தேர்தல் ஆணையம்: பாஜக-வின் மற்றொரு நிர்வாகப் பிரிவு

பாஜக வை பொறுத்தவரை, கட்சியின் மருத்துவப் பிரிவு, வழக்குரைஞர் பிரிவு உள்ளதுபோல தேர்தல் ஆணையம் என்பது பாஜக கட்சியின் தேர்தல் நிர்வாகப் பிரிவு. அப்பிரிவின் தலைவர் பிரதமர் (மோடி-அமித்ஷா) அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். பாஜக தேர்தல்களில் ஜெயிப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான உதவிகளைச் செய்யக்கூடிய பாஜகவின் தேர்தல் பிரிவு தேர்தல் ஆணையம் என்பதை சமீபத்திய பல நிகழ்வுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளி அன்று அறிவித்தது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த நிலையில் இரண்டு மாநிலங்களுக்கானத் (செப்டம்பர் 18 மற்றும் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் காஷ்மீருக்கும்; அக்டோபர் 1 அன்று ஹரியானாவுக்கும் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது) தேதியை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்கானத் தேதி அறிவிப்பை பலரும் எதிர்பார்த்திருந்தனர். கடந்த முறை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் தான் நடைபெற்றது. நவம்பர் 23-ம் தேதியோடு மகாராஷ்டிரா சட்டசபைக்கான காலம் முடிவடைகிறது. நவம்பர் 3-ல் முடிவடையவுள்ள ஹரியானாவிற்கு தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் மகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு மட்டும் ஏன் அறிவிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

 

தேர்தல் ஆணையம் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில், “செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பல இந்து பண்டிகைகள் வர இருப்பதாகவும் மழை காரணமாக வாக்காளர் சரிபார்ப்பு இன்னும் நிறைவடையாமல் இருப்பதாலும் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்காக அதிகமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேர்தல் ஏற்பாடுகளுக்கு அதிக சக்திகளை ஒதுக்க வேண்டி இருப்பதாலும் மகாராஷ்டிரா தேர்தலை தள்ளிப் போடுவதாக அறிவித்துள்ளது.”

எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பதிலை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சவடால் அடிக்கும் மோடியால் நான்கு மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியாதா என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பதில் மிகவும் சொதப்பலானது என்றாலும், தேர்தல் தள்ளிப் போவதற்கான காரணத்தைக் கணிப்பது எளிது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி 30 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியோ 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதில் பாஜக 9 இடங்களில் மட்டுமே வென்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 23 இடங்களைப் பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்று பாஜக கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினை உடைத்து அதிலிருந்து ஒரு தரப்பினரை தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்தது. இதையொட்டிய வழக்கில், ஆட்சி அமைத்தது சட்டத்திற்கு புறம்பானது விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும் அமைந்த ஆட்சியை கலைப்பதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி கை விரித்து விட்டது.

தேர்தல் ஆணையமோ தன்னுடைய பங்கிற்கு, சிண்டே பிரிவினர் தான் உண்மையான  சிவசேனா என்று அறிவித்து கட்சியின் சின்னத்தினை சிண்டே தரப்பிற்கே ஒதுக்கியது.

கூடவே இந்து மத உணர்வை தூண்டி அதை ஓட்டுக்காக, ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் இந்து முஸ்லிம் கலவரத்திற்கு திட்டமிடுவதும் சில கலவரங்களை முன்னின்று நடத்தியும் உள்ளது. கோலாப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த முஸ்லிம்கள் மீதான ஒடுக்கு முறையே இதற்கு ஒரு உதாரணம்.

சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் பட்னாவிஷ் நகர்புற நக்சல்களை (Urban Naxals) கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் தொடர்ச்சியாக “மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு சட்டம் 2024 க்கு சிண்டே கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்திற்கு பரவலாகவே எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இச்சட்டம் ”ஊபா“ வை விட மோசமானது என்கிறார் மூத்த வழக்கறிஞர் மிகிர் தேசாய். பாஜகவிற்கு எதிராக உள்ள அறிவுஜீவிகள், கலைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினரை நகர்புற நக்சல்கள் என்ற போர்வையில் ஒடுக்குவதற்கே இச்சட்டத்தினைக் கொண்டுவந்துள்ளனர். இந்தகையப் பின்புலத்தில் இருந்துதான் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

தேர்தல் ஆணையம் என்பது அனைவருக்கும் பொதுவானது ஜனநாயகமாக செயல்படக்கூடியது என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும் அது பொதுவாக ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது என்பது நாம் அறிந்ததே. ஆனால் பாஜக-வை பொறுத்தவரை கட்சியின் மருத்துவப் பிரிவு, வழக்குரைஞர் பிரிவு உள்ளது போல தேர்தல் ஆணையம் என்பதும் பாஜக கட்சியின் தேர்தல் நிர்வாகப் பிரிவாக தற்போது மாறியுள்ளது. அப்பிரிவின் தலைவர்  பிரதமர் (மோடி-அமித்ஷா) அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். பாஜக தேர்தல்களில் ஜெயிப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான உதவிகளைச் செய்யக்கூடிய தேர்தல் பிரிவு தேர்தல் ஆணையம் என்பதை  சமீபத்திய பல நிகழ்வுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளமுடியும்.

எப்படியாவது மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். ஏற்கனவே தனக்கானதாக மாற்றிவைத்துள்ள அரசு அமைப்புகளை தேர்தலுக்காகவும் பயன்படுத்துகிறது. மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் அறிவிப்பும் அத்தகையதே. தேர்தல் வந்தாலே, மதக் கலவரங்களை நடத்துவதையும் முஸ்லிம் விரோத கருத்துக்களைப் பேசுவதையும் தேச வெறி வாய்சவடால்களை அள்ளி வீசுவதையும் யுத்தியாக வைத்திருக்கிறது பாஜக.  

காவி- கார்ப்பரேட் பாசிசம் அரங்கேறிவரும் இன்றைய சூழலில் தேர்தல் என்பது, முதலாளித்துவ ஜனநாயக சட்டங்களையும் மரபுகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, ஒரு சில ‘முதலாளி’களின் நலன்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு ஏற்பாடாகும். இதனைக் கடந்த 10 வருட பாஜக ஆட்சி நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே கேடுகெட்ட, கேளிக்கூத்தான இத்தகைய ஜனநாயக முறைகளை ஒழித்துவிட்டு, அனைவருக்குமான புதிய ஜனநாயகத்தை உருவாக்குவாக்கும் போதுதான் உண்மையான ஜனநாயகத்தைப் பெறமுடியும்.

  • அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன