SIR : காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான ஆதரவு தரும் உச்சநீதிமன்றம்.

 

“ஆதார் வைத்திருக்கும் காரணத்திற்காக ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக்க முடியுமா?”,

“ஒருவருக்கு ரேஷனுக்கு ஆதார் வழங்கப்பட்டதால், அவர் வாக்காளராகவும் ஆக்கப்பட வேண்டுமா? ஒருவர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர், தொழிலாளியாக வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்….”,

“கொடுக்கப்படும் படிவங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையம் என்ன போஸ்ட் ஆபீசா”, “ஓருவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னதாக அவர் சமர்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையைச் சோதிப்பதற்கும், நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது.”

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது NRC தான் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லும் இந்தக் கருத்துக்கள் உச்சநீதிமன்றத்தின் வாயிலிருந்து வந்திருக்கிறது. SIR நடைமுறைக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடுத்துள்ள வழக்குகளின் விசாரணையின் போது, தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா அடங்கிய அமர்வுதான் இவ்வாறு கூறியிருக்கிறது.  இதன் மூலம் உச்சநீதிமன்றம் சொல்ல வருவது என்ன?

அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல்காரர்கள் நம்நாட்டில் ஊடுருவி பல்வேறு இடங்களில் வேலைசெய்து வருகின்றனர். அவர்கள் ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை வாங்கிவைத்துள்ளனர். அதனைப் பயன்படுத்தி வாக்காளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எனவே SIR  நடைமுறையின் போது வாக்குரிமை கோரி  சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த முடியாது, ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னதாக ஒருவர் குறித்த உண்மைத்தன்மை, பின்னணி, தகுதி (குடியுரிமை, வயது, வசிப்பிடம்) ஆகியவற்றை தேர்தல் ஆணையம் சரிபார்க்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

சற்று உற்று நோக்கினால் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துக்கும், காவி பாசிச கும்பல் முன்னெடுத்துவரும் பிரச்சாரத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்ளலாம். ஆம் “இலட்சக்கணக்கான வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், இந்தியாவிற்குள் ஊடுருவி, வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டு, இந்துக்களுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர்” என்ற காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தை, உச்சநீதிமன்றம் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறது.

பீகாரில் SIR நடைமுறைப்படுத்தப்பட்டபோது கூட ஆரம்பத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சாட்டையைச்  சுழற்றுவது போல பல்வேறு கேள்விகளை எழுப்பி பம்மாத்துக் காட்டிய உச்சநீதிமன்றம், பின்னர் SIR நடைமுறையை விரைந்து முடிக்க அவசரம் காட்டியது.

ஆரம்பத்தில் “ஆயிரம் அல்ல, நூறு அல்ல, பத்து வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் கூட எஸ்.ஐ.ஆர். நடைமுறையை  இரத்து செய்து விடுவேன்” எனக் கொந்தளித்த உச்சநீதிமன்றம், பிற்பாடு பல இலட்சம் வாக்காளர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது அம்பலமான பிறகும் கூட எஸ்.ஐ.ஆர். நடைமுறையை இரத்து செய்யாமல் அதனை எப்படிச் சரிசெய்யலாம் என யோசனை கூறியது.

ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் இணைக்கும் வேலையில் நிச்சயமாகப் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியது.

இறுதியில் பீகாரில் SIR நடைமுறைப்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகவும், அதையே நாடு முழுவதும் மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தலாம் எனவும் உத்தரவிட்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு தொடுத்திருக்கும் வழக்கிலோ ஆரம்பம் முதலே தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாகவும், வழக்கு தொடுத்த மனுதாரருக்கு எதிராகவும் கருத்துக்களை உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து கூறிவருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்குவது போல் மனுதாரர்கள் இந்தத் திருத்தத்தைப் பார்க்கிறார்கள் எனவும், ஒரு அரசியலமைப்புச் சட்டத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பு இந்த திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது இதில் ஏதேனும் செயல்பாட்டுக் குறைபாடுகள் இருந்தால் அதனைச் சரி செய்ய கோரலாம், முற்றிலுமாகத் தடைசெய்யக் கோர முடியுமா? எனக் கேள்வி எழுப்பியும் தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்த வழக்குகளில் இறுதித் தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்குச் சாதகமாக வரும் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. மிஞ்சிப் போனால் கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் ஏதாவது மாற்றங்களைப் பரிந்துரைக்கலாமே தவிற SIR நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்யும் என எதிர்பார்க்க முடியாது.

ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் உச்சநீதிமன்றத்தின் மூலம் SIR நடைமுறையை தடுத்து நிறுத்திவிடலாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம், பிரச்சாரம் என அறிவித்த இந்தியா கூட்டணிக் கட்சிகள் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு, வாதப் பிரதிவாதம் என SIR எதிர்ப்பைச் சுருக்கிக் கொண்டு விட்டன.

நீதிமன்றத்தில் கூட இவர்கள் தரப்பு வழக்குறைஞர்கள் என்ன வாதத்தை முன்வைக்கின்றனர்? SIR என்பது குடியுரிமையை உறுதி செய்வதற்காகவே நடத்தப் படுகிறது என்பதை நிரூபிக்கும் வாதத்தையோ அல்லது பீகாரில் SIR மூலம் வாக்குரிமையை இழந்த பல இலட்சம் வாக்காளர்கள் குறித்த ஆதாரத்தையோ அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்குறைஞர் கபில் சிபல், பருவமழைக் காலத்தில் SIR நடைமுறைப்படுத்தபடுகிறது, இந்த நேரத்தில் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள், குடிமக்களும் விவசாய வேலைகளில் மூழ்கியிருப்பார்கள் என்று கூறுகிறார். கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகள் வேறு வருகின்றது இந்தச் சமயத்தில் இது போன்ற திருத்தங்களை மேற்கொண்டால் சமூகத்தின் பெரும் பகுதியினர் இதில் பங்கேற்க முடியாது எனக் கூறுகின்றார்.

நடிகர் விஜயின் தவெக சார்பாக வாதிட்ட வழக்குறைஞர் கோபால் சங்கர நாராயணன் கூட, SIR நடைமுறைக்கு குறுகிய கால அளவு மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதால் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக வாதிட்டார்.

இதுதான் SIR-ஐ எதிர்த்து இவர்கள் நீதிமன்றத்தில் வாதிடும் இலட்சணம். மக்களின் குடியுரிமையைச் சோதிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை கேள்விக்குட்படுத்தும் தீர்க்கமான வாதத்திற்கு பதிலாக இவர்கள் மழைக் காலம், திருவிழாக் காலம் எனச் சொத்தைக் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி போன்ற மூத்த வழக்குறைஞர்கள் அறியாததல்ல. உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக இருக்கிறது, அது நிச்சயமாக SIR-க்கு தடைவிதிக்காது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆகையால் இது போன்ற காரணங்களைக் கூறி SIR நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கும் கால அளவை சற்று நீட்டித்துக் கொள்ளலாம், பின்னர் அதனையே இந்த வழக்கில் தாம் பெற்ற வெற்றியாகப் பறைசாற்றிக் கொள்ளலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இதனைத்தான் திமுக களத்தில் செய்து கொண்டிருக்கிறது. ஒருவர் வழக்கு தொடுக்கும் போது பிரதிவாதியிடம் அது குறித்து விளக்கம் கேட்பது என்பது நீதிமன்றத்தின் பொதுவான நடைமுறை. அவ்வாறு தமிழ்நாடு அரசு SIR-க்கு எதிராக வழக்கு தொடுத்தவுடன் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் அதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது. உடனே அதனை வைத்து, தங்களுக்குச் சாதகமாக உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டது போன்ற ஒரு பிம்பத்தை திமுக ஆதரவு ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. இதன் மூலம் நீதிமன்றத்தில் SIR-க்கு எதிரான தீர்ப்பைப் பெற்றுவிடலாம் என்ற மாயைக்குள் மக்களை ஆழ்த்துகின்றனர்.

தேர்தல் ஆணையத்தைத் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு தனது விருப்பம் போல ஆட்டுவிப்பதைப் போல, தற்போது காவி பாசிசக் கும்பலானது நீதித்துறையையும் மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டில் எடுத்துவருகிறது. இனியும் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் குடியுரிமையைச் சோதிக்கின்ற SIR நடைமுறையை, நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் என நம்ப முடியாது. நாம் இனி செல்ல வேண்டியது நீதிமன்றத்திற்கு அல்ல மக்கள் மன்றத்திற்கு. காவி பாசிச கும்பலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதன் மூலமே SIR மூலமாக தொடுக்கப்படும் தாக்குதலைத் தடுக்கவும், முறியடிக்கவும் முடியும்.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன