வீடுகளில் சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை (domestic work) குறைந்தபட்ச ஊதியச் சட்த்திற்குள் (தற்போது ஊதியச் சட்டத் தொகுப்பு 2019) கொண்டுவர வேண்டும், அவ்வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற பொது நல மனுவை, இருதினங்களுக்கு முன்பு, தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு. வழக்கு விசாரணையின் போது, இந்தியாவில் வேலையின்மையைப் பாருங்கள், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தால் யாரும் வேலை தரமாட்டார்கள், அது தொழிலாளர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கருத்துச் சொல்லியிருக்கிறார் தலைமை நீதிபதி சூரிய காந்த். கூடவே தொழிற்சங்கங்களினால் நாட்டின் தொழிற் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதாகவும் பேசியிருக்கிறார்.
சட்டமெல்லாம் பேசக்கூடாது, கொடுக்கிற கூலியை வாங்கிக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அடிமட்டக்கூலிக்கு வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று மென்மையாக எச்சரித்திருக்கிறார் தலைமை நீதிபதி. ஆனால் மனுதாரர் கேட்டதோ, ஏற்கனவே உள்ள குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 படி, வீட்டு வேலைகளை அட்டவணைப் படுத்தப்பட்ட வேலையாக அறிவிக்க வேண்டும் அதன் மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது அல்லது திருத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்பதே. ஏற்கனவே நடப்பிலுள்ள சட்டங்களினால் முதலாளிகள் பாதிப்படைகின்றனர் இதில் இன்னும் தொழிலாளிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமா? என்பதே தலைமை நீதிபதியின் ஆதங்கம்.
முதலில் 1957-இல் நடந்த பதினைந்தாவது இந்திய தொழிலாளர் கருத்தரங்கில் பரித்துரைத்த வழிமுறைகள் மற்றும் அளவுகோல்களைக் கொண்டு 1992 வரை (முப்பத்தைந்து வருடங்கள்) குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. 1992-ஆம் ஆண்டில், பஞ்சப்படி உயர்த்துவது தொடர்பாக ரெப்டகோஷ் பிரெட் நிறுவனத் தொழிலாளர்கள் தொடுத்த வழக்கில், ஏற்கனவே உள்ள குறைந்தபட்ச ஊதிய கணக்கீட்டோடு படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, இதர செலவுகளையும் சேர்த்து குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு இன்றுவரை பதினைந்தாவது இந்திய தொழிலாளர் கருத்தரங்கின் பரித்துரை மற்றும் 1992-இல் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் பரிந்துரை இவ்விரண்டின் அடைப்படையிலும் தான் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 உள்ளிட்ட நான்கு ஊதியச் சட்டங்களைத் தொகுத்து ஊதியத் தொகுப்புச் சட்டம் 2019 ஆக கொண்டு வந்த மோடி கும்பல், இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்தது. இதில், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஏற்கனவே இருந்து வந்த வழிமுறைகள் மற்றும் அளவுகோல்களில் திருத்தங்கள் செய்துள்ளது.
ஊதியத் சட்டத்தொகுப்பு 2019-இன் படி, அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைகளை முடிவு செய்வதோ, அதற்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரமோ மாநில அரசுகளுக்கு கிடையாது. அவற்றை ஒன்றிய அரசே தீர்மானிக்கும். மேலும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக/திருத்துவதற்காக அமைக்கப்படும் முத்தரப்பு குழுவில், அரசு தரப்பு பிரதிநிதிக்கு பதிலாக சுயேட்சையான நபரை அமர்த்திக் கொள்ளலாம். இந்த சுயேட்சையான நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவானவராகவே இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான முழு அதிகாரமும், ஊதியச் சட்டத்தொகுப்பின் படி, முதலாளிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அடுத்து குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில், பிரதானமாக பழைய அளவுகோல்களை ஏற்றுக்கொண்டாலும் உணவுக்கான செலவு மற்றும் வீட்டு வாடகை கணக்கீட்டில் திருத்தங்களை செய்துள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 மற்றும் ஊதியத் தொகுப்புச் சட்டம் 2019 இவற்றுக்கு இடையேயான ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| தற்போதைய அளவுகோல் (ஊதியச்சட்டத் தொகுப்பிற்கு முன்பு) | புதிய சட்டத் தொகுப்பின் அளவுகோல் | |
|---|---|---|
| குடும்ப அளவு | தந்தை + தாய் + 2 குழந்தைகள் = 3 நுகர்வு அலகு (3CU) 3CU = 1 CU ஆண் + 0.8 CU பெண் + 2 × 0.6 CU (2 குழந்தைகள்) | |
| கலோரி தேவை | 1 CU = 2700 கலோரி ஆற்றலைத் தரக்கூடிய சரிவிகித உணவு (2700 calories of balanced diet per CU) | 1 CU = 2700 கலோரி ஆற்றலைத் தரக்கூடிய உணவு (2700 calories per CU) |
| உடைத் தேவை | ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 65.33 மீட்டர் | ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 66 மீட்டர் |
| வீட்டு வாடகை | தொழிற்சாலை வீட்டு திட்டம் ஒப்புக்கொண்ட வாடகை விகிதம் | 10% உணவு செலவு + உடைக்கான செலவு |
| 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் | ||
| எரிபொருள் + மின்சாரம் + இதர செலவுகள் | 20% உணவு செலவு + 20% உடைக்கான செலவு + 20% வாடகை | |
| படிப்பு + மருத்துவம் + பண்டிகை செலவுகள் | 20% உணவு செலவு + 20% உடைக்கான செலவு + 20% வாடகை | |
மேற்கண்ட அட்டவணையைப் பார்த்தால், ஒரு குடும்பம் உயிரோடு மட்டும் இருப்பதற்கு என்ன ஊதியத்தை கொடுக்க வேண்டுமோ, அதையே ஒரு தொழிலாளிக்கான குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிப்பதற்கான அளவுகோலாக வைத்துள்ளது மோடி கும்பல். இதில், உணவிற்கான செலவு மற்றும் வீட்டு வாடகைக்கான கணக்கீடுகளை திருத்தம் செய்துள்ளனர்.
தற்போதைய அளவுகோலின் படி, உணவிற்கான செலவைக் கணக்கிட 2700 கலோரி ஆற்றலை தரக்கூடிய சரிவிகித உணவுக்கான செலவை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு சரிவிகித உணவு (Balanced Diet) என்பது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து மற்றும் நீர் ஆகியவற்றை சரியான அளவில் கொண்ட உணவாகும். இது அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறி மற்றும் பழங்கள், மீன், முட்டை, இறைச்சி போன்ற உணவுகளிலிருந்து கிடைக்கிறது.
ஆனால் ஊதியச் சட்டத் தொகுப்பு 2019-இல் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில் “சரிவிகித உணவு” என்ற வார்த்தை திட்டமிட்டு தவிர்த்து விட்டு 2700 கலோரியைத் தரக்கூடிய உணவுக்கான செலவு என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, காய்கறி, பழங்கள், இறைச்சி ஆகியவற்றை தவிர்த்து விட்டு வெறும் குறைந்த விலையுள்ள அரிசி மற்றும் கோதுமை மூலமாக 2700 கலோரியை பெற்றுக்கொள்ளலாம் என்பதே இதன் மறைமுகப் பொருள். இதனால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில், உணவுக்கான செலவில் சரிவிகித உணவு கட்டாயம் இல்லை என்னும் போது, ஒப்பீட்டளவில் குறைந்த ஊதியத்தையே குறைந்தபட்ச ஊதியமாக தொழிற்சாலை நிர்வாகம் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
பதினைந்தாவது ILC பரிந்துரைத்திருந்த சரிவிகித உணவை தொழிலாளியின் குடும்பம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், தற்போதைய விலையின் அடிப்படையில், சராசரியாக மாதத்திற்கு 9500 ரூபாயை உணவிற்காக மட்டும் ஒதுக்க வேண்டும். அதேவேளையில் சரிவிகித உணவாக இல்லாமல், அரிசி/கோதுமை/கிழங்கு வகைகள்/இதர குறைந்த விலையுள்ள உணவுப் பொருட்களின் மூலம் 2700 கலோரியை எடுத்துக்கொள்ள 6500 ரூபாய்க்கும் குறைவாக ஒதுக்கினால் போதும். கூடவே, அரசு வழங்குகிற இலவச அரிசி/கோதுமையோடு இணைத்துப் பார்க்கும் போது உணவுக்கான செலவு இன்னும் குறையவே செய்யும். உணவிற்கான செலவை குறைப்பதின் மூலம் வாடகை, படிப்பு, மருத்துவம் மற்றும் இதர செலவுகளும் குறையச் செய்யும். மொத்தத்தில் குறைந்தபட்ச ஊதியமே முன்பிருந்ததைவிட குறைவாகும்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டம் நடைமுறையில் இருந்து வந்த போதும், தொழிற்சங்க நிர்வாகமோ அல்லது அரசு தரப்போ, 15-ஆவது ILC பரிந்துரைத்திருந்த, சரிவிகித உணவுக்கான அளவுகோலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதும் அல்லது பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப திருத்த முயற்சிப்பதும் இல்லை. ஒவ்வொரு முறையும், தொழிற்சங்கங்களின் உதவியுடனும் நீதிமன்ற தலையீட்டின் மூலமே அதைப் பெற வேண்டியிருந்தது.
ஊதியச் சட்டத்தொகுப்பில், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயிக்கும் குழுவில் அரசு பிரதிநிதிகளுக்கு பதிலாக சுயேட்சையான நபர்கள் இருப்பார்கள் என்று வழிகாட்டியுள்ளதின் மூலம் முதலாளிகளே ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை பெற்றவர்களாக இருக்கப் போகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறதா என சோதித்தறிவதும், இல்லையென்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் தொழிற்சாலை ஆய்வாளருக்கு இருந்த அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. 2700 கலோரிக்கான ஆற்றலை ரேஷன் கடை அரிசி/கோதுமை/ பருப்பிலிருந்தே பெற்றுக்கொள்ளவும் மறைமுகமாவும் நிர்பந்திக்கிறது. கூடுதலாக நீதிமன்றங்களும் கொடுப்பதை வாங்கிக்கொள் என மிரட்டுகிறது.
இந்திய தொழிலாளர்களில் எழுபது சதவிகிதத்திற்கும் மேல் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். தொழிலாளி வர்க்கத்தின் மிகபெரும்பான்மைப் பகுதி இந்த ஊதியத் தொகுப்புச் சட்டத்தினால் பாதிப்படைவார்கள் என்பதே நிதர்சனம்.
- மாணிக்கம்
செய்தி ஆதாரம்:
- https://www.livelaw.in/top-stories/trade-unions-largely-responsible-for-slowing-countrys-industrial-growth-cji-surya-kant-521043
- https://www.livelaw.in/top-stories/supreme-court-urges-state-govts-to-consider-plea-seeking-minimum-wages-for-domestic-workers-521112
- What exactly are the current norms for calculating the minimum wage in India? Indian Public Policy Review 2023, 4(5): 57-66.
- Decoding the labour codes -A handbook for workers – Centre for Workers’ Management.




