திங்களன்று (21 அக்டோபர் 2024) நடைபெற்ற என்.டி.டிவி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும், இந்தியாவிற்கு வந்து குவியும் முதலீடுகளையும் பார்த்து உற்சாகமடைகின்றது” என்று பேசியுள்ளார். மேலும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, “கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பங்குச் சந்தை 22,300 புள்ளிகளில் இருந்து 81,000 புள்ளிகளுக்கும் மேல் அதிவேகமாகச் சென்றுள்ளது” என்றும், “இந்தியாவின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் ஜிடிபியை எட்டிட, 1947 முதல் 2010 வரை 63 ஆண்டுகள் ஆனது, அதுவே 2017ல் 2 டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் ஆனது. அடுத்த 3 ஆண்டுகளில், 2020ல் அது $3 டிரில்லியனை எட்டியது.” என்றும் அடுத்ததாக 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.
தனது ஆட்சியின் கீழ் இந்தியா மகோன்னத நிலையை எட்டிவிட்டதாக இது போன்று மேடைக்கு மேடை முழங்குவது மோடிக்கு புதிதல்ல என்பதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், உலகம் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறது என்பது குறித்தும் மோடியின் மேடைப் பேச்சுகளில் தேடுவது அபத்தமாகும். எண்களின் கணக்கை வைத்துக் கொண்டு சூதாடும் பங்குச் சந்தைப் புள்ளிகள் பன்மடங்கு பெருகியதை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட முடியாது என்பது அனைவருக்கும் புரிந்த உண்மை. அதே போல ஜிடிபி வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பதும் நிதர்சனம்.
எனவே அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் சில புள்ளி விபரங்களைப் பார்த்தோம் என்றால் மோடி அரசின் பத்தாண்டு கால ஆட்சியின் இலட்சணம் என்னவென்று தெரிந்துவிடும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான 2024ம் ஆண்டின், உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் மோடி ஆட்சி குறித்ததொரு தெளிவான சித்திரத்தை வழங்குகிறது. அதன்படி உலகின் 127 நாடுகள் கொண்ட பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 105வது இடத்தில் இருக்கின்றது. பட்டினி விவகாரத்தில் “தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தும்” பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு பட்டியலில் 111வது இடத்தில், “அச்சுறுத்துகின்ற” நிலையில் இருந்து தற்போது தீவிர பகுப்பாய்வுப் பட்டியலுக்கு நம் நாட்டின் நிலைமை ‘முன்னேறியிருக்கிறது’ என்றாலும், நாட்டு மக்களில் 14 சதவீதம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு தவிக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது மக்கள்தொகையில் 20 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு போதுமான அளவிற்கு உணவு கிடைப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் போன்றவை கூட இந்தியாவோடு ஒப்பிடும் போது பட்டினிக் குறியீட்டில் முன்னேறியிருக்கின்றன. ஆனால் இந்தியாவின் நிலைமையோ, தொடர்ந்து உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமைக்கு ஒப்பானதாக இருக்கிறது.
இந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ள விவரங்களின் படி இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவிகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும் (அதாவது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாதவர்களாவும் – stunted), அதில் 18.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் (child wasting) உள்ளனர். 2.9 சதவிகித குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறப்பதும் (infant mortality rate) தெரியவந்துள்ளது[1].
இதில் முக்கியமாக எடை குறைவான குழந்தைகள் உருவாவதற்கு குழந்தைகளின் தாய்மார்களுக்கு கர்ப காலத்தில் போதுமான அளவிற்கு உணவும் ஊட்டச் சத்துக்களும் கிடைக்காததே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தப் புள்ளி விபரங்களை இந்திய அரசு ஏற்க மறுக்கிறது. மோடி அரசு வழங்கும் தகவல்களின் அடிப்படையில் அல்லாமல் சுயமாக ஆய்வு நடத்தியதாக கூறி இந்த ஆய்வு முடிவுகளை நிராகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்ட முறைக்கு மாற்றாக இந்தியாவில் மட்டும் மோடி அரசு தரும் விவரங்களில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும் என மோடி அரசு கூறுகிறது. மோடி அரசு ஊட்டச்சத்து குறைபாட்டை எப்படி பார்க்கிறது என்பதற்கு 2012ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியை அளவுகோலாக வைக்கலாம். அந்த பேட்டியில் குஜராத் மாநில குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு, இளம் தாய்மார்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ளவதற்காக சாப்பிடுவதைத் தவிர்ப்பதுதான் காரணம் என கூறியிருக்கிறார்[2].
இந்தியக் குழந்தைகளில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள் என்பது நம் நாட்டின் எதிர்காலச் சந்ததியின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. தன் குடிமக்களுக்கு அதிலும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வழி செய்ய முடியாத ஒரு அரசு, தன்னை வல்லரசு என்றும், உலகத்திற்கே வழிகாட்டி என்றும் கூறிக்கொள்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் உள்ள இளைய தலைமுறையில் 66 சதவீதம்பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று பெருமைபட்டுக் கொண்டால் மட்டும் போதுமா? அந்த இளம் தலைமுறை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமில்லையா.
இதற்காக பாசிச மோடி அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது? ஏற்கெனவே இருக்கின்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை (ICDS) உள்ளிட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு முறை கூட போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்கு சில மாதங்கள் முன்னரும் அதற்கு பிறகும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை, கடன் தள்ளுபடி என வாரி வழங்கிய மோடி அரசு அந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கென இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த சதவீத நிதியை ஒதுக்கியது.[3]
இந்த ஆண்டின் பட்ஜெட்டிலும் கூட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் கொடுத்துவிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்துள்ளது[4] இந்த மோடி அரசு.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், போஜன் 2.0, சக்சம் அங்கன்வாடி என பல திட்டங்களை அறிவித்தாலும் அவை வெற்று அறிவிப்புகளாக மட்டுமே இருக்கின்றன. அவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதே கிடையாது.
தன் நாட்டு மக்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட அரசாக இருந்தால், இந்த நாட்டின் எதிர்கால சந்ததி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தால் மோடி அரசு குறைந்தபட்சம் தான் அறிவித்த திட்டங்களையாவது முறையாக செயல்படுத்த நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள் தின்றது போக எஞ்சியதைத்தான் நாட்டு மக்களுக்குச் செலவு செய்ய முடியும் எனக் கூறும் அரசு அதனை நிச்சயம் செய்யாது. வருங்கால இந்திய சமூகத்தை நோஞ்சான் சமூகமாக மாற்றும் திசையில் தான் மோடி அரசு நாட்டை கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.
- அறிவு
தகவல் ஆதாரம்
[1] https://www.thehindu.com/news/national/what-does-the-global-hunger-index-2024-state-about-india/article68762149.ece
[2] https://timesofindia.indiatimes.com/india/narendra-modi-tells-us-daily-gujarats-malnutrition-due-to-figure-conscious-girls/articleshow/15948509.cms
[3] https://www.telegraphindia.com/india/poor-budget-allocation-for-nutrition-schemes/cid/1805603
[4] https://www.thehindu.com/news/national/what-does-the-global-hunger-index-2024-state-about-india/article68762149.ece