SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

குடியுரிமைச் சட்டத்தினைக் கடுமையாக மாற்றிவிட்டு அதிலிருந்து இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினருக்கு சலுகை அளித்த பிறகு, குடிமக்களைப் பதிவு செய்யும் வேலையைச் செய்தால், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது பெற்றோர்கள் இருவரும் இந்திய பிரஜைகள் என்பதை நிரூபிக்க வேண்டும். 1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்து, தமது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் இல்லாத இஸ்லாமியர் ஒருவர் குடியுரிமையை இழப்பதுடன் அவருக்குப் பிறந்த குழந்தைகளும் குடியுரிமையை இழக்க நேரிடும்.

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற பெயரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (NRC) உருவாக்கும் வேலை தான் நடந்துகொண்டிருக்கிறது.   

இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன அதனை காவி பாசிச கும்பல் ஏன் முன்தள்ளுகிறது. இதனை ஏன் நாம் எதிர்க்க வேண்டும் என்று பார்ப்பது அவசியமாக உள்ளது. NRC குறித்துப் பார்ப்பதற்கு முன்னதாக நமது நாட்டில் ஒருவரது குடியுரிமையை நிர்ணயிக்கும் முறை குறித்த சட்டங்கள் பற்றி சிறிது பார்த்துவிடுவோம்.

இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலில் 1955-இல் நிறைவேற்றப்பட்டது அது இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. பிரிவினையின்போதும், அதன் பின்னரும் குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கும்கூட அப்போது மதம் என்பது வரையறையாக வைக்கப்படவில்லை. குடிமக்களின் பெற்றோர் குறித்து இந்தச் சட்டம் கவலைப்படவில்லை.

அதன் பிறகு குடியுரிமைச் சட்டத்தில் 1987-இல் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1979 முதல் 1985 வரையில் அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களுக்குப் பிறகு இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1985-இல் ராஜீவ்காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கும் அசாம் போராட்டக் குழுவினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, சட்டவிரோதக் குடியேரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எதிர்காலத்தில் அவர்களது குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும் ராஜீவ்காந்தி வாக்களித்தார்.

அதனடிப்படையில் “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” எனக் குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு, 1987-இல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2004-இல் வாஜ்பாயி ஆட்சியில் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது. குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் இந்தியாவில் குடியேறியிருக்கும் வங்கதேச முசுலிம்களையும், அவர்களது வாரிசுகளையும் ஒதுக்கி, சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகக் காட்டும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று மோடியின் ஆட்சியில், 2019-ஆம் ஆண்டின் இறுதியில், சி.ஏ.ஏ. எனும் குடியுரிமைச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்கும் நோக்கத்தைப் பிரதிபலித்தது.

“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் இரத்து செய்யப்படும்” என அத்திருத்தம் குறிப்பிடுகிறது.

அதாவது வெளிநாட்டிலிருந்து குடியேறியதாக சந்தேகிக்கப்படும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை இல்லை என்று வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக வெளிநாட்டிலிருந்து குடியேரிய முஸ்லீம் அல்லாத பிற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது.

அந்தவகையில் இனி இந்தியாவில் ஒருவர் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர் தனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்றால் அவர்களது பெற்றோரில் ஒருவரது பிறப்புச் சான்றிதழ் வேண்டும் என்பதும், மற்றொருவர் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த இடத்தில்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வருகிறது. குடியுரிமைச் சட்டத்தினை இவ்வளவு கடுமையாக மாற்றிவிட்டு அதிலிருந்து இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினருக்கு சலுகை அளித்த பிறகு, குடிமக்களைப் பதிவு செய்யும் வேலையைச் செய்தால், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது பெற்றோர்கள் இருவரும் இந்திய பிரஜைகள் என்பதை நிரூபிக்க வேண்டும். 1987-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்து, தமது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் இல்லாத இஸ்லாமியர் ஒருவர் குடியுரிமையை இழப்பதுடன் அவருக்குப் பிறந்த குழந்தைகளும் குடியுரிமையை இழக்க நேரிடும்.

1987-இல் பிறந்த ஒருவருடைய பெற்றோர்கள், 1950-களில் பிறந்தவராக இருப்பார்கள். அப்போது பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டியது குறித்து யாரும் கவலைப்பட்டதே இல்லை என்பதால் யாரிடமும் சான்றிதழ் இருக்காது. ஆகையால் இந்த நிபந்தனையுடன் NRC கொண்டுவரப்பட்டால் பெரும்பாலான இஸ்லாமியர்களும் அவர்களது வாரிசுகளும் குடியுரிமையை இழக்க நேரிடும்.

அவ்வாறு குடியுரிமையை இழக்கும் இஸ்லாமியர்கள் ஒன்று நாடு கடத்தப்படுவார்கள், அல்லது முகாம்களில் அடைக்கப்படுவார்கள். இதுதான் NRC-யைக் காவி பாசிச கும்பல் முன்தள்ளுவதன் நோக்கம். இந்த நோக்கம் காவி பாசிஸ்டுகளின் இந்துத்துவ சித்தாந்தத்தில் வேர்கொண்டிருக்கிறது.

