இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் களமாக மாறிப்போயுள்ள கிரிக்கெட் போட்டிகள்

1999-ஆம் ஆண்டு சென்னையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியை தழுவியது. ஆனால் அன்று அந்த ஆட்டத்தை காண வந்த சென்னை மக்கள் அனைவரும், எழுந்து நின்று அந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்காக கைதட்டினர். ஆனால் இன்றோ, அதை செய்ய சென்னை மக்களே கூட தயங்குவர். அந்தளவு இந்துமதவெறியும் போலி தேசிய வெறியும் நாட்டில் வேரூன்றியுள்ளது! இது மிகையல்ல! கசப்பான உண்மை!

கடந்த வாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டி நடந்தது. கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் இந்தப் போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலையே இருந்தது. குறிப்பாக தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியிலிருந்து வங்கதேச அணி நீக்கப்பட்ட விதம் மிகவும் சர்ச்சைக்குறியதாக பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பைக்கான போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலில் இந்திய அரசு தலையிட்டிருப்பது, மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பது ஆகியவற்றைக் காரணம் காட்டி வங்கதேச அணி இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கெடுக்க முடியாது என்று அறிவித்தது. மேலும் அந்த அணியின் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் நடத்த வேண்டும் எனக் கோரியது.

ஆனால் வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அந்த அணியை போட்டியிலிருந்தே நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சேர்த்துக் கொண்டது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் இரசிகர்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய வருவாயாக இருப்பதால் அங்கே இந்திய அரசியல்வாதிகள் வைப்பது தான் சட்டமாக இருக்கிறது. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் தற்போது அந்தக் கவுன்சிலின் தலைவராக இருப்பதால் இந்திய காவி பாசிஸ்டுகளின் போலி தேசிய வெறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச அணி இவ்வாறு உலக கோப்பை போட்டிகளில் இருந்து நீக்கப்பட்து அநியாயம் என்றும் அதற்கு பின்புலத்தில் இந்திய அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக இருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான உலக கோப்பைப் போட்டியில் விளையாட மறுத்துவிட்டது.

வழக்கமாக ஒரு அணி இது போல போட்டியில் விளையாட மறுத்துவிட்டால் அந்த அணி தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டு, எதிரணிக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை பாகிஸ்தானுடனான இந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதை இந்திய தரப்பு விரும்பவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பணம். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது மிகவும் பரபரப்பான போட்டி, அதிக அளவிலான இரசிகர் அந்தப் போட்டியைக் காண வருவார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள். அதுமட்டுமன்றி கிரிக்கெட் உலகில் மறைமுகமாக நடந்து வரும் சூதாட்டங்களில் பலரும் முன் வந்து பந்தையம் கட்டுவார்கள்.

இணையதளங்களில் வெளியாகியிருக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு டி20 போட்டியின் மொத்த வருவாயின் அளவு 4500 கோடிகள் எனக் கூறுகிறது. அந்த அளவிற்கு பணம் புழங்கும் ஒரு போட்டியை இழப்பதற்கு யாரும் தயாராக இல்லை. இதுவே பாகிஸ்தான் அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு தகுதிபெற்றால் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் மீண்டும் பணம் கொழிக்கும். மற்ற அணிகளுடன் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பவர்களது எண்ணிக்கையை விட இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளைக் காண்பவர்களது எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும். இது இந்தப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ள அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு விளம்பரதாரர்களிடமிருந்து பலகோடிருபாய் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும். எனவே அந்த வாய்ப்பு பறிபோவதை முதலாளிகள் விரும்பவில்லை.

அதேபோல பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் விளையாட வேண்டும் என நிர்பந்திக்க இரண்டாவதொரு காரணமும் இருக்கிறது. அது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதை வைத்து இந்தியாவில் கட்டமைக்கப்படும் போலி தேசிய வெறி. இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் போலி தேசப் பற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான துவேசமும் பொங்கியெழும் களமாக இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மாற்றப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நழுவிப் போவதை இந்திய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

இதன் காரணமாக வங்கதேச அணி விளையாட மறுத்த போது போட்டியை விட்டே தூக்கியவர்கள், பாகிஸ்தான் அணியை எப்படியாவது சமாளித்து இந்தியாவுடன் விளையாட வைக்க வேண்டும் என முடிவெடுத்தனர். பாகிஸ்தான் அணி விளையாட மறுத்தால் அது பலநூறு கோடி ருபாய்களை தண்டமாக கட்ட வேண்டிவரும் என மிரட்டி அந்த அணியைப் பணியவைத்தனர்.

இந்திய ஆட்சியாளர்கள் விரும்பியபடியே இந்தப் போட்டியில் போலி தேசிய வெறி பீறிட்டது.
போட்டியின் ஆரம்பத்திலேயே சர்ச்சை தொடங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பையில் நடந்ததைப் போலவே, மீண்டும் இந்திய அணியின் கேப்டன் சூரிய குமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டனுடன் டாசிற்கு பின்பும், ஆட்டம் முடிந்த பின்பும் கைகுலுக்காமல் சென்றார். இது ‘விளையாட்டின் பண்பை பாதிக்கக்கூடிய செயலாக’ கிரிக்கெட் உலகில் இதை பலர் கண்டித்தனர். அதேசமயம், பல இந்திய இரசிகர்கள் இச்செயலை கொண்டாடியும், நியாயப்படுத்தியும் வருகின்றனர். போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பிறகு நடந்த கொண்டாட்டங்களில் பாகிஸ்தானை போரில் தோற்கடித்த உணர்வை இரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

என்னதான் கிரிக்கெட் என்பது குருட்டுத்தனமான தேசிய வெறியை மக்கள் மத்தியில் கிளப்ப காலம்காலமாக பயன்பட்டு வந்தாலும், கடந்த 2019-ஆம் ஆண்டு அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து, போலிதேசிய வெறியுடன் சேர்த்து இந்து மதவெறியும் தீவிரமாகப் புகுத்தப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே எல்லாத் தொடர்களிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் நடத்துவது; மைதானங்களில் இந்துமத பாடல்களை இசைக்கச் செய்வது; அவ்வளவு ஏன், இந்திய அணி காவி உடையை உடுத்தி பாகிஸ்தானிற்கு எதிராக விளையாட திட்டமிட்டதாகக் கூட 2023-இல் செய்திகள் வெளியாயின.

சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் நமக்கு வெளிப்படையாக தெரியாமல் அரசியலும், ஆளும் வர்க்க சிந்தனைகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஏற்றப்பட்டாலும், அதன் முக்கிய குறிக்கோள் உழைக்கும் மக்களின் துயரங்களை அவர்களிடமிருந்து மறைப்பதும், அதை மறக்கச் செய்வதும், அதிலிருந்து அவர்களை திசைத்திருப்புவதும், அவர்களை அரசியல்படுத்தாமல் வைத்திருப்பதும்தான். ஆனால், காவி பாசிஸ்டுகளின் வருகைக்கு பிறகு, இந்த பொழுதுபோக்கு அம்சங்களில் கூட அவர்களின் இந்த காவி பாசிச அரசியல் கோலோச்சி நிற்கிறது. சினிமாவை போலவே, இப்போது கிரிக்கெட்டும் இசுலாமிய வெறுப்பைப் பரப்புவதற்கும், போலி தேசியவெறி, மதவெறியைத் தூண்டுவதற்கும் ஒரு முக்கிய ஆயுதமாக காவி பாசிஸ்டுகளுக்கு மாறியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியபோது, “விளையாட்டு மைதானத்தில் மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் நடைப்பெற்றது” என்றும், “அதிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது” என்றும் X தளத்தில் பதிவிட்டார், மோடி. அதேபோல, போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தனர். சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களை கொன்ற இசுலாமியர்களுக்கு எதிராக “நடவடிக்கை” என்ற பெயரில் வங்கதேச கிரிக்கெட் வீரரான முஸ்தாபிசூர் ரஹ்மானையும், வங்கதேச வீரர்களையும் தடை செய்தது, இந்திய கிரிக்கெட் வாரியம்.

இதையே தான் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கமும் விரும்புகிறது. இருநாடுகளும் பொதுவெளியில் சண்டை போட்டுக் கொள்வதுபோல் போட்டுக்கொண்டு, பின்வாங்குவதை போல நடித்து, பின்பு விருப்பமே இல்லாமல் ஆடப்போவது போல நடிப்பர். ஆனால், இருவருக்குமே, தத்தமது நாடுகளில் போலி தேசிய வெறியையும், மதவெறியையும் பரப்பி உழைக்கும் மக்களை அவர்களது உண்மையான பிரச்சனையான வறுமை, வேலையின்மை போன்றவற்றில் இருந்து திசைதிருப்புவதே ஆகும்.

கடந்த சில போட்டிகளில், கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளேயே “ஜெய் ஸ்ரீ ராம்”, “கணபதி பப்பா மோர்யா” போன்ற கோஷங்கள் இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை, துபாய், கொழும்புவில் கூட இந்திய ரசிகர்களால் எழுப்பப்பட்டது, குறிப்பாக, பாகிஸ்தானுடனான போட்டிகளில் இவ்வாறு எழுப்பப்பட்டது. இதுமட்டுமல்ல. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் “சாம்பியன்ஸ் ட்ராபி” ஆட்டம் ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தின் பொழுது பாகிஸ்தானிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி கதபுல்லா கான் என்கிற இசுலாமியரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மத்திய பிரதேசித்தில் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியின்போது ஒரு மதக்கலவரமே உண்டாக்கப்பட்டது.

ஒவ்வொரு முறை இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்போதும், நாட்டிலிருக்கும் ஒவ்வொரு இசுலாமியரின் “தேசபக்தி” பரிசோதிக்கப்படும். இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்ததல்ல. பஜ்ரங் தள், வி.எச்.பி., சிவசேனா போன்ற பாசிச அமைப்புகள் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளை (குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை) பயன்படுத்தி வன்முறையையும் கலவரங்களையும் தூண்டியுள்ளனர். பாகிஸ்தான் முக்கியமான ஆட்டங்களில் தோற்றுப்போனால் வேண்டுமென்றே இசுலாமியர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று பட்டாசு வெடிப்பது; இனிப்புகளை வழங்குவது; பாகிஸ்தானுடன் இந்தியா வெற்றி பெற்றால் மக்களை திரட்டி இசுலாமியர் குடியிருக்கும் பகுதிகளில் ஊர்வலம் செல்வது; மசூதிகளில் உள்ள பச்சைக் கொடிகளை கழற்றச் சொல்வது; இசுலாமியர்களின் கடைகளை மூடுமாறு மிரட்டுவது — என்று பல கலவரங்களை உருவாக்கியுள்ளனர், காவி பாசிஸ்டுகள்.

கிரிக்கெட் வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு நிகழ்வு, 1999-ஆம் ஆண்டு சென்னையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியை தழுவியது. ஆனால் அன்று அந்த ஆட்டத்தை காண வந்த சென்னை மக்கள் அனைவரும், எழுந்து நின்று அந்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்காக கைதட்டினர். ஆனால் இன்றோ, அதை செய்ய சென்னை மக்களே கூட தயங்குவர். அந்தளவு இந்துமதவெறியும் போலி தேசிய வெறியும் நாட்டில் வேரூன்றியுள்ளது! இது மிகையல்ல! கசப்பான உண்மை!

சுருங்கச் சொன்னால், நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கிற்கான ஒரு விளையாட்டுக் களம் என்பதிலிருந்து, காவி பாசிசத்தின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கான மிகப்பெரிய ஆயுதமாக மாறிப்போயுள்ளது!

  • பாலன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன