உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் அடங்கிய அமர்வும்
அவை மாற்றி எழுதிய தீர்ப்புகளின் அவலட்சணமும்!

 

பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் வேறு சில நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்புகளை நீக்கியதோடு, அதற்கு மாற்றான தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது. அதாவது, அணைக்கட்டுகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், மேம்பாலங்கள் போன்ற பெரும் கட்டுமானத் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற சட்ட விதியையும், மசோதாக்கள் மீது ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்கக் கால நிர்ணயம் செய்து அறிவித்ததையும் நீக்கிவிட்டது. இதற்கு மாற்றாக, திட்டங்கள் தொடங்கிய பிறகும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதிப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் (முடிவெடுக்கும்) விஷயத்தில் ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கிடு விதிக்க முடியாது என்கிற வகையிலும் தீர்ப்பளித்து உள்ளது.

நீதிமன்றங்களைப் பொறுத்தவரை அவை வகுத்துக் கொண்ட சட்ட சரத்துகளின் அடிப்படையில் தான் தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்பது சட்டத்துறையின் நியதி. அதே வேளையில், அதே சட்ட சரத்துகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தித் தீர்ப்புகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதும் உண்டு. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறுவது போல, ‘சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்குரைஞர்களின் வாதம் ஒரு வெளிச்சம் என்பதைப் போல’ இது போன்ற வேலைகளில் வாதி – பிரதிவாதிகளுக்கு ஆதரவாக வாதாடும் வழக்குரைஞர்கள் ஈடுபடுவதுண்டு. ஆனால், ஜனநாயகத் தூண்களில் ஒன்றான நீதிமன்றங்களில் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் ‘நீதி மான்களே’ ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து சட்ட சரத்துகளின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தீர்ப்பையும் மாற்றி எழுதி, அவற்றை நியாயப்படுத்தி, வாதங்களை அடுக்குகின்றனர். இது எப்படி இருக்கிறதென்றால் நீதிமன்ற ஜனநாயகத்தைக் காப்பதாக கூறி நியாயமான தீர்ப்பை வழங்குவதாக நாடகமாடுவதும், ஆளும் வர்க்கம், ஆட்சியாளர்களிடமிருந்து நிர்பந்தம் வரும்போது, அவர்களுக்கு ஏதுவாக, ஆதரவாகத் தீர்ப்பை மாற்றி எழுதுவதும், அவற்றை நியாயப்படுத்துவதும் நடந்திருக்கிறது. அதே வேளையில், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படுவதில்லை. மேலும், இவற்றை சிறுமைப் படுத்துவதும், அலட்சியப்படுத்துவதும் சகசமாக்கப்பட்டு விடுகிறது.

370 சட்டத் திருத்தம், பாபர் மசூதி இடிப்பு, போன்ற பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளைப் பருண்மையான நிலவரங்களின் அடிப்படையில் பரிசீலித்தாலே நீதிமன்றங்களின் அவலசனத்தை அவதானிக்க முடியும். இந்தப் படிப்பினையில் இருந்து பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாற்றி எழுதிய தீர்ப்புகளைப் பரிசீலிப்போம்.

பொது (பெரும்) திட்டங்களைத் தொடங்கிய பின்பு கூட, முன் தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2017 -ஆம் ஆண்டு அறிக்கை வழிவகுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2021- இல் ஒரு குறிப்பாணையையும் வெளியிட்டது. இவை திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பே சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற தேவையில்லை என்பதையும், அதே வேளையில் திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டால், அதற்கான அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் வழிவகுத்துக் கொடுத்துவிட்டது.

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்தச் சட்டவிரோத அறிக்கையையும், அதன் குறிப்பாணையையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு ரத்து செய்துவிட்டது. மேலும், எதிர்காலத்தில் முன் தேதியிட்டு ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளிப்பதற்கும் தண்டனை விதித்து விட்டது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், உஜ்ஜல் புயான், கே.வினோத் சந்திரன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில், (ஏற்கனவே அளித்தத் தீர்ப்பில் வழுவாமல் உறுதியாக நின்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தவிர) மற்ற இருவரும், கடந்த அமர்வு அளித்தத் தீர்ப்பால், ஏராளமான மத்திய – மாநில அரசுகளின் திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இத்தீர்ப்பை மாற்றி எழுதாவிட்டால் அல்லது ரத்து செய்யாவிட்டால், இதுவரை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் தகர்க்கப்படும். இதனால், அரசுகள் செலவிட்ட பணம் முழுவதும் வீணாகும். இவ்வளவுப் பணத்தையும் “குப்பைத் தொட்டியில் வீசுவது உகந்ததா’ என்கிற கேள்வியை எழுப்பி, இதற்கேற்ப” திட்டங்கள் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதிக்குத் தடையில்லை’ என்கிற வகையில் தீர்ப்பை மாற்றி எழுதி ஒன்றிய அமைச்சகத்தின் கைத்தடியாக மாறிவிட்டது. போதாக்குறைக்கு ‘விதிவிலக்கான சூழல் என்கிற சலுகையையும் வழங்கிவிட்டது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வு பொசுங்கினாலும் சரி, சமூக வாழ்வு சிதைந்தாலும் சரி அதைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை என்பதே இந்த அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் ‘சாதனை’.

சமூகமும், மக்களும் பாதிக்கப்படுவதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் அரசுகளின் ஒரு அங்கம் என்கிற வகையில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு அரசுகள் பணம் வீணாக்கக் கூடாது என்று உண்மையிலேயே அக்கறை இருப்பின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் சட்ட விதிகளை மீறி திட்டங்களைச் செயல்படுத்திய அரசின் அதிகார வர்க்கத்தையும், கார்ப்பரேட்களான ஆட்சியர்களையும் தண்டித்திருக்க வேண்டும். அவர்களிடமிருந்து, இதற்கான இழப்பீட்டுத் தொகை முழுவதையும் வசூலிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். இதற்கு வக்கில்லாத, துணிவில்லாத இந்த அமர்வானது, அரசின் பணத்தை ‘குப்பைத் தொட்டில் வீசுவது உகந்ததா’ என்று கேள்வி எழுப்புவதற்கும், ஏற்கனவே அளித்தத் தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கும் ஏதாவது தகுதி உண்டா என்றால், இல்லை என்பதே மக்களின் சமூகத்தின் தீர்ப்பாக இருக்கும்.

மாற்றி எழுதப்பட்ட மற்றொரு தீர்ப்பானது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும், முடிவெடுக்கும் விசயத்தில் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் காலக்கெடு விதிக்க முடியாது என்பதே.

ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், முடிவெடுப்பதில் காலதாமதப் படுத்துவதோடு அலைக்கழிக்கிறார்கள். இதனால், மசோதாக்களைச் சட்டங்களாக்கி விரைவில் நடைமுறைப்படுத்த இயலவில்லை என்கிற அடிப்படையில் தான் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனையொட்டியே மசோதாக்கள் மீது விரைவில் ஒப்புதல் அளிக்கவும், முடிவுகளை எடுக்கவும் ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மீதான குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான தற்போதைய அமர்வோ, 361 சட்டப்பிரிவை முன்னிறுத்தி ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விதித்த காலக்கெடுவை நீக்கிவிட்டது. மேலும், கிடப்பில் போடும் அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த அமர்வு எடுத்த காலக்கெடு முடிவையும் தற்போதைய தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு முறியடித்து விட்டது.

அதே வேளையில், ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடக்கூடாது என்று அறிவுரையை வழங்கி மீண்டும் மாநிலங்களை இலவு காத்த கிளிகளாக்கிவிட்டன. ஒன்றிய அரசின் கைப்பாவைகளாக, தலையாட்டிப் பொம்மைகளாக செயல்பட்டு வரும் ஆளுநர்களையும் குடியரசுத் தலைவரையும் மேலும், அச்சமின்றி வேரூன்றி நிலைத்து நின்று செயல்படுவதற்கும், மாநில சுயாட்சி கனவுகளுக்கு ஆப்பு வைக்கும் வகையிலும் இத்தீர்ப்பு அமைந்துவிட்டது என்பது நிதர்சனம்.

இதற்குப் பிறகும் திமுக உட்பட இதர அனைத்து எதிர்க்கட்சிகளும், கூட்டாட்சி தத்துவம், அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்புகள் தகர்க்கப்படுவதாக அலறுவதும், உச்ச நீதிமன்ற அமர்வு அளித்துள்ளத் தீர்ப்பானது சட்ட ரீதியான ஆலோசனைகள் மட்டுமே என்று சுய திருப்தியை அடைவதும், மீண்டும், மீண்டும் மக்கள் விரோத, சமூக விரோத உச்ச நீதிமன்றத்தை நாடுவதும் கவைக்கு உதவாது. மாறாக, மக்களும், சமூகத்திற்கும் எந்தவித பயனும் இல்லாமல், மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமாகத் திரிய வழிவகுக்கும் ஒன்றிய அரசின் கங்காணிகளான ஆளுநர் பதவிகளையும், தலையாட்டி தலையாட்டிகளாக வளம் வரும் குடியரசுத் தலைவர் பதவியையும் ஒழிப்பதற்கானப் போராட்டத்தை முன்னெடுக்காமல், காலந்தாழ்த்துவது வெறும் புலம்பலுக்கே வழிவகுக்கும்.

அரசு, அரசாங்கம் என்கிற இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, சட்டங்களை இயற்றுவதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் என்கிற நிலையை உருவாக்கப் போராட வேண்டும். மேலும், அனைத்து அதிகார மட்டங்களுக்கும் தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் தவறு செய்தால் தண்டிக்கவும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே, உச்ச நீதிமன்றம் உட்பட்ட அனைத்து அதிகார அமைப்புகளின், மையங்களின் கொட்டத்தையும், அத்துமீறல்களையும் அடக்க முடியும். புரட்சிகர மக்களின் அதிகாரத்தையும் நிறுவ முடியும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன