தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற, ஒழுங்கற்ற, போதிய வேகமின்றி ஏற்றத்தாழ்வான இணைய வசதி உள்ள நமது நாட்டில், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான, போதிய வேகத்துடன், தடையின்றி இணைய வசதியை உச்சநீதிமன்றத்தாலும் உயர்நீதிமன்றத்தாலும் செய்து கொடுக்க இயலாது. அதற்கான அதிகாரம் அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது, எப்பொழுது சீரான இணைய வசதி நாடு முழுவதும் ஏற்படுத்தப்படுகிறதோ அதன் பின்பு இ-பைலிங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தானே சரி!
நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளே நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் அலைவரிசை வேறுபாட்டுடன் வழங்கப்பட்டுள்ளது, இந்த இணைய இணைப்புகளையே ஒரே சீரான அலைவரிசையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் கொடுக்க இயலாத நிலையிலேயே நமது கட்டமைப்பு வசதிகள் உள்ளது! அதற்கான அதிகாரமும் அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது!
பெரும்பாலான நீதிமன்றங்களில் ஜெனரேட்டர் வசதியோ, இன்வெர்ட்டர் வசதியோ இல்லை, ஜெனரேட்டர் இருந்தாலும் அது பழுதாகக்கூடிய சமயங்களில் அதைச் சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும், மின் தடை (power cut) ஏற்படும் நாட்களில் எப்படி வழக்கு தாக்கல் செய்வது? தடையின்றி மின்சாரத்தை நீதிமன்றங்களால் கொடுக்க இயலாது!
கால வரையறை முடிவடையக்கூடிய நிலையில் தாக்கல் செய்யும் வழக்குகளையும், அவசர உத்தரவு பெற வேண்டித் தாக்கல் செய்யும் வழக்குகளையும் தாக்கல் செய்யும்போது இணையத்தில் (server) ஏற்படும் கோளாறு, இணைய இணைப்பில் ஏற்படும் கோளாறு, பவர் கட் ஆகியவற்றால் வழக்கு தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்படும்போது போது அதனால் வழக்காடிகளுக்கு ஏற்படும் இழப்புகளை எவ்வாறு ஈடு கட்டுவது!?
இவ்வாறு ஏற்படப்போகும் இழப்புகள் கட்டமைப்பின் தோல்வியால் ஏற்படப்போகும் இழப்புகள், வழக்காடும் உரிமை அரசியலமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமை! ஒரு தோல்வியடைந்த அல்லது முழுமை பெறாத கட்டமைப்பை வைத்துக்கொண்டு ஒரு புதிய தொழில்நுட்பத்தை முழுமையாகப் புகுத்துவது முரண்பாடாக இல்லையா? இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நீதிமன்றங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுமா?
இ-பைலிங் மூலம் தாக்கல் செய்த வழக்குகளுக்கு வழக்கறிஞர்களிடம் வழக்குக் கோப்புகளை விதிமுறைகளுக்கு முரணாக நீதிமன்றத்தில் ஏன் கேட்டு பெறுகிறார்கள், தேவை எனில் நீதிமன்றங்களே ஏன் பதிவிறக்கம் செய்து வாசித்துக் கொள்ள இயலவில்லை!
காலியாக உள்ள நீதிபதி பதவிகளையும், நீதிமன்ற ஊழியர் பணியிடங்களையும் எந்தக் காலத்திலும் உடனுக்குடன் நிரப்ப இயலாத நிலையில் உள்ள நமது நீதித்துறை, நீதிமன்றங்களுக்கு உடனுக்குடன் சொந்த கட்டிடங்கள் கட்ட இயலாத நீதித்துறை! ஏன் வழக்குகளை மட்டும் இ-பைலிங் மூலமாக முழுவதுமாக தாக்கல் செய்யக் கட்டாயப்படுத்துகிறது!
இ-பைலிங்கில் மட்டுமல்ல மேற்சொன்ன அனைத்து இடர்பாடுகளையும் எப்படி நீதிமன்றங்களால் நிவர்த்தி செய்ய இயலும்? மேல் குறிப்பிட்டுள்ள இத்தனை சிக்கல்களையும், கட்டமைப்பு வசதிகளையும் இத்தனை காலமாகியும் சரி செய்ய இயலாத நீதித்துறை எவ்வாறு இ-பைலிங் மூலம் வழக்கு தாக்கல் செய்யும் முறையில் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாமல் நடைமுறைப்படுத்தும்? நடைமுறைப்படுத்த இயலுமா? முடியாது என்பதே இன்றைய எதார்த்த நிலை!
இது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் தெரியுமா? தெரியாதா?
இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் பல இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன, நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டால் மட்டுமே தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க இயலும்,
இ-பைலிங்கிற்கான கட்டமைப்பை நிறுவுவதற்குப் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க புதிய பல நீதிமன்றங்களை உருவாக்க ஏன் நிதி ஒதுக்கப்படவில்லை?
இ-பைலிங் மூலம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு விடுமா? இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்?
இந்நிலையில் அகில இந்திய பார் கவுன்சில் வெளிநாட்டில் இருக்கக்கூடிய வழக்கறிஞர்களும் இந்தியாவில் தொழில் செய்யலாம் என குறிப்பிட்ட சில நிலையில் அனுமதித்துள்ளது, இது எதிர்காலத்தில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். (வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் தொழில் செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பார் கவுன்சில் அனுமதி அளித்திருந்தது ஆனால் வழக்கறிஞர்களின் தீவிர எதிர்ப்பால் அது பின்வாங்கிக் கொண்டது)
தனியார்மயம் மற்றும் தாராளமயத்தின் காரணமாக பல்வேறு நாடுகளைச் சார்ந்த பெரும் பெரும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருகின்றன, இந்த பெரும் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நாட்டில் உள்ள வழக்கறிஞர்களை வைத்து தங்கள் வழக்குகளை நடத்த விரும்புகின்றன, மேலும் வெளிநாட்டில் உள்ள பெரும் பெரும் வழக்கறிஞர் குழுமங்கள் இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் செய்வதற்கும் தயாராக உள்ளன, இவர்கள் இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த இ-பைலிங் வாய்ப்பாய் அமையும்!
பொருளாதாரத்திலும், சாதியிலும் பின்தங்கிய பலரும் இப்பொழுது தான் முதல் தலைமுறையாக வழக்கறிஞர் தொழிலில் படிப்படியாக அடி எடுத்து வைக்கின்றனர்! இவர்களால் பன்னாட்டு வழக்கறிஞர் குழுமங்களுடன் சரிசமமாகப் போட்டியிட இயலுமா?
எதிர்காலத்தில் தில்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தொழில் நடத்தப்போகும் பன்னாட்டு வழக்கறிஞர் குழுமங்கள் தங்கள் அலுவலகத்தில் வைத்துத் தாக்கல், செய்து காணொளி வாயிலாகவே நடத்த இருக்கும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்ற அலுவலகங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து கொடுப்பதற்கு மட்டுமே உள்ளூர் வழக்கறிஞர்கள் தேவைப்படுவார்கள்,
இந்த வெளிநாட்டு வழக்கறிஞர் குழுமங்களால் நாளை உள்ளூர் அளவில் கிளை அலுவலகம் கூட திறக்கப்படலாம்! இது வெறும் கற்பனை அல்ல இன்னும் சில ஆண்டுகளிலேயே இது நடக்கக்கூடும்!
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பின்தங்கிய நிலைமையில் மக்கள் வாழும் நாட்டில், பல்வேறு படி நிலைமைகளில் வழக்கறிஞர்கள் உள்ள நாட்டில், குடிமக்கள் அனைவரும் சமமாக கருதப்படாத ஒரு நாட்டில் இ-பைலிங் மூலம் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஏற்ற ஒரே சீரான கட்டமைப்பு வசதியை நாடு முழுவதும் செய்ய இயலாத ஒரு நாட்டில் கட்டாய இ-பைலிங் ஏற்றுக்கொள்ள முடியாதது.
- சிவா




