசத்தை முறியடித்து எல்லாம் சுமூகமாக முடிவுக்கு வரும் என்று மனப்பால் குடிக்கும் சூரப்புலிகளின் முகத்தில் ஓங்கி அடிக்கிறது பெலிக்ஸின் ஆய்வு.
ஜம்முவின் அம்பல்லா பகுதியில் உள்ள வேத மந்திர் வளாகம் எனும் ஒரே முகவரியில் மட்டும் ஆர்.எஸ்,எஸ்-சுக்கும், தமக்கும் தொடர்பில்லை என்று கூறிக்கொண்டு கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என 21 பதிலி அமைப்புகள் செயல்படுகின்றன.
இம்முகவரியின் கீழ் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கான இல்லம், ஜம்மு & காஷ்மீர் பசு பாதுகாப்பு சமிதி, சாந்தி சாதனா ஆசிரமம், இயற்கை சிகிச்சை மையம், ஜெய் கார்கில், ஜெய்பாரத் கோஷ் டிரஸ்ட், வேத மந்திர் பால்நிகேதன் (சிறுவர்களுக்கான அனாதை இல்லம்) வேத மந்திர் பாலிகனிகேதன் (பெண்களுக்கான அனாதை இல்லம்) வேத மந்திர் தொழிற்பயிற்சி மையம், ஹோமியோபதி மருந்தகம், சுவாமி விவேகானந்தா மருத்துவ மிஷன், ஜம்மு காஷ்மீர் சஹாய்தா சமிதி (எல்லையில் வாழும் மக்களுக்கான அமைப்பு), அகில பாரதிய பூர்வா சைனிக் சேவா, மகாராஜா பிரதாப் சிங் வேத் வித்யாலயா மற்றும் வேறு சில அமைப்புகளும் அடங்கும்.
இந்த நிறுவனங்களெல்லாம் பல்வேறு முகாந்திரங்கள், நடவடிக்கைகளின் பெயரில் ஜம்மு மக்களிடையே அனுதினமும் பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த 21 நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனக் கட்டமைப்பின் கீழ் அதன் அமைப்பு பொறுப்புகளை வகிக்கும் ஒரு சில நபர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன.
இதில் வேதமந்திர் பால்நிகேதன் நிறுவனத்தின் நான்கு நிர்வாகிகளும் ஆர்.எஸ்.எஸ்-சில் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர். இதன் தலைவரான கெளதம் மெங்கி என்பவர் ஜம்முவிற்கான ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இதன் துணை செயலர் மிட்டல் என்பவர் சேவா பாரதியின் கிளை பிரிவான பாரதிய சிக்ஷா சமிதியின் பொருளாளராகவும் இருக்கிறார். இதன் துணைத் தலைவரான அமித் சர்மா என்பவர் பாரத் விகாஸ் பரிஷத்தின் ஜம்முவின் தலைவராக இருக்கிறார். வேத் மந்திர் குழுவின் தலைவர் சுரேஷ் சந்தர் குப்தா, மாதா வைஷ்ணோ லோக் கல்யாண் சன்ஸ்தானத்தின் தலைவராக இருக்கிறார் .

ஜம்முவின் வேத மந்திர் வளாக முகவரியின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் தமது நிறுவனக் கட்டமைப்பு மற்றும் தொடர்புகளை ஜம்முவையும் தாண்டி இந்தியா முழுக்க விரிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக, ஜம்முவின் மகாராஜா பிரதாப் சிங் வேத் வித்யாலயா, புனேவைச் சேர்ந்த மகரிஷி வேத் வியாஸ் பிரதிஷ்டான் என்ற அமைப்பால் நிறுவப்பட்டது. இதன் நிறுவனர் கோவிந்ததேவ் கிரி ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், இவர் வி.எச்.பி-யின் கீழ் இயங்கும் இராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளராகவும் உள்ளார், மேலும் கோல்வால்கரின் பெயரால் அழைக்கப்படும் நாக்பூர் மருத்துவமனையான மாதவ் நேத்ராலயாவின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்
வேத மந்திர் வளாகத்தில் செயல்படும் மற்றொரு அமைப்பான கேசர் பென் வெல்ஜி போபட் பவன், அமெரிக்காவில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-சின் நிதிதிரட்டும் அமைப்பான இந்தியா டெவலப்மென்ட் அண்ட் ரிலீஃப் ஃபண்ட் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், போபட் பவனிற்கு அமெரிக்காவில் இயங்கும் வி.எச்.பி மூலம் நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், ஜனக் மதன் பெண்கள் விடுதிக்கு சேவா இன்டர்நேஷனலின் கனடா பிரிவு நிதியுதவி அளித்திருக்கிறது.
ஜம்முவில் செயல்படும் இந்த வேத மந்திர் வளாகம், ஜம்மு மக்களோடு பரந்த தொடர்பை ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் பிரிவான சமஸ்கிருத பாரதியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடுகள் முதல், உள்ளூர் திருவிழாக் கொண்டாட்டங்கள், சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. ஜம்முவில் இயங்கும் ஒரு சிறிய விடுதியைக் கூட ஆர்.எஸ்.எஸ் தனது நிறுவனக் கட்டமைப்பின் கீழே வைத்துக் கட்டுப்படுத்துவதிலிருந்து தனது நிறுவனக் கட்டமைப்பை இடைவிடாது வெறித்தனமாக விரிவுபடுத்திக் கொண்டே வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதுமட்டுமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலை மட்டத் தலைவர்களின் கூட்டமும் இவ்வளாகத்தில் நடைபெறுகிறது என்றும், அவர்கள் தங்களது மைய அதிகாரத்தின் மூலம் ஜம்முவின் இந்த 21 அமைப்புகளின் செயல் திறன்களை விவாதிக்கிறார்கள் என்கிறார், பெலிக்ஸ்.
ஜம்முவில் மட்டுமின்றி நாடெங்கும் உள்ள ஆர்.எஸ்.எஸ்-சின் 46 பிராந்தியங்களிலும் அதன் கீழ் செயல்படும் பல்வேறு அமைப்புகள் அதன் நிறுவனக் கட்டமைப்பின் கீழ் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களின் மைய அதிகாரத்தின் மூலமே கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கென இத்துணை அமைப்புகள் பிரத்யேக வடிவங்கள் எடுக்கின்றன. வித்யா பாரதி பஞ்சாபில் சர்வஹித்காரி சிக்ஷா சமிதி என்றும், சேவா பாரதி கர்நாடகாவில் இந்து சேவா பிரதிஷ்டானம் என்றும், வன்வாசி கல்யாண் ஆசிரம் ஜார்க்கண்டில் வன்வாசி கல்யாண் கேந்திரா என்றும் மாற்றுப் பெயரில் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு துணை அமைப்புகளும், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்குகின்றன. அந்த நிறுவனங்கள் மீண்டும் தங்களின் சொந்த துணை நிறுவனங்களை உருவாக்குகின்றன. உத்தரகாண்டின் சிதர்கஞ்சில் உள்ள ஒரு சிறிய விடுதியான பரா ராணா ஸ்மராக் சத்திரவாஸ், மூன்று படிநிலைகள் வழியாக ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பை கொண்டிருக்கிறது. வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் பிராந்தியப் பிரிவான சேவா பிரகல்ப சன்ஸ்தான் மூலம் நிறுவப்பட்ட பரா ராணா ஸ்மராக் சமிதி வழியாக இந்தத் தொடர்பை நாம் காண முடியும். இந்த வனவாசி கல்யாண் ஆசிரமம் அங்கீகரிக்கப்பட்ட 36 ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளில் ஒன்றாகும்.
பெங்களூரில், கேசவ கிருபா சம்வர்தனா சமிதி என்று அழைக்கப்படும் அபியுதயா, யூத் ஃபார் சேவா, வித்யா சேத்னா மற்றும் உள்ளூர் சேவா பாரதி அலுவலகம் ஆகிய நிறுவனங்கள் ஒரே முகவரியின் கீழ் செயல்படுகின்றன. அகோலாவில் உள்ள ஆதர்ஷ் சன்ஸ்கார் மண்டலின் அலுவலகமும், டாக்டர் ஹெட்கேவார் இரத்த வங்கிச் சேவையும் ஒரே முகவரியில் இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரிலும் ஆர்.எஸ்.எஸ்-சின் அலுவலகங்கள் ஒரே முகவரியின் கீழ் அதன் மைய அதிகாரத்திற்குட்பட்டே செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்-சின் வெளிநாட்டுப் பிரிவான இந்து ஸ்வயம் சேவக்கின் துணைத் தலைவரான ரமேஷ் பூதாடா என்பவர் ஸ்டார் பைப் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் முகவரியின் கீழ் ஹூஸ்டனின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகமான கேசவ் ஸ்மிருதியும், அமெரிக்காவின் VHP-இன் தலைமை அலுவலகமும் இயங்கி வருகிறது. SVYASA என்ற யோகா அறக்கட்டளை, கிரேட்டர் ஹூஸ்டன் இந்துக்கள் எனும் அமைப்பின் தலைமை அலுவலகம், VHP மற்றும் HSS-இன் இளைஞர்களுக்கான முகாம், RSS தலைவர்கள் உரைகள் நிகழ்த்தும் இடம், HSS-ஆல் இரகசியமாக நடத்தப்படும் நிதி திரட்டும் பிரிவான சேவா இன்டர்நேஷனல் போன்றவைகளும் இம்முகவரியின் கீழ் தான் இருக்கிறது.
ரமேஷ் பூதாடா பரம சக்தி பீடம் ஆஃப் அமெரிக்கா, அமெரிக்காவின் இந்து சங்கம், ராம் தேவின் வெளிநாட்டு அமைப்பாகச் செயல்படும் பதஞ்சலி யோக்பீத் அறக்கட்டளை போன்றவற்றில் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் வெளிநாட்டு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்கிறார். இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள கிளைகளை ஒருங்கிணைப்பதில் ஆர்.எஸ்.எஸ் வெறித்தனமாக வேலை செய்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது.

இந்தியாவில் மட்டும் 2240 அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் வைத்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 76 அமைப்புகள் இருக்கின்றன. கன்னியாகுமரியில் உள்ள சாராதாதேவி அன்பு இல்லத்தில் தொடங்கி திருநெல்வேலியின் அன்னை காந்திமதி அம்பாள் அன்பு இல்லம் முதல் சென்னையின் ராமானுஜம் மில்லியனம் டிரஸ்ட் வரை அடங்கும். இவைகள் அனைத்தும் வெளிப்படையாக பரிச்சயம் இல்லாத அமைப்புகள் என நாம் கடந்து போக முடியாது.
பழங்குடியினர், தலித்துக்கள் மத்தியில் வேலை செய்வதற்கென உருவாக்கப்பட்ட வனவாசி கல்யாண் ஆசிரமம் 1970-ஆம் ஆண்டுகளிலிருந்து தீவிரமாக வேலை செய்து வந்தது. மேலும் பல துணை அமைப்புகளை நிறுவியது. பழங்குடியினருக்கு கோவில், மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுதல் என்ற பெயரில் அங்கு வசிக்கும் பூர்வ குடிகள் இந்துக்களே எனும் நச்சுக் கருத்துக்களை பரப்பி வந்தது.
தற்போது கிறித்துவத்திற்கு மாறிய பழங்குடியினர் இறந்தால் அவர்களின் உடலை புதைக்கவிடாமல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் வேலையில் காவி பாசிசக் கும்பல் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடி வரும் பழங்குடியினருக்குள் பிளவை உண்டாக்க கிறிஸ்துவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதமும், கார்ப்பரேட் பாசிசமும் இணைந்த வீரிய ஒட்டுரகமான காவி-கார்ப்பரேட் பாசிச தாக்குதலை வனவாசி கல்யாண் ஆசிரமம் மூலம் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்தியுள்ளது ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு.

காவிப் பாசிஸ்டுகள் வெறுமனே இந்துத்துவ நச்சுப் பிரச்சாரத்தை மட்டும் செய்வதில்லை. வர்க்க ரீதியாகவும் பிளவுகளை உண்டாக்கும் வேலைகளை திட்டமிட்டு செய்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-சின் தொழிற்சங்க பிரிவான பி.எம்.எஸ்-சின் கீழ் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை திரட்டி வைத்திருக்கிறது. இந்த தொழிற்சங்க அமைப்புகள் மூலம் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், திட்டங்கள், சட்டங்களை நியாயப்படுத்தும் நச்சுக் கருத்துகளை நாடு முழுவதும் பரப்புகின்றனர். ஒவ்வொரு சமூகப் பிரச்சினையிலும் மக்களை இந்துத்துவா கண்ணோட்டத்துடன் பார்க்க பயிற்றுவிக்கின்றனர்.
மேற்கூறிய பிரச்சார அமைப்புகளையெல்லாம் தாண்டி இரகசிய, அரை இரகசிய படைகளையும் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வைத்துள்ளது. இந்து ஜாக்ரன் மன்ச், இந்து தர்ம ரக்ஷா சமிதி மற்றும் ராஷ்ட்ரிய உத்சவ் மண்டல் போன்றவை இவர்களின் இரகசிய அமைப்புகளாகும். இவர்கள் வெறும் கூலிப்படைகள் மட்டுமல்ல, நாடி நரம்பெல்லாம் இந்துமதவெறிக் கருத்துகளால் ஊறிப்போயுள்ளனர். எனவேதான், பாசிசத்தை யார் எதிர்த்தாலும், ஏன் எழுதினால், பேசினால் கூட இவர்களால் கொலை செய்யப்படுவார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களின் படுகொலைகளே இதற்கு சாட்சி.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல்வேறு பிரிவினர்களிடையே பாசிச வெறியூட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவது மட்டுமின்றி ஆயுதப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. சமூகத்தின் உதிரிப் பிரிவினரிடமிருந்து திரட்டப்பட்ட காவிகள் இஸ்லாமிய மக்களை அச்சுறுத்துவதற்கும், சிறு சிறு கலவரங்களை செய்வதற்கும் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இதோடு மட்டுமில்லாமல் சமூகத்தின் மேலடுக்குப் பிரிவினருக்கென ஆர்.எஸ்.எஸ் பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆரம்பாவ் மல்கி பிரபோதினி எனும் அமைப்பு அரசியல் தலைவர்களுக்கென வகுப்புகளை நடத்துகிறது. மூஞ்சேயின் வழியில் இராணுவ வகுப்புகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் மத்திய இந்து இராணுவ கல்வி சங்கம், இராணுவத்தில் சேர்வதற்கான பள்ளியின் மூலம் காவிகளை இராணுவத்திற்குள் அனுப்பும் வேலை செய்து வருகிறது. சுவாமி விவேகானந்தர் யோகா அனுசந்தன சமஸ்தானம் எனும் அமைப்பு யோகா ஆசிரியர்களை பயிற்றுவித்து உலகம் முழுவதும் அனுப்புகிறது. மேலும் பல திட்டங்களை வடிவமைப்பதற்காக அறிவுசார் மையங்கள் மூலம் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஜம்மு & காஷ்மீர் ஆய்வு மையம் மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை போன்ற அமைப்புகள் இதற்கு துலக்கமான எடுத்துக்காட்டுகளாகும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் பாசிசப் படைகளுக்கு இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர்கள், மோடி அரசின் கொள்கைக்கு எதிரானவர்கள் அனைவரும் இந்து இராஷ்டிராவில் வாழத் தகுதியற்றவர்கள். ‘சமூகம் எனும் உடல் நோயுற்றதால், (மாசு பட்ட இரத்தத்தால் என்கிறார் ஏக்நாத் ராண்டே, காயங்கள் என்கிறார் சித்காரா, கொப்பளங்கள் என்கிறார் கோல்வால்கர்) குணப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், இவைகளை ஆர்.எஸ்.எஸ்-சின் நோயெதிர்ப்பு பண்புகளின் மூலமே குணப்படுத்த முடியும்’ என இப்பாசிச படைகளின் நாடி நரம்புகளில் புகுத்தப்படுகிறது. கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கெளரி லங்கேஷ் போன்ற சமூக செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்த சனாதன சன்ஸ்தா படையினர், “தமது கையில் இருக்கும் ஆயுதம் கிருஷ்ணரின் சக்கரம் போன்றது, அது அரக்கர்களை கொன்றொழிக்கும்” என்று பகிரங்கமாகவே வாக்குமூலம் கொடுத்ததில் இருந்து இப்பாசிச படைகளின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது நூற்றாண்டை ஒட்டி தில்லியில் அதன் தலைமை அலுவலகத்தை கட்டி முடித்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 150 கோடி ஆகும். பா.ஜ.க ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால் தேர்தல் பத்திரம் மூலம் 6000 கோடி ரூபாயும், 2024 – 2025-ஆம் ஆண்டில் நன்கொடையாக 6654 கோடி ரூபாயும் பெற்றிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-சும் அதன் பதிலி அமைப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து, வாங்கிய நன்கொடைகள் மக்கள் மத்தியில் கொண்டு வரப்படுவதில்லை. அவை யாருக்கும் தெரியாத இரகசியமாகவே உள்ளது. இந்த நிதிக் கணக்குகளை மறைப்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ் தனது வலைப்பின்னலை பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்காவில் செயல்படும் சேவா இண்டர்நேஷனல் எனும் அமைப்பு பல மில்லியன் டாலர்களை நன்கொடையாகப் பெறுகிறது. இதில் 2021-ஆம் ஆண்டில் ட்விட்டரின் முன்னாள் நிர்வாகி ஜாக் டோர்சியிடமிருந்து பெறப்பட்ட 2.5 மில்லியன் டாலரும் அடங்கும். இந்த நிதியை இந்தியாவில் உள்ள பிற காவி அமைப்புகளுக்கு அனுப்புகிறது என்கிறார், பெலிக்ஸ்.
இப்படி ஆர்.எஸ்.எஸ்-சின் வலைப்பின்னல் நாடெங்கும் மூலை முடுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான கிளைகளைப் பரப்பி வேர்விட்டு நிற்கிறது. பல ஆண்டுகளாக அதன் கிளைகளின் மூலம் கலவரத்தை நடத்திய அனுபவத்தைப் பெற்றிருக்கின்றன. நீதிமன்றம், இராணுவம் என அரசின் அனைத்து உறுப்புக்களையும் பாசிசமயமாக்கியுள்ளது. நாட்டின் பரந்து பட்ட மக்களிடம் தனது அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது. இவையணைத்தையும் தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியுமா?
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிவரும் அனைத்து எதிர்க்கட்சிகளும் “முடியும்” என ஒருமித்த குரலில் கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. மோடி தலைமையிலான பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டால் இந்த அபாயம் போய்விடுமென நம்மை ஏமாற்றுகின்றன. ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் கைக்கூலிகளான அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இவ்வாறு கூறுவதில் வியப்பொன்றுமில்லை.
மதுரை திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள்? இன்று பாசிசமயமாகி வருகின்ற நீதிமன்றங்களும், இராணுவமும் அன்று என்னவாக இருந்தது? அன்றும் வாக்களித்தோம், இன்றும் வாக்களிக்கிறோம் ஒருவேலை தேர்தல் நடந்தால் நாளையும் வாக்களிப்போம். வெற்றி யாருக்கு?
நாடெங்கும் மக்களை பாசிசமயமாக்கி நாட்டில் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான படைகளை, ஆயுதங்களை, வலைப்பின்னலை, கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ். வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இவையன்றி ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிப் பயிற்சி போன்றவை பெற்ற இரகசிய, அரை இரகசிய பாசிசக் கொலைவெறிப் படைகளையும் அது நாடெங்கும் கட்டியமைத்துள்ளது. ஆனால், அவைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான படைகள் எதுவும் ஓட்டுக்கட்சிகளிடம் இல்லை. இத்தகைய கண்ணோட்டமும் அவர்களிடம் எள்முனையும் இல்லை.
நாடி நரம்பெங்கும் கொள்கை ரீதியாகத் திரட்டப்பட்ட இத்தகையதொரு பாசிசப் படையை, கொள்கை, கோட்பாடுகள் ஏதுமற்ற “இந்தியா” கூட்டணி வீழ்த்துமென்பதை விடக் கோமாளித்தனம் எதுவும் உண்டா?! பாசிசக் கொள்கையால் கட்டியமைக்கப்பட்டுள்ள இப்படையை, அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டு அமைக்கப்படும் தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் அணிதான் உறுதியாக எதிர்கொள்ளவும், வீழ்த்தவும் முடியும்!!
- தாமிரபரணி
படங்கள் : நன்றி கேரவன் இதழ்