யாருக்கெல்லாம் தந்தையர் நாடாகவும்,  மதரீதியான புண்ணிய பூமியாகவும் இந்தியா இருக்கிறதோ, அவர்கள் மட்டும்தான் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியும். தந்தையர் நாடாக இந்தியா இருந்த போதிலும், புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாக நம்புகிறவர்களை  (மெக்காவைப் புனித பூமியாகக் கருதும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜெருசலேமைப் புனித பூமியாகக் கருதும் கிறிஸ்தவர்கள்)  “உண்மையான இந்தியர்களாகக் கருதவியலாது” என்பது கோல்வால்கரின் கருத்து.

அதேபோல, இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவர்க்கர், “யார் இந்து?” என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார் “சிந்து நதியில் தொடங்கி சமுத்திரங்கள் வரை பரவியிருக்கும் பாரத வர்ஷம் எனப்படும் இந்த மண்ணைத் தனது தந்தையர் நாடாகவும், தனது மதத்தின் தொட்டிலாகவும் புனித பூமியாகவும் கருதுபவனே இந்து. ஒரு பொது தேசம் (ராஷ்டிரம்), ஒரு பொது இனம் (ஜாதி), ஒரு பொது நாகரீகம் (கலாச்சாரம்) இவைதான் இந்துத்துவத்தின் அத்தியாவசியமான கூறுகள். இவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிந்துஸ்தானம் என்பது எவனொருவனுக்கு பித்ரு பூமியாக (தந்தையர் நாடாக) மட்டுமின்றிப் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ, அவனே இந்து.”

காவி பாசிஸ்டுகளின் சித்தாந்த வழிகாட்டிகள், இந்தியா என்பதற்கும் இந்தியக் குடிமக்கள் என்பதற்கும் வைத்திருக்கும் வரையரை இதுதான். இந்த வழிகாட்டுதலை அமுல்படுத்துவதற்காகத்தான் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும் (சி.ஏ.ஏ.) தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் மோடி தலைமையிலான காவி பாசிசக் கும்பல் முன்னெடுத்தது.

காவி பாசிஸ்டுகளின் முயற்சியை முறியடிப்பதற்காக அன்று நாடு முழுவதும் இருந்த இஸ்லாமியர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களுக்குப் பல்வேறு ஜனநாயக சக்திகளும் துணை நின்றார்கள். புதுதில்லியின் ஷாகின் பாக் முதல் தென்கோடியில் உள்ள கன்யாகுமரி வரை நடந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் காவி பாசிஸ்டுகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காவி பாசிஸ்டுகள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்தும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தனர்.

நேரடியாக தேசியக் குடிமக்கள் பதிவேட்டை (NRC) கொண்டுவந்தால்தான் பிரச்சனை என்பதால் அதனை மறைமுகமாக SIR என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள். சி.ஏ.ஏ. அமுல்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்து போராடிய இஸ்லாமியர்கள் இன்றைக்குத் தங்களது வாக்குரிமையைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களை எப்படியாவது வாங்கிச் சமர்ப்பிக்க வேண்டும் என ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக இல்லாமல் கொல்லைப்புறமாக NRC-யைக் கொண்டுவரும் காவி பாசிஸ்டுகளின் சூழ்ச்சிக்கு அவர்கள் பலியாகிவிட்டார்கள்.

தேர்தல் ஆணையம் தற்போது, குடியுரிமைச் சட்டத்தில் உள்ளதை அப்படியே அமுல்படுத்தும் விதமாக 1987-க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழைத் தருவது கட்டாயம் எனக் கூறுகிறது. தவறும் பட்சத்தில் அவர் தனது குடியுரிமையை இழக்கிறார் எனவும் அதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார் எனவும் கூறுகிறது.

தேர்தல் ஆணையத்தால் குடியுரிமை மறுக்கப்பட்டவர்களின் பட்டியலை எடுத்தாலே போதும் அவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என எளிதில் முத்திரை குத்திவிட முடியும். அத்துடன் ஒன்றிய பாஜக அரசு நினைத்தால் அவர்களை முகாம்களில் அடைத்து வைக்கவோ அல்லது நாடுகடத்தவோ கூடச் செய்ய முடியும்.

இஸ்லாமியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக, உரிமைகள் எதுவும் இல்லாத அகதிகளாக மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பாஜக காவி பாசிசக் கும்பலின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றவே SIR என்ற பெயரில் NRC-யை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காவி பாசிசக் கும்பலின் இந்த நயவஞ்சகத் திட்டத்தை உணர்ந்து, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தினைப் போல, தற்போதும் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்து போராடி SIRஐ முறியடிக்க வேண்டியது அவசியாமாக உள்ளது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன