பட்ஜெட் 2026 : கூகுளுக்கு முழு வரி விலக்கு
ஊரக வேலைக்கு நிதிக் குறைப்பு
இதுவே வளர்ந்த இந்தியா!

இலட்சம் கோடியில் வருவாய் ஈட்டும் பெருநிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு தரும் மோடி கும்பல், ஊரக வேலையின் மூலம் கிடைக்கும் 3000-4000 ரூபாய் குடும்பச் செலவுக்குப் பயன்படும் என வேலைக்காகக் கிராமப்புற மக்கள் ஏதிர்பார்த்து காத்திருக்கும் திட்டத்திற்கு நிதியில்லை என்கிறது.

 

2026-27 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொத்த பட்ஜெட் தொகை 53.5 இலட்சம் கோடி. இதில் 17.2 இலட்சம் கோடி ரூபாயை அரசு பத்திரங்களின் மூலம் நிதிமூலதச் சந்தையிலிருந்து கடனாகத் திரட்டப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். சர்வதேச பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்த போதிலும், கடந்த நிதியாண்டில் GDP வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருந்ததைப் போல வரும் நிதியாண்டில் இது 7.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். பாஜக தரப்போ, இது தேர்தலை மையப்படுத்தி தயாரித்த பட்ஜெட் அல்ல, 2047 இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான இலக்கை அடிப்படையாகக் கொண்ட வரவு-செலவுத் திட்டம் எனப் பட்ஜெட்டை புகழ்ந்துள்ளது.

முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல், மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாகவும், சராசரி GDP வளர்ச்சி 7 சதவிகிதம் உள்ளதாக மோடி கும்பல் பெருமையாக பேசிவருகிறது. ஆனால் மோடி கும்பலின் எஜமானர்களே (IMF), இவர்களது GDP கணக்குகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. 2025-26 நிதியாண்டின், இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டின் GDP கணக்கீடுகளை ‘குறைபாடுடையது’ என்று சர்வதேச நிதி முகமை (IMF) அறிவித்துள்ளது. சில பொருளாதார ஆய்வாளர்களோ, GDP வளர்ச்சி விகிதம் அரசு சொல்லுவதிலிருந்து இரண்டு சதவிகிதம் குறைவாக, அதாவது 5 சதவிகிதமாகவே, இருக்கும் என்கின்றனர். இத்தகைய சந்தேகத்துக்குறிய பொய் கணக்குகளைக் கொண்டுதான் ஏழு சதவிகித வளர்ச்சி என்று மக்களை ஏமாற்றி வருகிறது மோடி கும்பல். தற்போது 2047 இல் வளர்ந்த இந்தியா என்ற ‘சிறப்பு வடையை’ விற்கத் தொடங்கியுள்ளனர்.

பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்திகளாக வரும் பொருளாதர வளர்ச்சி பற்றிய கதைகள், ஐந்து சதவிகிதமோ அல்லது ஏழு சதவிகிதமோ, அது பொரும்பான்மை உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்நிலையை பிரதி பலிக்கிறதா என்பதே பிரதானக் கேள்வி? பொருளாதார வளர்ச்சி என்று இவர்கள் கூறிக் கொள்ளும் அதே பத்தாண்டு காலகட்டத்தில் தான் (2013-2023), தொழிலாளர்களின் உண்மை ஊதியம் தேக்கமடைந்துள்ளது, வேலையின்மை அதிகரித்துள்ளது, மருத்துவ மற்றும் கல்விக்கான குடும்ப செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது, மொத்தத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து பொருட்கள் விற்பனை தேக்கமடைந்துள்ளதாக அரசாங்கத்தின் சொந்த புள்ளி விவரங்களே கூறுகின்றன. எனவே, ஆளும்வர்க்கம் சொல்லும் பொருளாதார வளர்ச்சி புல்லட் இரயில், வளர்ந்த இந்தியா-2047 போன்ற திட்டங்களெல்லாம் இந்தியத் தரகு முதலாளிகளின் வளர்ச்சியை பெருன்பான்மை மக்களின் பொருளாதார வளர்ச்சி என உழைக்கும் மக்களை நம்பவைக்க சொல்லப்படும் பாட்டி வடை சுட்டக் கதைகளே. இதை நிதியமைச்சர் வாசித்த பட்ஜெட் உரையிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

* * * * * * * * * * * *

உலகம் முழுவதும் கிளவுட் சேவைகளை (Cloud Services) வழங்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தகவல் மையத்தினை (Data Center) அமைக்கும் பட்சத்தில், அந்நிறுவனங்களுக்கு 2047 வரை முழு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. உதாரணமாக, google நிறுவனம் தனது கிளவுட் சேவையை உலகம் முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. Google, தனது கிளவுட் சேவைக்கான தகவல் மையத்தை  இந்தியாவில் தொடங்கினால், 2047 வரை அந்நிறுவனத்தின் வருவாய்க்கு வரி வசூலிப்பதில்லை என்று அறிவித்திருக்கிறது மோடி அரசாங்கம். இந்த அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் கிளவுட் சேவை மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தகவல் மையத்தை இந்தியாவில் அமைக்கப் போவதாக அறிவித்திருந்தன. [google ~ $15 மில்லியன், மைக்ரோசாப்ட்~ $17.5 பில்லியன், அமேசான் ~ $35 பில்லியன், மோடியின் மனம் கவர்ந்த தொழிலதிபர்களான அதானியும் அம்பானியும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து முறையே $5 பில்லியன் மற்றும் $11 பில்லியன் முதலீடுகளை செய்யப்போவதாக அறிவித்துள்ளன.] அடுத்த இருபது வருடங்களுக்கு இப்பெரும் முதலாளிகள் ஈட்டப்போகும் பல இலட்சம் கோடி வருவாய்க்கு வரிவிலக்கு கொடுத்துள்ள மோடி கும்பல், மூன்றில் ஒரு பங்கு கிராமப்புற இந்தியக் குடும்பங்களுக்கு வேலை வழங்கக்கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு கடுமையான நிதி வெட்டை செய்திருக்கிறது.

கடந்த டிசம்பரில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக VB-G RAM-G என்ற புதிய திட்டத்தை மோடி அரசாங்கம் அறிவித்தது. இதில், கிராமங்களில், குடும்பத்தில் ஒருவருக்கு “கட்டாய நூறு நாள் வேலை” என்று இருந்ததை மாற்றி அரசின் நிதி நிலைமைகளைப் பொறுத்து ஊரக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திருத்தம் செய்திருந்தனர். இப்புதிய திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் 125 நாள் வேலை வழங்குவோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது மோடி அரசாங்கம். ஆனால் 2026-27 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 125 நாட்கள் வேலை கொடுப்பதற்குத் தேவையான நிதியில் பாதியைக் கூட ஒதுக்கவில்லை.

ஊரக வேலை வேண்டி ஒன்பது கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு 125 நாட்கள் வேலைக் கொடுக்க 3.84 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அதில் அறுபது சதவிகிதத்தை, 2.3 இலட்சம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளதோ 95,692 கோடி மட்டுமே. இத்தொகை கூட பட்ஜெட் அறிவிப்பு தானே ஒழிய, உண்மையான தொகையல்ல. மேலும், ஏற்கனவே பெரும்பான்மையான மாநிலங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் அதிகக் கடனிலும் உள்ளன. மாநில அரசுகள் கோரியிருந்த ஐம்பது சதிவிகித நிதிப்பகிர்வையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. சட்டத்தின்படியே, அரசின் நிதி நிலைமைகளைப் பொறுத்தே 125 நாட்கள் வேலை அமல்படுத்தப்படும் என்றிருப்பதால், மாநில அரசுகளால் ஒதுக்க வேண்டிய 1.54 இலட்சம் கோடியும் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. மொத்தத்தில் ஊரக வேலைவாய்ப்பு என்பது எதார்த்தத்தில் செயல்படுத்த முடியாத திட்டமாக ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டிருக்கிறது. இலட்சம் கோடியில் வருவாய் ஈட்டும் பெருநிறுனங்களுக்கு பணத்தை வாரி இரைக்கும் மோடி கும்பல், ஊரக வேலையின் மூலம் கிடைக்கும் 3000-4000 ரூபாய் குடும்பச் செலவுக்குப் பயன்படும் என வேலைக்காகக் கிராமப்புற மக்கள் ஏதிர்ப்பார்த்து காத்திருக்கும் திட்டத்திற்கு நிதியில்லை என்கிறது மோடி கும்பல். 2047 இல் வளர்ந்த இந்தியா என்ற முழக்கமும் அதற்கான பட்ஜெட்டும் முதலாளிகளுக்கானதே அன்றி நமக்கானதல்ல.  

  •  மாணிக்கம்

https://frontline.thehindu.com/economy/union-budget-2026-msme-growth-fiscal-deficit/article70578378.ece

https://thewire.in/economy/budget-the-mystery-and-mystique-of-viksit-bharat-2047

https://www.counterview.net/2026/02/workers-group-flags-opacity-and-funding.html

https://techcrunch.com/2026/02/01/india-offers-zero-taxes-through-2047-to-lure-global-ai-workloads/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன